WORD OF GOD

WORD OF GOD

Friday, March 30, 2012

விசுவாசத்தில் வளர்வோம்.

TEXT:  மாற்கு.10:34 - 45

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள்,  ஒரு பட்டணத்தில் ஒரு பெரிய குரு இருந்தாராம், அந்த குருவிடத்திலே, சீடராக சேர ஆசைப்பட்ட ஒருவன் அந்த குருவை சந்திக்க வந்தான், குருவிடம் போய் அய்யா நான் உங்களிடத்திலே சீடனாக சேர விரும்புகிறேன் தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றானாம். உடனே அந்த குரு, நீ எனக்கு சீடனாக வேண்டுமென்றால், நான் உனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தருகிறேன், அந்த மந்திரம் யாருக்கு கேட்கிறதோ அவர்கள் துன்பம் நீங்கிவிடும் ஆனால் அந்த மந்திரத்தை, நீ யாருக்கும் சொல்லக் கூடாது,  என்றாராம். சரி குருவே என்றானாம், உடனே குரு அவன் காதிலே அந்த மந்திரத்தை சொல்லிக் கொடுத்தாராம், உடனே அந்த மனிதன் ஓடிப்போய் ஒரு மரத்திலே ஏறி நின்றுக்கொண்டு, ஊருக்கே கேட்கும்படி சத்தமாக கூறினானாம், அதைக் கண்ட குருவின் சீடர்கள், குருவிடம் ஓடி வந்து குருவே, அவனை உடனே, துரத்தியடிங்கள், நீங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை ஊருக்கே கேட்கும்படி கூறிவிட்டான் என்றனர், அந்த குரு சொன்னாராம், போக வேண்டியது அவனல்ல, நான்தான், அவனுக்கு எனக்கே குருவாகிற தகுதி இருக்கிறது என்றாராம்.

உண்மைதான் யார் பிறர் நலம் பேணுகிறானோ அவனே தலைவனாகும் தகுதியுள்ளவன்.

நமதாண்டவர் தன் ஊழியத்தை துவங்கும் முன் தனக்கென சீடர்களை தெரிந்தெடுத்தார், அவர்களை எங்கே தெரிந்தெடுத்தார், எல்லா சுவிசேஷங்களும் கூறுகின்றன, கலிலேயாவில் தெரிந்தெடுத்தார் என்று. ஆம் அவரது சீடர்கள் அனைவருமே கலிலேயாவை சேர்ந்தவர்கள். கலிலேயர்கள் என்றாலே அக்கால மக்கள் ஒரு அடி தள்ளி நிற்பார்கள் காரணம் அவர்க சுபாவம் அப்படி. அவர்கள் சுபாவத்தை வரலாற்று ஆசிரியர்கள் தெளிவாக பதிவு செய்துள்ளனர். அதாவது கலிலேயர்கள் என்றாலே.

1. நல்ல பழக்க வழக்கம் இல்லாதவர்கள்.
2. பண்பாடில்லாதவர்கள்.
3. கல்வியறிவில்லாதவர்கள்.
4. முடர்கள்.
5. சண்டையிடும் சுபாவம் கொண்டவர்கள்.

இப்படிப்பட்ட சுபாவம் கொண்டவர்களைதான் ஆண்டவர் தனக்கென சீடர்களாக தெரிந்துக் கொண்டார். இதனால் இந்த கலிலேயர்களின் வாழ்வே மாறத்துவங்கியது. மரியாதைக்குரியவர்களாய் சமூகத்தில் மாறினார்கள். ஆண்டவ்ருக்கு மிகப்பெரிய புகழும் செல்வாக்கும், மரியாதையும் மக்கள் மத்தியில் இருந்தது, இந்த புகழும் செல்வாக்கும் சீடர்களுக்கும் கிடைத்தது. எப்போதெல்லாம் மனிதனுக்கு புகழும் செல்வாக்கும் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் மனிதனின் மனநிலை பெரிதும் மாறிப்போகும். அதை தக்கவைத்துக்கொள்ளும் சுபாவம் பெருகும். இது இன்றைய அரசியல்வாதிகளிடத்தும் ஏன் திருச்சபை தலைவர்களிடத்திலேயும் இருப்பதை நாம் தெளிவாக் காண இயலும்.

சீடர்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை நமக்கு உணர்த்துகிற பகுதிதான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதி. யோவானும் அவனது சகோதரன் யாக்கோபும் இயேசுவிடம் வந்து எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார உமது மகிமையில் இடம் தர வேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது தங்களுக்கு பரலோகத்தில் உயர் பதவி தர வேண்டும் என்று கேட்கிறார்கள். இதுதான் மனிதனின் சுபாவம். ஆனால் ஆண்டவரோ அவர்களிடம் மிகவும் அன்பாக நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை, நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்னானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார்.. அதாவது அவர் பாத்திரம் என்ன? பாடுகள்.. அவர் பெற்ற ஸ்னானம் எதற்காக? மரிப்பதற்காக.. ஆனால் அதை என்னவென்று கூட அறியாமல், எங்களால் கூடும் என்கிறார்கள், காரணம் அவர்களுக்கு பதவி வேண்டும். இப்படி உணராமல் அவர்கள் பதில் சொன்னதால், அவர்களுக்கு தெளிவாக ஒரு விஷயத்தை கூறுகிறார். பதவி தருவது என் காரியமல்ல என்கிறார்(மாற்கு.10:40)

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற மற்ற சீடர்களுக்கு மிகவும் கோபம் உண்டானது, இந்த இருவர் மேலும் 10 பேருக்கும் எரிச்சல் உண்டானது(மாற்கு.10:41) அன்பானார்களே எப்போதெல்லாம் கிறிஸ்தவர்களாகிய நமக்கு பதவி மேல் பற்று வருகிறதோ அதை அடைய வேண்டும் என்று துடிக்க ஆரம்பிக்கிறோமோ.. அப்போதெல்லாம் நாம் கடவுளுக்கும் விரோதிகளாகிறோம், சக மனிதர்களுக்கும் விரோதிகளாகிறோம்.

இதை அறிந்துக் கொண்ட ஆண்டவர் அவர்களுக்கு தன்னை முன்மாதிரியாக வைக்கிறார். நான் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்ய வந்தேன், உங்களில் தலைவனாயிருக்க விரும்புகிறவன் உங்களுக்கு பணிவிடைக்காரனாய் இருக்கக்கடவன் என்கிறார்..

ஆண்ட‌வ‌ர் ப‌த‌வி ஆசை கூடாது என்று சொல்ல‌வில்லை, நீங்க‌ள் த‌லைவ‌ர்க‌ளாக‌ வேண்டாம் என்று சொல்ல‌வில்லை மாறாக த‌லைமைத்துவ‌ குண‌ம் இருக்கிற‌வன்தான் த‌லைவ‌ன் ஆக‌ முடியும் என்கிறார். அன்பான‌வ‌ர்க‌ளே... அடுத்த‌வ‌ருக்கு ப‌ணிவிடை செய்யும் ம‌ன‌ம்தான் த‌லைமைத்துவ‌ குணம்.. ஆண்டவர் அதைதான் செய்தார் கடவுள் அவரை முழங்கால்கள் யாவும் முடங்கும்படி உயர்த்தினார். எனவே நமக்குள்ளும் இக்குணம்தான் இருக்க வேண்டும். என்று ஆண்டவர் கூறுகிறார்.

ஆனால் இன்று இக்குணம் கொண்ட எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? அரசாங்கத்தை விடுங்கள் கிறிஸ்தவர்களாகிய நமது திருச்சபைகளில் எத்தனை பேர் பணிவிடை செய்யும் மனம் கொண்டவர்களாய் இருக்கிறார்கள்? நமது தலைவர்களில் எத்தனை பேருக்கு பணிவிடை செய்யும் மனமில்லையோ அவர்கள் அத்தனை பேரும் விசுவாசிகள் அல்ல.. காரணம் அவர்கள் ஆண்டவர் சொன்ன தலைமைத்துவத்தை பின்பற்றாதவர்கள், அதை பின்பற்றினால் கடவுள் உயர்த்துவார் என்ற நம்பிக்கை இல்லாதவர்கள். உணர்வோம், விசுவாசத்தில் வளர்வோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Sunday, March 18, 2012

அன்பு எங்கே????

TEXT.JOHN.3:16


அன்பானவர்களே, மனிதர்களை  அவர்கள் தகுதியை வைத்து தரம் பிரிப்போம், சிலரை கெட்டவர்கள் என்போம், சிலரை நல்லவர்கள் என்போம்,  நல்லவர்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

1. நல்லவர்கள் ( நல்ல குணம் கொண்டவர்கள்)
2. மிகவும் நல்லவர்கள் ( நல்ல மனமும் செயலும் கொண்டவர்கள் )
3. வள்ளல்கள் ( தனக்குரியதை அடுத்தவர்களுக்கு கொடுப்போர் )
4. தியாகிகள். ( தன்னையே பிறருக்காய் கொடுப்போர் )

இதில் கடவுள் எவ்வகையை சார்ந்தவர்?

கர்த்தர் நல்லவர் (சங்கீதம் 34:8)
கர்த்தர் மிகவும் நல்லவர் காரணம் அவர் நன்மையை மட்டுமே செய்தவர்.
கர்த்தர் வள்ளல் தன்னுடைய முழு உலகையும் நமக்கே கொடுத்தவர்
கர்த்தர் தியாகியுமானவர் தன்னையே நமக்காய் சிலுவையில் கொடுத்தவர்.
இதையெல்லாம் கடந்து இன்னொரு மிக அற்புதமான குணாதிசயம்
கடவுளிடத்தில் இருக்கிறது அதை நமக்கு சொல்லுகிற பகுதிதான். யோவான்.3:16
அந்த அற்புதமான குணாதிசயம் என்ன தெரியுமா? அது நம் கற்பனைக்கெட்டாதது. பொதுவாக நம் அனைவருக்குமே எதிரிகள் இருக்கிறார்கள், எதிரிகளை நாம் எப்போதும் விரும்புவதில்லை, அவர்கள் பாவமும் வஞ்சகமும் செய்யும்போது நம்மால் அதை சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கான பலனை அவர்கள் அனுபவிக்க நேர்ந்தால் நாம் மிகவும் மகிழ்ச்சியடைவோம், காரணம் அவர்கள் தாங்கள் செய்த பாவத்தின் பலனை அனுவபவிக்கிறார்கள். ஆனால் ஆண்டவரோ உங்கள் சத்துருவை நேசியுங்கள் என்கிறார், ஒரு வேளை நாம் நம் எதிரியை நேசிக்கலாம்.. ஆனால் அதை அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமே, நாம் நேசித்தும் அவர்கள் நம்மை பகைக்கவே செய்கிறார்களல்லவா? எனவேதான் அவர்கள் துன்புறும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம், அடுத்தவர்களிடத்தில் கூறுகிறோம், அவன் செய்த பாவம் அவன் அனுபவிக்கிறான் என்று கூறுகிறோம்.

இங்கேதான் ஆண்டவர் வித்தியாசப்படுகிறார், மனிதன் நிறைவாய் வாழ கடவுள் ஏதேனை படைத்தார், படைக்கும்போதே அவர் கொடுத்த கட்டளை நடு மரத்தின் கனியை புசிக்காதீர்கள் புசித்தால் சாவீர்கள் என்பதே, ஆனால் அவர்களோ அவரது வார்த்தைக்கு செவி கொடுக்காமல் புசித்தனர், அதன் பலனான நித்திய மரணம் வந்து சேர்ந்தது, இது அவர்கள் செய்த பாவத்தின் பலன், கடவுளுக்கு கீழ்படியாமல் போன துரோகத்துக்கு கிடைத்த தண்டனை, நியாயமாக கடவுள் அவர்களை பார்த்து சிரித்திருக்க வேண்டும், என் வார்த்தையை கேட்காமல் போனீர்களே போய் சாவுங்கள் என்று விரட்டியடித்திருக்க வேண்டும், ஆனால் அவரோ வருத்தப்பட்டார், அதைவிட ஆச்சரியம் அவர்களை நித்திய மரணித்திலிருந்து காக்க நினைக்கிறார்.. ஏன் காக்க வேண்டிய அவசியம் என்ன கடவுளுக்கு?????? துரோகிகளை போய் காப்பாற்றலாமா?

காப்பாற்ற நினைக்கிறார், ஆனால் காப்பாற்ற வேண்டுமானால், குற்றமில்லாத ஒருவரின் ரத்தம் பலியாக சிந்தப்பட வேண்டும்.. குற்றமில்லாதவன் யார்? கடவுளை தவிர யாருமே இல்லையே அதற்கும் ஒரு முடிவெடிக்கிறார், ஆம் அவரே இவ்வுலகில் மனிதனாய் பிறக்கிறார், கடவுளின் குமாரன் என்ற அங்கீகாரத்தோடு இயேசு ஆண்டவராய் இவ்வுலகிற்குள் வருகிறார். தன்னையெ அர்ப்பணிக்கிறார் அவரை யார் நம்புகிறார்களோ அவர்கள் நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டு மோட்ச வாழ்வை பெறுகிறார்கள். ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்? செய்ய வேண்டிய அவசியம் என்ன அவருக்கு? நம்மேல் இவ்வளவாய் அன்பு கூறுகிறார்... அவரது அன்பு நமக்காய் இவ்வளவு தூரம் அவரை கீழிறங்க வைத்தது.

ஆனால் இந்த அன்பை ருசித்த போதிக்கிற நம்மில் எத்தனை பேருக்கு உண்மையான அன்பிருக்கிறது? கடவுள் காட்டிய இவ்வளவு பெரிய அன்பை நாம் கடைபிடிப்பது சாத்தியமில்லைதான், ஆனால் குறைந்த பட்ச அன்பாவது இருக்கலாமே???? ஆனால் இங்கே அந்த அன்பை காணுவது பெரும் சிரமாய் இருக்கிறது, இந்த அன்பைதான் இன்ந்த தவக்காலத்தில் தியானிக்கிறோம், ஆனால் நம்மில் இந்த அன்பில்லை. காரணம் நாம் உண்மையாய் தியானிக்கவில்லை..

சில நாட்களுக்கு முன், நான் ஒரு போதகரோடு பேசிக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு மூத்த போதகர் அவ்வழியே வந்தார் அவர் எங்களை நெருங்கியதும் அவரை பார்த்து இரு கரம் கூப்பி ஸ்தோத்திரம் அயிரே என்றேன், அவரோ முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார்.. எனக்கு அவனமாக தோன்றியது ஏன் இப்படி செய்தார் என்றால், நான் பேசிக்கொண்டிருந்த போதகர் திருச்சபை அரசியலில் அவருக்கு எதிரணியில் இருப்பவர். எனக்கு இன்னும் ஓட்டுரிமை இல்லை, இப்போதே இன்னிலை என்றால், ஒருவேளை ஓட்டுரிமை பெற்று ஒரு அணியில் நின்றால், எதிரணியினர் என்னை எப்படி பார்ப்பார்களோ? ஒருவேளை இப்படிப்பட்ட முன் மாதிரி அனுபவங்களால், நானும் இக்குணம் கொண்டவானாய் மாறுவேனோ? பயமாய் இருக்கிறது... நாமெல்லாம் சிலுவையின் அன்பை போதிக்கிறவர்களும் கேட்பவர்களும்தானா? இந்த முன் மாதிரிதான் ஆண்டவர் நம்மில் எதிர்பார்க்கிறாரா? இதற்காகத்தான் நீங்கள் உலகின் ஒளி என்றாரா? நாம் ஓளிக்கு சாட்சி கொடுக்கிறோமா இல்லை??????  இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்தேன், ஆனால் இதை எனக்கு எச்சரிக்கையாக எழுதிக் கொள்கிறேன்..  அவர் பார்வைக்கு மறைவானது ஒன்றும் இல்லை..


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, March 15, 2012

ஆவியின் வல்லமை!!!!!!!!!

TEXT. நியாயாதிபதிகள்.15:9-15

அன்பான எனதருமை உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், ஒவ்வொரு நாளும் நம்மை பாதுகாக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன். சிம்சோன் வேதாகமத்தில் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களில் ஒருவர், காரணம் துன்பங்களை கண்டு அஞ்சாதவர், எதிர்ப்புகளை கடவுளின் நாமத்தால் ஓட ஓட விரட்டுகிறவர். தனக்கு வந்த ஒரு மாபெரும் துன்பத்தை அவர் ஓட ஓட விரட்டிய ஒரு சம்பவத்தை இன்று நாம் தியானிக்கப்போகிறோம்.

இஸ்ரவேலர்கள் பாலும் தேனும் வழிந்தோடுகிற கானான் தேசத்தில் குடியேறிய பிறகு அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய சவால் காத்திருந்தது, அந்த சவால் பெலிஸ்தியர்கள், அவர்கள் மாபெரும் வீரர்கள், போர் செய்வதில் வல்லவர்கள், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரவேலுக்குள் நுழைந்து இவர்களது செல்வங்களை கொள்ளையிட்டு செல்வார்கள், அவர்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இஸ்ரவேலர்களில் ஒருவருக்கும் இருந்ததில்லை, ஒரேயொருவர்தான் அவர்களுக்கு முடிவு கட்டியவர் அவர் தாவீது, கோலியாத்தை கொன்று ஒட்டு மொத்தமாக பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்கியவர்.

தாவீதுக்கு முன்பு நூற்றாண்டுகளாக கானானில் வாழ்ந்த போது யாராவது பெலிஸ்தியர்களை எதிர்த்திருக்கிறார்களா என்றால், ஒருவர் இருக்கிறார் அவர்தான் சிம்சோன். சிம்சோன் பெலிஸ்தியர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். எனவே சிம்சோனை ஒழிக்க பெலிஸ்தியர் யூதாவில் பாளையமிறங்கினர் (நியா.15:9). யூதா மக்கள் நடுங்கி ஏன் இங்கே பாளையமிறங்கினீர்கள் என்று கேட்க எங்களுக்கு சிம்சோன் வேண்டும் அவன் எங்களுக்கு செய்ததை நாங்கள் அவனுக்கு செய்ய வேண்டும் என்றனர்(நியா.15:10), அப்போது யூதாவின் மக்கள், அதாவது சிமோசினின் சொந்த ஜனமான இஸ்ரவேலர் 3000 (நியா.15:11) பேர் போய் சிம்சோனை தேடி கண்டு பிடித்தனர், சிம்சோன் அவர்களிடம் ஒரு உறுதிமொழி வாங்கிக் கொண்டார், அதாவது என்னை பெலிஸ்தியர்கள் கையில் ஒப்படைக்கும் வரை எனக்கு நீங்கள் எந்த தீங்கும் செய்யக் கூடாது என்றார் (நியா.15:12) காரணம் எதிரிகளை கூட நம்பலாம் நம்மோடு இருப்பவர்களில் அனேகரை நாம் நம்ப முடியாது, அவர்கள் உறுதியளித்ததும் தைரியமாய் அவர்களோடு வருகிறார்.

கயிறுகளால் அவரை கட்டி பெலிஸ்தியரிடம் கொண்டு வந்தனர். பெலிஸ்தியர்கள் சிம்சோனை கண்டதும் மிகப்பெரிய ஆரவாரம் செய்கின்றனர் காரணம் தாங்கள் தேடிய எதிரி கிடைத்துவிட்டான் என்று. அதே நேரத்தில் கர்த்தருடைய ஆவி சிம்சோனின் மீது இறங்கியது,(நியா.15:14) உடனே அவரை கட்டியிருந்த கட்டுகள் நெருப்பில் பட்டது போல் பொசுங்கிப் போயின. கழுதையின் பச்சை தாடை எலும்பு ஒன்றை கண்டு அதை எடுத்து ஆயிரம் பேரை கொன்றார்(நியா.15:15-16).

அன்பானவர்களே, சிம்சோனின் மீது இறங்கிய கர்த்தருடைய ஆவி நம்மீது இருக்கிறதே, அப்படியானால் நம்முடைய பலம் என்ன? நமக்கெதிராய் வருகிற எந்த கட்டையும் பொசுக்கிப் போடுகிற பலம், எதிர்ப்புகளையும், பிசாசின் தந்திரங்களையும்  சுட்டெரிக்கிற பலம் நமக்குள் இருக்கிறது, அங்கே வென்றது சிம்சோன் அல்ல கர்த்தருடைய ஆவி, ஆம் நாமும் நம் துன்பங்களை கண்டு, வியாதிகளை கண்டு, போராட்டங்களை கண்டு அஞ்ச வென்டியதில்லை, நாமல்ல நமக்குள் இருக்கிற கர்த்தருடைய ஆவியால் அவைகளை மேற்கொள்வோம். ஆமேன்....

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, March 13, 2012

காரியத்தை அவரே வாய்க்க செய்வார்

அன்பான வாசகர்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள், நமது சிறுவர் ஊழிய குழுவின் இன்னொரு ஊழிய தகவலோடு உங்களை சந்திக்கிறேன், நமது சிறுவர் ஊழிய குழு கிருஷ்ணகிரி போலியோ காப்பகத்தில் நடத்திய நிகழ்ச்சியை நீங்கள் அறிவீர்கள், அதை அறிந்த‌ இந்திய சுவிசேஷ ஊழிய மையம் அவர்களது விடுதியில் நிகழ்ச்சி நடத்த அழைத்திருந்தனர். இதற்கு கிருஷ்ணகிரியில் உள்ள எனது நண்பர் ஜோசாம் அவர்களின் தாயார் திருமதி.அன்னாள் அவர்கள் பெரிதும் உதவினார். பிள்ளைகளுக்கும் நமக்கும் அவர்களே மதிய உணவும் ஏற்பாடு செய்து நம்மை பெரிதும் உற்சாகப்படுத்தினார். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி, அதற்கான புகைப்படங்களை காணுங்கள். இவ்வூழியம் பெருக ஜெபியுங்கள்.












ஊழியம் என்பது அனேக சிரமங்களை உள்ளடக்கியது என்பதை இந்த சில மாதங்களில் நான் அனுபவித்து வருகிறேன், திருச்சபை ஊழியம், புத்தக ஊழியம், சிறுவர் ஊழியம், இதற்கிடையே இந்த இணையதள ஊழியம் என எல்லவற்றிலும் என்னால் கவனம் தொடர்ச்சியாக பங்காற்ற முடியாமல் தினருகிறேன், ஆனால் கர்த்தர்தாமே, என்னை அற்புதமாய் சொர்வடையாமல் நடத்தி வருகிறார். யாரிடமும் காணிக்கை கேட்பதில்லை, மனித கரங்களை நம்புவதில்லை, ஊழியத்தை விளம்பரப்படுத்துவதும் இல்லை, பெரிய ஆதரவுகளும் இல்லை, ஆனால் அன்பானவர்களே என் ஆண்டவர் நல்லவர் என்பதை ஒவ்வொரு நாளும் ருசித்து வருகிறேன். கரம் பிடித்து நடத்துகிறார், நான் சோர்வடையும்போது தேற்றுகிறார், தேவை வரும்போது தமது தூதர்களை அனுப்புகிறார். ஊழியத்திற்கு பையையாவது, தடியையாவது எடுத்து செல்லாதீர் என்கிறாரே அது மிக சத்தியம், அவர் பார்த்துக் கொள்ளுகிறார். இப்போது ஊழியத்திற்கென எந்த பணமும் என்னிடத்தில் இல்லை ஆனால் இம்மாத மாத இதழ் நடத்த வேண்டும், ஆனால் அவர் நடத்தி காட்டுவார். அந்த சாட்சியும் இங்கே நான் பகிர்வேன் அன்பானவர்களே அவரை நம்புங்கள், காரியத்தை அவரே வாய்க்க செய்வார்.
கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

Thursday, March 8, 2012

ஆலயத்தை கட்டுவோம் வாருங்கள்

அன்பான உடன் விசுவாசிகளே, வேலூர் மாவட்டம் ஆம்பூரில், சான்றோர் குப்பம் என்ற கிராமத்தின் போதகரான அருள்திரு. ராஜகம்பீரம் (இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர்) அவர்களும் சபையாரும் இனைந்து ராஜகோபால் நகர் என்ற கிராமத்தில் ஒரு அழகான ஆலயத்தை கட்டி கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்தனர். அந்த  ஆராதனையில் கலந்துக்கொள்ளும் உன்னத அனுபவம் எனக்கும் கிடைத்தது. அழகான ஓலை கூரை வேய்ந்த சிறிய ஆலயமாக தென்பட்டாலும், எதிர்காலத்தில் மிகப்பெரிய தேவாலயமாக  உருவாவதற்கான அத்தனை அம்சங்களும் அங்கே தெரிந்தது. உள்ளேயும் வெளியேயும் உட்கார இடமில்லாத அளவுக்கு பெரும் திரளாக அனேக விசுவாசிகள் அன்று கூடி வந்தனர். பிரதிஷ்டைக்கு பிறகு கூட சில ஆராதனைகளை நடத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, அப்போதும் அங்கே வந்த விசுவாசிகளை காணும்போது அது ஒரு பெரிய ஆலயமாய் உருவாகும் என்பதில் எனக்கு ஐயம் ஏற்படவில்லை இதோ அந்த ஆலயத்தின் மகிழ்ச்சியான துவக்கம். புகைப்படங்களாய்.

அருள்திரு. ராஜகம்பீரம் முன்னின்று பிரதிஷ்டை செய்கிறார்.
உள்ளே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்.
உள்ளே இடமின்றி வெளியே திரண்டிருந்த விசுவாசிகளின் கூட்டம்

 திருச்சபை பிரதிஷ்டைக்கு நன்றியாய் கிராம பிள்ளைகளின் உற்சாக நடனம்

ஆனால் அன்பானவர்களே இந்த சந்தோஷம் அங்கே நீடிக்கவில்லை எல்லாமே இப்போது தலைக் கீழ் ஆசை ஆசையாய் கட்டப்பட்ட தேவாலயம் இன்று இல்லை,  மின் கசிவோ? விஷமிகளின் சதியோ? தெரியவில்லை ஆனால் தேவாலயம் முற்றிலுமாய் எரிந்து சாம்பலாகிப்போனது இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் இன்னொரு அவயவம் இன்று எரிந்து புண்ணாகி கிடக்கிறது தேற்றுவாரில்லாமல்  . காண்போர் மனது வைத்தால், கடவுள் உங்கள் உள்ளத்தில் ஏவினால் அங்கே முன்பைவிட சிறப்பான ஆலயம் உருவாகும். சீர் குலைந்த சபையின் நிலையை காணுங்கள்.

முற்றும் எரிந்து குட்டிசுவராய் நிற்கும் தேவாலயம்.



தேவாலய கதவு பாய், புனித பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிப்போன காட்சி


ஆலயத்தில் ஒன்றும்  மிஞ்சவில்லை.

அன்பானவர்களே இந்நிலை மாற உங்கள் உதவி தேவை. ஆலயத்தை கட்டுகிறவர்களின் வாழ்வை கர்த்தர் கட்டுவார். இதை படிப்போர் உதவ விரும்பினால் நமது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள, 9944555388,    9944116769 என்ற எண்களுக்கு நீங்கள் தொடர்புக் கொள்ளலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆலயம் உருவாக காரணமாய் அமையும். ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தால் கூட அதன் பலனை திரும்ப பெறாமல் போகமாட்டீர்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

Wednesday, March 7, 2012

சந்தோஷமாய் படியுங்கள் வெற்றி நிச்சயம்



அன்பான மாணவ‌ செல்வங்களே, குறிப்பாக தேர்வுக்கு ஆயத்தமாகி வரும் 12  ம் வகுப்பு மாணவர்களே, இதோ உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தேர்வை சந்திக்கிறீர்கள், யாருடைய‌ கட்டாயத்திற்காகவும் இத்தேர்வை நீங்கள் சந்திக்கவில்லை, உங்கள் எதிர்காலத்துக்காய் சந்திக்கிறீர்கள் என்பதை உணர்ந்து தேர்வுக்கு ஆயத்தப்படுங்கள், கல்விதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக நம் நாட்டில் இப்போது உருவாகிவிட்டது எனவே கவனமாய் காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள்.

சுமையாக தேர்வை நினைக்காதீர், இதுதான் உங்கள் பள்ளிக்கூட வாழ்வில் உங்கள் சக நண்பர்களோடு சந்திக்கப்போகும் கடைசி தேர்வு என்ற சுகமான அனுபத்தோடு தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள். வெற்றி என்ற பட்டத்தை பெற தீவிரமாய் உழையுங்கள், வெற்றி எப்போதும், யாருக்கும் எளிதாக கிடைக்கவில்லை. எனவே கடுமையான உழைப்பு அவசியம், இந்த சில நாட்கள் நீங்கள் கஷ்ட்டப்பட்டுவிட்டால், வரப்போகிற எதிர்காலம் சுகமானதாக இருக்கப்போகிறது. இது  துன்பமல்ல உங்கள் எதிர்கால வாழ்வுக்கு நீங்கள் போடப்போகிற அஸ்திபாரம்.

மனதை ஒருமுகப்படுத்த காலையில் சில மணித்துளிகளை ஆண்டவரோடு செலவிடுங்கள், அவரோடு பேசுங்கள் வல்லமையை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள், அவரே நம் உழைப்பை ஆசீர்வதிக்கிறவர். நாம் உயர தன்னை மாய்த்துக் கொண்டவரல்லவா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவர் உங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார், தேர்வு பயமோ, பத‌ட்டமோ, இல்லாமல் உங்கள் உள்ளத்தை நிறைந்த சமாதானத்திற்கு நேராய் நடத்துவார், காரணம்

அவர்  உங்கள் முகத்தை பார்ப்பவரல்ல இருதயத்தை பார்ப்பவர் (1சாமுவேல். 16:7). . 

அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.  சங்கீதம் 34:5 

 இந்த வசனத்தை நினைவில் நிறுத்துங்கள், தினமும் அவரை நோக்கி பாருங்கள், சந்தோஷமாய் படியுங்கள் வெற்றி நிச்சயம்.


விசேஷமாய் ஜெபிக்க விரும்புவோர் உங்கள் பெயரை இமெயில் அனுப்புங்கள் உஙளுக்காக ஜெபிக்க காத்திருக்கிறேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, March 5, 2012

சிறுவர் கொண்டாட்டம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், கடந்த 11 ம் தேதி சனிக்கிழமை நமது சிறுவர் கொண்டாட்டம் குழு கிருஷ்ணகிரியில் உள்ள இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் கீழ் இயங்கி வருகிற போலியோ காப்பகத்துக்கு பயணித்தது, ஏற்கெனவே நாம் வருவதை அறிந்திருந்த விடுதி காப்பாளர் மற்றும் சக பணியாளர்கள் அன்போடு நம் சிறுவர் குழுவை வரவேற்றுக் கொண்டனர். சரியாக 10;30 மணிக்கு நிகழ்ச்சிகளை திட்டமிட்டப்படி துவங்கினோம்.

நம் குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய ஆவிக்குரிய அனுபவம், காரணம் பிள்ளைகள் அனைவரும் போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களை மகிழ்விக்க கர்த்தர் பெரிய வாய்ப்புக் கொடுத்தார். அவர்கள் மத்தியில் வல்லமையாய் கடவுள் நம்மை பயன்படுத்தவேண்டும் என்று குழுவினர் அனைவரும் உபவாசத்தோடு ஆயத்தப்பட்டிருந்தோம், ஒருவேளை சோர்வடைந்துவிடுமோ என்ற பயமிருந்தாலும், கர்த்தர் கொஞ்ச‌மும் சோர்வின்றி வழி வழிடத்தினார்.


பிள்ளைகள் அனைவரையும் அங்குள்ள விடுதி காப்பாளர்களும், உடன் பணியாளர்களும் மிகவும் அன்பாக கரிசனையாக நடத்திவருவதற்காய் கர்த்த‌ருக்கு நன்றி செலுத்தினோம். அவர்களது ஊழியம் உண்மையான இயேசுவின் ஊழியம். அவர்களது இந்த ஊழியத்தில் பங்கெடுத்தது உள்ளார்ந்த மன நிறைவை தந்தது.

அனைத்து செலவுகளையும் கர்த்தர் கிருபையாய் குறையின்றி சந்தித்தார். அதற்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பணிக்காய் செலவழிப்பது தூய உணர்வை தந்தது. பிள்ளைகளது உறுதிக்கும் விசுவாசத்துக்கும் முன்னால், நமது விசுவாசம் கேள்விக்குறியதே. அனைத்து பிள்ளைகளும் நிகழ்ச்சியை பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள், அனைவரும் பொதுவாக சொல்லியிருந்த கருத்து இந்த ஊழியம் எங்களை ஆவிக்குரிய வாழ்வில் மகிழ்வித்தது என்பதே. இதுவே நமது ஊழியத்தின் நோக்கம் அதை சரியாய் செய்ய கடவுள் நமது குழுவை சரியாக பயன்படுத்தினார்.


நிகழ்ச்சிக்காக, சகோதரர் பாரத் அவர்கள் பெங்களூரிலிருந்து தன் பணிகளுக்கிடையே உற்சாகமாக வந்து பங்குக் கொண்டார். அன்று அவரது பிறந்த நாள் அதையும் பொருட்படுத்தாது பிள்ளைகளோடு தன் நேரத்தை செலவிட்டதுமல்லாமல், அவர்களிடத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இப்படியொரு உலகம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று அவர் கேட்ட கேள்வி என்னை வெகுவாக பாதித்தது.

அன்பு தம்பிகளாகிய நமது குழுவினர், பெரும் உற்சாகத்தோடு பிள்ளைகளை இயல் இசை நாடகம் வழியாக மகிழ்வித்தனர். நமது சிறப்பு பரிசுகளையும் பிள்ளைகளோடு பகிர்ந்துக் கொண்டோம், தொடர்ந்து இந்த உழியங்களுக்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews