WORD OF GOD

WORD OF GOD

Wednesday, December 28, 2011

பாக்கியவான் எவன்?

TEXT. PSALM.1


அன்பான உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் ஸ்தோத்திரங்கள், சங்கீதங்கள் பொதுவாக தாவீதின் சங்கீதங்கள் என்று அழைக்கப்பட்டாலும், தாவீது எழுதாத அநேக சங்கீதங்களும் உள்ளன. சங்கீத புத்தகத்தின் முதல் சங்கீதமே, தாவீது எழுதிய சங்கீதம் அல்ல, முதலாம் சங்கீதத்தை எழுதிய ஆசிரியர் யார் என்பதும் தெரியவில்லை. இந்த சங்கீதம் ஞான அறிவுரைகளை கூறும் சங்கீதமாக அமைந்துள்ளது. எனவே இந்த சங்கீதம் ஞான போதனை கீதம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சங்கீதத்தில் சங்கீதக்காரன், மனிதர்களின் இருவித வாழ்வையும் அதின் பலன்களையும் குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்லுகிற முதல்தர வாழ்க்கை என்பது, பொல்லாதவரின் ஆலோசனைபடி நடவாமல், பாவிகளின் வழியில் நில்லாமல், பரிகாசக்காரர் கூட்டத்தில் உட்காராமல், இரவும் பகலும் கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, அதின்படி வாழ்கிற வாழ்க்கை.


ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை வாழ்பவர்களே முதல்தர வாழ்க்கை வாழ்பவர்கள். கர்த்தருக்கு பிரியமான வாழ்க்கை என்பது, தீயவை கேட்காமல், தீயவை பேசாமல், தீயவரோடு அவர் பாதையில் உட்காராமல், தீயவை பின்பற்றாமல், வேதாகமத்தின் படி மட்டுமே வாழ்கிற வாழ்க்கை.

இப்படிப்பட்ட வாழ்வை பின்பற்றுவோருக்கான பலனையும் சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். அவர்கள் ஆற்றோரங்களில் நடப்பட்டிருக்கிற மரத்தை போலிருப்பார்கள். ஆற்றோரத்திலிருக்கிற மரம் எப்படி இருக்கும்? எல்லா காலமும் பருவ காலமாகவே ஆற்றோர மரத்திற்கு இருக்கும், சுத்தமான தண்ணீரும், சுத்தமான காற்றும் குறைவின்றி கிடைப்பதால், அதின் இலைகள் என்றென்றும் பசுமையாகவும், எப்போதும் கனிதருகிற மரமாகவும் யாராலும் அசைக்க முடியாத உறுதியோடும் நிலைத்திருக்கும் அந்த வாழ்க்கை முதல்தர வாழ்வு வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கும் என்கிறார்.


ஆனால் இரண்டாம் தர வாழ்க்கை இதற்கு நேரெதிரான வாழ்க்கை, தீயவை கண்டு, தீயவை பேசி, தீயவரோடு உறவாடி, தீயவை பின்பற்றி, கர்த்தருக்கு செவி கொடுக்காமல் வாழ்கிற வாழ்க்கை. அதன் பலனை அதிகமாக சங்கீதக்காரன் விளக்கவில்லை இரண்டே வார்த்தைகளில் கூறிவிடுகிறார், அவர்கள் பதரை போலிருப்பார்கள், அவர்கள் வழி பாழாகும்.


அன்பானவர்களே, அவர்கள் பதர் அதாவது தூசிக்கு சம்மானவர்கள், ஊதினால் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிடும், அவர்கள் வாழ்க்கை பாழாகும்.

நம்முடைய பாதை என்ன? நமக்காய் விண்ணரச வாழ்வை விட்டு ஏழைக்கோலமெடுத்து வந்த ஆண்டவரின் உறுதியான பாதையா? அல்லது பாழாய் போகும் பாதையா? யோசிப்போம், வருகிற புத்தாண்டில் எப்பாதையில் நிலைப்பது என்ற முடிவெடுக்க ஆயத்தப்படுவோம். கர்த்தர்தாமே உங்களுக்கு துணை புரிவாராக ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews