(எச்சரிக்கை
இந்த சர்ச் ல நான்தான் பெரிய ஆளு. என்ன விட எவனும் இங்க பெரிய ஆளு கிடையாது அப்டினு நினைக்கிறவங்க தயவு செய்து இன்று சர்ச்க்கு போங்க ஆனா, பிரசங்கம் கேட்டுட்டு ஐயர் என்ன குத்துற மாறி பிரசங்கம் பன்னார்னு புலம்ப வேண்டி இருக்கும்.)
நான் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொது ஒரு திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன். ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு பயந்திட்டு சந்தோஷமா கல்யாணத்திற்கு நானும் சில நண்பர்களும் போனோம், திருமண ஆராதனை முடிந்து மிக ஆவலோடு சாப்பாடு பரிமாறும் அறைக்கு வந்தோம் ஆனால் அங்கே கதவு பூட்டப்பட்டிருந்தது வெளியே எல்லாரும் நின்று கொண்டிருந்தனர், இன்னும் உணவு தயாராகவில்லை என்று நினைத்து நாங்களும் ஓரமாக நின்றுக் கொண்டோம், திடீரென கதவு திறக்கப்பட்ட்து, வெளியே நின்ற அத்தனை பெரும் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்தார்கள், கதவை திறந்த பணியாளர்கள் உள்ளே நுழைகிறவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திக்கி திணறி உள்ளே இடம் நிறைந்தவுடன் அனைவரையும் தள்ளி கதவை மீண்டும் மூடினர்.
அப்போதுதான் புரிந்தது பந்தி ஏற்கெனவே நடக்கிறது கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கதவை மூடிவிட்டு பந்தி பரிமாறப்படுகிறது என்று. ஆம்பூரில் பயிற்சி போதகராய் இருந்தால் கூட தனியே டேபிள் போட்டு இல்லை நிறைய சாப்பாடு போட்டு திணற திணற சாப்பிட வச்சி சபையார் பழக்கிட்டதால, கூட்டத்தின் நடுவே புகுந்து இடம் பிடிக்க தயங்கி கொண்டு ஒரு ஓரமாக நின்றுக் கொண்டோம். ஆனால் சில நிமிடங்கள் கழித்து எங்களை அழைத்தவர் வந்து தனியாக கிச்சன் வழியாக அழைத்து சென்று தனி இடம் கொடுத்து திருப்தியாக சாப்பிட்டு போகும் வரை அன்போடு கவனித்துக் கொண்டார்.
இயேசுவும் இந்த தியான பகுதியில் பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். விருந்துக்கு போன ஆண்டவர் விருந்தில் முதன்மையான இடத்தை தேடுவோரை கவனித்துக் கொண்டிருந்தார். உடனே அவர்களை அறிவுறுத்தும் வண்ணம் ஒருவர் விருந்துக்கு அழைத்தால் முதன்மையான இடத்தை தேடாதீர்கள், ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரியவர் வந்தால் உங்களை எழுப்பி அவருக்கு இடம் கொடுக்க வேண்டிய நிலை வரும் என்று அறிவுறுத்துகிறார். எனவே போய் கடைசியில் உட்காருங்கள். அழைத்தவர் உங்களை முக்கியமாக நினைத்தால் நிச்சயம் உங்களை முதன்மையான இடத்திற்கு அழைத்து போவார் என்கிறார்.
இது எவ்வளவு பெரிய உண்மை. எத்தனையோ விருந்தில் இன்று வரை இப்படி நடப்பதை நாம் காணமுடிகிறது. இந்த தாழ்மையை தரித்துக் கொண்டால் நிச்சயம் மேன்மைதான் என்பதை 11ம் வசனத்தில் தெளிவுபட கூறுகிறார்.
தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
மேலும் விருந்துக்கு அழைக்கும் போதும் திருப்பி கொடுக்க முடியா ஏழைகளை அழையுங்கள் என்கிறார். கௌரவம் கௌரவம் என்று நம்ம ஸ்டேட்டஸ்ல இருக்கிறவங்கள தான் கூப்பிடுவேன்னு கூப்பிட்டா என்ன பிரயோஜனம்? உப்பு சரியில்ல காரம் சரியில்ல, பந்தில என்ன கண்டுக்கல, என்னத்த பெரிய விருந்து கொடுத்துட்டான்னு வாங்கி கட்டிக்க வேண்டி வரும் !!!! ஆனால் ஒரு ஏழையை கூப்பிட்டு விருந்து கொடுத்தால் வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்துவான். இன்று பலர் ஏழை பிள்ளைகளிடத்தில் தங்கள் விசேஷங்களை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
இந்த தாழ்மையும் அன்பும் நம்மிடத்தில் உண்டா?
பணம், பதவி , அதிகார தேடல் இன்று திருச்சபைகள் முழுக்க விரவி கிடக்கிறது. ஏனென்றால் அப்போதுதான் முதன்மையானவர்களாக இருக்க முடியும். ஏழைகளை பற்றிய அக்கறையை சொல்லவே வேண்டாம்.. மூடப்பட்ட விடுதிகள் அதற்கு உதாரணம்...
இயேசு ஆண்டவர் பிதாவோடு ஏக வஸ்துவானவர், கடவுளுக்கு சமமாய் இருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் அடிமையின் ரூபமெடுத்து மானுஷ சாயலானார் என்று வேதம் சொல்லுகிறது. யாருக்காக பாவ கேட்டில் சிக்கி கிடந்த நம்மை மீட்டெடுக்க.
இந்த தாழ்மையும் அன்பும் படிப்பதற்கும் கேட்பதற்கும் மட்டுமல்ல வாழ்வில் கடைப்பிடிப்பதற்கும் தான்.