WORD OF GOD

WORD OF GOD

Saturday, February 5, 2011

உண்மை உபவாசம்

அன்பானவர்களே ஞாயிற்று கிழமைக்கான பிரசங்க வாக்கியத்தை நாம் முன்னதாகவே தியானிப்போம் .

திரு வசனங்கள்: சங்கீதம்.112
                                 ஏசாயா. 58 : 5 - 9a
                                 1கொரிந்தியர்  . 2 : 1 - 5
                                 மத்தேயு. 5 : 13 - 24 

பிரசங்க வாக்கியம்: ஏசாயா.58 : 5 - 9a

5. மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?

6. அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

7. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.

8. அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

9. அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்

நம் வாழ்வை நேற்று இன்று நாளை என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். நேற்று என்பது நாம் கடந்து வந்த பழைய பாதையை குறிக்கும், இன்று என்பது இப்போது நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிற வாழ்வை குறிக்கும். நாளை என்பது நாம் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிற வாழ்வை குறிக்கும்.

இந்த மூன்று காலங்களும் நல்ல காலங்களாக இருக்கத்தான் நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம், ஆனால் இந்த மூன்று காலங்களில் நாம் சந்தோஷமாய் இருக்கிற காலங்களை விட கவலைப்பட்டுக் கொண்டிருக்கிற   காலங்களே அதிகம், ஆனால் நம்முடைய தியான பகுதி ஒவ்வொரு மனிதனும் எல்லா காலங்களிலும் சந்தோஷமாய் இருப்பதற்கான வழியை கற்றுத் தருகிறது. அந்த வழி என்னவென்றால் உபவாசம்.

உபாவாசம் இருக்கிறவர்கள் எல்லா காலத்திலும், ஏன் பரலோகத்திலும் மகிழ்வார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக கற்றுத் தருகிறது. அப்படியானால் உபவாசம் என்றால் என்ன?  பலநேரங்களில் உபவாசம் என்றால் சாப்பிடாமல் இருப்பது  என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், நம்மில் அநேகர் உபவாசம் இருக்கிற நேரம் காலை 11 மணியிலிருந்து மதியம் 2 மணிவரை. இது உண்மையில் உபவாசமா? இஸ்ரவேலர்கள் எப்படி உபவாசம் இருப்பார்கள் என்றால் சுத்தமாக பச்சை தண்ணீர்கூட குடிக்காமல், தன் ஆடைகளை எல்லாம் கிழித்துக்கொண்டு, சாம்பலில் உட்கார்ந்துக்கொண்டு, கடவுளை நோக்கி கதறுவார்கள். அவ்வளவு பக்தி வைராக்கியமாய்  உபவாசம் இருப்பார்கள், ஆனால் ஏசாயா தீர்க்கரின் வழியாக பேசுகிற கடவுள் இதெல்லாம் ஒரு உபவாசமா? இதில் எனக்கு பிரியமே இல்லை என்கிறார், இந்த உபவாசத்தையே இதெல்லாம் ஒரு உபவாசமா   என்று கேட்கிறார் என்றால்  நம்முடைய உபவாசம்?

எது உபவாசம் என்பதையும் கடவுளே இத்திரு வசனம் வழியாக கூறுகிறார். ( 6  - 7 )
1 . துன்பத்திலும் பாரத்திலும் இருப்பவனை விடுவிப்பது.
2 . ஏழைகளோடு உணவையும் உடைமைகளையும் பகிர்ந்துக்கொள்வது.
3 . நம்பி வந்தவனை செர்த்துகொள்வது.
இந்த மூன்றையும் கடைபிடிப்பதே உண்மையான உபவாசம் என்கிறார்.

அப்படியானால் ஒரு தெளிவான உண்மை  நமக்கு தெரிகிறது, யார் தன் சகமனிதனின் மீது அக்கறை கொண்டவர்களாய் வாழ்கிறார்களோ அவர்கள்தான் உண்மையான உபவாசம் இருப்பவர்கள் என்று ஏசாயா தீர்க்கரின் வழியாக நமக்கு கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் மீது கடவுளின் மகிமை உதிக்கும் என்கிறார்.

மத்தேயு.5 :23 -24 வசனங்களில் உன் சகோதரனோடு பகை இருக்குமானால் காணிக்கையை பலி பீடத்தில் வைத்துவிட்டு, முதலாவது போய் உன் சகோதரனோடு நல் மனம் பொருந்திய பிறகு காணிக்கையை செலுத்து என்கிறார், காரணம் அடுத்தவரை பகைக்கிற உள்ளத்தை ஆண்டவர் விரும்பவில்லை மாறாக அடுத்தவர்களை நேசிக்கிற உள்ளத்தை மட்டுமே நேசிக்கிறார்.

சங்கீதம்.112 .9  ல் வாரி இறைதவனின் நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது எனவே, பரலோகவாழ்வை ருசிக்க விரும்பும் நாம் அதை அடைய வேண்டுமானால் உபவாசம் இருக்க வேண்டும் அது நாம் நினைக்கிற உபவாசம் அல்ல உண்மையான சகோதர சிநேகம்.

உண்மையாய் ஆண்டவர் நேசித்ததால்தான்  இந்த மேன்மையான  வாழ்வை நாம் பெற்றுக்கொண்டோம். முகம் தெரியாத அற்ப பாவிகளுக்காய் தன் ஜீவனை கொடுத்தாரே அதுதான் மகா மேன்மை. அந்த அன்பை அனைவரோடும் பகிர்ந்து உண்மையான உபவாசத்தோடு வாழ்ந்து நாம் மகிமை அடைய தூய ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews