கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள்.
கர்த்தருடைய பெரிதான கிருபையினால், நாம் ஜெபத்தோடு திட்டமிட்டபடி இரத்ததான முகாமை
கர்த்தர் பெரிய அளவில் ஆசீர்வதித்தார். 67 பேர் பங்கு பெற்று கிறிஸ்துவின் அன்பை
செயலில் காட்டி கடவுளை மகிமைப்படுத்தினர். நேரம் தாழ்ந்து வந்த சகோதரர்களை நாம்
பயன்படுத்திக் கொள்ள இயலவில்லை. அதற்காக வருந்துகிறேன். நம் முகம் தெரியாத யாரோ
ஒரு சகோதர சகோதரியின் உயிர் காக்க நம் இரத்தம் பயன்பட போகிறது. எவ்வளவு மேலான
அன்பை நாம் பகிர்ந்துக் கொண்டோம்?? இந்த உண்மையான அன்பில் நம் திருச்சபைகள் வளர
நாம் ஜெபிப்போம். பணத்தேவைகளை கர்த்தர் அற்புதமாய் சந்தித்தார்.
அதே போல பல் சிகிச்சை முகாமிலும் 50 க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று பயன்
பெற்றனர்.
கர்த்தர் உயிர்த்தெழுந்த திருநாளன்று எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்ட சகோதர
சகோதரிகளோடு ஒரு அன்பின் விருந்தை பகிர்ந்துக் கொண்டோம். அதன் முழு பொறுப்பையும்
திரு.பாபு பிரபுதாஸ், திரு.ரஜினி, திரு.தாமஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டு சிறப்பானதொரு
விருந்தை ஆயத்தம் செய்தனர். 35 பேர் பங்கு பெற்று பயன் பெற்றனர். திருமதி.பிந்து கிளாட்சன் அவர்கள் ஆலோசனை மையம் மூலம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள். அவர்களுக்கு
மாதம் தோறும் சத்து உணவுகள் கொடுக்க தீர்மானித்து ஜெபிக்கிறோம். அதற்காக
ஜெபியுங்கள்.
எச்.ஐ.வி யால் தன் பெற்றோரை இழந்து வாடுகிற அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள்.
அவர்களில் ஒரு பிள்ளையை நானும், கிறிஸ்துவின் அன்பு என்ற அறக்கட்டளையும்,
நம்பிக்கை அறக்கட்டளையும் சேர்ந்து பொறுப்பெடுத்துக் கொண்டோம். 5 வயதான பெண்
பிள்ளையின் கல்வி மற்றும் அவளது தினசரி தேவைகளை கடந்த 6 மாதங்களாக சந்தித்து
வருகிறோம். அவளை ஒரு நல்ல விடுதியில் சேர்த்து படிக்க வைக்க விரும்புகிறோம்.
அதற்காக ஜெபியுங்கள். இப்படி அனேக பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கும் தேவைகள் சந்திக்கப்பட ஜெபித்து வருகிறோம் அவர்களுக்காகவும் ஜெபியுங்கள்.
அன்புடன்
Y. கில்பர்ட் ஆசீர்வாதம்.