நான் இறையியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒவ்வொரு வெள்ளி கிழமையும், பிற்பகல் வேளையில் கிராம ஊழியத்திற்கு, குறிப்பாக சிறு பிள்ளைகள் மத்தியில் திருப்பணி ஆற்ற அனுப்பப்படுவோம், போவதற்கு முன்பு நற்செய்தி பணிக்குழு ஆலோசகர் தலைமையில் சிறப்பு ஆயத்த ஆராதனை நடத்தப்படும். ஒரு மாணவர் தேவ செய்தி கொடுக்க வேண்டும். ஒரு மாணவர் சிறுவர்களுக்கான ஒரு மாதிரி நற்செய்தி வகுப்பு நடத்த வேண்டும், அவர்கள் நடத்தி முடித்த பிறகு அதைக் குறித்த விமர்சன நேரம் இருக்கும். அந்நேரத்தில் நிறை குறைகள் சுட்டி காட்டப்படும்.
நான் தேவ செய்தி கொடுக்கிற நாள் வந்தது. நானும் தேவ செய்தியை ஜெபத்தோடும் பயத்தோடும் ஆயத்தம் செய்து பிரசங்கித்து முடித்தேன். நான் எடுத்துக் கொண்ட மையக்கரு ஊழியத்திற்காகதான் பணம், பணத்திற்காக ஊழியம் அல்ல என்பதுதான். நாங்கள் ஊழியத்திற்கு போக பயணப்படி கொடுப்பார்கள் அப்போது இது போதவில்லை என்ற குரல் அவ்வப்போது ஒலிக்கும். உண்மைதான் அது போதாதுதான். நான் எடுத்து கொண்ட கருப்பொருள் அதை சுட்டி காட்டுவதாக அமைந்துவிட்டது.
விமர்சன நேரம் வந்தது. என் சக நண்பர்கள் என்னையும் என் அருளுரை கருப்பொருளையும் சுட்டிக்காட்டி மிக கடுமையாக விமர்சித்தார்கள். கிட்டத்தட்ட என் சக மாணவர்கள் அனைவரும் என் கருப்பொருளை கடுமையாக விமர்சத்தார்கள் அருள்திரு அறிவர் மாணிக்கராஜ் (தற்போதைய முதலவர்) அவர்கள் தான் ஆலோசகராக இருந்தார். விமர்சனம் வந்தால் நான் அதற்கான விளக்கம் கொடுக்கலாம், எனவே ஒருவர் விமர்சித்ததும் நான் விளக்கம் கொடுக்க எழுவேன், ஆனால் என்னை அனுமதிக்க மாட்டார். எனக்கு மிகுந்த ஏமாற்றம், ஒவ்வொரு முறையும் என்னை தடுத்தார். எனக்கு சற்று கோபம் கூட வந்தது என்னை பேச விடவில்லையே என்று.
எல்லாரும் தங்கள் கருத்துக்களை முடித்த பிறகு, அறிவர் மாணிக்கராஜ் அவர்கள் சில நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு, அவர் சொன்னதை அப்படியே பதிவிடுகிறேன்,
" டேய் இந்த செய்தி உங்க எல்லார் உள்ளத்தையும் தொட்டிருக்கு" கில்பர்ட் இப்ப உன் கருத்த சொல்லு என்கிறார்.
நான் மிக அமைதியாகிவிட்டேன், நான் பார்த்து வியந்த பேராசிரியரின் அந்த பதில் நான் எதிர்பாராதது. மன அமைதியோடு
நான் சொன்ன கருத்து ஒன்றே ஒன்று தான் இந்த செய்தி எனக்கும் சேர்த்துதான். அது என்னையும் குத்தியது.
நான் இன்று வரை எனது பிரசங்கங்களை எனக்கும் சேர்த்துதான் ஆயத்தம் செயகிறேன். கடவுளின் வார்த்தை இரு புறம் கருக்குள்ள பட்டையம் அதை பிறரை வெட்ட பயன்படுத்தினால் நிச்சயம் அது என்னை குத்தி கிழிக்கும் ஏனென்றால் ஒருவரை வெட்ட அதை நான் அழுத்தி பிடித்தால் நிச்சயம் அது என்னை வெட்டும். கர்த்தர் பட்ச பாதம் உள்ளவரல்ல.... போதகர் என்பதால் நான் வானத்திலிருந்து குதிக்கவில்லை.
இனி தயவு கூர்ந்து நான் இறை செய்தி பதிவிட்டால் என்னை புகழாதீர்கள் இறைவார்த்தைக்கு இறைவன் தான் புகழப்பட்ட வேண்டியவர். நான் எவ்விதத்திலும் தகுதியானவன் அல்ல. அவரை துதியுங்கள். என்னை இகழ்கிறவர்கள் தாராளமாக இகழலாம். என்னை திருத்திக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.
No comments:
Post a Comment