அன்புள்ள உடன் விசுவாசிகளே, தவறாமல் இந்த தளத்தை பார்வையிடும் ஒவ்வொருவருக்கும், என் மனமார்ந்த நன்றிகளையும் ஸ்தோத்திரங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இது உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.
இன்றைய தியானப்பகுதி. 1 கொரிந்தியர்.1 :18
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
நம்முடைய புதிய ஏற்பாடு புத்தகத்தின் முதல் நான்கு புத்தகங்களை நற்செய்தி நூல்கள் என்று சொல்லுவோம், காரணம் அவைகள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றன. இயேசு கிறிஸ்துவின் வாழ்வுதான் இந்த உலகிற்கு நற்செய்தி என்பதால் இவை நற்செய்தி நூல்கள் எனப்படுகின்றன.
ஆனால் இந்த நற்செய்தி நூல்களை வாசிக்கிற நாம் ஒரு விஷயத்தை கவனிக்க தவறியிருப்போம், அதாவது, இயேசுகிறிஸ்துவின் பிறப்பை எத்தனை நற்செய்தி நூல்கள் அறிவிக்கின்றன என்பதை கவனித்திருக்கிறீர்களா? மத்தேயு லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே அவரது பிறப்பின் வரலாறை பற்றி கூறுகின்றனர். மாற்குவும் யோவானும் அதைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிக விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறோம், ஆனால் 2 நற்செய்திகளில் பிறப்பின் வரலாறே இல்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான், பிறப்பைவிட மிக முக்கியமான நிகழ்வுகளை அவர்கள் பேச விரும்புவதால் பிறப்பின் வரலாறை விட்டுவிட்டு நேராக விஷயத்திற்கு வருகின்றனர்.
இயேசுகிறிஸ்துவின் வாழ்வில் நடந்த நிகழ்சிகளை ஒவ்வொரு நற்செய்தியாளரும் பதிவு செய்து வைத்திருப்பதில் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன, அதாவது மத்தேயுவில் உள்ள எத்தனையோ விஷயங்கள், மாற்குவில் இல்லை, மற்குவில் இருக்கிற சில சம்பவங்கள் லூக்காவில் இல்லை, லூக்காவில் இருக்கிற சில சம்பவங்கள் யோவானில் இல்லை,
ஆனால் எல்லா நற்செய்தி பகுதியிலும் வேறுபாடில்லாமல் விவரிக்கப்பட்டிருக்கிற நிகழ்வு எது தெரியுமா? இயேசு கிறிஸ்துவின் பாடும், மரணமும், உயிர்த்தெழுதலும். இயேசு ஆண்டவரின் பிறப்பைவிட, அவரது பாடுகள் மிக முக்கிய இடத்தை நற்செய்தி நூல்களில் கொண்டுள்ளது.
காரணம் கடவுள் இயேசு கிறிஸ்துவை இந்த உலகிற்கு அனுப்பினதின் நோக்கமே அதுதான்.
1 பேதுரு.1 :4 ல் இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே. அழியாததும், மாசற்றதும், வாடாததுமாகிய ஜீவன் நம்மிலே உண்டாக நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார் என்கிறார்.
இயேசுகிறிஸ்து பாடுபடாமலிருந்திருந்தால்
நமக்கு நித்திய ஜீவன் இல்லை,
என்றைக்கு ஆதாமும் ஏவாளும்
பாவம் செய்து தேவ மகிமையை
இழந்துப்போனார்களோ, அன்றே
கடவுள் அந்த அழிவின் வாழ்விலிருந்து
நம்மை மீட்க விரும்பினார், எனவேதான்
எல்லாரும் அழிவதை விட
எல்லாருக்காகவும் ஒருவர் மரிப்பது
என்ற தீர்மானத்தை எடுத்து தன்
சொந்த குமாரனை அனுப்பினார்.
எனவே நாம் பெற்றுக்கொண்ட இந்த மன்னிப்பின் வாழ்வு அவர் பாடுகளால் உண்டானது, எனவே அதை மறந்துபோகாமல், இந்த தவக்காலங்கள் அவர் பாடுகளை நினைவுகூறுகிற காலமாதலால், பவுல் கொரிந்தியருக்கு எழுதியிருக்கிற இந்த வாசகத்தை மறந்து போகாமல் இரட்சிக்கப்படுகிற நமக்கு அது தேவ வல்லமை என்பதை உணர்ந்து விசுவாசத்தோடும் பாடுகளின் காலத்தை முழுதும் அவருக்காக பயன் படுத்திகிறவர்களாய் வாழ தூயாவியானவர் நமக்கு துணைபுரிவாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
பகிர்வுக்கு நன்றி
ReplyDelete