அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு, இந்த அருமையான காலை வேளையில் ஸ்தோத்திரங்கள், இன்று நாம் தியானிக்க போகிற திரு வசனம், சங்கீதம்.9 :9
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்
இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் போதக பயிற்சி முடிக்க குறைந்த பட்சம் 6 வருடங்கள் ஆகிறது, நானும் பயிற்சியை முடிக்க 6 வருடங்கள் ஆனது, பயிற்சி முடித்தவுடன் போதகராகிவிட முடியாது, பயிற்சி முடித்த பிறகு ஒரு மூத்த போதகரிடம் 3 வருடங்கள் பயிற்சிப் பெற வேண்டும், அந்த பயிற்சிக்காலத்தில் 3200 ரூபாய் ஊக்கத்தொகையாக கொடுப்பார்கள், அந்த பயிற்சி முடிந்த பிறகு ஊக்கத்தொகை அனுப்புவதை நிறுத்திவிடுவார்கள், ஒரு திருச்சபை போதகராக அழைக்கும் காலம் வரையோ, நிர்வாகம் பணியமர்த்தும் வரையோ சம்பளம் இல்லாமல் காத்திருக்க வேண்டும், தற்போது நான் அந்த நிலையில் தான் இருக்கிறேன்,
தற்போது சரியாக என் பயிற்சிக்காலம் முடிந்து 11 மாதங்கள் ஆகிறது, எந்த சம்பளமும் இல்லாமல் திருச்சபைகள் கொடுக்கிற பயனப்படியில் ஊழியம் செய்து வருகிறேன், இது எனக்கு மட்டும் நேர்வதல்ல, என்னுடைய மூத்த குருமார்களும் இந்த காலத்தை அனுபவித்தவர்களே.
இந்த காலத்தை ஒரு நெருக்கடி காலமாகவே என்வாழ்வில் உணர்ந்தேன், என் வாழ்வு ஊழியத்தால் சிறுமைப்பட்டுவிட்டதோ என்கிற ஒரு உணர்வு கூட சில நேரங்களில் என் மனதில் எழுந்ததுண்டு, ஆனால் இன்றும் உற்சாகம் குறையாமல் பணியாற்றி வருகிறேன் ஒருநாள் இந்த நெருக்கடி நிலை மாறும் என்கிற விசுவாசத்தோடு.
அதற்கு ஒரே காரணம் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, இந்த நிலையிலும் அவர் அடைக்கலமாகவும், தஞ்சமாகவும் இல்லாதிருந்தால் இவ்வளவு உற்சாகமாக இந்த ஊழியங்களை செய்ய கூடிய பெலன் என்னிடத்தில் இல்லை.
திருச்சபை ஊழியத்தினை செய்துக்கொண்டே, சம்பளமே இல்லாத இந்தக்காலத்தில் Diploma in Clinical Pastoral Counselling ஒருவருட ஆலோசனை பயிற்சியை முடிக்கவும், இதோ இந்த இணைய தளத்தை துவங்கி உங்களோடு இறை வார்த்தையை பகிர்ந்துக்கொள்ளவும் தேவன் எனக்கு மகத்தான கிருபை புரிந்தார், இந்த கடவுளின் அற்புத வழி நடத்துதல் அவருக்காக என்னை இன்னும் அதிகமாய் உழைக்க தூண்டுகிறது.
அதைதான் தாவீது இந்த திரு வசனங்களில் சுட்டிக்காட்டுகிறார், சிறுமைப்பட்டவனுக்கு, அவர் அடைக்கலம். நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
இது எவ்வளவு சத்தியமான வார்த்தை என்பதற்கு என் வாழ்வு இன்றும் சாட்சியாக இருக்கிறது காரணம் இன்னும் நான் நெருக்கடியில் சம்பளம் இல்லாமல் பயனப்படியில் தான் ஊழியம் செய்து வருகிறேன் ஆனால் இறைவன் ஜெயமாய் நடக்க வைக்கிறார்.
மனிதனின் பெலன் அல்ல இறைவனின் பெலன் நம்மோடு இருக்கிறது, துணிவோடு அவரை நம்பி நம் பணிகளை தொடர்வோம், இக்கட்டு காலத்தில், சிறுமையான நிலை இருந்தால் வருத்தப்படாதீர்கள் மாறாக சந்தோஷ படுங்கள் இறைவனின் அடைகலத்தையும், அற்புதத்தையும் இந்தக் காலத்தில் தான் நாம் நேரடியாய் நாம் அனுபவிக்க முடியும்.
இந்த தாவீதின் நம்பிக்கையோடு இந்த நாளை துவங்கவோம், கடவுள் நம்மோடிருக்கிறார். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment