WORD OF GOD

WORD OF GOD

Saturday, February 12, 2011

காலை மன்னா

அன்பான உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் எனது காலை ஸ்தோத்திரங்கள்.
இன்றைய தியான வசனம், 2 தெசலோனிக்கேயர் .1 : 6

உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே

வாழ்க்கை என்பது சந்தோஷமும் துன்பமும் கலந்தது, இவை இரண்டுமே மாறி மாறி வரக்கூடியவை, ஆனால் சந்தோஷம் வரும்போது மனோ பலம் கொண்டவர்களாய் இருக்கிறோம் துன்பம் வந்தால் சோர்ந்துப் போகிறோம், அதிலும் துன்பத்திற்கு நாம் காரணமாய் இருந்தால் பரவாயில்லை, அடுத்தவர்கள் காரணமாய் இருந்தால் அதை நாம் தாங்கிக்கொள்ளவே முடியாது.

சிலர் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுப்பதையே தங்கள் வேலையாக கொண்டிருப்பார், அப்படி பட்டவர்கள் மீது நமக்கு ஆத்திரமும், கோபமும், எரிச்சலும் அதிகமாக இருக்கும். நம்மை வேண்டுமென்றே துன்புறுத்தி இன்பம்  காணும் சிலரை நினைத்தால் நமக்கு அவர்களை பழி தீர்க்க வேண்டும் என்ற ஆத்திரம் மிக அதிகமாகும்.

நமக்கே இவ்வளவு எரிச்சல் துன்புறுத்துகிறவர்கள் மீது உண்டாகும் என்றால், ஆதி திருச்சபை கிறிஸ்தவர்கள் சந்தித்த துன்பங்கள்  கொஞ்ச நஞ்சம் அல்ல, கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால், தங்கள் சொந்த ஜனங்களால், தங்கள் உறவுகளால் எதிரிகளாக பார்க்கப்பட்டனர், ரோம சாம்ராஜ்யத்தின் எதிரிகளாய் மாறினார், யூதர்களின் எதிரிகளாய் மாறினர், காரணமே இல்லாமல் இவர்களால் கடுமையாக துன்புறுத்தப்பட்டனர்.

இவர்களுடைய துன்புறுத்தலால் அனேக கிறிஸ்தவர்கள் மிகவும் சோர்ந்துபோனார்கள், தெசலோனிக்கேய சபையாரும் இதே போன்ற கடுமையான துன்பங்களுக்கு ஆளானவர்களே, ஆனால் தங்கள் உபத்திரவங்களில் பொறுமையை காத்துக்கொண்டார்கள். இதை அறிந்த பவுல் உபத்திரவங்களின் மத்தியில் அவர்களுடைய பொறுமையை பாராட்டியும், பொறுமையில் அவர்களை உற்சாகப்படுத்தும் படியாகவும், எழுதியுள்ள வார்த்தைகளே இன்றைக்குறிய நம்முடைய தியானப்பகுதி.

உபத்திரவ படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவத்தை அனுபவித்தவர்களுக்கு இளைப்பாறுதலையும் கடவுள் தருவது நிச்சயம் என்கிறார், காரணம் அவரவர் செய்கைக்கு தக்க பலனை கொடுப்பது இறைவனின் மேலான பொறுப்பு.

பல நேரங்களில் நாம் இந்த சத்தியத்தை மறந்து, நம்மை துன்பப்படுத்தினவர்கள் நன்றாகத்தானே  இருக்கிறார்கள் என்று புலம்புகிறோம், என்னால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று நம் இயலாமையை குறித்து மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால் அவரவர் பலனை கடவுள் நிச்சயமாக அருளுகிறவர்.

இது உண்மைதானா? என்ற கேள்விக்கான பதில் ஆதி திருச்சபை மக்களே தான், காரணம் அவர்களை  துன்புறுத்தினவர்கள், வாழ்ந்த தடம் கூட தெரியவில்லை ஆனால் துன்பத்தை அனுபவித்த கிறிஸ்தவர்களின் சந்ததியாகிய நாம் இன்று உலகம் முழுதும் வியாபித்திருக்கிறோம்.

கிறிஸ்தவர்களை துன்புறுத்திய பவுலிடம் ஆண்டவர் தெளிவாக சொன்னாரே, நீ அவர்களை துன்புறுத்தவில்லை, என்னை துன்புறுத்துகிறாய் என்றும் அவர்களை துன்புறுத்துவது முள்ளை உதைக்கிரதற்கு சமம் என்றும் கூறினாரே.

எனவே நம்முடைய துன்பங்களை வேடிக்கை பார்க்கிற கடவுள் அல்ல நம்முடைய கடவுள், அதற்கான பலனை தருகிறவர் எனவே விசுவாசத்தோடு அவரண்டை சேர்வோம். அவர் நாம மகிமைக்காய் ஜீவிப்போம், பரிசுத்த ஆவியானவர் அதற்கு உதவி செய்வாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews