அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள், இன்றைய தியான வசனம், மத்தேயு.23 :4
சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
மனிதாபிமானம் என்பது இன்றைக்கு மிகவும் குறைந்து வருகிறது, தன்னுடைய சக மனிதன் மீது அன்பு காட்டும், மனிதர்கள் வெகுவாக குறைந்து வருகின்றனர், தினந்தோறும் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடப்பதால், மக்கள் மனதில் அவைகள் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
நம்மை ஆளும் நிலையில் இருப்பவர்களும் மக்கள் நலன் பற்றி கவலைபடாமல் சுய நலம் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர், மக்களுடைய துன்பங்களை போக்க வேண்டியவர்களே மக்களுக்கு துன்பத்தை கொடுக்கின்றனர்.
இலங்கையில் நடைப்பெற்ற கொடூர போரும் தமிழர்கள் அழிக்கப்பட்ட கொடுமையும் மக்கள் மனதிலோ, தலைவர்கள் மத்தியிலோ பெரிய எழுச்சியை கொண்டுவரவில்லை,
ஆனால் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, இதுப் போன்ற மக்கள் விரோத போக்குகளை கொஞ்சமும் விரும்பாதவர், அப்படிப்பட்டவர்களை நேரடியாக எதிர்க்கிறார்,
நம்முடைய தியானப்பகுதியிலும், மக்களை வழிநடத்தக்கூடிய இடத்தில் வேதபாரகரும், பரிசேயரும் இருந்தனர், ஆனால் அவர்கள் மக்களுக்கு நன்மை செய்யாமல் மக்களை துன்புறுத்தினர். அவர்களின் இந்த இழிவான செயலை இயேசுகிறிஸ்து கடுமையாக சாடுகிற பகுதிதான் மத்தேயு 23 வது அதிகாரம்.
குறிப்பாக 4 வது வசனத்தில் அவர்கள் எந்தளவுக்கு மக்களை துன்புறுத்தினர் எனக் காண்கிறோம், சுமப்பதற்கு மிகவும் கடுமையான சட்டங்களையும் நியமங்களையும் மக்களுக்கு கொடுத்து அவர்களை குற்ற உணர்வில் நிறுத்துகின்றனர், ஆனால் அவர்களோ அவைகளை தன் விரலினாலும் தொடுவதில்லையாம், அதாவது தங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம் என்று வாழ்கின்றனர்.
ஆனால் ஆண்டவரோ அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டினதுமல்லாமல், அவர்கள் செய்த அக்கிரமத்தை எல்லாம் சொல்லிவிட்டு, வேதபாரகரே, பரிசேயரே உங்களுக்கு ஐயோ என்று அவர்கள் மீது தண்டனை வரும் என்று தீர்ப்புரைக்கிறார்.
காரணம் ஆண்டவர் எப்போதும் துன்புறும் மக்களின் பிரதநிதியாக நிற்பவர், மக்களின் துன்பம் நீங்க தன உயிரை கொடுப்பவர், அன்பானவர்களே, அநீதியின் நிமித்தமாக, அடக்கு முறைகளின் நிமித்தமாக நாம் துன்பத்தை அனுபவிப்போமானால் நம் பக்கம் தான் கிறிஸ்து நிற்கிறார், அடக்கு முறைகளை அடக்கி நமக்கு வாழ்வு தருவார்.
எனவே தான் நீதியின் நிமித்தம் துன்புறுவோர் பாக்கியவான்கள் என்கிறார். எனவே துன்பங்களின் மத்தியிலும் துணிச்சலாய் இந்த ஆண்டவரை நம்பி நம் நாளை துவங்குவோம். சத்திய தேவன் நம் பக்கம் நிற்கிறார். ஆமென்.
அருள்திரு. கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment