WORD OF GOD

WORD OF GOD

Sunday, September 25, 2016

ஞாயிறு செய்தி.. 25.09.2016


லூக்கா.16:19-31

மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், தற்போது BD இறுதியாண்டு படித்து வருகிறேன், எனவே அவ்வப்போது வகுப்புகளுக்காகவும், தேர்வுக்காகவும், மதுரைக்கு பயணிக்க வேண்டியுள்ளது. அப்படி பயணிக்க, பல்வேறு வழிகள் உள்ளன.

 பேருந்து பயணம்

பேருந்து பயணத்தில் மூன்று  வகை.

1. ஆம்பூரில் இருந்து திருப்பத்தூர் - திருப்பத்தூரில் இருந்து சேலம் -சேலத்திரிலிருந்து மதுரை 250 ரூபாய் சராசரி கட்டணத்தில் போய்விடலாம்.

2. ஆம்பூரில் இருந்து ரேணுகாம்பாள் பேருந்தில் 450 ரூபாய்க்கு முன்பதிவு செய்து விட்டால் பாதி படுக்கை அமைப்பு கொண்ட இருக்கையில் சொகுசாக அமர்ந்துக் கொண்டு எவ்வித அலைச்சலும் இல்லாமல்  மதுரை அரசரடியில் உள்ள கல்லூரி வாசலில் போய் இறங்கி விடலாம்.

3. ஆம்பூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு போய் அங்கே 900ம் ரூபாய்க்கு முன்பதிவு செய்தால், முழு படுக்கை வசதியோடு A /C பேருந்தில் மிக சிறந்த சொகுசாக தூங்கி கொண்டே போய் கல்லூரி வாசலில் இறங்கி விடலாம்.

இரயில் பயணம் இதிலும் மூன்று வகை.

முன் பதிவில்லா  பயணம், 150 ரூபாயில் பயணித்துவிடலாம். ஆனால் உட்காருவதே ஆக சிறந்த பாக்கியம்.

ஒரு மாதத்திற்கு முன்னால் , 300 ரூபாய்க்கு முன் பதிவு செய்தால் படுத்து கொண்டே சொகுசாக பயணிக்கலாம்.

A /C ல் முன்பதிவு செய்தால் எவ்வித தொந்தரவும் இல்லாமல் அற்புதமான பயணத்தை அனுபவிக்கலாம். (இன்னும் முன்பதிவு செய்யாததால் கட்டணம் தெரியவில்லை)


பணம் கூட கூட வசதி கூடுகிறது. இங்கே பணம் இருந்தால் இராஜாவாக வாழலாம். அம்பானியின் விலையுயர்ந்த கார் என்று கூகிளில் தேடினால் மிக அற்புதமான தரை விமானம் போன்ற ஒரு காரை பார்க்க முடிகிறது!!!



கோட் போட்டு காரில் வந்து  மினரல் வாட்டர் குடித்துக் கொண்டே இறங்குபவருக்கு இருக்கும் மரியாதை பிறருக்கு இல்லை. எனவே தான் பணம் பணம் பணம் என்று இக்கால மனிதர்களாகிய நாம் ஓடுகிறோம்!!!

அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை , பொருள் இல்லார்க்கு இவ்வுலகு  இல்லை என்று வள்ளுவரே கூறியுள்ளது எவ்வளவு உண்மை?? நல்ல கல்வி, நல்ல உணவு, நல்ல காற்று , நல்ல உடை  போன்ற அடிப்படை தேவைகள் கூட பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

அப்படியிருக்க அந்த செல்வத்தை தேடி செல்வந்தனாக வாழ்வதில் என்ன தவறு உள்ளது? இயேசு கிறிஸ்துவின் இன்றைய  உவமை செல்வந்தர்களுக்கு எதிராய் நிற்கிறதே??? பொருளாதார செழிப்பை கர்த்தர் விரும்பவில்லையா?  ஒருவன் செல்வந்தனாக இருப்பதையே இயேசு கிறிஸ்து விரும்பவில்லையா???

