WORD OF GOD

WORD OF GOD

Friday, August 19, 2011

நாம் உயர்வோம் (காலை மன்னா)



அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் காலை ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக் கொண்ட கடவுளுடைய வார்த்தை,

சங்கீதம்.18:33. அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

அன்பானவர்களே, தாவீது இந்த வசனத்தில் சொல்லுகிற ஒரு பேருண்மை, கடவுள் அவருடைய கால்களை மான் கால்களை போல மாற்றினாராம். கடவுள் ஏன் ஒரு மனிதனின் கால்களை மான் கால்களாக மாற்ற வேண்டும்? தாவீது தன் வாழ்வில் அனேக போராட்டங்களை சந்தித்தவர். ஏன் அவர் வாழ்வே போராட்டமாக இருந்தது.. தன் சொந்த அரசனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, தன்னை காத்துக் கொள்ள காடுகளிலும் மலைகளிலும், குகைகளிலும் ஒளிந்து தன் உயிரை காத்துக் கொண்டார். பின்னர் ஒரு பெரும் படை திரட்டி எதிரிகளை வீழ்த்தினார். ஆனால் ஒரு முறை கூட தாவீது தன் எதிரிகளின் கையில் அகப்பட்டதில்லை.

எப்படி தாவீதுக்கு இது சாத்தியமானது? ஒரு சாதாரண குடிமகன் ஒரு சாம்ராஜ்ஜியத்துக்கே சிக்காமல் தன்னை எப்படி காத்துக் கொள்ள முடிந்தது? அதற்கான பதிலைதான் தாவீது கூறுகிறார். கடவுள் அவர் கால்களை மான் கால்களாக மாற்றிவிட்டாராம்.
 
மான் கால்களுக்கு அப்படியென்ன சிறப்பு இருக்கிறது? மான் ஒரு சாதுவான விலங்கு, அழகானதும் கூட. ஆனால் அதற்கு ஆபத்துகள் அதிகம். தன்னை கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள‌ வேண்டிய கடமை அதற்கு உண்டு. ஆனால் எதிர்த்து நின்று போராடி ஜெயிக்கும் திறன் பெற்றவையல்ல மான்கள். எனவே அது தன்னை தற்காத்துக் கொள்ள தப்பித்து ஓடுவதே வழி. அதற்கு மிகவும் உறுதுணையாக இருப்பது அதன் கால்கள். வேகமாகவும், எப்படிப்பட்ட வழி தடத்திலும் ஓடக்கூடிய திறன் பெற்றவை மான் கால்கள். அதே போலதான் தாவீதும், தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள எங்கெங்கோ ஓடினார், அதற்கு அவரது கால்கள் ஒத்துழைத்தது. கடைசிவரை அவர் வேகத்திற்கு அவரது எதிரிகளால் ஈடுக்கொடுக்க முடியவேயில்லை. அவரே வென்றார்.

அன்பானவர்களே, நம் அனைவரது கால்களையும் மான் கால்களாக்கும் திறன் கொண்டவர் நம் கடவுள். எனவே நம் வாழ்வுக்கு தடையாக நிற்கிற காரியங்களை பற்றி நினைத்து நினைத்து சோர்வடைவதை விடுத்து, அதிலிருந்து தப்பிக்கும் திறனையும், வெற்றி பெறும் சாத்தியத்தையும் உண்டாக்கிக் கொடுக்கிற கடவுளை விசுவாசத்தோடு நோக்குவோம். நம்மை வலையில் வீழ்த்த எத்தனை சக்திகள் சூழ்ந்தாலும் சிக்காமல் நழுவி போகும் கால்களை பெறுவோம்.. முடிவில் நாமே வெல்வோம்... ஆமேன்.
 

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews