Text. Mark.1:16-20
அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், மீண்டும் இந்த தளம் வாயிலாக உங்களை சந்திக்க செய்த கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள், என்னை உற்சாகப்படுத்திய சகோதர சகோதரிக்கு என் நன்றிகள். நம்முடைய தியான பகுதியில், நம்முடைய ஆண்டவர் சீடர்களை தெரிந்தெடுத்த சம்பவத்தை வாசிக்கிறோம்.
அவர் கலிலேயா கரையோரமாய் போகும்போது, அங்கே சீமோனையும் அவன் சகோதரன் அந்திரேயாவையும் கண்டு உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன், என் பின்னே வாருங்கள் என்கிறார் உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு அவரை பின்பற்றினார்கள். கொஞ்ச தூரம் போனதும், யாக்கோபையும், அவன் சகோதரன் யோவானையும் கண்டார் அவர்களையும் அப்படியே அழைத்தார் அவர்களும் தங்கள் வலைகளை விட்டு அவரை பின்பற்றினார்கள்.
ஆனால் இது யதார்த்த வாழ்வில் நடக்க கூடியதா, திடீரென ஒருவர் வந்து வேலை செய்துக் கொண்டிருக்கிறவர்களை பார்த்து உங்களை மனுஷரை பிடிக்கிறவர்களாக்குவேன், வாருங்கள் என்றால் அவரை பின்பற்றி போவார்களா? நான் உங்கள் அலுவலகத்திற்கு வந்து உங்களை அழைத்தால் நீங்கள் என் பின்னே வருவீர்களா? சாத்தியமே இல்லையே, பிறகு எப்படி சீடர்கள் இயேசுவை பின்பற்றி போனார்கள்? உண்மையில் இயேசு அவர்களை அழைத்த வரலாறில் பாதியைதான் இங்கே மாற்கு குறிப்பிடுகிறார். லூக்கா சுவிசேஷம் 5 ம் அதிகாரம் 1 முதல் 11 வசனங்கள் வரை உள்ள பகுதியில் இந்த அழைப்பின் முழு வரலாறும் நாம் பார்க்க முடியும்.
இயேசு கலிலேயா கரைக்கு போனார், அங்கே, சீமோனின் படகில் இயேசு பிரசங்கம் செய்தார், பிரசங்கம் முடிந்து ஆண்டவர் தனக்கு படகு கொடுத்தவர்களின் கைகள் வெறுமையாய் இருப்பதை கண்டார், அவர்களை வலையை ஆழத்தில் போட சொன்னார், அதற்கு சீமோன் கூறிய பதில் நாங்கள் இரவு முழுதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆயினும் நீர் சொல்லுகிறபடி செய்கிறேன் என்றான். காரணம் சீமோன் பிறப்பால் ஒரு மீனவன், கடலையும் கரையையும் முழுதும் அறிந்தவன்.
சமீபத்தில் ஒரு போதகர் தன்னுடைய செய்தியிலே ஒரு விஷயத்தை குறிப்பிட்டார், அதாவது தாணே புயல் சமயத்தில் அவர்களுடைய திருச்சபை வாலிபர் கடலால் இழுத்து செல்லப்பட்டாராம், கேள்விப்பட்ட போதகரும் சபையாரும் கடற்கரையில் வாலிபனை தேடி ஓடினார்களாம், அப்போது அங்கே இருந்த ஒரு வயது முதிர்ந்த மீனவர் சொன்னாராம், அவ்ளோதான் சார், இன்னும் 2 நாள்ல சடலம் இந்த இடத்துல கரை ஒதுங்கும், அப்படி இல்லனா 7 நாள்ல அங்க கரை ஒதுங்கும், அப்படி இல்லனா, நீங்க சடலத்த மறந்திடுங்க என்றாராம், தேடிக் கொண்டிருந்த அனைவரும் விழித்தார்களாம், ஆனால் அந்த முதியவர் சொன்ன அதே இடத்தில் இரண்டு நாள் கழித்துதான் வாலிபரின் உடல் கிடைத்ததாம்.
அதாவது கடலின் ஒவ்வொரு அலையும் மீனவர்களோடு பேசும், கடலை முற்றும் அறிந்தவர்கள் மீனவர்கள், எனவேதான் சீமோன் கூறுகிறான், நாங்கள் இரவு முழுவதும் பிரயாசப்பட்டோம், ஒன்றும் அகப்படவில்லை என்று, ஆனால் கடலை அறியாத தச்சனான, ஆண்டவர் ஆழத்தில் வலை வீசுங்கள் என்கிறார், அவரது வார்த்தைக்கு கீழ்படிந்து, வலைவீசினார்கள் வலைகள் கிழியதக்கதாய் படகு அமிழதக்கதாய் மீன்கள் கிடைத்தது, அது மாத்திரமல்ல, பக்கத்தில் இருந்த யாக்கோபு யோவானின் படகையும் அழைத்து அதிலும் மீன்களை கொட்டினார்கள் அதுவும் மூழ்க தக்கதாய் நிறைந்தது.
அவரது மகத்துவத்தை கண்ட பேதுரு அஞ்சி ஆண்டவரே நான் பாவி என்னை விட்டு போய்விடும் என்றான். ஆனால் ஆண்டவரோ, உன்னை மனுஷர்களை பிடிக்கிறவர்களாக்குவேன், என்னை பின்பற்றுங்கள் என்றார், உடனே அவர்கள் தங்கள் வலைகளையும் உறவுகளையும் விட்டு அவரை பின்பற்றினார்கள். இப்படிதான் ஆண்டவர் அவர்களை அழைத்தார், ஆனால் மாற்கு சுவிசேஷகன், இந்த வரலாறையே மறைத்துவிட்டு, அழைத்தார் அவர்கள் வலைகளை விட்டு பின்பற்றினார்கள் என்கிறாரே? ஏன்?
காரணம் இருக்கிறது, மாற்கு சுவிசேஷம்தான் நான்கு சுவிசேஷங்களில், மிகவும் சிறியது, காரணம் என்னவென்றால், அவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்துள்ளார், அப்படியானால் ஆழத்தில் மீன்கள் கிடைக்க செய்த அற்புதம் முக்கியமில்லையா? என்றால் கொஞ்சம் யோசித்தால் அதற்கு விடை கிடைக்கும். ஆண்டவர் எப்போதுமே கொடுக்கிறவர், முழு உலகையும் படைத்த பின்னர், மனிதனுக்கு தேவையான அனைத்தையும் படைத்த பின்னர்தான் மனிதனை படைத்தார், நமக்கு கொடுப்பது அவருக்கு அற்ப காரியம், அவர் இருப்பதே நமக்கு கொடுக்கதான், ஆனால்
நாமோ, அவர் கொடுத்ததை பிடித்துக் கொள்கிறோம், அதிலே களி கூறுகிறோம், அதை பெருமை பாராட்டுகிறோமே தவிர, கொடுத்தவரை மறந்து போகிறோம். ஆனால் சீடர்களோ, கடவுள் கொடுத்த திரளான மீன்களை விட்டு விட்டு, கொடுத்தவரை பிடித்துக் கொண்டார்கள். இதை வலியுறுத்தவே மாற்கு அவர் கொடுத்ததை விட்டுவிட்டு, கொடுத்தவரை பின்பற்றியதை எழுதுகிறார். எல்லாவற்றையும் விட்டு அவருக்கு பின் சென்றார்கள், ஆனால் ஒரு மனிதன் நாடி தேடுகிற அனைத்தும் அவர்களுக்கு கிடைத்தது.
அன்பானவர்களே நாம் இப்போது எதை பெருமையாக நினைக்கிறோம், எதை பெருமையாக பேசி வருகிறோம், கடவுள் கொடுத்ததையா? அல்லது கொடுத்த கடவுளையா? கொடுக்கிறவரை பின்பற்றினால், நாம் தேடுகிறவை நம்மை தேடி வரும். அவரே நமக்கு முக்கியம். அவரில் நிலைக்க பிழைக்க, அவரோடு வாழ கடவுள் நமக்கு பெலன் தருவாராக. ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்