 ஐசுவரியாவான் அவன் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஏழை இலாசரு. அவரவர் வசதிக்கு ஏற்ப நடை உடை உணவு முறை உள்ளது. அதாவது விலையுயர்ந்த உடை, சொகுசான வாழ்க்கை செல்வந்தனின் அடையாளம்,
புண்கள்,வீதியில் வீசப்படும் உணவு, தெரு நாய்கள் தோழமை, இது ஏழையின் அடையாளம். இருவரும் மரித்தார்கள் ஏழை பரலோகம் போகிறான், செல்வந்தன் நரகம் போகிறான்!! ஏன் ? என்ன காரணம் அவன் செல்வந்தனாய் பிறந்தது அவன் செய்த பாவமா?

அதே போல் ஆமோஸ் 6 ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் வாழ்க்கை குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. தந்த கட்டில்களில் இளைப்பாறி, ஆட்டு குட்டியும், கன்று குட்டியும் சாப்பிட்டு, பெரிய கோப்பைகளில் மது அருந்தி சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். இதில் என்ன தவறு?  காசு இருக்கிறது அனுபவிக்கிறார்கள். இந்த வாழ்க்கையை கொடுத்ததே கடவுள் தானே, எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தவர்களை மீட்டு, பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்தை கொண்டு வந்து கொடுத்தது யார்? அவர் கொடுத்தார் அனுபவிக்கிறார்கள் என்ன தவறு? 7 ம்  வசனத்தில் சிறையிருப்புக்கு அவர்கள் தான் முன்னால் போவார்கள் என்று அவர்களை கலாய்க்கிறாரே ஏன்? செல்வந்தனாய் வாழ்வது பாவமா? இல்லை..

செல்வத்தை  கொடுப்பவரே கடவுள் தான், ஆனால் அதை இல்லாதவரோடு பகிர்ந்துக்க கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.. கானானுக்கு நுழைவதற்கு முன்னமே கடவுள் இஸ்ரவேலர்களுக்கு  இதை தெளிவாக கட்டளையிட்டிருந்தார். அனுக்கிரக வருஷத்தை பிரசித்தப்படுத்தி ஏழைகள் வாழ வகை செய்ய வேண்டும். ஆனால் இஸ்ரவேலரோ அந்த கட்டளையை முற்றிலும் மறந்துவிட்டு தான் வாழ்ந்தால் போதும் என்ற சுயநல நோக்கோடு இருந்துவிட்டனர். உபாகமம் 15:1-10 வரை வாசித்தால் இதை தெளிவாக விளங்கி கொள்ளலாம்.

இங்கே ஐசுவரியவானும் தன் வீட்டு வாசலில் உள்ள ஒரு தரித்திரனை காணாமல் ஓடிக் கொண்டிருக்கிறான். இதுதான் பாவம். பரலோக வாழ்வுக்கு ஒருவன் போவதற்கான தகுதியே பசியாயிருக்கிறவனுக்கு ஆகாரம் கொடுப்பதும், தாகமாய் இருப்பவனுக்கு தண்ணீர் கொடுப்பதும் உடை இல்லாதவனுக்கு உடை கொடுப்பதும் தானே... மத்.25:35-36.

எங்கிருந்தோ வந்த LCMS திருப்பணியாளர்கள் இங்கே வந்து பால் பௌடரும், கோதுமையும், இலவசமாக கொடுத்து, இலவச கல்வி கொடுத்து, வேலை வாய்ப்பை உண்டாக்கி கொடுத்து, சமூகத்தில் நம்மை நிலை நிறுத்தியது அதனால் தானே.

அவர்களை அனுப்பிய நம் இரட்சகரும், அவர்களும் தாராளமாய் இருக்க, நாமோ வன்கண்ணர்களாய் இருப்பது ஏனோ??  இங்கே வளர்ந்த சபைகள் தங்கள் பேங்க் பேலன்சை சொல்லி பெருமை பாடுவதில் எந்த பயனும் இல்லை.. ஏழை சபைகள் கட்டிடம் கட்ட முடியாமல், ஏழை சபைகள் தன்னிறைவு அடையாமல், போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இலட்சங்களில் விழா எடுக்கும் பெரிய சபைகள் இந்த சமூகத்திற்கு ஆற்றிய பணி என்ன? நமது LCMS மிஷினெரிகள் காலத்திற்கு பிறகு நாம் துவங்கிய சுதேச சமூக சேவைகள் என்ன? 42 கோடிக்கும் அதிகமானோர் அடுத்த வேளை  உணவில்லாமல் தவிக்கிற நாடு நம் நாடு இதை மாற்ற நம் பங்கு என்ன?

இன்றும் கிறிஸ்தவம் வீழ்ந்து விடாமல், தங்கள் கொடுக்கும் குணத்தால் தாங்கி பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த இறை செய்தியை அர்ப்பணிக்கிறேன்...







Friday, September 2, 2016


இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஒரு சாதாரண அங்கத்தினனாக பல கேள்விகள் என்னுள் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. 

1. நான் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் ஒரு போதகர்      எனக்கு கொடுத்த அறிவுரை நீ ஐ.இ.எல்.சி யில் பிழைக்க  வேண்டுமானால் யாராவது ஒரு தலைவரை பிடித்துக் கொள்ள  வேண்டும் என்பது!!!! 

விசுவாசத்தால் தானே நீதிமான் பிழைப்பான்? ஒரு மனிதன் எப்படி என்னை பிழைக்க வைக்க முடியும்? இயேசுவை விசுவாசியுங்கள் என்று பிரசங்கிக்கும் அதே நாவுகள் எப்படி மனிதனை சார்ந்திருக்க அறிவுறுத்துகிறது? 


2. நான் அருட் பொழிவு பெற்று நேத்தார் நினைவு லுத்தரன் திருச்சபையில் போதகராக பணியாற்றிய காலத்தில் ஐ.இ.எல்.சி. யில் இருந்து கிறிஸ்துமஸ் பரிசு 1000ம் ரூபாய் கிறிஸ்துமஸ் காலத்தில் கொடுக்கப்படும்.. ஆனால் எனக்கு 2013 ஆம் ஆண்டு கொடுக்கப்படவில்லை. 1000ம் ரூபாய் விஷயமல்ல. எனக்கு மறுக்கப்பட்டது 1000 ரூபாய் அல்ல என் உரிமை. அது எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை. எனக்கு மட்டுமல்ல என்னை போல் பலருக்கு. அப்போதைய சபை சங்க தலைவர் எடுத்துக் கொண்டார் என்கிறார்கள் எனக்கு உண்மை நிலவரம் தெரியாது. 

ஏன் இப்படி தலைவர்கள் நடந்துக் கொள்ளுகிறார்கள்? அடுத்தவர் உடைமைகளையோ உரிமைகளையோ பறிப்பது தரங்கெட்ட செயல் என்பது தெரியாதா? பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர் என்பது இவர்களுக்கு தெரியாதா?

3. இதுவரை போதகர்கள் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி யாருக்கும் கொடுக்கப்பட வில்லை..!!!! ஏன்? அந்த இலட்சக் கணக்கான (ஒரு வேளை கோடிக்கணக்கான)  
பணமெல்லாம் எங்கே போனது? இது வரை பொது பொருளாளர்களாக இருந்த,  பெருந்தலைவர்களாய் இருந்த அனைவரும் இதற்கு பொறுப்பு தானே? இது வரை ஒரு நிர்வாகம் கூட இதை கண்டுக் கொள்ளவில்லையே எப்படி? 

எந்த பார்ட்டியும் இதை பற்றி பேசாதது ஏன்? இதற்காக வழக்குகள் தொடராதது ஏன்? நான் கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் பெறுகிறேன், என் பி. எப் கணக்கு எண் தெரியாது? யாரை கேட்பது? சரியான பதில் இல்லை என்றால் என்ன விதமான நடவடிக்கை எடுப்பது? இதை பற்றி எந்த போதகர் சங்கமும் கவலைப்படாதது ஏன்?

4.  LCMS க்கு உட்பட்டு நடக்கிற நிர்வாகத்தில் தான் நான் ஆரம்பம் முதல்  இருக்கிறேன், காரணம் திணிக்கப்பட்ட புதிய அமைப்பு சட்டம் தவறானது என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த நிர்வாகத்தில் தான் நான் பாப்பனப்பள்ளி போதக வட்டத்தில் குரு நியமனம் பெற்றேன். தவறாமல் மாதம் தோறும்  எங்கள் சபைகள் பங்கு தொகை செலுத்தி வருகிறது. சிறிய சபைகள், மிக குறைந்த குடும்பங்கள் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சபைகள் என்பதை நிர்வாகம் நன்றாக அறியும் அப்படியிருக்க எங்கள் சபை கட்டுமான பணிகளுக்கு எந்த உதவியும் வரவில்லை. நான் முறைப்படி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

 எதனடிப்படையில் சபைகளுக்கான உதவி பணம் வருகிறது? எங்கள் சபைகள் நிராகரிக்கப்பட்டிருக்குமானால் காரணம் என்ன? பங்கு தொகை செலுத்தாத சபைகளிடம் நீங்கள் பங்கு தொகை செலுத்தினால் கட்டிட நிதி வரும் என்று கூறுகிறீர்களே!! ஏன் எங்கள் சபைகள் புறக்கணிக்கப்படுகின்றன? 

5. LWF கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் எங்கள் சபைகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஏன் ? நான் கேள்விகள் கேட்பதாலா ? அல்லது IRLL உடன் தொடர்புள்ளவன்  என்பதாலா? இதை தனிப்பட்ட முறையில் தேடி போய் சிலருக்கு கொடுக்கிறீர்கள்!! எங்கள் சபைகள் என்ன பாவம் செய்தது? எப்போது கொடுத்தீர்கள்? எப்படி கொடுத்தீர்கள் எந்த தகவலும் எனக்கும் எங்கள் சபைகளுக்கும்  தரவில்லையே ஏன் ? பங்கு தொகை தவறாமல் செலுத்தும் சபைகளுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? இது எங்கள் சபைகளின் உரிமை இதை பறிக்க நீங்கள் யார்? கடவுள் பயம் உண்டா உங்களுக்கு? நானும் சபையாரும்  தனிப்பட்ட முறையில் உங்களை தேடி வந்து உங்கள் காலில் விழ வேண்டுமா? எங்களுக்கு சேவை செய்ய தான் நிர்வாகம் எங்களை மிரட்டவும் அடிமைப்படுத்தவும் அல்ல.. 

6. LCMS  நமது தாய் சபை அதை நேசிக்கிறேன். LCMS ன் அரும் பெரும் முயற்சி இல்லாமல் இன்று ஐ.இ.எல்.சி. இல்லை, ஆனால் அதற்காக LCMS கை  காட்டும் நிர்வாகத்தில் தவறு நடந்தால் தட்டி கேட்கக் கூடாதா? கேட்டால் ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்கி விடுவீர்களா? அல்லது நான் LCMS க்கு விரோதியாகிவிடுவேனா? என்ன மூடத்தனம்? LCMS  வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி பணத்தை சுருட்டுகிறவர்கள் தான் LCMS ன் விரோதிகள். 

இந்த கேள்விகள் போதகர் சங்கத்தில் எதிரொலிக்கும் (நடந்தால்) ஏற்கெனவே ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்க போவதாக மிரட்டியாகிவிட்டது. வேறு என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு நொடியும்  இந்த சம்பவம் என் நினைவில் நிற்கிறது. கேள்வி கேட்டால் நீக்குவேன் என்பது சர்வாதிகாரத்தின் உச்சம்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews