டிசமபர் 1ல் பாபனபல்லி போதகவட்டத்தில் பகிர்ந்துக் கொண்ட
கடவுளுடைய வார்த்தை:
திருவசனம் ; 2 கொரிந்தியர்.4:9
பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதிப்பதில்லை, ஆனால்
இந்த ஆண்டு நடைப்பெற்ற, மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில், மாரியப்பன் என்ற
தமிழர் தங்கம் வென்று இந்தியாவையே பெருமையடைய வைத்தார். உடனே நமது முதல்வர் அவருக்கு
இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார். ஒட்டு மொத்த ஊடகத்துறையும் அவர் வீட்டு வாசலில்
நின்றது. மாரியப்பனின் தாயார் ஆனந்த கண்ணீரோடு கூறியது, “என் மகனுக்கு 5 வயதாய் இருக்கும்போது
ஒரு விபத்தில் அவன் கால் பாதிக்கப்பட்டது, அவனுடைய அப்பாவும் ஒரு சில ஆண்டுகளில் எங்களை
விட்டு போய்விட்டார், என்னால் குடும்பத்தை நடத்த முடியாமல் பெரிதும் கஷ்டப்பட்டேன்,
எனவே மகனை அழைத்து இருவரும் தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்றேன், அப்போது அவன் வேண்டாம்மா,
சனி ஞாயிறுகளில் நான் வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன், என்று கூறி என்னை தேற்றினான்,
இன்று சாதித்து விட்டான்” என்றார்கள்.
எந்த ஒரு சாதனையாளரும், சங்கடங்களையும், துன்பங்களையும்,
பெரிய சோதனைகளையும் சந்திக்காமல் சாதனையாளர்களாய் உருவானதில்லை. வேதத்தில் இதற்கு சிறந்த
எடுத்துக்காட்டுகளில் ஒருவர் எலியா தீர்க்கதரிசி,
மரணத்தை காணாமல் நேரடியாக பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள்
இரண்டு பேர் ஒருவர் ஏனோக்கு, இன்னொருவர் எலியா தீர்க்கன், அக்கினி இரதம் வந்து அவரை
அழைத்துக் கொண்டு போனது. அது மட்டுமா சிலுவை பாடுகளை அடையும் முன் இயேசு கிறிஸ்து மறுரூப
மலையில் தன் தற்சொரூபத்தை வெளிப்படுத்தியபோது அவருக்கு அருகில் நின்ற இருவரில் ஒருவர்
எலியா. எவ்வளவு சிறப்பான தீர்க்கன், புகழின்
உச்சத்தில் நிற்கும் தீர்க்கன்,
1ராஜாக்கள்.19:4ல் “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்
கொள்ளும், தான் சாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்”
வாழ்வை வெறுத்து, தன் போராட்டங்களால் நலிவடைந்து, யாரும்
தன்னோடு இணைந்து போராடாததையும், யாரும் தன்னை ஆதரிக்காததையும் எண்ணி, மன உளைச்சாலாலும்,
மன அழுத்தத்தாலும் இந்த வேண்டுதலை முன் வைக்கிறார். இதை 19ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.
ஆனால் கடவுளோ, ஒரு தேவ தூதனை அனுப்பி, அவரை எழுப்பி, அவனுக்கு
உணவை கொடுத்து, மீண்டும் அவன் பயணத்தை துவக்கி வைத்தார், ஆம் நாம் எப்போதெல்லாம் வஞ்சிக்கப்பட்டு,
துன்பப்பட்டு தனிமையில் நிற்கிறோமோ, அப்போதெல்லாம், சர்வ வல்லவர் நம் பக்கத்தில் நிற்கிறார்,
அதைதான் பவுல், 2கொரிந்தியர். 4ம் அதிகாரம் 9 ம் வசனத்தில் நாங்கள் துன்பப்படுத்தப்பட்டும்,
கை விடப்படுகிறதில்லை என்று கூறுகிறார், ஆம் யார் நம்மை கை விட்டாலும் நம்மை சேர்த்துக்
கொள்ளும் சர்வவல்லவர் நம்மோடு இருக்கிறார். பவுல் இதை அறிவுரையாக கூறவில்லை, அது அவருடைய
வாழ்வின் அனுபவம், பசியில், குளிரில், வெயிலில், நிர்வாணத்தில் பல முறை தாம் இருந்ததை
வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போதெல்லாம் கை விடாத அன்பு நேசரின் பரம அன்பை ருசித்து
அறிந்தவர் எனவேதான் உணர்ந்து கூறுகிறார் நாங்கள் துன்பப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை.
அதுமட்டுமா? நாங்கள் கீழே தள்ளப்பட்டும் மடிந்துப்
போகிறதில்லை என்கிறார்,
நாமாக விழுவதும் உண்டு சில நேரம் நம்மை சில துரோகிகள் தள்ளிவிடுவதும்
உண்டு, ஆனால் அவர்கள் நினப்பது மட்டும் நடக்காது, நாம் முடிந்துவிட மாட்டோம், முடங்கிவிட
மாட்டோம், வீறு கொண்டு எழுந்து நிற்போம், அதைதான் சங்கீதம் 20 கூறுகிறது அவர்கள் முறிந்து
விழுந்தார்கள் நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம் என்று. அற்ப பணத்தையும், அழிந்து
போகிற இந்த உலகத்தின் வசதி வாய்ப்புகளையும், ஒன்றுக்கும் உதவாத இந்த உலகத்தின் அதிகாரங்களையும்
நம்புகிறவர்களே தைரியமாய் நிற்கும்போது, நாமோ, நமக்காக உயிரை கொடுத்து மீட்டெடுத்த
நம் இரட்சகர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்கள் நமக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்???
எனவே கலங்க வேண்டாம், கடந்த 11 மாதங்கள் நாம் சந்தித்த பெலவீனங்கள்,
தடைகள், துன்பங்கள் அனைத்தையும் உடைத்து, 12ம் மாதத்தில் நம்மை கம்பீரமாய் ஆலயத்தில்
வந்து அமர்ந்து நன்றி சொல்ல வைத்தவர் 12ம் மாதத்திலும் நம்மோடே இருக்கிறார். இம்மாதம்
கொஞ்சம் சிரமம்தான், புத்தாடை, அலங்காரம், தினந்தோறும் வரும் பஜனைக்கு காணிக்கை, பிரியானி
எல்லாம் தேவை, அதுமட்டுமா பணம் இருந்தும் எடுக்க முடியாத பணத்தட்டுப்பாடு, என துன்பங்கள்
வரிசை கட்டினாலும், நம்மை கைவிடாதாவர் நம்மோடு மட்டுமல்ல, திரு விருந்தின் வழியாக நமக்குள்ளேயே
இருக்கிறார். தைரியமாய் கிறிஸ்துமஸ் மாதத்திற்குள் அடியெடுத்து வைப்போம், ஆரவாரமாய்
கொண்டாடுவோம், அனைத்தையும் நம் சர்வ வல்லவர் பார்த்துக்கொள்வார். ஆமேன்.