அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், இயேசுவை நம்புவோர் யாரும் வாழ்வில் தோற்றுவிட வாய்ப்பே இல்லை. காரணம் அவர் நம்மோடு எப்போதும் இருக்கிறார். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதுமில்லை என்று சொல்லி நம் பக்கத்திலேயே இருக்கிறார். அவர் எப்படி நம் பக்கத்தில் இருக்கிறார்? யாராக நம் பக்கத்தில் இருக்கிறார்? அதற்கான பதில்களை சில வசனங்களில் உங்களுக்கு விளக்குகிறேன்.
ஏசாயா.66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
அன்பானவர்களே இந்த வசனத்தின் மூலம் கடவுள் நமக்கு தாயாக இருக்கிறார் என்பதை உணருகிறோம், பொதுவாக தாயை பிரிந்து தூர இடத்தில் படிக்கிறவர்கள், வேலை செய்கிறவர்கள், தாய் பக்கத்தில் இல்லாததால் மிகவும் சோர்ந்து போவார்கள். என் தாய் என் பக்கத்தில் இருந்தால் எனக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கும் என்று வருந்துவார்கள். தாயை இழந்தவர்கள் நிலை இதனினும் கொடியது. ஆனால் அன்பானவர்களே. இயேசு ஆண்டவர் உங்கள் அருகில் உங்கள் தாயாக இருக்கிறார்.
மத்தேயு.6:32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
ஆம் பிரியமானவர்களே தந்தை அருகில் இல்லையே, என் தேவைகளை உடனே யார் நிறைவேற்றுவார் என்று வருத்தத்தோடு இருப்பவர்களா நீங்கள். இந்த வசனத்தில் ஆண்டவர் கடவுளை தந்தை என்று குறிப்பிடுகிறார், எப்படிப்பட்ட தந்தை நம் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகிற தகப்பன். ஆம் அன்பானவர்களே நம் பரம தந்தை நம்மோடே இருக்கிறார். நம் தேவைகளை நிறைவேற்றுகிறார்.
மத்தேயு.12:50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
அன்பானவர்களே எவ்வளவு அருமையான வார்த்தைகளை ஆண்டவர் கூறுகிறார். யார் கடவுளின் சித்தபடி செய்கிறார்களோ அவர்கள் என் சகோதரன், சகோதரி, தாய் என்று கூறுகிறார். அப்படியானால் சகோதர ஆதரவு இல்லையே என்று நாம் வருந்த தேவையில்லை. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்போம், அப்படியானால் ஆண்டவரே நம் சகோதரனாக இருக்கிறாரே, அது மட்டுமா? பிள்ளைகளை பணியின் நிமித்தமாக, கல்வியின் நிமித்தமாக, வேறு காரணங்களால் பிரிந்து வாடுகிற வயதான பெற்றோருக்கு நானே பிள்ளை என்கிறாரே. ஆம் அவர் சித்தபடி செய்யும் பெரியோர் அவருக்கு தாயாகவும் தந்தையாகவும் உள்ளனர். அவரே பிள்ளையாய் முன்னின்று அவர்கள் தேவையை நிறைவேற்றுவார்.
யோவான்.15:15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
இந்த வசனத்தில் ஆண்டவர் இன்னும் ஒருபடி மேலே போய் நம்மை சினேகிதர் என்கிறார். ஆம் நம்மை அவருடைய நண்பர்கள் என்கிறார். இனி நமக்கும் ஆண்டவ்ருக்குமிடையே அந்த பாகுபாடும் இல்லை. உடுக்கை இழந்தவன் கை போலாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவரின் வாக்கு படி நல்ல நண்பனாக நம் துன்பங்களை நீக்கி நம்மை காத்தருள்வார். அவர் தோளில் சாய்ந்து நம் தேவைகளை உரிமையோடு சொல்லலாம்.
அன்பானவர்களே, நாம் எப்போதுமே தனியாக இல்லை, காரணம், அவர் தாயாக, தகப்பனாக, சகோதரனாக, சகோதரியாக, ஏன் பிள்ளையாக, நண்பனாக நம்மோடே இருக்கிறார். அப்படியானால் இயேசு நம் குடும்பத்தில் ஒருவரல்ல, அவர் குடும்பத்தில் நாம் ஒரு அங்கத்தினராக இருக்கிறோம். சந்தோஷமாக இருப்போம். கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால் நம்மை எதிர்த்து நிற்கக் கூடியவன் யார்?
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment