WORD OF GOD

WORD OF GOD

Thursday, March 15, 2012

ஆவியின் வல்லமை!!!!!!!!!

TEXT. நியாயாதிபதிகள்.15:9-15

அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், ஒவ்வொரு நாளும் நம்மை பாதுகாக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். சிம்சோன் வேதாகமத்தில் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களில் ஒருவர், காரணம் துன்பங்களை கண்டு அஞ்சாதவர், எதிர்ப்புகளை கடவுளின் நாமத்தால் ஓட ஓட விரட்டுகிறவர். தனக்கு வந்த ஒரு மாபெரும் துன்பத்தை அவர் ஓட ஓட விரட்டிய ஒரு சம்பவத்தை இன்று நாம் தியானிக்கப்போகிறோம்.

இஸ்ரவேலர்கள் பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்தில் குடியேறிய பிறகு அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய சவால் காத்திருந்தது, அந்த சவால் பெலிஸ்தியர்கள், அவர்கள் மாபெரும் வீரர்கள், போர் செய்வதில் வல்லவர்கள், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரவேலுக்குள் நுழைந்து இவர்களது செல்வங்களை கொள்ளையிட்டு செல்வார்கள், அவர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இஸ்ரவேலர்களில் ஒருவருக்கும் இருந்ததில்லை, ஒரேயொருவர்தான் அவர்களுக்கு முடிவு கட்டியவர் அவர் தாவீது, கோலியாத்தை கொன்று ஒட்டு மொத்தமாக பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்கியவர்.

தாவீதுக்கு முன்பு நூற்றாண்டுகளாக கானானில் வாழ்ந்த போது யாராவது பெலிஸ்தியர்களை எதிர்த்திருக்கிறார்களா என்றால், ஒருவர் இருக்கிறார் அவர்தான் சிம்சோன். சிம்சோன் பெலிஸ்தியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். எனவே சிம்சோனை ஒழிக்க பெலிஸ்தியர் யூதாவில் பாளையமிறங்கினர் (நியா.15:9). யூதா மக்கள் நடுங்கி ஏன் இங்கே பாளையமிறங்கினீர்கள் என்று கேட்க எங்களுக்கு சிம்சோன் வேண்டும் அவன் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவனுக்கு செய்ய வேண்டும் என்றனர்(நியா.15:10), அப்போது யூதாவின் மக்கள், அதாவது சிமோசினின் சொந்த ஜனமான இஸ்ரவேலர் 3000 (நியா.15:11) பேர் போய் சிம்சோனை தேடி கண்டு பிடித்தனர், சிம்சோன் அவர்களிடம் ஒரு உறுதிமொழி வாங்கிக் கொண்டார், அதாவது என்னை பெலிஸ்தியர்கள் கையில் ஒப்படைக்கும் வரை எனக்கு நீங்கள் எந்த தீங்கும் செய்யக் கூடாது என்றார் (நியா.15:12) காரணம் எதிரிகளை கூட நம்பலாம் நம்மோடு இருப்பவர்களில் அனேகரை நாம் நம்ப முடியாது, அவர்கள் உறுதியளித்ததும் தைரியமாய் அவர்களோடு வருகிறார்.

கயிறுகளால் அவரை கட்டி பெலிஸ்தியரிடம் கொண்டு வந்தனர். பெலிஸ்தியர்கள் சிம்சோனை கண்டதும் மிகப்பெரிய ஆரவாரம் செய்கின்றனர் காரணம் தாங்கள் தேடிய எதிரி கிடைத்துவிட்டான் என்று. அதே நேரத்தில் கர்த்தருடைய ஆவி சிம்சோனின் மீது இறங்கியது,(நியா.15:14) உடனே அவரை கட்டியிருந்த கட்டுகள் நெருப்பில் பட்டது போல் பொசுங்கிப் போயின. கழுதையின் பச்சை தாடை எலும்பு ஒன்றை கண்டு அதை எடுத்து ஆயிரம் பேரை கொன்றார்(நியா.15:15-16).

அன்பானவர்களே, சிம்சோனின் மீது இறங்கிய கர்த்தருடைய ஆவி நம்மீது இருக்கிறதே, அப்படியானால் நம்முடைய பலம் என்ன? நமக்கெதிராய் வருகிற எந்த கட்டையும் பொசுக்கிப் போடுகிற பலம், எதிர்ப்புகளையும், பிசாசின் தந்திரங்களையும்  சுட்டெரிக்கிற பலம் நமக்குள் இருக்கிறது, அங்கே வென்றது சிம்சோன் அல்ல கர்த்தருடைய ஆவி, ஆம் நாமும் நம் துன்பங்களை கண்டு, வியாதிகளை கண்டு, போராட்டங்களை கண்டு அஞ்ச வென்டியதில்லை, நாமல்ல நமக்குள் இருக்கிற கர்த்தருடைய ஆவியால் அவைகளை மேற்கொள்வோம். ஆமேன்....

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, March 13, 2012

காரியத்தை அவரே வாய்க்க செய்வார்

அன்பான வாசகர்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள், நமது சிறுவர் ஊழிய குழுவின் இன்னொரு ஊழிய தகவலோடு உங்களை சந்திக்கிறேன், நமது சிறுவர் ஊழிய குழு கிருஷ்ணகிரி போலியோ காப்பகத்தில் நடத்திய நிகழ்ச்சியை நீங்கள் அறிவீர்கள், அதை அறிந்த‌ இந்திய சுவிசேஷ ஊழிய மையம் அவர்களது விடுதியில் நிகழ்ச்சி நடத்த அழைத்திருந்தனர். இதற்கு கிருஷ்ணகிரியில் உள்ள எனது நண்பர் ஜோசாம் அவர்களின் தாயார் திருமதி.அன்னாள் அவர்கள் பெரிதும் உதவினார். பிள்ளைகளுக்கும் நமக்கும் அவர்களே மதிய உணவும் ஏற்பாடு செய்து நம்மை பெரிதும் உற்சாகப்படுத்தினார். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அதற்கான புகைப்படங்களை காணுங்கள். இவ்வூழியம் பெருக ஜெபியுங்கள்.












ஊழியம் என்பது அனேக சிரமங்களை உள்ளடக்கியது என்பதை இந்த சில மாதங்களில் நான் அனுபவித்து வருகிறேன், திருச்சபை ஊழியம், புத்தக ஊழியம், சிறுவர் ஊழியம், இதற்கிடையே இந்த இணையதள ஊழியம் என எல்லவற்றிலும் என்னால் கவனம் தொடர்ச்சியாக பங்காற்ற முடியாமல் தினருகிறேன், ஆனால் கர்த்தர்தாமே, என்னை அற்புதமாய் சொர்வடையாமல் நடத்தி வருகிறார். யாரிடமும் காணிக்கை கேட்பதில்லை, மனித கரங்களை நம்புவதில்லை, ஊழியத்தை விளம்பரப்படுத்துவதும் இல்லை, பெரிய ஆதரவுகளும் இல்லை, ஆனால் அன்பானவர்களே என் ஆண்டவர் நல்லவர் என்பதை ஒவ்வொரு நாளும் ருசித்து வருகிறேன். கரம் பிடித்து நடத்துகிறார், நான் சோர்வடையும்போது தேற்றுகிறார், தேவை வரும்போது தமது தூதர்களை அனுப்புகிறார். ஊழியத்திற்கு பையையாவது, தடியையாவது எடுத்து செல்லாதீர் என்கிறாரே அது மிக சத்தியம், அவர் பார்த்துக் கொள்ளுகிறார். இப்போது ஊழியத்திற்கென எந்த பணமும் என்னிடத்தில் இல்லை ஆனால் இம்மாத மாத இதழ் நடத்த வேண்டும், ஆனால் அவர் நடத்தி காட்டுவார். அந்த சாட்சியும் இங்கே நான் பகிர்வேன் அன்பானவர்களே அவரை நம்புங்கள், காரியத்தை அவரே வாய்க்க செய்வார்.
கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

Thursday, March 8, 2012

ஆலயத்தை கட்டுவோம் வாருங்கள்

அன்பான உடன் விசுவாசிகளே, வேலூர் மாவட்டம் ஆம்பூரில், சான்றோர் குப்பம் என்ற கிராமத்தின் போதகரான அருள்திரு. ராஜகம்பீரம் (இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர்) அவர்களும் சபையாரும் இனைந்து ராஜகோபால் நகர் என்ற கிராமத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டி கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்தனர். அந்த  ஆராதனையில் கலந்துக்கொள்ளும் உன்னத அனுபவம் எனக்கும் கிடைத்தது. அழகான ஓலை கூரை வேய்ந்த சிறிய ஆலயமாக தென்பட்டாலும், எதிர்காலத்தில் மிகப்பெரிய தேவாலயமாக  உருவாவதற்கான அத்தனை அம்சங்களும் அங்கே தெரிந்தது. உள்ளேயும் வெளியேயும் உட்கார இடமில்லாத அளவுக்கு பெரும் திரளாக அனேக விசுவாசிகள் அன்று கூடி வந்தனர். பிரதிஷ்டைக்கு பிறகு கூட சில ஆராதனைகளை நடத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அப்போதும் அங்கே வந்த விசுவாசிகளை காணும்போது அது ஒரு பெரிய ஆலயமாய் உருவாகும் என்பதில் எனக்கு ஐயம் ஏற்படவில்லை இதோ அந்த ஆலயத்தின் மகிழ்ச்சியான துவக்கம். புகைப்படங்களாய்.

அருள்திரு. ராஜகம்பீரம் முன்னின்று பிரதிஷ்டை செய்கிறார்.
உள்ளே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்.
உள்ளே இடமின்றி வெளியே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்

 திருச்சபை பிரதிஷ்டைக்கு நன்றியாய் கிராம பிள்ளைகளின் உற்சாக நடனம்

ஆனால் அன்பானவர்களே இந்த சந்தோஷம் அங்கே நீடிக்கவில்லை எல்லாமே இப்போது தலைக் கீழ் ஆசை ஆசையாய் கட்டப்பட்ட தேவாலயம் இன்று இல்லை,  மின் கசிவோ? விஷமிகளின் சதியோ? தெரியவில்லை ஆனால் தேவாலயம் முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகிப்போனது இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் இன்னொரு அவயவம் இன்று எரிந்து புண்ணாகி கிடக்கிறது தேற்றுவாரில்லாமல்  . காண்போர் மனது வைத்தால், கடவுள் உங்கள் உள்ளத்தில் ஏவினால் அங்கே முன்பைவிட சிறப்பான ஆலயம் உருவாகும். சீர் குலைந்த சபையின் நிலையை காணுங்கள்.

முற்றும் எரிந்து குட்டிசுவராய் நிற்கும் தேவாலயம்.



தேவாலய கதவு பாய், புனித பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிப்போன காட்சி


ஆலயத்தில் ஒன்றும்  மிஞ்சவில்லை.

அன்பானவர்களே இந்நிலை மாற உங்கள் உதவி தேவை. ஆலயத்தை கட்டுகிறவர்களின் வாழ்வை கர்த்தர் கட்டுவார். இதை படிப்போர் உதவ விரும்பினால் நமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள, 9944555388,    9944116769 என்ற எண்களுக்கு நீங்கள் தொடர்புக் கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆலயம் உருவாக காரணமாய் அமையும். ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை திரும்ப பெறாமல் போகமாட்டீர்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews