WORD OF GOD

WORD OF GOD

Monday, March 5, 2012

சிறுவர் கொண்டாட்டம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், கடந்த 11 ம் தேதி சனிக்கிழமை நமது சிறுவர் கொண்டாட்டம் குழு கிருஷ்ணகிரியில் உள்ள இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் கீழ் இயங்கி வருகிற போலியோ காப்பகத்துக்கு பயணித்தது, ஏற்கெனவே நாம் வருவதை அறிந்திருந்த விடுதி காப்பாளர் மற்றும் சக பணியாளர்கள் அன்போடு நம் சிறுவர் குழுவை வரவேற்றுக் கொண்டனர். சரியாக 10;30 மணிக்கு நிகழ்ச்சிகளை திட்டமிட்டப்படி துவங்கினோம்.

நம் குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய ஆவிக்குரிய அனுபவம், காரணம் பிள்ளைகள் அனைவரும் போலியோவினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், அவர்களை மகிழ்விக்க கர்த்தர் பெரிய வாய்ப்புக் கொடுத்தார். அவர்கள் மத்தியில் வல்லமையாய் கடவுள் நம்மை பயன்படுத்தவேண்டும் என்று குழுவினர் அனைவரும் உபவாசத்தோடு ஆயத்தப்பட்டிருந்தோம், ஒருவேளை சோர்வடைந்துவிடுமோ என்ற பயமிருந்தாலும், கர்த்தர் கொஞ்ச‌மும் சோர்வின்றி வழி வழிடத்தினார்.


பிள்ளைகள் அனைவரையும் அங்குள்ள விடுதி காப்பாளர்களும், உடன் பணியாளர்களும் மிகவும் அன்பாக கரிசனையாக நடத்திவருவதற்காய் கர்த்த‌ருக்கு நன்றி செலுத்தினோம். அவர்களது ஊழியம் உண்மையான இயேசுவின் ஊழியம். அவர்களது இந்த ஊழியத்தில் பங்கெடுத்தது உள்ளார்ந்த மன நிறைவை தந்தது.

அனைத்து செலவுகளையும் கர்த்தர் கிருபையாய் குறையின்றி சந்தித்தார். அதற்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பணிக்காய் செலவழிப்பது தூய உணர்வை தந்தது. பிள்ளைகளது உறுதிக்கும் விசுவாசத்துக்கும் முன்னால், நமது விசுவாசம் கேள்விக்குறியதே. அனைத்து பிள்ளைகளும் நிகழ்ச்சியை பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள், அனைவரும் பொதுவாக சொல்லியிருந்த கருத்து இந்த ஊழியம் எங்களை ஆவிக்குரிய வாழ்வில் மகிழ்வித்தது என்பதே. இதுவே நமது ஊழியத்தின் நோக்கம் அதை சரியாய் செய்ய கடவுள் நமது குழுவை சரியாக பயன்படுத்தினார்.


நிகழ்ச்சிக்காக, சகோதரர் பாரத் அவர்கள் பெங்களூரிலிருந்து தன் பணிகளுக்கிடையே உற்சாகமாக வந்து பங்குக் கொண்டார். அன்று அவரது பிறந்த நாள் அதையும் பொருட்படுத்தாது பிள்ளைகளோடு தன் நேரத்தை செலவிட்டதுமல்லாமல், அவர்களிடத்திலிருந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இப்படியொரு உலகம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் என்று அவர் கேட்ட கேள்வி என்னை வெகுவாக பாதித்தது.

அன்பு தம்பிகளாகிய நமது குழுவினர், பெரும் உற்சாகத்தோடு பிள்ளைகளை இயல் இசை நாடகம் வழியாக மகிழ்வித்தனர். நமது சிறப்பு பரிசுகளையும் பிள்ளைகளோடு பகிர்ந்துக் கொண்டோம், தொடர்ந்து இந்த உழியங்களுக்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்,

அருள்திரு . கில்பர்ட் ஆசீர்வாதம் 

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews