இந்த நாளுக்குரிய தியான பகுதிகள்,
(இந்திய சுவிசேஷ லுத்தரன் சபை - I.E.L.C)
ஆதியாகமம். 12 :1 -8
ரோமர்.4 :1 -5 , 13 -17
யோவான்.4 :5 -26
கிறிஸ்துவுக்குள் அன்பார்ந்த உடன் விசுவாசிகளே இந்த ஒய்வு நாளின் தியானத்திற்கு கடந்து செல்லும் முன் தயவுசெய்து ஒரு முறை திருவசன பகுதிகளை வாசித்துவிடுங்கள்.
கடவுளிடமிருந்தும், கிறிஸ்துவிடமிருந்தும் நம் அனைவருக்கும் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக.
சங்கீதம் 34 :8 , கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்தரியுங்கள் என்று கர்த்தர் நல்லவர் என்பதை மிக தெளிவாக கூறுகிறது.
1 தீமோத்தேயு.1 :17 அவர் படைத்ததெல்லாம் நல்லது என்று மிக தெளிவாக கூறுகிறது,
யாக்கோபு.1 :17 எந்த நன்மையையும் பிதாவிடமிருந்து வருகிறது என்று கூறுகிறது.
கர்த்தர் நல்லவர், நன்மையானவைகளை உண்டாக்குகிறவர், நன்மைகளை தருகிறவர் என்பதை இந்த மூன்று வசனங்களை உதாரணங்களாக கொண்டு நாம் மிக தெளிவாக உணர்ந்துக்கொள்ள முடியும். இன்னும் தெளிவாக உணர்ந்துக்கொள்ள இன்றைய தியானப்பகுதி நமக்கு உதவுகிறது.
ஆதியாகமம்.12 ம் அதிகாரத்தில் கடவுள் ஆபிரகாமை அழைக்கிறார், எதற்காக கடவுள் ஆபிரகாமை அழைக்கிறார் என்பதையும் கடவுளே 2 வது மற்றும் 3 வது வசனங்களில் வெளிப்படுத்திவிடுகிறார். நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரை மேன்மை படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய், உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன், உன்னால் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும் என்கிறார், அதாவது கடவுள் எதற்க்காக அழைக்கிறார் என்றால் ஆபிரகாமிற்கும் அவன் சந்ததிக்கும் நன்மை செய்வதற்காகவும் அவன் மூலம் சகல ஜனங்களுக்கும் நன்மை செய்வதற்காகவும் கடவுள் அழைக்கிறார்.
வேறெந்த காரணமும் கடவுள் அவனிடம் சொல்லவில்லை, உடனே ஆபிரகாம் அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து எந்த பதிலும் சொல்லாமல் புறப்பட்டு, அவன் மனைவியையும், அவன் சகோதரன் மகனாகிய லோத்தையும் தன சொத்துக்களையும் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டு போகிறான்,
எவ்வளவு பெரிய ஆச்சரியம், உடனே கீழ்ப்படிந்தான் என்று சொல்லுவோம், ஆனால் அவன் கீழ்ப்படியாமல் இருந்தால் தான் ஆச்சரியம், காரணம், 11 வது அதிகாரம் 30 ௦ வது வசனம் தெளிவாய் சொல்லுகிறது சாராய் பிள்ளையில்லாத மலடியாய் இருந்தாள் என்று, அப்படியானால் உன்னை ஆசீர்வதிப்பேன், உன்னை பெருமைப்படுத்துவேன், என்றும், உன்னை பெரிய ஜாதியாக்குவேன் என்றும் சொல்வது ஒரு தொலைகாட்சி விளம்பரத்தில் வருவது போல கண்ணா லட்டு தின்ன ஆசையா? என்றும், கண்ணா 2 வது லட்டு தின்ன ஆசையா என்றும் வலிய வந்து கேட்பது போலல்லவா உள்ளது? அதனால் தான் ஆபிரகாம் உடனே மூட்டைமுடிச்சுகளை கட்டிக்கொண்டு கடவுள் சொன்ன இடத்தை நோக்கி தன குடும்பத்தையே கூட்டிக்கொண்டு ஓடினான்.
வேறெதுவும் ஆண்டவர் ஆபிரகாமிடம் சொல்லவே இல்லை, கட்டளையோ, கட்டுப்பாடுகளையோ எதையும் ஆபிரகாமிடம் வலியுறுத்தவுமில்லை, அப்படியானால் கடவுள் எதற்காக அழைத்தார்? நன்மை செய்வதற்காக.
யோவான் சுவிசேஷத்தில், 4 ம் அதிகாரம், 5 முதல் 26 வசனங்களில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சமாரிய பெண்ணை சந்திக்கிறதை வாசிக்கிறோம், அந்த பகுதியில், சமாரிய பெண்ணை சந்திக்கும் முன் சீடர்கள் உணவு வாங்க போயிருந்தார்கள் என்று சொல்லுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால், 13 பேருக்கு உணவு வாங்க 12 பேர் போயிருக்கிறார்கள், ஆண்டவர் அவர்களை அனுப்பி இருக்கிறார்,
அனுப்பிவிட்டு சமாரிய பெண்ணை சந்தித்து பேசி, அவள் வாழ்வின் நிலையை எடுத்துக்காட்டினதுமல்லாமல், அவள் உள்ளத்தில் இருந்த வேற்றுமையின் எண்ணத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் களைகிறார். நாங்கள் இந்த மலையில் தொழுகிறோம், எங்கள் பிதாக்களும் இந்த மலையில்தான் தொழுதார்கள் ஆனால் யூதர்களாகிய நீங்களோ
எருசலேமில் தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்கிறீர்களே என்று அவளது ஆத்மீக தாகத்தை வெளிப்படுத்துகிறாள், உடனே ஆண்டவர் சொன்னார், அம்மா ஆண்டவரை எங்கும் தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது என்று சொன்னார்,
எதற்காக ஆண்டவர் ஒரு சமாரிய பெண்ணை சந்தித்து அவளோடு பேசி அவள் பிரச்சினைகளுக்கு பதில் சொல்லி அனுப்பி வைத்தார்? நன்மை செய்வதற்காக, நீ மனந்திரும்பு என்றோ, உன் வாழ்வு மாறவேண்டும் என்றோ, அறிவுரையோ ஆலோசனையோ ஒன்றும் சொல்லவில்லை நான் மேசியா என்று ஊருக்குள் போய் சொல் என்றும் சொல்லவில்லை, எதற்காகத்தான் ஆண்டவர் அவளோடு பேசினார்? நன்மை செய்ய, ஏன் நன்மை செய்ய வேண்டும்? அவர் நன்மை செய்ததற்கான காரணம் என்ன? ஒன்றும் இல்லை. அவர் நல்லவர் நன்மை செய்தார்.
நம்ப முடியுமா நம்மால்? முடியவே முடியாது காரணம் இந்த உலகில் எந்த மனிதனும் இப்படி எந்தக் காரணமும் இல்லாமல் நமக்கு நன்மை செய்ததே இல்லை, யாராவது நன்மை செய்தால் பயமாக இருக்கிறது, காரணம், எதோ ஒன்றை நம்மிடம் எதிர் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு மனிதன் நமக்கு 10௦ ருபாய் அதற்கு பத்துக்காரியங்களை நம்மிடம் எதிர் பார்க்கிறார்களே,
சமீப நாட்களாக வாகன சோதனை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது காரணமென்ன தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பணம் லட்ச லட்சமாக கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள், எதற்காக தருகிறார்கள் காரணம் இருக்கிறது, நன்மை செய்யவா? சத்தியமாக இல்லை. ஒட்டு வாங்க அதனால் அவர்கள் என்ன செய்தாலும் நம்மால் கேள்விக்கேட்க முடிவதில்லை நாமே லஞ்சம் வாங்கித்தானே ஒட்டு போடுகிறோம், இதுதான் மனிதன் செய்கிற உதவி.
ஆனால் கடவுளோ நம்மை அழைத்திருப்பது நன்மை செய்ய, எதற்காக நன்மை செய்கிறார்? அவர் நல்லவர் நன்மை செய்கிறார், யாருக்கெல்லாம் அதைதான் பவுல் ரோமர் 4 ம் அதிகாரத்தில் சொல்லுகிறார் எல்லாருக்கும் வெறும் மாம்சத்தின்படி ஆபிரகாமின் சந்ததியாய் இருப்பவர்களுக்கு மட்டும் அல்ல. நம்மிடத்தில் ஒன்றையும் அவர் எதிர் பார்க்கவில்லை.
ஆனால் இதுவரை கடவுளுக்காக ஊழியம் செய்வது, காணிக்கை தருவது, சகோதரனை சிநேகிப்பது, உபவாசமிருப்பது, தர்மம் செய்வது இவை எதுவும் கடவுள் எதிர் நோக்கவில்லையா? இல்லை ஆனால் இதல்லாம் நம் நன்றியுணர்வின் வெளிப்பாடுகள்.
ஆதியாகமம்.12 :8 ல் ஆபிரகாம் கடவுளுக்கு ஒரு பலிப்பீடம் கட்டி கடவுளை வணங்கினான், அவர் சொல்லியா? இல்லை அவனுடைய நன்றியுணர்வு. லோத்து அவனை வஞ்சித்த பொது அமைதியாக விட்டுக்கொடுத்தானே அவர் சொல்லியா? இல்லை அவர் மீதுள்ள விசுவாசத்தால்.
யோவான் 4 ம் அதிகாரம், 28 மற்றும் 29 வது வசனங்களில் ஊருக்குள் போய் அவரை பற்றி எல்லாருக்கும் சொல்லி அவரிடத்தில் அழைத்து முதல் பெண் மிஷனரியானாளே அவர் சொல்லியா?? அவளது நன்றியுணர்வு, அதை கடவுள் அனுமதிக்கிறார். அது நம் கடமை. எனவே இதை தெளிவாய் உணர்ந்துக்கொண்டு பிரதி பலனே பாராமல் நன்மை செய்கிற கடவுளை நாம் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வோடு, மகிழ்வோடு வாழ தூயாவியானவர் நம்மை வழி நடத்திக் காப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment