நேற்றைய தி இந்து
தமிழ் நாளிதழில் ஒரு சுவாரஸ்ய செய்தி, 2014 ம் ஆண்டு காணாமல் போன எம்.370 விமானம் காணாமல்
போன போது உலகமே பதறியது, அவர்கள் அனைவரும் மரித்ததாக மலேசிய அரசு ஏற்கெனவே அறிவித்தும்
விட்டது, கடலெல்லாம் தேடியும் ஒரு துரும்பும் கிடைக்கவில்லை. தேடுதல் பணி தீவிரமாக
நடைப்பெற்ற காலத்தில் தேடுதல் குழு தலைவர் கூறிய வார்த்தை நாங்கள் வைக்கோல் போரில்
குண்டூசியை தேடவில்லை வைக்கோல்போரை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார், மனிதனின் அறிவு
ஆற்றல் எல்லாம் இயற்கைக்கு முன்னல் முடங்கி தலை குனிந்து நின்றது. இப்போது இந்த நிகழ்வு
விமானியின் சதியால் நிகழ்ந்துள்ளது என்று மலேசிய அரசு முதல் முறையாக அறிவித்துள்ளது.
விமானியின் வீட்டில் நடைப்பெற்ற சோதனையில் புதிய வழிதடங்களுக்கான ரகசிய வரைப்படங்கள்
கண்டறியப்பட்டுள்ளதால், இது விமானியின் சதி என்று மலேசிய அரசு உறுதி செய்துள்ளது. ஆனாலும்
மனிதனின் அறிவியல் பேராற்றலால் இதற்கு மேல் கண்டறிய முடியவில்லை.
அதே போல பெர்முடா முக்கோனம் என்ற கடல் பகுதி உலகையே குழப்பி
வருகிறது, இப்பகுதியில் பல கப்பல்கள், விமானங்கள் திடீரென காணாமல் போயுள்ளன, இதனால்
இப்பகுதியில் வேற்றுகிரகவாசிகள் இருப்பதாகவும், இப்பகுதியில் வேறு உலகிற்கு போகிற பாதை
இருப்பதாகவும் கூறுகின்றனர். அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் கூட இப்பகுதியில் மர்மமான
வெளிச்சங்களை தான் கண்டதாக தன் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். ஆனால் அறிவியல் பூர்வமான
ஆதாரங்கள் இதில் இல்லை, எனவே அறிவியல் அறிஞர்கள் இது ஒருவேளை அப்பகுதியில் ஏற்படுகிற
அதிகப்படியான ஈர்ப்புவிசையின் விளைவாக இருக்கும் என்று கூறுகிறார்கள், ஆனாலும் பெர்முடா
முக்கோணம் இன்றளவும் மர்மமே, இங்கேயும் மனிதனின் ஆற்றல், ஆறிவு, திறமை, அறிவியல் எதுவும்
மனிதனுக்கு உதவ முடியாமல் தவிக்கிறது.
சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கே மனித
ஆற்றலை மண்டியிட வைத்துவிட்டதே.
எனவேதான் சங்கீதக்காரன், சங்கீதம்.33:16,17ல் எந்த
இரஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான், எந்த வீரனும் தன் மிகுந்த பலத்தினால்
தப்புவிக்கப்படான், இரட்சிக்கிறதற்கு குதிரை விருதா, அது தன் மிகுந்த வீரியத்தினால்
தப்புவியாது என்று நறுக்கென்று கூறுகிறார்.
மேலும் 18,19,20ம் வசனங்களில் மரணத்திலிருந்தும், பஞ்சத்திலிருந்தும்
அவரே இரட்சிக்க வல்லவர் என்றும், அவரே நமக்கு துணை அவரே நமக்கு கேடகம் என்கிறார்.
நம்ப முடியாத ஒரு செய்தியை நோவா தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு
பிரசங்கித்தார். அதுதான் மழை வரும் இவ்வுலகை அழிக்கும் என்ற செய்தி. ஏனென்றால் நோவா
காலம் வரை ஊற்றுகளும் ஆறுகளும்தான் இருந்ததே தவிர மழை பெய்ததில்லை. எனவே மக்கள் அவனுக்கு
செவி கொடுக்கவில்லை. ஆனால் நோவாவோ கடவுளின் வார்த்தையை முழுமையாய் விசுவாசித்து நம்புவதற்கரிய
செய்திக்காக தன் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்தான் விளைவு அந்த விசுவாசம் அவனையும்
அவன் வீட்டாரையும் இரட்சித்தது.
அதே போல் ஆபிரகாம் தனக்கென ஒரு வாழ்வை தேடாமல், தனக்கென ஒரு
இடத்தை தெரிந்துக் கொள்ளாமல் கடவுள் காண்பிக்கும் இடத்திற்கெல்லாம் பயணப்பட்டான். பிள்ளை
பெறும் வயதை கடந்தும் ஆதியாகமம்.15:1-6 ல் நம்புவதற்கரிய கடவுளுடைய வார்த்தையை விசுவாசித்தான்,
அதன் பலன் அவன் சந்ததியை இந்த பூமியில் பெருகப்பண்ணினார், அதுமட்டுமா? இறை வார்த்தைக்காக
தன் மகனையும் பலியிட துணிந்தான். அவன் விசுவாசம் அவன் சந்ததிக்கு இறை மக்கள் என்ற உரிமை
பேரை பெற்று தந்தது.
அவர் வார்த்தையில் வைக்கிற விசுவாசமே நம் வாழ்வை இரட்சிக்கும்.
இதோ அதே சர்வ வல்லவர் கிறிஸ்துவின் வழியாய் இன்றைய தியானப்பகுதியில் நமக்கு ஒரு செய்தி
கூறுகிறார், அந்த செய்தி மனுஷ குமாரன் வரப்போகிறார், ஒரு புதிய அரசை நமக்கு தரப்போகிறார்,
அதற்கு நாம் ஆயத்தப்பட வேண்டும் என்ற செய்தி. நம்மில் எத்தனைப்பேர் ஆயத்தமாய் இருக்கிறோம்?
ஆம் நான் ஆயத்தமாய் இருக்கிறேன், தினசரி ஜெபிக்கிறேன், தவறாமல்
ஆலயத்துக்கு போகிறேன், காணிக்கை போடுகிறேன், உபவாசம் இருக்கிறேன், எல்லா கிறிஸ்தவ தொலைக்காட்சியையும்
பார்க்கிறேன், எல்லா தொலைக்காட்சிக்கும் ஆயிரக்கணக்கில் பணம் அனுப்புகிறேன், எல்லா
கன்வென்ஷனுக்கும் போகிறேன், நானே கான்வென்ஷன் நடத்துகிறேன், நான் போதகர், நான் ஊழியர்,
நான் பிரசங்கிக்கிறேன், பெரிய கன்வென்ஷன் மீட்டிங்கில் பேசுகிறேன் மிராக்கிள்ஸ் (அற்புதங்கள்)
பயங்கரமாய் நடக்கிறது, பேய் ஓடுகிறது நோய் தீருகிறது நான் இறையரசை வரவேற்க தயார் என்று
உற்சாக குரால் எழுகிறதா? மன்னிக்கவும் இதில் எதையும் இயேசு இறை அரசை வரவேற்பதற்கான
ஆயத்தமாக கூறவில்லை.
லூக்கா.12:33ல் தெளிவாக கூறுகிறார் உங்கள் சொத்துக்களை விற்று
தர்மங்கொடுங்கள் என்று. இங்கே நம்மை ஏழைகளாக மாற கூறவில்லை சமத்துவ உலகை உண்டாக்க கூறுகிறார்.
பொருளாதார ஏற்றதாழ்வற்ற சமூகத்தை உண்டாக்க சொல்லுகிறார். அதற்காகத்தானே திருச்சபை, .
அப்படி கொடுக்கிற உள்ளம் தானே கிறிஸ்தவ உள்ளம், அதை தானே
இந்தியா வந்த திருப்பணியாளர்கள் செய்தார்கள். ஆனால் இன்று நற்செய்தி கூட்டங்களின் ஆடம்பரத்துக்கும்,
ஆலயங்களின் பகட்டை காட்டுவதற்கும் இலட்ச இலட்சமாய் வாரி இறைக்கிறோம், எதற்கு நம்முடைய
தற்பெருமைக்கு. இதனால் நாம் இறையரசின் வாயிலை கூட எட்ட முடியாது. கண் முன்னால் உள்ள
ஏழைகளை மறந்துவிட்டு, என்ன ஊழியம் செய்தாலும் அது இறையரசிற்கான முழுமையான ஆயத்தம் இல்லை. இன்று கிறிஸ்தவத்தில் சாதி வேறு? பரலோகத்தில் கூட சாதி உண்டா????? இனியும் நாம் மாறாவிட்டால், இறையரசை குறித்து பேசவே நாம் தகுதியற்றவர்களாகிடுவோம்.
இன்றே மாறுவோம் புது சமூகமாய்… இறையரசின் மாதிரியாய் எழுச்சி பெறுவோம்…. இறைவன் பரிசுத்த
ஆவியினால் ஒத்தாசை செய்வாராக ஆமென்.
No comments:
Post a Comment