WORD OF GOD

WORD OF GOD

Monday, August 8, 2011

தோற்றுவிட வாய்ப்பே இல்லை

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், இயேசுவை நம்புவோர் யாரும் வாழ்வில் தோற்றுவிட வாய்ப்பே இல்லை. காரணம் அவர் நம்மோடு எப்போதும் இருக்கிறார். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கை விடுவதுமில்லை என்று சொல்லி நம் பக்கத்திலேயே இருக்கிறார். அவர் எப்படி நம் பக்கத்தில் இருக்கிறார்? யாராக நம் பக்கத்தில் இருக்கிறார்? அதற்கான பதில்களை சில வசனங்களில் உங்களுக்கு விளக்குகிறேன்.

ஏசாயா.66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.


அன்பானவர்களே இந்த வசனத்தின் மூலம் கடவுள் நமக்கு தாயாக இருக்கிறார் என்பதை உணருகிறோம், பொதுவாக தாயை பிரிந்து தூர இடத்தில் படிக்கிறவர்கள், வேலை செய்கிறவர்கள், தாய் பக்கத்தில் இல்லாததால் மிகவும் சோர்ந்து போவார்கள். என் தாய் என் பக்கத்தில் இருந்தால் எனக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கும் என்று வருந்துவார்கள். தாயை இழந்தவர்கள் நிலை இதனினும் கொடியது. ஆனால் அன்பானவர்களே. இயேசு ஆண்டவர் உங்கள் அருகில் உங்கள் தாயாக இருக்கிறார்.

மத்தேயு.6:32  இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

ஆம் பிரியமானவர்களே தந்தை அருகில் இல்லையே, என் தேவைகளை உடனே யார் நிறைவேற்றுவார் என்று வருத்தத்தோடு இருப்பவர்களா நீங்கள். இந்த வசனத்தில் ஆண்டவர் கடவுளை தந்தை என்று குறிப்பிடுகிறார், எப்படிப்பட்ட தந்தை நம் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகிற தகப்பன். ஆம் அன்பானவர்களே நம் பரம தந்தை நம்மோடே இருக்கிறார். நம் தேவைகளை நிறைவேற்றுகிறார்.

மத்தேயு.12:50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

அன்பானவர்களே எவ்வளவு அருமையான வார்த்தைகளை ஆண்டவர் கூறுகிறார். யார் கடவுளின் சித்தபடி செய்கிறார்களோ அவர்கள் என் சகோதரன், சகோதரி, தாய் என்று கூறுகிறார். அப்படியானால் சகோதர ஆதரவு இல்லையே என்று நாம் வருந்த தேவையில்லை. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்போம், அப்படியானால் ஆண்டவரே நம் சகோதரனாக இருக்கிறாரே, அது மட்டுமா? பிள்ளைகளை பணியின் நிமித்தமாக, கல்வியின் நிமித்தமாக, வேறு காரணங்களால் பிரிந்து வாடுகிற வயதான பெற்றோருக்கு நானே பிள்ளை என்கிறாரே. ஆம் அவர் சித்தபடி செய்யும் பெரியோர் அவருக்கு தாயாகவும் தந்தையாகவும் உள்ளனர். அவரே பிள்ளையாய் முன்னின்று அவர்கள் தேவையை நிறைவேற்றுவார்.

யோவான்.15:15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

இந்த வசன‌த்தில் ஆண்டவர் இன்னும் ஒருபடி மேலே போய் நம்மை சினேகிதர் என்கிறார். ஆம் நம்மை அவருடைய நண்பர்கள் என்கிறார். இனி நமக்கும் ஆண்டவ்ருக்குமிடையே அந்த பாகுபாடும் இல்லை. உடுக்கை இழந்தவன் கை போலாங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்ற வள்ளுவரின் வாக்கு படி நல்ல நண்பனாக நம் துன்பங்களை நீக்கி நம்மை காத்தருள்வார். அவர் தோளில் சாய்ந்து நம் தேவைகளை உரிமையோடு சொல்லலாம்.

அன்பானவர்களே, நாம் எப்போதுமே தனியாக இல்லை, காரணம், அவர் தாயாக, தகப்பனாக, சகோதரனாக, சகோதரியாக, ஏன் பிள்ளையாக, நண்பனாக நம்மோடே இருக்கிறார். அப்படியானால் இயேசு நம் குடும்பத்தில் ஒருவரல்ல, அவர் குடும்பத்தில் நாம் ஒரு அங்கத்தினராக இருக்கிறோம். சந்தோஷமாக இருப்போம். கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால் நம்மை எதிர்த்து நிற்கக் கூடியவன் யார்?

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, August 4, 2011

ஓடுவோம்.


எபிரேயர்.12:1

விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமான இயேசுவை நோக்கி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.

திரியேக கடவுளின் நாமத்தில் வாழ்த்துக்கள், கிறிஸ்தவ வாழ்வு ஓர் ஓட்டம். இருப்பதல்ல, நிற்பதல்ல, நடப்பதல்ல. நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பவுல் ஒட்டத்தை முடித்தேன் என்றும், திமோத்தேயுவை பார்த்து, நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டு ஓடு என்றும் கூறுகிறார்.

இயேசு ஆண்டவரும் நமக்கு முன்னோடினவர் என்று இந்த நிரூபத்தில் வாசிக்கிறோம். அதுபோல் நாமும், இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து ஓடவேண்டும். பொறுமையுடன் ஓடவேண்டும்.

ஓட்டம் என‌பது, வாழ்வு. கிறிஸ்துவை போல் வாழ‌ வேண்டும். கிறிஸ்துவை பின்ப‌ற்ற‌ வேண்டும். இயேசு ஆண்ட‌வ‌ர், ந‌ம‌க்கு முன் மாதிரியாவ‌ர். அவ‌ர் விசுவாச‌த்தை ந‌ம்மை போல் வெறும‌னே அறிக்கை செய்த‌வ‌ர‌ல்ல‌ செய‌ல்ப‌டுத்திய‌வ‌ர். அவ‌ர் பிதாவினிட‌த்தில் அன்பாயிருந்தார். ம‌னித‌ர்க‌ளிட‌த்திலும் அன்பாயிருந்தார். க‌ட‌வுளின் திருவுள‌ சித்த‌த்தை நிறைவேற்றினார்.

ச‌மூக‌த்தில் வாழ்விழ‌ந்த‌ அனைவ‌ரையும் ச‌ந்தித்தார், வாழ்வ‌ளித்தார். நீங்க‌ளும் நானும் எப்ப‌டி இருக்கிறோம்? ம‌னிதனாய் ஆல‌ய‌த்திற்குள் போய் புனித‌னாய் வ‌ர‌ வேண்டும். இயேசுவை போல் ந‌ம‌க்கு முன் வைத்திருக்கிற‌ ச‌ந்தோஷ‌த்தின் பொருட்டு, துன்ப‌த்தை ஏற்றுக் கொண்டார். ஓடுவோம் ஓடுவோம்.. இயேசுவை போல் ஓடுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு, G .மில்டன் அருண்ராஜ்
revmilton1982@gmail.கம

மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்
 

Tuesday, August 2, 2011

மனம் அமைதி பெற‌

அன்பான உடன் விசுவாசிகளே, இன்று முதல் இந்த தளத்தில், கர்த்தருடைய பெரிதான கிருபையால், ஆலோசனை பக்கத்தை துவக்குகிறேன். இதன் நோக்கம் நம் மன வளம் பெருக வேண்டும் என்பதே.


இன்று மனிதர்கள் செல்வத்திலும், வளத்திலும் குறைவில்லாமல் பெருகி வருகிறார்கள், ஆனால் மனோ திடம் என்பது மிகவும் குறைந்து வருகிறது. தற்கொலைகள், கொலைகள், வன்புணர்வுகள், வன் முறைகள், தீவிரவாதங்கள், மிகவும் வேகமாய் அதிகரித்து வருகிறது. இவைகளெல்லாம் மனிதனின் மனம் வலிமையில்லாமல் இருக்கிறது என்பதையும், மன வலிமை பெறுவதற்கான சரியான வழிக் காட்டுதல் இல்லை என்பதையும் காண்பிக்கிறது.

நான் ஆலோசனை வழங்கும் பயிற்சி பெற்றவன் என்பதால், மன வலிமை பெற வேதாகமத்தின் அடிப்படையிலும், மனோதத்துவ அடிப்படையிலும், சில யுக்திகளை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
நம்முடைய மனம் என்பது இறைவன் நமக்கு அருளியிருக்கிற அற்புதமான கொடை. இந்த மனம் வலிமையோடு இருந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்துவிடலாம். அதாவது உடல் வலிமை ஒரு மனிதனின் அரோக்கியமான வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மன வலிமை முக்கியம்.


உதாரணமாக 1990 களில் இந்திய கிரிக்கெட் அணியில் மிகச் சிறந்த வீரராக சச்சின் டெண்டுகல்கர் ஜொலித்தார். அந்த காலக்கட்டத்தில் இந்திய அணியை ஒன் மேன் ஆர்மி என்று விமர்சகர்கள் வருணித்தார்கள், காரணம் சச்சின் ஆட்டமிழ்ந்துவிட்டால் மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துவிடுவர். காரணம் சச்சினே ஆட்டமிழந்துவிட்டார் நாம் அவ்வளவுதான் என்ற மன் பயம் தான் காரணம்.
ஆனால் இப்போதைய இந்திய அணியில் அப்படி ஒரு பயம் இல்லை. காரணம் இதற்காகவே ஒரு மனோதத்துவ நிபுணரை அணிக்கு நியமித்துள்ளனர். அவருடைய உற்சாகத்தினால், அனைவரும் சிறப்பாக விளையாடிவருகின்றனர். இதன் மூலம் வாழ்வில் வெற்றி பெற மன வலிமை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர முடிகிறது.

அப்படியானால் மனம் வலிமை பெற என்ன செய்ய வேண்டும்? முதல் வழி "ஒப்புக்கொள்ளல்"(ACCEPTANCE). இதை பற்றி விரிவாக அடுத்த வாரம் காண்போம். அதுவரை 1சாமுவேல்.17:11 முதல் 50 வரையும், ரோமர்.7:15 முதல் 25 வரையும் வாசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

(உங்கள் பிரச்சிணைகளுக்கு வேத வசன ஆலோசனை தேவையா எனது இமெயிலுக்கு எழுதுங்கள்).

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews