WORD OF GOD

WORD OF GOD

Friday, September 2, 2016


இந்திய சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஒரு சாதாரண அங்கத்தினனாக பல கேள்விகள் என்னுள் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. 

1. நான் பயிற்சி போதகராக பணி  துவங்கிய காலத்தில் ஒரு போதகர்      எனக்கு கொடுத்த அறிவுரை நீ ஐ.இ.எல்.சி யில் பிழைக்க  வேண்டுமானால் யாராவது ஒரு தலைவரை பிடித்துக் கொள்ள  வேண்டும் என்பது!!!! 

விசுவாசத்தால் தானே நீதிமான் பிழைப்பான்? ஒரு மனிதன் எப்படி என்னை பிழைக்க வைக்க முடியும்? இயேசுவை விசுவாசியுங்கள் என்று பிரசங்கிக்கும் அதே நாவுகள் எப்படி மனிதனை சார்ந்திருக்க அறிவுறுத்துகிறது? 


2. நான் அருட் பொழிவு பெற்று நேத்தார் நினைவு லுத்தரன் திருச்சபையில் போதகராக பணியாற்றிய காலத்தில் ஐ.இ.எல்.சி. யில் இருந்து கிறிஸ்துமஸ் பரிசு 1000ம் ரூபாய் கிறிஸ்துமஸ் காலத்தில் கொடுக்கப்படும்.. ஆனால் எனக்கு 2013 ஆம் ஆண்டு கொடுக்கப்படவில்லை. 1000ம் ரூபாய் விஷயமல்ல. எனக்கு மறுக்கப்பட்டது 1000 ரூபாய் அல்ல என் உரிமை. அது எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை. எனக்கு மட்டுமல்ல என்னை போல் பலருக்கு. அப்போதைய சபை சங்க தலைவர் எடுத்துக் கொண்டார் என்கிறார்கள் எனக்கு உண்மை நிலவரம் தெரியாது. 

ஏன் இப்படி தலைவர்கள் நடந்துக் கொள்ளுகிறார்கள்? அடுத்தவர் உடைமைகளையோ உரிமைகளையோ பறிப்பது தரங்கெட்ட செயல் என்பது தெரியாதா? பண ஆசையே எல்லா தீமைக்கும் வேர் என்பது இவர்களுக்கு தெரியாதா?

3. இதுவரை போதகர்கள் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி யாருக்கும் கொடுக்கப்பட வில்லை..!!!! ஏன்? அந்த இலட்சக் கணக்கான (ஒரு வேளை கோடிக்கணக்கான)  
பணமெல்லாம் எங்கே போனது? இது வரை பொது பொருளாளர்களாக இருந்த,  பெருந்தலைவர்களாய் இருந்த அனைவரும் இதற்கு பொறுப்பு தானே? இது வரை ஒரு நிர்வாகம் கூட இதை கண்டுக் கொள்ளவில்லையே எப்படி? 

எந்த பார்ட்டியும் இதை பற்றி பேசாதது ஏன்? இதற்காக வழக்குகள் தொடராதது ஏன்? நான் கடந்த 6 ஆண்டுகளாக  ஊதியம் பெறுகிறேன், என் பி. எப் கணக்கு எண் தெரியாது? யாரை கேட்பது? சரியான பதில் இல்லை என்றால் என்ன விதமான நடவடிக்கை எடுப்பது? இதை பற்றி எந்த போதகர் சங்கமும் கவலைப்படாதது ஏன்?

4.  LCMS க்கு உட்பட்டு நடக்கிற நிர்வாகத்தில் தான் நான் ஆரம்பம் முதல்  இருக்கிறேன், காரணம் திணிக்கப்பட்ட புதிய அமைப்பு சட்டம் தவறானது என்பதில் உறுதியாக உள்ளேன். இந்த நிர்வாகத்தில் தான் நான் பாப்பனப்பள்ளி போதக வட்டத்தில் குரு நியமனம் பெற்றேன். தவறாமல் மாதம் தோறும்  எங்கள் சபைகள் பங்கு தொகை செலுத்தி வருகிறது. சிறிய சபைகள், மிக குறைந்த குடும்பங்கள் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட சபைகள் என்பதை நிர்வாகம் நன்றாக அறியும் அப்படியிருக்க எங்கள் சபை கட்டுமான பணிகளுக்கு எந்த உதவியும் வரவில்லை. நான் முறைப்படி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

 எதனடிப்படையில் சபைகளுக்கான உதவி பணம் வருகிறது? எங்கள் சபைகள் நிராகரிக்கப்பட்டிருக்குமானால் காரணம் என்ன? பங்கு தொகை செலுத்தாத சபைகளிடம் நீங்கள் பங்கு தொகை செலுத்தினால் கட்டிட நிதி வரும் என்று கூறுகிறீர்களே!! ஏன் எங்கள் சபைகள் புறக்கணிக்கப்படுகின்றன? 

5. LWF கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் எங்கள் சபைகளுக்கு கொடுக்கப்படவில்லை. ஏன் ? நான் கேள்விகள் கேட்பதாலா ? அல்லது IRLL உடன் தொடர்புள்ளவன்  என்பதாலா? இதை தனிப்பட்ட முறையில் தேடி போய் சிலருக்கு கொடுக்கிறீர்கள்!! எங்கள் சபைகள் என்ன பாவம் செய்தது? எப்போது கொடுத்தீர்கள்? எப்படி கொடுத்தீர்கள் எந்த தகவலும் எனக்கும் எங்கள் சபைகளுக்கும்  தரவில்லையே ஏன் ? பங்கு தொகை தவறாமல் செலுத்தும் சபைகளுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? இது எங்கள் சபைகளின் உரிமை இதை பறிக்க நீங்கள் யார்? கடவுள் பயம் உண்டா உங்களுக்கு? நானும் சபையாரும்  தனிப்பட்ட முறையில் உங்களை தேடி வந்து உங்கள் காலில் விழ வேண்டுமா? எங்களுக்கு சேவை செய்ய தான் நிர்வாகம் எங்களை மிரட்டவும் அடிமைப்படுத்தவும் அல்ல.. 

6. LCMS  நமது தாய் சபை அதை நேசிக்கிறேன். LCMS ன் அரும் பெரும் முயற்சி இல்லாமல் இன்று ஐ.இ.எல்.சி. இல்லை, ஆனால் அதற்காக LCMS கை  காட்டும் நிர்வாகத்தில் தவறு நடந்தால் தட்டி கேட்கக் கூடாதா? கேட்டால் ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்கி விடுவீர்களா? அல்லது நான் LCMS க்கு விரோதியாகிவிடுவேனா? என்ன மூடத்தனம்? LCMS  வைத்த நம்பிக்கையை பொய்யாக்கி பணத்தை சுருட்டுகிறவர்கள் தான் LCMS ன் விரோதிகள். 

இந்த கேள்விகள் போதகர் சங்கத்தில் எதிரொலிக்கும் (நடந்தால்) ஏற்கெனவே ஐ.இ.எல்.சி யில் இருந்து நீக்க போவதாக மிரட்டியாகிவிட்டது. வேறு என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு நொடியும்  இந்த சம்பவம் என் நினைவில் நிற்கிறது. கேள்வி கேட்டால் நீக்குவேன் என்பது சர்வாதிகாரத்தின் உச்சம்.

Sunday, August 28, 2016

SUNDAY SERMON


(எச்சரிக்கை 

இந்த சர்ச் ல நான்தான் பெரிய ஆளு. என்ன விட எவனும் இங்க பெரிய ஆளு கிடையாது அப்டினு நினைக்கிறவங்க தயவு செய்து இன்று சர்ச்க்கு போங்க  ஆனா, பிரசங்கம் கேட்டுட்டு ஐயர் என்ன குத்துற மாறி பிரசங்கம் பன்னார்னு புலம்ப வேண்டி இருக்கும்.)

 நான் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொது ஒரு திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு பயந்திட்டு சந்தோஷமா கல்யாணத்திற்கு நானும் சில நண்பர்களும் போனோம், திருமண ஆராதனை முடிந்து  மிக ஆவலோடு சாப்பாடு பரிமாறும் அறைக்கு வந்தோம் ஆனால் அங்கே கதவு பூட்டப்பட்டிருந்தது வெளியே எல்லாரும் நின்று கொண்டிருந்தனர், இன்னும் உணவு தயாராகவில்லை என்று நினைத்து நாங்களும் ஓரமாக நின்றுக் கொண்டோம், திடீரென கதவு திறக்கப்பட்ட்து, வெளியே நின்ற அத்தனை பெரும் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தார்கள், கதவை திறந்த பணியாளர்கள் உள்ளே நுழைகிறவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திக்கி திணறி உள்ளே இடம் நிறைந்தவுடன் அனைவரையும் தள்ளி கதவை மீண்டும் மூடினர். 

அப்போதுதான் புரிந்தது பந்தி ஏற்கெனவே நடக்கிறது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதவை மூடிவிட்டு பந்தி பரிமாறப்படுகிறது என்று. ஆம்பூரில் பயிற்சி போதகராய் இருந்தால் கூட தனியே டேபிள் போட்டு இல்லை நிறைய சாப்பாடு போட்டு திணற திணற சாப்பிட வச்சி சபையார் பழக்கிட்டதால,  கூட்டத்தின் நடுவே புகுந்து இடம் பிடிக்க தயங்கி கொண்டு ஒரு ஓரமாக நின்றுக் கொண்டோம். ஆனால் சில நிமிடங்கள் கழித்து எங்களை அழைத்தவர் வந்து தனியாக கிச்சன் வழியாக அழைத்து சென்று தனி இடம் கொடுத்து திருப்தியாக சாப்பிட்டு போகும் வரை அன்போடு கவனித்துக் கொண்டார். 

இயேசுவும் இந்த தியான பகுதியில் பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். விருந்துக்கு போன ஆண்டவர் விருந்தில் முதன்மையான இடத்தை தேடுவோரை கவனித்துக் கொண்டிருந்தார். உடனே அவர்களை அறிவுறுத்தும் வண்ணம் ஒருவர் விருந்துக்கு அழைத்தால் முதன்மையான இடத்தை தேடாதீர்கள், ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரியவர் வந்தால் உங்களை எழுப்பி அவருக்கு இடம் கொடுக்க  வேண்டிய நிலை வரும் என்று அறிவுறுத்துகிறார். எனவே போய் கடைசியில் உட்காருங்கள். அழைத்தவர் உங்களை முக்கியமாக நினைத்தால் நிச்சயம் உங்களை முதன்மையான இடத்திற்கு அழைத்து போவார் என்கிறார். 

இது எவ்வளவு பெரிய உண்மை. எத்தனையோ விருந்தில் இன்று வரை இப்படி நடப்பதை நாம் காணமுடிகிறது. இந்த தாழ்மையை தரித்துக் கொண்டால் நிச்சயம் மேன்மைதான் என்பதை 11ம் வசனத்தில் தெளிவுபட கூறுகிறார். 

தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

மேலும் விருந்துக்கு அழைக்கும் போதும் திருப்பி கொடுக்க முடியா ஏழைகளை அழையுங்கள் என்கிறார். கௌரவம் கௌரவம் என்று நம்ம ஸ்டேட்டஸ்ல இருக்கிறவங்கள தான் கூப்பிடுவேன்னு கூப்பிட்டா என்ன பிரயோஜனம்? உப்பு சரியில்ல காரம் சரியில்ல, பந்தில என்ன கண்டுக்கல, என்னத்த பெரிய விருந்து கொடுத்துட்டான்னு வாங்கி கட்டிக்க வேண்டி வரும் !!!! ஆனால் ஒரு ஏழையை கூப்பிட்டு விருந்து கொடுத்தால் வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்துவான். இன்று பலர் ஏழை பிள்ளைகளிடத்தில் தங்கள் விசேஷங்களை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. 

இந்த தாழ்மையும் அன்பும் நம்மிடத்தில் உண்டா? 
பணம், பதவி , அதிகார தேடல் இன்று திருச்சபைகள் முழுக்க விரவி கிடக்கிறது.  ஏனென்றால் அப்போதுதான் முதன்மையானவர்களாக இருக்க முடியும். ஏழைகளை பற்றிய அக்கறையை  சொல்லவே வேண்டாம்.. மூடப்பட்ட விடுதிகள் அதற்கு உதாரணம்... 

இயேசு ஆண்டவர் பிதாவோடு ஏக வஸ்துவானவர், கடவுளுக்கு சமமாய் இருப்பதை  கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் அடிமையின் ரூபமெடுத்து மானுஷ சாயலானார் என்று வேதம் சொல்லுகிறது. யாருக்காக பாவ கேட்டில் சிக்கி கிடந்த நம்மை மீட்டெடுக்க. 

இந்த தாழ்மையும் அன்பும்  படிப்பதற்கும் கேட்பதற்கும் மட்டுமல்ல வாழ்வில் கடைப்பிடிப்பதற்கும் தான். 

Sunday, August 7, 2016

ஞாயிறு செய்தி 7.08.2016


 நேற்றைய தி இந்து தமிழ் நாளிதழில் ஒரு சுவாரஸ்ய செய்தி, 2014 ம் ஆண்டு காணாமல் போன எம்.370 விமானம் காணாமல் போன போது உலகமே பதறியது, அவர்கள் அனைவரும் மரித்ததாக மலேசிய அரசு ஏற்கெனவே அறிவித்தும் விட்டது, கடலெல்லாம் தேடியும் ஒரு துரும்பும் கிடைக்கவில்லை. தேடுதல் பணி தீவிரமாக நடைப்பெற்ற காலத்தில் தேடுதல் குழு தலைவர் கூறிய வார்த்தை நாங்கள் வைக்கோல் போரில் குண்டூசியை தேடவில்லை வைக்கோல்போரை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார், மனிதனின் அறிவு ஆற்றல் எல்லாம் இயற்கைக்கு முன்னல் முடங்கி தலை குனிந்து நின்றது. இப்போது இந்த நிகழ்வு விமானியின் சதியால் நிகழ்ந்துள்ளது என்று மலேசிய அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது. விமானியின் வீட்டில் நடைப்பெற்ற சோதனையில் புதிய வழிதடங்களுக்கான ரகசிய வரைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இது விமானியின் சதி என்று மலேசிய அரசு உறுதி செய்துள்ளது. ஆனாலும் மனிதனின் அறிவியல் பேராற்றலால் இதற்கு மேல் கண்டறிய முடியவில்லை.

அதே போல பெர்முடா முக்கோனம் என்ற கடல் பகுதி உலகையே குழப்பி வருகிறது, இப்பகுதியில் பல கப்பல்கள், விமானங்கள் திடீரென காணாமல் போயுள்ளன, இதனால் இப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகவும், இப்பகுதியில் வேறு உலகிற்கு போகிற பாதை இருப்பதாகவும் கூறுகின்றனர். அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் கூட இப்பகுதியில் மர்மமான வெளிச்சங்களை தான் கண்டதாக தன் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். ஆனால் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இதில் இல்லை, எனவே அறிவியல் அறிஞர்கள் இது ஒருவேளை அப்பகுதியில் ஏற்படுகிற அதிகப்படியான ஈர்ப்புவிசையின் விளைவாக இருக்கும் என்று கூறுகிறார்கள், ஆனாலும் பெர்முடா முக்கோணம் இன்றளவும் மர்மமே, இங்கேயும் மனிதனின் ஆற்றல், ஆறிவு, திறமை, அறிவியல் எதுவும் மனிதனுக்கு உதவ முடியாமல் தவிக்கிறது.

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கே மனித ஆற்றலை மண்டியிட வைத்துவிட்டதே. 

எனவேதான் சங்கீதக்காரன், சங்கீதம்.33:16,17ல் எந்த இரஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான், எந்த வீரனும் தன் மிகுந்த பலத்தினால் தப்புவிக்கப்படான், இரட்சிக்கிறதற்கு குதிரை விருதா, அது தன் மிகுந்த வீரியத்தினால் தப்புவியாது என்று நறுக்கென்று கூறுகிறார்.
மேலும் 18,19,20ம் வசனங்களில் மரணத்திலிருந்தும், பஞ்சத்திலிருந்தும் அவரே இரட்சிக்க வல்லவர் என்றும், அவரே நமக்கு துணை அவரே நமக்கு கேடகம் என்கிறார்.

நம்ப முடியாத ஒரு செய்தியை நோவா தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பிரசங்கித்தார். அதுதான் மழை வரும் இவ்வுலகை அழிக்கும் என்ற செய்தி. ஏனென்றால் நோவா காலம் வரை ஊற்றுகளும் ஆறுகளும்தான் இருந்ததே தவிர மழை பெய்ததில்லை. எனவே மக்கள் அவனுக்கு செவி கொடுக்கவில்லை. ஆனால் நோவாவோ கடவுளின் வார்த்தையை முழுமையாய் விசுவாசித்து நம்புவதற்கரிய செய்திக்காக தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்தான் விளைவு அந்த விசுவாசம் அவனையும் அவன் வீட்டாரையும் இரட்சித்தது.

அதே போல் ஆபிரகாம் தனக்கென ஒரு வாழ்வை தேடாமல், தனக்கென ஒரு இடத்தை தெரிந்துக் கொள்ளாமல் கடவுள் காண்பிக்கும் இடத்திற்கெல்லாம் பயணப்பட்டான். பிள்ளை பெறும் வயதை கடந்தும் ஆதியாகமம்.15:1-6 ல் நம்புவதற்கரிய கடவுளுடைய வார்த்தையை விசுவாசித்தான், அதன் பலன் அவன் சந்ததியை இந்த பூமியில் பெருகப்பண்ணினார், அதுமட்டுமா? இறை வார்த்தைக்காக தன் மகனையும் பலியிட துணிந்தான். அவன் விசுவாசம் அவன் சந்ததிக்கு இறை மக்கள் என்ற உரிமை பேரை பெற்று தந்தது.

அவர் வார்த்தையில் வைக்கிற விசுவாசமே நம் வாழ்வை இரட்சிக்கும். இதோ அதே சர்வ வல்லவர் கிறிஸ்துவின் வழியாய் இன்றைய தியானப்பகுதியில் நமக்கு ஒரு செய்தி கூறுகிறார், அந்த செய்தி மனுஷ குமாரன் வரப்போகிறார், ஒரு புதிய அரசை நமக்கு தரப்போகிறார், அதற்கு நாம் ஆயத்தப்பட வேண்டும் என்ற செய்தி. நம்மில் எத்தனைப்பேர் ஆயத்தமாய் இருக்கிறோம்?

ஆம் நான் ஆயத்தமாய் இருக்கிறேன், தினசரி ஜெபிக்கிறேன், தவறாமல் ஆலயத்துக்கு போகிறேன், காணிக்கை போடுகிறேன், உபவாசம் இருக்கிறேன், எல்லா கிறிஸ்தவ தொலைக்காட்சியையும் பார்க்கிறேன், எல்லா தொலைக்காட்சிக்கும் ஆயிரக்கணக்கில் பணம் அனுப்புகிறேன், எல்லா கன்வென்ஷனுக்கும் போகிறேன், நானே கான்வென்ஷன் நடத்துகிறேன், நான் போதகர், நான் ஊழியர், நான் பிரசங்கிக்கிறேன், பெரிய கன்வென்ஷன் மீட்டிங்கில் பேசுகிறேன் மிராக்கிள்ஸ் (அற்புதங்கள்) பயங்கரமாய் நடக்கிறது, பேய் ஓடுகிறது நோய் தீருகிறது நான் இறையரசை வரவேற்க தயார் என்று உற்சாக குரால் எழுகிறதா? மன்னிக்கவும் இதில் எதையும் இயேசு இறை அரசை வரவேற்பதற்கான ஆயத்தமாக கூறவில்லை.

லூக்கா.12:33ல் தெளிவாக கூறுகிறார் உங்கள் சொத்துக்களை விற்று தர்மங்கொடுங்கள் என்று. இங்கே நம்மை ஏழைகளாக மாற கூறவில்லை சமத்துவ உலகை உண்டாக்க கூறுகிறார். பொருளாதார ஏற்றதாழ்வற்ற சமூகத்தை உண்டாக்க சொல்லுகிறார். அதற்காகத்தானே திருச்சபை, .
அப்படி கொடுக்கிற உள்ளம் தானே கிறிஸ்தவ உள்ளம், அதை தானே இந்தியா வந்த திருப்பணியாளர்கள் செய்தார்கள். ஆனால் இன்று நற்செய்தி கூட்டங்களின் ஆடம்பரத்துக்கும், ஆலயங்களின் பகட்டை காட்டுவதற்கும் இலட்ச இலட்சமாய் வாரி இறைக்கிறோம், எதற்கு நம்முடைய தற்பெருமைக்கு. இதனால் நாம் இறையரசின் வாயிலை கூட எட்ட முடியாது. கண் முன்னால் உள்ள ஏழைகளை மறந்துவிட்டு, என்ன ஊழியம் செய்தாலும் அது இறையரசிற்கான முழுமையான ஆயத்தம் இல்லை. இன்று கிறிஸ்தவத்தில் சாதி வேறு? பரலோகத்தில் கூட சாதி உண்டா????? இனியும் நாம் மாறாவிட்டால், இறையரசை குறித்து பேசவே நாம் தகுதியற்றவர்களாகிடுவோம். இன்றே மாறுவோம் புது சமூகமாய்… இறையரசின் மாதிரியாய் எழுச்சி பெறுவோம்…. இறைவன் பரிசுத்த ஆவியினால் ஒத்தாசை செய்வாராக ஆமென். 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews