அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் காலை நேர ஸ்தோத்திரங்கள் இந்த காலையில் நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை, ஏசாயா.41 :10
மனித வாழ்க்கை சரீரமும், மனமும் சேர்ந்தது, நாம் சந்தோஷமாக வாழ சரீரம் மட்டும் அல்ல மனமும் ஆரோக்யமாக இருக்க வேண்டும். பல நேரங்களில் சரீரத்தில் ஏற்படுகிற பாதிப்புகள் மிக விரைவாக குணமாகி விடுகிறது, ஆனால் மனதில் ஏற்படுகிற பாதிப்புகள், அவ்வளவு சீக்கிரம் குணமாகிறதில்லை.
நம்முடைய தியான பகுதியிலும் கூட இஸ்ரவேல் மக்களுக்கு மனதளவில் ஒரு பெரிய பாதிப்பு உண்டாயிருந்ததை அறிய முடிகிறது. காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிய சிறையிருப்பில் வாழ்ந்த காலக்கட்டம். பாபிலோனியர் பெரும் படையாக வந்து இஸ்ரவேல் தேசத்தையும், எருசலேமையும் முற்றிலுமாக சீரழித்து இஸ்ரவேலர்களை அடிமைகளாக பாபிலோணிற்கு கொண்டுவந்தனர்.
இந்த மிகப்பெரிய தோல்வி இஸ்ரவேலர்களை நிலைகுலைய வைத்தது. மனதளவில் மிகவும் துவண்டுப் போனார்கள் இனி நம்மால் இழந்த வெற்றியை திரும்ப பெற முடியும் என்கிற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்கினர், தோல்வி பயம் அவர்களை முழுவதுமாக ஆட்கொண்டுவிட்டது. காரணம் தங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லை என்பதும், நம்முடைய பலம் அவ்வளவுதான், நாம் ஒன்றும் செய்ய முடியாது என்கிற தாழ்வு மனப்பான்மையும் அவர்களை பயத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
இந்த நேரத்தில் தான் அவர்களோடு கடவுள் ஏசாயாவின் மூலம் பேசுகிற வார்த்தை பயப்படாதிருங்கள். நான் உன்னுடனே இருக்கிறேன் என்கிறார். உன்னை பலப்படுத்துவேன் உனக்கு உதவி செய்வேன், என் நீதியின் வலது கரத்தால் தங்குவேன் என்கிறார்.
துவண்டுப்போன அவர்கள் வாழ்வை இந்த வார்த்தைகளை கொண்டு உற்சாகப்படுத்துகிறார். அவர்கள் மனதை திடப்படுத்துகிறார், இவை வெறும் வார்த்தைகளால் ஆண்டவர் தருகிற உற்சாகம் அல்ல செயல்படுத்தியும் காட்டினவர், அவர் சொன்னபடியே தனது நீதியின் வலது கரத்தினால் தாங்கி விடுவித்து இரட்சித்தார்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
No comments:
Post a Comment