WORD OF GOD

WORD OF GOD

Saturday, August 20, 2011

மனம் அமைதி பெற‌ - 2


அன்பான உடன் விசுவாசிகளுக்கு ஸ்தோத்திரங்கள்.. மனம் அமைதி பெற என்ற பதிவில் மன வலிமையின் அவசியத்தை பற்றி கூறினேன். இந்த வாரம் மனம் அமைதி பெற‌ ஒப்புக் கொள்ளல் எவ்வளவு அவசியம் என்பதை காணப்போகிறோம். இரண்டு வேத பகுதிகளை படித்து வைத்துக் கொள்ள சொன்னேன். நியாபகம் இருக்கிறதா? 1சாமுவேல்.17:11 முதல் 50 வரையும், ரோமர்.7:15 முதல் 25 வரையும் படித்து விட்டீர்களா ?   படிக்கவில்லையென்றால் ஒருமுறை படித்துவிடுங்கள்.

(அதற்கு முன் ஒரு சின்ன சாட்சியை சொல்லி விடுகிறேன், நான் சிறுவயது முதலே தமிழ் வழி கல்வியில் தான் படித்தேன், நகராட்சி பள்ளியிலும், அரசு பள்ளியிலும், என் பள்ளி வாழ்வு முடிந்தது, இறையியல் கல்வி கூட தமிழ் மொழியில்தான் கற்றேன். நான் முதன் முறையாக ஆங்கில வழியில் கற்றது நான் சமீபத்தில் பயின்ற போதக ஆலோசனை கல்விதான். என்னால் ஆங்கிலத்தில் கற்று தேர முடியுமா? என்ற அச்சம் இருந்தது. ஆனால் கல்வியும் முடித்தேன், தற்போது 60% மதிப்பெண்களோடு தேர்ச்சியும் பெற்றுவிட்டேன். முழுக்க கர்த்தருடைய கிருபை)

வேத பகுதிகளை படித்துவிட்டீர்களா? இந்த இரண்டு பகுதிகளில் முதலில் 1சாமுவேல்.17:11 முதல் 50..  இதில் தாவீது பெலிஸ்திய படைத்தலைவனான கோலியாத்தை கொன்ற சம்பவத்தை காண்கிறோம், இது மிக சாதாரணமாக நடந்த சம்பவம் அல்ல அரசன் முதல் அனைத்து வீரர்களும் அவனை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தாவீதோ துணிச்சலோடு நான் அவனோடு போரிடுகிறேன் என்கிறான் அரசனும் அவன் சகோதரர்களும் அஞ்சுகிறார்கள். இங்கேதான் ஒப்புக் கொள்ளலின் ரகசியம் அடங்கியிருக்கிறது. ஆம் தாவீது தனக்கிருக்கிற பலத்தை அறிந்திருந்தான்.

தாவீது ஏதோ உணர்ச்சி வேகத்தில் இதை சொல்லவில்லை, பொதுவாக இளங்கன்று பயமறியாது என்போமே அப்படி ஏதோ ஒரு அசட்டு தைரியத்தில் இதை சொல்லவில்லை. தாவீது தன் பலத்தை முழுதுமாக அறிந்திருந்தான். சவுல் கூப்பிட்டு (17:33) உன்னால் முடியாது வேண்டாம் என்று அறிவுரை சொன்ன போது, மிக தெளிவாக தாவீது அவனுக்கு பதில் தருகிறார். நான் ஆடு மேய்க்கும் போது ஒரு சிங்கத்தையும் ஒரு கரடியையும் கொன்றேன் என்று தன் பலத்தை மிக தெளிவாக எடுத்துரைக்கிறார்.
ஆம் பிரியமானவர்களே நமக்குள் இருக்கிற பலத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டும். கண்டு பிடித்துவிட்டால், இதுதான் என் பலம் என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். யாராவது உன்னால் இது முடியாது என்றால் முடியும் என்று நேரடியாக சொல்ல வேண்டும். தாவீது அதைதான் செய்தார். சிங்கத்தை கொல்வது சாதாரணமான பலமா? எனவே தாவீது தன் பலத்தை தெளிவாக உணர்ந்து ஒப்புக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் வெறுமனே தன் பலத்தை மட்டுமே நம்பியிராமல் வெற்றியறுளும் கடவுளின் மீது அசைக்க முடியா விசுவாசம் கொண்டிருந்தார். தன் பலத்தால் கோலியாத்தை வெல்லும் வாய்ப்பை கடவுள் தருவார் என்ற அவனது விசுவாசம் மிகப்பெரிய வெற்றியை அவனுக்கு தேடி தந்தது.

எனவே பிரியமானவர்களே, நம் பலம் என்ன? என்பதை தெளிவாக அறுதியிட்டு உணர்ந்துக் கொள்ள வேண்டும். அதை முதலில் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுதான் மனம் அமைதி பெற முதல் படி. இப்படி நம் பலத்தை நாம் கண்டறிவதின் மிக முக்கிய பலன் என்னவென்றால் நம்மை யாராவது உன்னால் இதை செய்ய முடியாது என்று சொன்னால் நமக்கு கோபம் வராது. நமக்குதான் நம் பலம் தெரியமே. அதே போல வாய்ப்பு கிடைக்கும் போது அனைவரும் அதிரும் வண்ணம் அதை வெளிப்படுத்துவோம்.

நம் பலத்தை நாம் கண்டறிவது எவ்வளவு முக்கியமோ நம் பலவீனத்தை ஒப்புக் கொள்வதும் மிக முக்கியம் அதைதான் ரோமர்.7:15 முதல் காண்கிறோம். பவுல் எவ்வளவு பெரிய ஊழியர், மரித்தவனை கூட உயிரோடு எழுப்பிய வல்லமையுள்ள ஊழியர். ஆனால் அவர் சொல்லுகிறார்.. நான் நன்மை செய்ய விரும்பினாலும் நான் விரும்பாத தீமையை செய்கிறேன் என்று தன் பலவீனத்தை மிக வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

ஆனால் நாமோ நம் பலவீனத்தை ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. என்னால் முடியாது என்று சொல்ல வெட்கப்படுகிறோம். ஆனால் பவுலோ தன் பலவீனத்தை சொல்ல கொஞ்ச‌ம் கூட வெட்கப்படவில்லை. எனவே நம்மால் முடியாத கரியங்களை முடியாது என்று நேரடியாக சொல்ல வேண்டும். எப்படி நம் பலத்தை மிக தெளிவாக அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டுமோ அதே போல் நம் பலவீனத்தை கண்டறிந்து அதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் பலவீனத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும், அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க முடியும்.

நம் பலத்தையும் பலவீனத்தையும் நாம் அறிந்துக் கொண்டால் நம் மனம் மிகப்பெரிய பலமுள்ளதாகிவிடும். நம் பலவீனத்தை நாம் அறிந்துக் கொண்ட பிறகு யாராவது நமக்கு அதை குத்திக்காட்டினால் நமக்கு ஆத்திரம் வராது. நமக்குதான் நம் பலவீனம் தெரியுமே. அதே போல நம் பலமும் நமக்கு இறுமாப்பை தராது. காரணம் நமக்குதான் நம் பலவீனமும் தெரியுமே...

அதே நேர‌த்தில் ந‌ம் ப‌ல‌வீன‌த்தை அறிந்த‌ பிற‌கு அத‌ற்காக‌ சோர்ந்து போக‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. கார‌ண‌ம் ப‌லவீன‌ம் இய‌ற்கையான‌தே. அதும‌ட்டும‌ல்ல‌ ந‌ம் ப‌ல‌வீன‌த்தில் தாங்குகிற‌ இயேசு ந‌ம்மோடு இருக்கிறாரே. என‌வே தான் ப‌வுல் த‌ன் ப‌ல‌வீன‌த்தை சொல்லிக் கொண்டே வ‌ந்து க‌டைசியாக‌ இயேசுவுக்கு ஸ்தோத்திர‌ம் என்று முடிப்பார். அவ‌ர் ந‌ம்மை ந‌ம் ப‌ல‌வீன‌த்தில் துணை நின்று ந‌ட‌த்துவார்.

அன்பான‌வ‌ர்க‌ளே.. ந‌ம் ப‌ல‌த்தையும், ந‌ம் ப‌ல‌வீன‌த்தையும் ஒப்புக் கொள்வ‌து எவ்வ‌ள‌வு முக்கிய‌ம் என்ப‌தை உணர்ந்துக் கொண்டீர்களா? நம் பலத்திலும் பலவீனத்திலும் கடவுள் நம்மை எப்படி நடத்துகிறார் என்றும் அறிந்துக் கொண்டீர்களா? நம் மனம் வலிமை பெற துவங்கி விட்டது... ஆமேன்.

ஒப்புக் கொள்ளல் இதோடு முடியவில்லை...தொடரும்........

(உங்கள் பிரச்சிணைகளுக்கு வேத வசன ஆலோசனை தேவையா எனது இமெயிலுக்கு எழுதுங்கள்).

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews