அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவரையும் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன் , நான் தற்போது D.C .P .C என்ற ஒரு வருட பயிற்சியும், அதனிடையில் C .P .E என்ற 4 வார பயிற்சியும் பெற்று வருகிறேன், அதாவது மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை அளிப்பது எப்படி என்பதை இந்த பயிற்சியில் கற்று வருகிறேன்.
தற்போது வருகிற ஏப்ரல் 15 ம் தேதியோடு இந்த பயிற்சிகள் நிறைவடைய உள்ளது, எனவே நான் முடிக்க வேண்டிய பயிற்சி சார்ந்த பணிகள் அதிகமாக இருப்பதால் எனக்கு பதிவிட நேரம் கிடைக்கவில்லை ஒரு நாளில் 5 மணி நேரம் மட்டுமே தூங்குகுறேன், இதன் நடுவில் பதிவிட விரும்பியும் என்னால் முடியாமல் போய்விட்டது, ஆவியோ உற்சாகமுள்ளது, மாமிசமோ பெலவீனமுள்ளது என்ற பவுலின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை இந்த இரண்டு நாட்களில் அறிந்துக்கொண்டேன். இன்னும் ஒரு மாதம் முழுவதும் இப்படிப்பட்ட இடையூறுகள் வருமானால் பொறுத்துக்கொள்ளுங்கள்.
தற்போது 12 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி வருவதால் இன்றைய காலை மன்னா அவர்களுக்காக.
இன்றைய தியான வசனம். ஏசாயா.45 :4a
4. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்
அன்பான மாணவர்களே நீங்கள் மிகவும் அக்கறையோடு படித்து வருகிற நேரம் இந்த நேரம், வருடம் முழுதும் படிக்காதவர்கள் கூட இந்த நேரத்தில் மிக கவனமாக படித்து வருவீர்கள், முதலாவது உங்களை வாழ்த்துகிறேன்,
நம்முடைய தியான பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு ஆசீர்வாதமாக சொல்லுகிற வார்த்தைகளை காண்கிறோம், இஸ்ரவேல் மக்கள் பாபிலோன் சிறையிருப்பில் இருந்த காலக் கட்டத்தில், தங்கள் வாழ்வே அவ்வளவுதான் என்று நினைத்த காலத்தில் கர்த்தர் அவர்களுக்கு கூறுகிற ஆசீர்வாத மொழிகள் தான் இந்த வசனம்.
வெண்கலக் கதவு என்பது உறுதியான கதவு, அதை உடைக்க முடியாது, அவ்வளவு உறுதியான கதவிற்கு இரும்பு தாழ்பாழ் போட்டால் எவ்வளவு உறுதியாக இருக்கும், மறக்கதவுகளை உடைப்பதே அவ்வளவு சாதாரணமில்லை அப்படியிருக்க வெண்கலக் கதவையும், இரும்பு தாழ்பாழையும் உடைக்க முடியாது, ஆனால் கடவுள் சொல்லுகிறார் அவைகளை உடைத்து உனக்கு பொக்கிஷங்களை தருவேன் என்கிறார்.
அதாவது, அசைக்கக்கூட முடியாத சாம்ராஜ்யமாக விளங்குகிற பாபிலோனின் கதவுகளை உடைத்து உன்னை மீட்பேன் என்கிறார், மாத்திரமல்ல, ஒருவரும் சேரக்கூடாத ஒளியின் கடவுள் அந்த ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களை தருவேன் என்கிறார்.
நம் வாழ்வில் நாம் பெறவேண்டிய ஆசீர்வாதங்கள் எங்கே இருந்தாலும், எவ்வளவு தடை இருந்தாலும் தடைகளை தகர்த்தெறிந்து, நமக்கு கொடுத்து, நம்மை உயர்த்துவார், எனவே 12 ம் வகுப்பு தேர்வை எழுதுகிற மாணவர்களே எனக்கு நியாபக சக்தி இல்லை, என்னால் நினைவில் வைக்க முடியவில்லை , கஷ்டப்பட்டு படித்தாலும் தேர்வு நேரத்தில் பதட்டமாகி மறந்துவிடுகிறது, என்று பயப்படுகிறீர்களா?
அந்தகாரத்தில் இருப்பதை நமக்கு பொக்கிஷமாக தருவார், நம்மை உயர்த்த புதையல்களை தருவார், தைரியமாய் படியுங்கள், இயேசு ஆண்டவர் என்னோடு இருக்கிறார், என்னை ஜெயிக்க வைப்பார், நான் படிப்பது எனக்கு மறக்காது என்று நம்புங்கள், இடையறாது படியுங்கள், கிரிக்கெட் உலககோப்பை பார்ப்பதை விட உங்கள் வாழ்வில் பெறவேண்டிய பரிசுக்கொப்பையாகிய தேர்ச்சி பெறுவதில் அதிக அக்கறை செலுத்துங்கள்,
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்.
ஜெபிப்போம்,
அன்புள்ள இயேசு சாமி, 12 ம் வகுப்பு மாணவர்கள் ஓவ்வொருவரையும் உமது கரத்தில் ஒப்புவிக்கிறோம், அவர்கள் கல்வி வாழ்வில் மிக முக்கியமான தேர்வை எழுதி வருகிறார்கள், அவர்கள் கற்றவைகளை மறக்காமல் தேர்வில் எழுதி வெற்றி பெற்று தாங்கள் நினைத்த எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள உதவி செய்யும் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment