அன்பான உடன் விசுவாசிகளே காலை நேர ஸ்தோத்திரங்கள், மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றையக் காலை நேர தியானம். மாற்கு.6: 5 - 6
5. அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,
6. அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்
6. அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்
நம் சொந்த ஊர் என்பது எல்லா மனிதருக்குமே சந்தோஷத்தை ஏற்படுத்துகிற இடம். நாம் நம் சொந்த ஊரை விட்டு வெளியே வந்து உழைத்து வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு சொந்த ஊருக்கு போய் நம் நிலையை நம் உறவுகளோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புவோம்.
இயேசு கிறிஸ்துவும் கூட கலிலேயா எங்கும் சுற்றி திரிந்து அநேகரை குணமாக்கி மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவராய் தன் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். அங்கே இருந்த ஜெபாலயத்தில் உபதேசம் செய்கிறார். அவருடைய உபதேசத்தை கேட்ட ஜனத்தார் மிகவும் பிரமித்து போனார்கள். அவருடைய ஞானத்தை குறித்து ஆச்சரியப் பட்டார்கள்.
அவருடைய வார்த்தையை கேட்டு ஆச்சரியப்பட்டவர்கள், பிரமித்தவர்கள், அந்த வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காமல் இவனுக்கு எங்கிருந்து இந்த ஞானம் வந்தது என்று அவரை பற்றியும், இவன் தச்சன் மகன் அல்லவா? என்று அவருடைய குடும்பத்தை பற்றியும் ஆராய்வதில் கவனம் செலுத்தினார்கள், அவருடைய வார்த்தையிலோ நம்பிக்கை கொள்ளாமல் போனார்கள்.
அதனால் என்ன நடந்தது என்பதை தான் 5 மற்றும் 6 வது வசனத்தில் காண்கிறோம். அற்புதங்களையும் நன்மைகளையும் மட்டுமே செய்ய தெரிந்த நம்முடைய ஆண்டவரால் அங்கு ஒரு அற்புதம் கூட செய்ய முடியாமல் போனது. எவ்வளவு பெரிய பாக்கியத்தை அவருடைய சொந்த ஜனம் இழந்துப் போனது, ஒரே ஒரு காரணம் அவர்களால் இயேசு கிறிஸ்துவை நம்பமுடியாமல் போனது தான்.
கொடுக்க கூடாத படி அவர் கரம் குறுகிப்போன கரம் அவருடைய கரம் அல்ல, ஆனால் நம்முடைய அவிசுவாசமோ அவர் கொடுக்ககூடாதபடி அவருடைய கரங்களை கட்டிப்போடுகிறது. நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் என்று நம்மை அழைக்கிறார். விசுவாசத்தோடு அவரண்டை சேர்வோம்.
நமக்காக தன் ஜீவனை கொடுத்தவர் நம் ஆண்டவர், நமக்கு நன்மை செய்ய நம்மை தேடி வருகிற ஆண்டவர். விசுவாசத்தோடு சேர்ந்தால் அதன் பலனை நமக்கு தருகிறார், இந்தக் காலையிலும் விசுவாசத்தோடு அவரண்டை சேர்வோம். நம்மை அற்புதமாய் நடத்துவார். ஆமென்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்
No comments:
Post a Comment