அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். காலத்தின் போக்கு நம்மை மிகவும் அச்சுறுத்துகிறது. கடந்த வாரத்தில் ஒரே நாளில் நடந்த மூன்று சம்பவங்கள் என்னால் ஜீரணிக்க முடியாதவை. 9 ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது ஆசிரியரை கொடூரமாய் கொலை செய்திருக்கிறான், ஒரு கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தை உடைத்து நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர், இன்னொரு கல்லூரியில் இரண்டு வகுப்பு மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் விளையாட்டில் சண்டை ஏற்பட்டு ஒரு மாணவனின் மண்டை உடைந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு மருத்துவரை கொடூரமாக ஒருவன் கொலை செய்திருக்கிறான், மன்னிக்க முடியாத பாதகம் அது ஆனால் அதை தொடர்ந்து மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்து, நோயாளிகள் வீதிகளில் கிடந்தார்கள். அதே தவறை மரியாதைக்குரிய மருத்துவர்களும் செய்தார்கள்.
வளரும் தலை முறையும், வளர்ந்தோறும் ஒரே மாதிரி இருக்கிறார்களோ என்ற எண்ணம் இவைகளை கண்டால் ஏற்படுகிறது, இது கால மாற்றமா? அல்லது மனித மனநிலை மாற்றமா? இதற்கு தீர்வு என்ன? இந்த விவாதங்கள் இப்போது அவசியமானது, பிரச்சினை முடிந்து போனது, ஆனால் இனியொரு சம்பவம் இதுபோல் நடைபெற கூடாதென்றால், இதன் காரணத்தை கண்டறியும் விவாதங்கள் மிகவும் முக்கியமானது. முக்கியமாக கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களும் இதில் தீவிரமாய் இறங்க வேண்டும். சமூக அக்கறை நம்மில் கிளர்ந்தெழ வேண்டும்.
அன்பு இப்போது எங்கே போனதென தெரியவில்லை. தன்னை தவிர யார் செத்தாலும் பரவாயில்லை என்ற மோசமான சுபாவம் மனிதரில் வேரூன்றி வருவதைதான் இது காண்பிக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பை பெற்று தருவதற்கா? ஒழுக்கத்தை கற்பிப்பதற்கா? படித்தவன் படிக்காதவன் என்ற சமூக வேறுபாட்டை உருவாக்கவா? சமத்துவத்தை உருவாக்கவா? மனனம் செய்ய தெரியாதவன் முட்டாளா? பணம்தான் மனிதனின் பெருமைக்குரிய அடையாளமா? பண்பாடா? கோபத்தை வெளிப்படுத்த வன்முறைதான் ஒரே வழி என்று யார் கற்றுக் கொடுத்தது? நாமனைவருமே இக்கேள்விகளுக்கு பதில் கண்டறிய வேண்டும்.
ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு என்று சொன்னாரே அது எதற்காக? அப்படி செய்ய நம்மில் எத்தனை பேர் ஆயத்தமாக இருக்கிறோம்? முட்டள்தனமான உபதேசமாக தோன்றுகிறதா? அப்படியானால் சொன்னவர் முட்டாளா? மறு கன்னத்தை காட்டினால் என்ன நடக்கும்? அடித்தவனை திருப்பி அடித்தால்தானே திருந்துவான்? அப்படியானால் சிறைக்கு போன அனைவரும் திருந்திவிட்டார்களா? இயேசுவை கடவுள் என்று சொல்லுகிற நாமே இன்னும் அவரது உபதேசத்தின் ஆழங்களை உணர்ந்துக் கொள்ளவில்லை.
நமக்கு அதன் ஆழம் தெரியாததால் நாமும் பின்பற்றுகிறதில்லை நம் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்கிறதில்லை. திருச்சபைகள் பணம் ஈட்டுவதிலும், கட்டிடங்களை பெரிதாக்குவதிலும் காட்டுகிற ஆர்வத்தை வரும் தலைமுறை சரியாக உருவாக வேண்டும் என்பதில் காட்டுவதில்லை. எத்தனை திருச்சபையில் ஞாயிறு பள்ளிகள் சரியான முறையில் நடை பெறுகிறது. உங்கள் திருச்சபையின் ஞாயிறு பள்ளிக்கு முறையான பாட புத்தகம் இருக்கிறதா? எத்தனை சபைகளில் தனி மனித ஆதிக்கம் இல்லாமல் இருக்கிறது? சமத்துவத்தை போதிக்க வேண்டிய சபைகளில் ஏன் இப்படி? நாம் கிறிஸ்துவின் ஆழமான உபதேசங்களை இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை.
ஒரு கன்னத்தில் அறைந்தவனுக்கு மறு கன்னத்தை காட்டு என்று ஆண்டவர் ஏன் கூறினார்? அப்படி காட்டினால் என்ன நடக்கும்? ஒரேயொரு உதாரணம்.. மருத்துவர்கள் தாங்கள் செய்த வேலை நிறுத்தத்தை விட்டு, அதற்கு மாறாக. உயிர் காக்கும் மருத்துவரை கொன்ற மாபாதகத்தை கண்டிக்கும் வண்ணம், அனைத்து மருத்துவர்களும் ஒரு நாள் முழுவதும் அதாவது 24 மணி நேரமும் ஓய்வின்றி, விடுமுறையில் இருப்பவர்களும் வந்து மக்களுக்காக இலவசமாக மருத்துவம் பார்த்திருந்தால்? இலவசம் கூட வேண்டாம் ஒரு நாள் வேலை செய்து தங்கள் கோபத்தை பதிவு செய்திருந்தால்? என்ன நடந்திருக்கும் அவர்களை பற்றிய தவறான கருத்துக்கள் அனைத்தும் அந்த சில மணி நேரங்களில் மாறி போயிருக்குமே? மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்திருப்பார்களே, ஒருவருக்காய் ஆயிரம் நோயாளிகளை தவிக்க வைத்தார்கள் என்ற அவப்பெயர் வந்திருக்காதே????? கதா நாயகர்களாய் மக்களின் உள்ளத்தில் நிறைந்திருப்பார்களே. மீடியாக்கள் மருத்துவர்களின் புகழை உலகம் முழுக்க உயர்த்தியிருக்குமே. அதைதான் இயேசு கிறிஸ்து செய்ய சொல்லுகிறார்.
அடிக்கிறவன் கதா நாயகன் அல்ல என்பதை தெளிவாக புரிந்துக் கொள்ள சொல்லுகிறார். இதைதான் வருங்கால தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டுமானால் நாம் முதலில் அதை சரி என உணர வேண்டும். மறு கன்னத்தை காட்ட சொன்ன ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முட்டாளல்ல அதை கடைப்பிடிக்க தெரியாத நாம்தான்...... உணருவோம் ஆண்டவரின் வார்த்தைகளை கடைப்பிடிக்க முயலுவோம். முறையான் தலைமுறை உருவாக உண்மையான் கிறிஸ்தவர்களாய் ஒன்றினைவோம்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்