WORD OF GOD

WORD OF GOD

Monday, April 30, 2012

கர்த்தருக்குள் களிகூறுவோம்.!!!!!!

சாலையில் நடந்து வந்துக் கொண்டிருந்த ஒருவர் மிகவும் சந்தோஷமாக எதையோ சாதித்த நிறைவோடு வந்துக் கொண்டிருந்தார், எதிரே வந்த அவரது நண்பர் அவரைக் கண்டு என்ன இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறீர்கள் என்று கேட்டாராம், முதலாமவரோ நீங்களே கண்டு பிடியுங்கள் பார்க்கலாம் என்றார், நீங்கள் எதிலோ வெற்றி பெற்றிருக்கிறீர்கள் அதனால்தான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்றாராம், அதற்கு அவர் நண்பர் சொன்னார் இல்லை நான் தோற்றுவிட்டேன் அதனால்தான் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார், தோற்றால் மகிழ்ச்சி வருமா? ஆச்சரியத்துடன் கேட்டார் இரண்டாமவர். உண்மைதான் நான் என் 5 வயது மகனிடம் தோற்றுவிட்டேன் அதனால்தான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என் சந்தோஷத்தை அடக்கமுடியவில்லை என்றார்.

அன்பானவர்களே மகிழ்ச்சி விசித்திரமானது, இப்போது அய் பி எல் கிரிக்கெட் தொடரை கண்டு வருகிறோம், தோணி மும்பைக்கு எதிரான போட்டியில் அவுட்டானால் மும்பை ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர், ஆனால் அதே ரசிகர்கள் இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் தோணி அவுட்டானால் ஆரவாரம் செய்வார்களா? மகிழ்ச்சி விசித்திரமானது.

வேதாகமத்திலே தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிற அனேகரில் இருவரது சந்தோஷம் மிகவும் விசித்திரமானது. ஒருவர் ஆபகூக் தீர்க்கன், அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சை செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவ மரம் பலனற்று போனாலும், வயல்கள் தானியத்தை விளைவிக்காமற் போனாலும், மந்தையிலே ஆடுகளின்றி போனாலும், தொழுவத்திலே ஆடுகளின்றி போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்கிறார். அதாவது சாப்பிட எதுவுமே இல்லாமல் போனாலும், பஞ்சம் ஏற்பட்டாலும், சொத்துக்களை (ஆடு மாடுகள்தான் அக்காலத்தில் சொத்துக்கள்) இழந்தாலும் சந்தோஷமாகவே இருப்பேன் என்கிறார்... இது சாத்தியமா? பசியோடும் பஞ்சத்தோடும் வாழ்வது சந்தோஷமானதா? அப்படி வாழ முடியுமா? இக்காலத்தில் வீட்டிலும் வெளியிலும் இருக்கிற எல்லா பிராச்சினைகளுக்கும் முக்கிய காரணமே இந்த மூன்றில் எதாவது குறைவதால் தானே. பசி நேரத்தில் வீட்டில் ஆகாரமில்லையென்றார் வீடே போர்க்களமாகிவிடுகிறதே?!!! பிறகு எப்படி ஆபகூக் இப்படி கூறுகிறார்????

இன்னொருவர் இன்னும் விசித்திரமானவர்.. நாம் எப்போது கடவுளுக்கு ஸ்தோத்திரம் சொல்லுவோம்? நன்மை கிடைக்கும்போது, ஆராதனை செய்யும்போது, அற்புதங்கல் நடக்கும்போதுதானே, யாராவது மரித்து போனால் ஸ்தோத்திரம் சொல்வோமா? அப்படி சொன்னால் நாம் நல்ல மனம் கொண்டவர்கள் தானா? ஆனால் யோபு சொல்லுகிறார்... தனது செல்வங்களையும், ஆசை பிள்ளைகளையும் இழந்த செய்தியை கேட்டு சொன்னதென்ன? கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் இவ்வளவு அலட்சியமாக நம் எதிரி மரித்தால் கூட நம்மால் சொல்லமுடியாதே யோபு சொல்லக் காரணமென்ன? செல்வத்தை இழந்ததும் பிள்ளைகளை இழந்ததும் அவனுக்கு சந்தோஷமாக நிச்சயமாக இல்லை.. பிறகு எப்படி யோபு இப்படி கூறுகிறார்?

இருவரும் சொல்லுகிற காரணம் கர்த்தர். கர்த்தர் இருந்தால் என்ன நடக்கும்?

ஏசாயா.54:17 உனக்கு எதிராக செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும்.

ஏசாயா:43:2 நீர் நிலைகளை கடக்கும்போதும், ஆறுகளை கடக்கும்போதும், தீயில் நடந்தாலும் உன் மேல் பற்றாது.

சங்கீதம்.91:10 பொல்லாங்கு வாதை அணுகாது.

உபாக‌ம‌ம்.31:8 கைவிடுவ‌துமில்லை, வில‌குவ‌துமில்லை.

ஆதியாக‌ம‌ம்.12:2 பெரிய‌ ஜ‌ன‌மாவோம், பேரை மேன்மை ப‌டுத்துவார்.

ம‌த்தேயு.28;20 ச‌க‌ல‌ நாட்க‌ளிலும் கூட‌வே இருப்பார்.

அன்பானவர்களே இந்த புதிய மாதத்திலும் இயேசு கிறிஸ்து நம்மோடே இருக்கிறார் நம்மை அவர் கைவிடப்போவதில்லை, எனவே இந்த விடுமுறை மாதமாகிய மேமாதத்தை, நமது உழைப்பின் பலனை உணர செய்யும் மே மாதத்தை சந்தோஷமாய் துவங்குவோம். கர்த்தருக்குள் களிகூறுவோம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, April 19, 2012

நமக்கென்ன குறை? Happy Easter

அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நமது தேசம் மிதமான கால நிலை நிலவுகிற தேசம். இங்கே கடுமையான வெயிலும் இல்லை, கடுமையான பணியும் இல்லை. எனவே நமது நிறமும் பனிப்பிரதேசங்களில் இருப்பவர்களை போல‌ அதீத வெள்ளையும் இல்லை, வெப்ப நாடுகளில் இருப்பவர்களை போன்ற கருமையும் இல்லை, நமது கால நிலை போலவே நாம் மாநிறம் கொண்டவர்கள். ஆனால் நாம் மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் எனவே வெள்ளை நிற தோற்றத்தையே அதிகம் விரும்புகிறோம். இதை அப்படியே சில நிறுவனங்கள் வியாபாரமாக மற்றுகின்றன.


அதாவது ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் ஒரு மாநிறம் கொண்ட பெண் வீதியிலே போகும்போது அடுத்தவர்கள் அவளது தோற்றத்தை கேலி செய்கின்றனர், உடனே இந்நிலை மாற ஒரு கிரீமை தடவ சொல்கிறார்கள். இன்னொரு விளம்பரத்தில், ஒரு மாநிறம் கொண்ட பெண் வேலைக்கு போகிறாள், ஆனால் அவள் தோற்றத்தை கண்டு அவளுக்கு வேலை மறுக்கப்படுகிறது, உடனே ஒரு கிரீமை தடவ சொல்லுகிறார்கள். இது உண்மையா? சாலையில் போகிறவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது யார் கருப்பாக போகிறார்கள்? யார் மாநிறமாக போகிறார்கள் என்று பார்த்து கொண்டிருப்பதா வேலை? அதே போல வேலை கிடைக்க கல்வி தான் முக்கியமே தவிற நிறம் அல்ல. அப்படியானால் ஆப்பிரிக்காவில் வாழும் நீக்ரோ இன சகோதர சகோதரிகளுக்கு வேலையே கிடைப்பதில்லையா? என்ன வேடிக்கை? அவர்கள் பொருளை விற்பதற்காக, கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்தால், வெளியே போகமுடியாது, வேலை கிடைக்காது என்ற பயத்தை ஏற்படுத்தி, நமது பயத்தை வியாபாரமாக்குகின்றனர்.


அதேபோல, ஒரு புதிய வீடு கட்டி குடியேறுவோம், அந்த வீட்டில் தொடர்ச்சியாக கணவன் மனைவிக்கிடையே, சண்டை வருமானால் ஒருவர் சொல்லுவார் நீங்கள் கிச்சனை (சமையலறை)  இந்த மூலையில் கட்டினால் பிரச்சினை வராது என்று.. சண்டைக்கு காரணம் நமது மன நிலை, சண்டைகள் தீர எளிய வழியை இயேசு கிறிஸ்து போதிக்கிறார்.. ஒருவரையொருவர் மன்னியுங்கள் என்று. ஆனால் அதை மறந்து பிரச்சினைக்கு காரணம் வீடு என்று நினைத்து அதை இடித்து கட்டி, இன்னொரு பிரச்சினையை தேவையில்லாமல் வளர்த்துக் கொள்ளுகிறோம். பிரச்சினையே இல்லாத ஒரு வீட்டை சொல்லுங்கள் பார்க்கலாம், எவ்வளவு முட்டாள்தனம். இங்கேயும் நமது பயம் ஒரு வியாபர மூலதனமாக சிலருக்கு பயன்படுகிறது .


நாம் எப்போதெல்லாம் பயப்படுகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம், பயம்தான் நம் முன்னேற்றத்தின் பெரிய எதிரி. நாம் பயந்தால் உண்மைகளை காண முடியாது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த காலத்தில் மூன்று முறை சீடர்களுக்கு தன் பாடு மரணம் உயிர்த்தெழுதலை பற்றி முன்னறிவித்தார். (மார்கு.8:31, 9:31, 10:34) ஆனாலும் சீடர்கள் விசுவாசமில்லாமல் பூட்டிய வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். காரணம் என்ன? பயம். நாம் எப்போது பயப்படுகிறோமோ அப்போது உண்மையை மறந்துபோகிறோம், பயம் நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடுகிறது. அன்பானவர்களே, இன்று உங்களை எது அச்சுறுத்துகிறது? துன்பங்களா? வியாதிகளா? போரட்டங்களா? வேலையின்மையா? தோல்வியா? எது உங்களை அச்சுறுத்தினாலும் உங்கள் மனதிற்கு சொல்லுங்கள் இயேசு உயிரோடிருக்கிறார் ஏன் பயப்படுகிறாய் என்று. நம் மீட்பர் உயிரோடிருக்கையிலே நமக்கென்ன குறை? கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசிமட்டும் கை விடாதிருப்பார். அல்லேலூயா.. ஆமேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

அன்புடன்
ஆருள்திரு..கில்பர்ட் ஆசீர்வாதம்.

Wednesday, April 4, 2012

அன்பான 10 ம் வகுப்பு மாணவர்களே..

அன்பான 10 ம் வகுப்பு மாணவர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் இன்று நீங்கள் முதல் முறையாக அரசு பொது தேர்வை சந்திக்க போகிறீர்கள். ஒருவித பதட்டம், ஒருவித பயம், ஒருவித சந்தோஷம் என‌ உங்கள் மனம் இப்போது புதுவிதமாய் இருக்கும். எதிர்பார்ப்புகள் உங்கள் கண்கள் நிறைந்திருக்கும். நான் இப்போது உங்களுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல போவதில்லை. உங்களுக்காக ஒரு சிறிய ஜெபத்தை மட்டும் ஏறெடுக்க விரும்புகிறேன். நீங்களும் என்னோடு ஜெபியுங்களேன்...

அன்பு நிறைந்த எங்கள் நல்ல பிதாவே, அறிவின் ஊற்றாய் இருப்பவரே, பத்தாம் வகுப்பு தேர்வை சந்திக்கபோகிற என்னை (அருமையான சகோதர சகோதரிகளை) உமது கரத்தில் சமர்ப்பிக்கிறேன். என்னை (ஒவ்வொருவரையும்) உமது ஞானத்தால் நிரப்பும், நல்ல நியாபக சக்தியை தாரும், நல்ல ஆரோக்யத்தை தாரும், படிப்பதற்கு எந்தவித தடையும் ஏற்படாமல் காத்துக்கொள்ளும் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சிப் பெற்று, பெற்றோருக்கு பெருமை சேர்த்து நல்ல எதிர்காலத்தை உறுதி செய்துக்கொள்ள கிருபை தாரும் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமேன்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews