இந்த புதிய நாளிலே, மீண்டும் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தோழி! அன்பான இறைவன் அழகான இந்த உலகத்தில் நாம் பார்த்து இரசிக்கும்படியாய், அறிய பலக் காரியங்களை வைத்திருக்கின்றார்.
கவலை என்னும் கண்ணாடியை அணிந்துக் கொண்டு பார்ப்பதினால், இந்த அழகெலாம் நம் பார்வைக்கும் மறைந்துவிடுகின்றன. பொழுது புலர்ந்து வரும் அழகான ஒளிக்கற்றை, துவங்கி அனைத்தையுமே அவர் அற்புதமாகவும், ஆச்சரியமாகவும் அமைத்துள்ளார்.
அவரது இந்த அழகிய உலகில் , அதாவது நமக்காக அவர் பார்த்துப்பார்த்து உருவாக்கின இந்த உலகில், நம்மையும் அழகான உயிர்த்துளியாய் உலாவும்படி செய்திருக்கிறார்.
அநேக வேளைகளிலே, அழகாக ஆசீர்வாதமாக படைக்கப்பட்டிருக்கின்ற நாம், அவரது படைப்பாகிய இந்த உலகை எவ்வளவு மாசுபடுத்தி வைத்திருக்கிறோமோ, அதைப்போல, கோபம், எரிச்சல், பயம், திகைப்பு, அவிசுவாசம் போன்ற பல காரியங்களால் நம்மை நாமே கெடுத்துக் கொள்ளுகிறோம்.
தோழி சங்கீதக்காரன் தாவீது சங்கீதம் 8 :9 ல் "எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியெங்கும்
எவ்வளவு மேன்மையானது"- என்று வியந்துள்ளார். அநேக சங்கீதங்களில், சங்கீதம் முழுமையிலும், கர்த்தரின் செயல்களைக்குறித்து வியந்து போற்றுகின்றான்.
அன்புத் தோழி ஆண்டவர் அனைத்தையும் அழகாகவே படைத்தார், அனைத்தையும் நமக்காகவே படைத்தார், அது நல்லதென்றும் கண்டார். ஆனால் நாம்தான் அநேக வேளைகளில்," நம்மை ஏன்தான் படைத்தாரோ, என்னால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை, என்ற எதிர்மறையான எண்ணத்தில், ஏமாற்றத்துடன் வாழ்கின்றோம்.
தோழி! ஆண்டவர் அனைத்தையும் நேர்த்தியாய் செய்கிறவர், நம்மையும் ஒரு நோக்கத்துடனே படைத்திருக்கின்றார், அவர் நம்மை உருவாக்கினத்தின் நோக்கங்கள், ஒவ்வொரு நாளும் அழகாய் நிறைவேறுவதை இரசனையுடன் கவனித்திருப்போம். இரக்கமுள்ள இறைவன், கிருபையாய் நமக்கு தந்திருக்கும் இந்த இகபர வாழ்க்கை மிகவும் அழகானதே, அற்புதமானதே.
வாழ்வு தந்த இறைவனை நோக்குவோம் தோழி! வாழ்க்கையை இரசிப்போம். இறைவன் நம்மை அழகானவர்களாய், அற்புதமானவர்களாய், ஆசீர்வாதமானவர்களாய், இறைமகன் இயேசுவின் அன்பை நம்மில் பிரதிபலிப்பவர்களாக வாழும்படியாய் அன்புடன் அழைக்கின்றார்.
ஒவ்வொரு நாளும் முடியும்போது இறைவனிடம் நாம் சேர ஒரு படிக்கட்டை ஏறி முடிக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தின் வழிப்பிரயானத்தில், காணும் அனைத்தையும் இரசனையுடன் நோக்குவோம். வாழ்வின் வழியில் இறைவன் நமக்கென வைத்திருக்கும் அற்புதங்களையும், அதிசயங்களையும் மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்வோம். வாழ்க்கைப்பயணம் வலுமிக்கதாகும். வலுவிழந்த நேரங்களில் அவரை முழுமையாய் பற்றிக்கொள்வோம். நம்மையே அவரிடம் முழுமையாய் அர்ப்பணிப்போம், அவரே நம்மை ஆசீர்வாதமாய் நடத்தி செல்வார். மீண்டும் சந்திக்கிறேன் தோழி.
அன்பு வணக்கங்களுடன்,
திருமதி.உஷா ராஜ்குமார்.MA .BTh .
ஆம்பூர்.
No comments:
Post a Comment