WORD OF GOD

WORD OF GOD

Friday, August 26, 2011

கிறிஸ்தவர்களே ஊழலுக்கெதிராய் அணி திரள்வோம்

அன்பான எனதருமை உடன் விசுவாச்சிகளுக்கு  என் இனிய ஸ்தோத்திரங்கள். இன்று காலை நாம் தியானத்திற்கென்று நாம் எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை மத்தேயு.7 :21 -23  .

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை..

அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.

 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

தற்போது நம் நாட்டில் ஒரு பெரிய புரட்சி நடந்து வருகிறது. திரு.அன்னா அசாரே அவர்கள் தலைமையில் நாடே ஊழலுக்கு எதிராக திரும்பி வருகிறது. அவர் முன் வைக்கும் சட்ட வரைவு நிறைவேறும் பட்சத்தில் நிச்சயம் ஊழலின் வீரியம் நம் நாட்டில் பெருமளவு குறைய வாய்ப்பிருக்கிறது.  ஆனால் அரசியல்வாதிகளின் மத்தியில் இந்த சட்ட முன் வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு இருக்கிறது.  வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும், மசோதாவை நிறைவேற்றாமல் இருக்க அவர்கள் கூறும் சப்பை காரணங்கள் மூலம் நாம் இதை அறிந்துக் கொள்ளலாம்.

பொதுவாக ஊழலில் ஊறிப்போனவர்கள் அதிலிருந்து வெளிவர மறுக்கின்றனர்.  ஆனால் வேதாகமம்  இந்த முறைக் கேடான வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கடுமையான எச்சரிப்பை தருகிறது. நாம் இன்று எடுத்துக் கொண்டிருக்கிற தியான வசனத்தில் ஆண்டவர் யார் பரலோக ராஜ்ஜியத்திற்கு போவார்கள் யார் போகமாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

கிறிஸ்தவர்கள் அத்தனை பேருடைய நோக்கமும் ஒன்றே ஒன்றுதான், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விடுத்து, அழிவில்லா வாழ்வை அருளும் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேண்டும் என்பதே. இந்த மேனமையான வாழ்வில் எல்லா கிறிஸ்தவர்களும் பங்கெடுக்க முடியாது, என்பதை தான் இன்றைய தியான வசனம் நமக்கு கூறுகிறது. அப்படியானால் யார் பிரவேசிக்க முடியும்?

பிதாவின் சித்தபடி செய்கிறவன் எவனோ அவனே பரலோக வாழ்வில் பிரவேசிப்பான் என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல என்னை நோக்கி கர்த்தாவே, கர்த்தாவே.. என்று கூப்பிடுகிறவனையும், உமது நாமத்தில் பிசாசுகளை துரத்தினோம், தீர்க்கதரிசனம் உரைத்தோம், என்று சொல்லுகிறகிரவனையும்,  அக்கிரமக்காரர்களே என்னை விட்டு அகன்று போங்கள் என்று கூறுவேன் என்கிறார்.  ஆம் பிரியமானவர்களே, ஆலயத்திற்கு ஒழுங்காய் வந்து, அல்லேலுயா என்றும் ஸ்தோத்திரம் என்றும் நாள்தோறும் சொல்கிறவர்களும், பெரிய நீதிமான்களாக  தங்களை காட்டிக்கொண்டு, உத்தமமாய் பிரசங்கிக்கிற ஊழியர்களும், அற்புதங்களை செய்கிறோம், பிசாசுகளை விரட்டுகிறோம், தீர்க்கதரிசனம் உரைக்கிறோம், என்று சொல்லுகிற ஊழியர்களும், பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது என்று தெளிவாக ஆண்டவர் கூறுகிறார். ஏன்?

பிதாவின் சித்தபடி செய்கிறவர்களாய் அவர்கள்  இருக்க வேண்டும்? இவையெல்லாம் பிதாவின் சித்தம் இல்லையா? ஆம் இவையெல்லாம் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தின் அடையாளம் அவ்வளவே.. பிதா நம் மீது கொண்டிருக்கும் சித்தம் என்பது முற்றிலும் வேறாய் இருக்கிறது? எது பிதாவின் சித்தம்?  ஆண்டவர் தெளிவாக சொல்லுகிறார்.. உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், கடவுளிடத்தில் அன்பு கூற வேண்டும், அதே போல உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் சக மனிதனிடத்தில் (அயலானிடத்தில்) அன்பு கூற வேண்டும் என்கிறார். இதுதான் பிதாவின் சித்தம்.

1 கொரிந்தியர் ,13 ம் அதிகாரத்தில், ஆவியின் வரங்களை பற்றி பேசுகிற பவுல் அவையெல்லாம் ஒழிந்து போகும் என்கிறார், தீர்க்கதரிசனம் கூட ஒழிந்து போகும் என்கிறார், 13 ம் வசனத்தில் நிலையான மூன்றை கூறுகிறார், அவையாவன.. விசுவாசம், நன்னம்பிக்கை, அன்பு.. இதில் அன்பே பெரியது என்று கூறி கிறிஸ்தவர்கள் வரங்களை விட அன்பை நாட வேண்டும் என்று முடிக்கிறார்.

அன்பானவர்களே இந்த அன்பு கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கிறதா? லஞ்சம் வாங்கும் கிறிஸ்தவன் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியுமா? தலை கீழாக நின்றாலும் வாய்ப்பில்லை. சக மனிதனுக்கு வாழ்வு கொடுக்காமல் அவன் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிற யாரும் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியாது.  ஒருவன் வாழ்வுக்கு காரணமாய் கிறிஸ்தவன் இருக்க வேண்டுமே தவிர, ஒருவன் வீழ்ச்சிக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

ஊழியம் செய்யலாம், வல்லமையாய் பிரசங்கிக்கலாம், உபாவசமிருந்து ஜெபிக்கலாம், ஊழியங்களுக்கு வாரி, வாரி கொடுக்கலாம். சக மனிதனின் மீது அன்பில்லாமல் பதவிக்கும்,  பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறவர்கள் கடவுளுடைய ராஜ்ஜியத்தின் வாசலை கூட எட்ட முடியாது.  இங்கே வேண்டுமானால் பதவியிலும் பணத்திலும் திழைக்கலாம்.. ஆனால் என்ன பிரயோஜனம் சத்தியமாய் இது நிரந்தரமல்ல.. 70  வருடம் பலத்தின் மிகுதியால் 80  வருடம் அவ்வளவுதான் எல்லாம் முடிந்து போகும்.

அன்பானவர்களே, நாமும் ஊழலிலிருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும், ஊழலுக்கு எதிராக போராடவும் வேண்டும்.. அடுத்தவன் பணத்தை குறி வைக்கிற யாரையும் நாம் அனுமதிக்கக் கூடாது.. அனுமதிப்போமானால் நம் கண்ணுக்கு தெரிந்து ஒரு ஆத்துமாவின் அழிவுக்கு நாம் காரணமாகிவிடுவோம்.. கிறிஸ்துவின் வழி நிற்போம்..  திருச்சபைகளில்  மண்டிக் கிடக்கிற ஊழலக்கு எதிராக அணிதிரள்வோம்... இந்த திருவசனங்கள் வாயிலாக பரிசுத்தாவியானவர் நம்மை காத்துக் கொள்வாராக  ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews