WORD OF GOD

WORD OF GOD

Thursday, April 19, 2012

நமக்கென்ன குறை? Happy Easter

அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். உயிர்த்தெழுந்த இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நமது தேசம் மிதமான கால நிலை நிலவுகிற தேசம். இங்கே கடுமையான வெயிலும் இல்லை, கடுமையான பணியும் இல்லை. எனவே நமது நிறமும் பனிப்பிரதேசங்களில் இருப்பவர்களை போல‌ அதீத வெள்ளையும் இல்லை, வெப்ப நாடுகளில் இருப்பவர்களை போன்ற கருமையும் இல்லை, நமது கால நிலை போலவே நாம் மாநிறம் கொண்டவர்கள். ஆனால் நாம் மேற்கத்திய மோகம் கொண்டவர்கள் எனவே வெள்ளை நிற தோற்றத்தையே அதிகம் விரும்புகிறோம். இதை அப்படியே சில நிறுவனங்கள் வியாபாரமாக மற்றுகின்றன.


அதாவது ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் ஒரு மாநிறம் கொண்ட பெண் வீதியிலே போகும்போது அடுத்தவர்கள் அவளது தோற்றத்தை கேலி செய்கின்றனர், உடனே இந்நிலை மாற ஒரு கிரீமை தடவ சொல்கிறார்கள். இன்னொரு விளம்பரத்தில், ஒரு மாநிறம் கொண்ட பெண் வேலைக்கு போகிறாள், ஆனால் அவள் தோற்றத்தை கண்டு அவளுக்கு வேலை மறுக்கப்படுகிறது, உடனே ஒரு கிரீமை தடவ சொல்லுகிறார்கள். இது உண்மையா? சாலையில் போகிறவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கிறது யார் கருப்பாக போகிறார்கள்? யார் மாநிறமாக போகிறார்கள் என்று பார்த்து கொண்டிருப்பதா வேலை? அதே போல வேலை கிடைக்க கல்வி தான் முக்கியமே தவிற நிறம் அல்ல. அப்படியானால் ஆப்பிரிக்காவில் வாழும் நீக்ரோ இன சகோதர சகோதரிகளுக்கு வேலையே கிடைப்பதில்லையா? என்ன வேடிக்கை? அவர்கள் பொருளை விற்பதற்காக, கருப்பாகவோ, மாநிறமாகவோ இருந்தால், வெளியே போகமுடியாது, வேலை கிடைக்காது என்ற பயத்தை ஏற்படுத்தி, நமது பயத்தை வியாபாரமாக்குகின்றனர்.


அதேபோல, ஒரு புதிய வீடு கட்டி குடியேறுவோம், அந்த வீட்டில் தொடர்ச்சியாக கணவன் மனைவிக்கிடையே, சண்டை வருமானால் ஒருவர் சொல்லுவார் நீங்கள் கிச்சனை (சமையலறை)  இந்த மூலையில் கட்டினால் பிரச்சினை வராது என்று.. சண்டைக்கு காரணம் நமது மன நிலை, சண்டைகள் தீர எளிய வழியை இயேசு கிறிஸ்து போதிக்கிறார்.. ஒருவரையொருவர் மன்னியுங்கள் என்று. ஆனால் அதை மறந்து பிரச்சினைக்கு காரணம் வீடு என்று நினைத்து அதை இடித்து கட்டி, இன்னொரு பிரச்சினையை தேவையில்லாமல் வளர்த்துக் கொள்ளுகிறோம். பிரச்சினையே இல்லாத ஒரு வீட்டை சொல்லுங்கள் பார்க்கலாம், எவ்வளவு முட்டாள்தனம். இங்கேயும் நமது பயம் ஒரு வியாபர மூலதனமாக சிலருக்கு பயன்படுகிறது .


நாம் எப்போதெல்லாம் பயப்படுகிறோமோ அப்போதெல்லாம் நாம் ஏமாற்றப்படுகிறோம், பயம்தான் நம் முன்னேற்றத்தின் பெரிய எதிரி. நாம் பயந்தால் உண்மைகளை காண முடியாது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த காலத்தில் மூன்று முறை சீடர்களுக்கு தன் பாடு மரணம் உயிர்த்தெழுதலை பற்றி முன்னறிவித்தார். (மார்கு.8:31, 9:31, 10:34) ஆனாலும் சீடர்கள் விசுவாசமில்லாமல் பூட்டிய வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். காரணம் என்ன? பயம். நாம் எப்போது பயப்படுகிறோமோ அப்போது உண்மையை மறந்துபோகிறோம், பயம் நம்மை சிந்திக்கவிடாமல் கட்டிப்போடுகிறது. அன்பானவர்களே, இன்று உங்களை எது அச்சுறுத்துகிறது? துன்பங்களா? வியாதிகளா? போரட்டங்களா? வேலையின்மையா? தோல்வியா? எது உங்களை அச்சுறுத்தினாலும் உங்கள் மனதிற்கு சொல்லுங்கள் இயேசு உயிரோடிருக்கிறார் ஏன் பயப்படுகிறாய் என்று. நம் மீட்பர் உயிரோடிருக்கையிலே நமக்கென்ன குறை? கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார் கடைசிமட்டும் கை விடாதிருப்பார். அல்லேலூயா.. ஆமேன்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

அன்புடன்
ஆருள்திரு..கில்பர்ட் ஆசீர்வாதம்.

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews