WORD OF GOD

WORD OF GOD

Thursday, August 25, 2011

பாவம் போக்கும் பரிகாரி.

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய  ஸ்தோத்திரங்கள். உலகம் மிக வேகமாக மாறிவருகிறது. அறிவியல், விஞ்ஞானம், பொருளாதாரம் போன்றவை மிக பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. மனிதனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. நடை, உடை, பாவனை, பேச்சு, போன்றவை நாகரீகம் என்ற பெயரில் முற்றிலும் மாறிவிட்டது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மனிதன் மாறிவிட்டான்.


மனிதனின் தோற்றம் மாறிவிட்டது, வாழ்க்கை மாறிவிட்டது. ஆனால் மனிதனின் சுபாவம் மட்டும் மாறவேயில்லை என்பதை இன்றும் நடந்துவருகிற நிகழ்வுகளை கண்டால் நமக்கு தெளிவாக தெரிந்துவிடும். ஆதி காலத்தில் கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தி உயிர்களை நாகரீகமே இல்லாமல் வேட்டையாடினவன், இன்று குண்டுகளை பொழிந்து மனிதாபிமானமே இல்லாமல் உயிர்களை குடித்து வருகிறான். இலங்கை போர், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் நடந்த யுத்தம், உலகெங்கும் வியாபித்திருக்கும் தீவிரவாதம் போன்றவை மிக மோசமான உதாரணங்கள். இன்னும் அனேக உதாரணங்கள் உண்டு அவைகளை நீங்களே அறிவீர்கள்.


ஏன் இந்த சுபாவம் மட்டும் மாறவேயில்லை? இதுதான் பாவத்தின் வல்லமை. மனிதன் முற்றிலும் மாறிவிட்டான் ஆனால் அவன் பாவ சுபாவம் மட்டும் இன்னும் மாறவில்லை. ஒத்துக் கொள்ளுகிறீர்களா? நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை. அதை நமது மனசாட்சி அறியும். நாம் பாவத்தை செய்துவிட்டு, முகத்துக்கு பௌடர் பூசி அதை மறைக்க முயற்சிக்கிறோம். எங்கெங்கு காணினும் பாவம் புரையோடியிருக்கிறது. இன்று பாவம் இல்லாத ஒரு இடம் உண்டா? உங்கள் மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம், வேதனை என்ன்வென்றால் திருச்சபையை கூட சொல்ல முடியாது.


அப்படியானால் மனிதன் மாற வேண்டியது தோற்றத்திலோ, வாழ்க்கை முறையிலோ அல்ல, சுபாவத்தில் மாற வேண்டும், பாவ சுபாவம் மனிதனை விட்டு நீங்குமா? நீங்க வழி இருக்கிறதா? இது வரை செய்த பாவத்திற்கு மன்னிப்பு இருக்கிறதா? உண்டு என்பதை இங்கே உறுதியாக பதிவு செய்கிறேன், ஆம் வேதாகமத்தில் ரோமர்.8 ம் அதிகாரம் 33 ம் வசனத்தில் பவுல் கூறுகிறார், தேவன் தெரிந்து கொண்டவர்கள் மேல்  குற்றம் சாட்டினவன் யார்? அவரே அவர்களை நீதிமான்க‌ளாக்கினார். ஆம் பிரியமானவர்களே, கடவுளே பாவிகளாகிய நம்மை நீதிமான்களாக்குகிறார்.

எப்படி இது சாத்தியம்? அதற்காகதான் கடவுள் இயேசுவாக இந்த உலகத்திற்கு வந்தார். ஒரு தவறு கூட செய்யாத அவரை கொடிய சிலுவையில் ஏற்றி கொலை செய்தார்கள், அதை அவர் பொறுமையாக ஏற்றுக் கொண்டார். ஒரே ஒரு காரணத்திற்காக அந்த காரணம் நாம் மன்னிக்கப்பட வேண்டும் என்பதே. ஆம் பிரியமானவர்களே, நம் எல்லருடைய பாவத்திற்கும் பரிகாரமாக நாம் பெற வேண்டிய கொடிய மரண தண்டனையை அவர் ஏற்றுக் கொண்டார். அதன் மூலம் அவரை நம்புகிற யாவரையும் பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறார். நீங்கள் இதை நம்புகிறீர்களா? நம்பினால் அவர் உங்களை ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம், உங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்குகிறார் என்று அர்த்தம்.

அதுமட்டுமல்ல, ரோமர்.8 ம் அதிகாரம், 30 ம் வசனத்தில் கடவுள் யாரை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்குகிறார் என்றும், யாரை நீதிமான்களாக்கினாரோ, அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் என்றும் வாசிக்கிறோம்.

அன்பானவர்களே, நாம் அவரை நம்பினாலே, நம்மை தன் சொந்த பிள்ளையாக ஏற்றுக் கொள்ளுகிறார், நம் கொடிய பாவங்களை மன்னித்து நீதிமான்களாக்குகிறார், அது மட்டுமல்ல நம்மை மகிமைப்படுத்துகிறார். அதாவது நம் பாவ சுபாவத்தை மாற்றி நம்மை இவ்வுலகில் மகிமையானவர்களாக்குகிறார். இது நடக்குமா? நாமல்ல சொன்னவர் நடத்தி காட்டுவார். இயேசுவை நம்புவோம், மாற்றங்களை அனுபவிப்போம் ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews