WORD OF GOD

WORD OF GOD

Monday, February 14, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளுக்கு அதிகாலை ஸ்தோத்திரங்கள்,
இன்றைய தியான வசனம். அப்போஸ்தலர்.3 :5 -8

5. அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.

6. அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

7. வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.
8. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.


இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் அருட் பொழிவை பெற்ற பிறகு வல்லமையாய் ஊழியம் செய்ய துவங்கினர், அவர்கள் செய்த வல்லமையான ஊழியத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இன்றைக்குறிய நம்முடைய தியானப்பகுதி.

பேதுருவும், யோவானும் தேவாலயத்திற்கு போனார்கள், அந்த நேரத்தில் தேவாலயத்தின் அலங்கார வாசலில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஒரு மனிதனை சுமந்து தேவாலயத்திற்கு, கொண்டுவந்தனர், அவனை பற்றி வேதாகமம் சொல்லுகிற குறிப்பு என்னவென்றால், அவன் பிறப்பால் சப்பாணியாய் பிறந்த மனிதன், அதாவது பிறக்கும்போதே நடக்க சாத்தியகூறு இல்லாதவனாக பிறந்தவன்.

அவன் தேவாலயத்திற்கு வருகிற பேதுருவையும் யோவானையும் நோக்கி பிச்சைக் கேட்டு,  ஏதாவது பிச்சை போடுவார்கள் என்று பார்த்துகொண்டிருக்கிறான். ஆனால், பேதுருவோ என்னிடத்தில் வெள்ளியும் பொன்னும் இல்லை; என்னிடத்தில் உள்ளதை உனக்கு தருகிறேன் என்று, நசரேயனாகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று என்று சொல்லி, தன் வலது கையினால் அவனை பிடித்து தூக்கி விட்டான், அவன் குதித்து எழுந்தான், குதித்து குதித்து ஆண்டவரை மகிமைப்படுத்தினான்.

ஒருவேளை பிரச்சனை தீர பேதுருவையும் யோவானையும் பார்த்துக்கொண்டிருந்தான், அவர்களோ இயேசுவின் நாமத்தை அவனுக்கு கொடுத்ததினால் அவன் வாழ்நாள் பிரச்சனை தீர்ந்தது. ஆண்டவரின் விசுவாசியாகவும், அவரது மெய்யான வாழும் சாட்சியாகவும் அந்தக்காலத்தில் அவன் மாறிப்போனான்.

பல நேரங்களில் நம்மிடத்தில் ஒன்றுமே இல்லை நான் வெறுமையாக இருக்கிறேன் என்று நாம் பதறுவதுண்டு. பணம் இல்லை, பதவி இல்லை, நல்ல உறவுகள் இல்லை, தேவையான வசதி இல்லை, உதவி செய்ய நல்ல மனிதர்கள் இல்லை, என்று புலம்புகிற தருணங்கள் கூட நாம் வாழ்வில் ஏற்படுவதுண்டு, ஆனால் நமக்குள் இவை எல்லாவற்றையும் விட, இவை எல்லாவற்றையும் அருளக்கூடிய, மேலான நாமம், இயேசுவின் நாமம் இருக்கிறது என்பதை நாம் மறந்து போகிறோம்,

அவர் நமக்குள் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு விசுவாசத்தோடு வாழ்ந்தாலே போதும், நம் வாழ்வு மேன்மை அடைந்து விடும், அதுமட்டுமல்ல நமக்குள் இருக்கிற இந்த மேலான நாமத்தை. துன்பத்தில் இருக்கிற இன்னொரு மனிதனுக்கு அறிவிக்கிற போது அது அவனுக்கு, நன்மைகளை கொடுத்து, மேலான வாழ்வுக்கு வழி நடத்துகிறது.

 எனவே நமக்குள் இருக்கிறவர் பெரியவர், சர்வ வல்லவர், நமக்கும்  நம்மைக்கொண்டும் வல்லமையானவைகளை செய்கிறவர், அவருடைய மேலான நாமத்தில் இந்த நாளை துவங்குவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews