உண்மையான ஊழியத்தில் இரண்டு சவால்கள் உள்ளன.
ஒன்று வாழ்வாதாரம்:
ஊழியம் என்பதே.. பிறருக்கு செய்வது தனக்கு செய்வதல்ல. இயேசு தான் ஊழியம் செய்த காலத்தில் அனேக அற்புதங்களை செய்திருக்கிறார். யோவான்.20:30 ல் இப்புத்தகத்தில் எழுதியிராத அனேக அற்புதங்களை செய்திருக்கிறார் என்று யோவான் சாட்சியிடுகிறார். ஆம் அவர் செய்த அற்புதங்கள் உலகம் கொள்ளாதவை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் ஒரே ஒரு அற்புதத்தை கூட அவர் தனக்காக செய்ததில்லை. ஐயாயிரம் பேருக்கு அதிகமானோரின் பசியாற்ற 5 அப்பம் 2 மீனை பெருக்கி 12 கூடை மீதியாகும் அளவுக்கு கொடுத்தவர். தான் பசியாய் இருந்த போது ஒரு கல்லை கூட அப்பமாக மற்றிக் கொள்ளவில்லை. ஏனென்றால் தனக்கானதை நாடுவதில்லை ஊழியம். அப்படியானால் பசியிலும் வறுமையிலும் வாட வேண்டுமா? என்றால் இல்லை அன்றன்று வேண்டிய ஆகாரத்தை ஆண்டவர் தருவார். இந்த விசுவாசம் இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழிவிலகி பணத்தை நாடி சென்றுவிடுவர். இன்று பல ஊழியர்கள் அப்படி சென்று விட்டதை நம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். அவர்களை தான் பவுல் பிலி.3:19 ல் .. அழிவே அவர்கள் முடிவு..
வயிறே அவர்கள் தெய்வம்..
மானக்கேடே அவர்கள் பெருமை...
அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகை சார்ந்தவையே.. என்கிறார். ஆம் அது உண்மைதான் எனவேதான் ஆண்டவர் தனக்கானவைகளை நாடியதில்லை. அவருக்கானதை பரம பிதா கொடுக்க தவறியதில்லை. எனவே உணவுக்கோ, உடமைக்கோ பொருளுக்கோ ஒரு ஊழியக்காரன் கவலை கொள்வானானால் அவனை போல் ஓர் அவிசுவாசி இவ்வுலகில் இல்லை. ஆனால் இதை வைத்துதான் பிசாசும் இவ்வுலகமும் ஒரு நல்ல ஊழியனை வஞ்சிக்க பார்க்கும். எதிர்த்து நின்றால் ஜெயமே முடிவு. உலக பொருளல்ல உலக பொருளை கொடுப்பவரே பெரியவர்.
இரண்டு அச்சுறுத்தல்.
மக்களின் அறியாமையை மூலதனமாகி பல்வேறு கடைபிடிக்க முடியாத ஒழுங்குகளை உண்டாக்கி தங்களை நீதிமான்களாக காட்டிக் கொண்டு மக்களின் காணிக்கை பணத்தில் உல்லாச வாழ்வு வாழ்ந்த சமய தலைவர்களை இயேசு பகிரங்கமாக கண்டித்தார். இதன் விளைவு அவரை எப்படியாவது அடக்க துடித்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் தான் மிரட்டல் லூக்கா.13:31 ல் சில பரிசேயர் அவரிடம் வந்து இங்கிருந்து போய்விடும் ஏனெனில் ஏரோது உம்மை கொல்ல பார்க்கிறான் என்றனர். மிரட்டல்களுக்கு அஞ்சுபவரா ஆண்டவர்? உயிருக்கே அஞ்சாதவர் இது போன்ற சலசலப்புகள் அவரை என்ன செய்யும்? இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இருப்பேன் போய் சொல்லுங்கள் என்றார்.
உதவி செய்ய வேண்டிய யூதாஸ் காட்டி கொடுத்தபோது..
இவன் யார் என்று தெரியாது என்று பேதுரு மறுதலித்தபோது..
எல்லா சீடர்களும் விட்டுவிட்டு ஓடிப்போனபோது..
விடுவிக்க வேண்டிய பிலாத்து சிலுவைக்கு வஞ்சகமாய் ஒப்புக் கொடுத்த போது...
நியாயமாய் ஒரு பயம் வர வேண்டும் ஆனால் இயேசுவுக்கு வராது ஏனென்றால் அவர் உணமையான ஊழியத்தை செய்தவர்.. பிதாவின் சித்தமின்றி தன்னை ஒருவனும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தவர்.
உலக பொருள் நம்மை தேடி வரும்.. முதலாவது கடவுளுடைய இராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடினால் போதும் . நம்மை தொட்டால் அவர் கண்மணியை தொடுவதற்கு சமம்.
இந்த விசுவாசமே இன்றைய ஊழியத்தின் அடிப்படை தேவை.. ஏனென்றால் உண்மையான ஊழியத்தை எதிர்ப்பவர்கள் கடவுளுக்கு எதிர்த்து நிற்கிறார்கள் .