WORD OF GOD

WORD OF GOD

Saturday, October 27, 2012

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது

அன்பிற்கினிய உடன் விசுவாசிகளே, நீண்ட இடைவெளிக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். கர்த்தர் நல்லவர், என்னை நன்மையாய் நடத்தி வருகிறார், பல சோதனைகள், பொருளாதார இழப்புகள் என அனைத்திலும் என்னை தயவாய் காத்து துணிவுடன் வாழ துணை நிற்கிறார். கர்த்தர் என் வெளிச்சம் என் ரட்சிப்பு யாருக்கு அஞ்சுவேன், கர்த்தர் என் ஜீவனுக்கு அரணானவர் யாருக்கு பயப்படுவேன் (சங்.27:1) என்ற தாவீதின் துணிவுள்ள இறை வார்த்தைகள் என்னை ஊழியத்தில் மெருகேற்றி வருகிறது.
நான் துன்பத்தை சந்திக்கும் வேளைகளில் எனக்குள் ஒரு கேள்வி எழுவதுண்டு அது யாதெனில், நான் ஊழியம் செய்கிறேன், முடிந்தவரை உண்மையாய் செய்கிறேன், ஆனால் என் வாழ்வில் சோதனைகளும் வேதனைகளும் வருகிறதே, அவைகள் என் ஊழியத்தை முடக்குகின்றனவே, கர்த்தர் ஏன் இதை அனுமதிக்கிறார்?? அதே நேரத்தில், ஊழியத்தை உதாசினப்படுத்துகிறவர்கள், சுய நல நோக்கோடு சபையை கெடுப்பவர்கள், துனிகரமாய் பாவம் செய்பவர்கள் வாழ்வில் தாங்கள் நினைத்ததை சுலபமாய் சாதித்துவிட்டு போகிறார்களே என்பதே...
 ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் சங்கீதம் 32 ம் அதிகாரத்தை வாசிக்கும்போது கர்த்தர் எனக்குள் இக்கேள்விக்கான பதிலை தெளிவாய் எடுத்துரைத்தார். சங்கீதம் 32:10 ம் வசனம் கூறுகிறது பொல்லாதவனுக்கு வரும் வேதனைகள் அனேகம், கர்த்தரிடத்தில் நம்பிக்கையாய் இருப்பவனையோ கிருபை சூழ்ந்துக் கொள்ளும். ஆம் பொல்லாதவர்களுக்கு அனேக வேதனைகள் வருகிறது அவர்கள் அங்கும் இங்கும் அங்கலாய்ப்பதை நான் கண்ணார காண்கிறேன், அதுவல்ல எனக்கு பிரச்சினை கர்த்தரை நம்புகிற எனக்கு ஏன் பிரச்சினை வருகிறது?? கர்த்தரை நம்புகிறவர்களை கிருபை சூழ்ந்துக் கொள்ள வேண்டுமே????? அன்பானவர்களே இதுதான் கர்த்தரை நம்புகிற பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டிய ரகசியம், கர்த்தரை நம்புகிறவர்களுக்கு துன்பங்களே வராது என்று தாவீது கூறவில்லை மாறாக துன்பத்தின் நடுவே கர்த்தரின் கிருபை நம்மை சூழ்ந்துக் கொள்ளும்.
தாவீது துன்பங்களையே சந்திக்காதவனா? இல்லை அனேக துன்பங்களை சந்தித்தவன், ஆனால் அந்த துன்பங்களின் நடுவே கர்த்தருடைய கிருபை அவனை சூழ்ந்துக் கொண்டது. அவனை ஒருவனும் தொட முடியவில்லை துன்பத்தின் நடுவே தலைவனாய் உயர்ந்தான். எப்படி???? கிருபை அவனை சூழ்ந்துக்கொண்டது. உங்களையும் என்னையும் கூட அவர் கிருபை சூழ்ந்துள்ளது. பொல்லாதவருக்கு வரும் வேதனைகளும் அனேகம், நமக்கு வரும் சோதனைகளும் அனேகம். ஆனால் அவர்களுக்கு கடவுளின் கிருபை இல்லை. நமக்கோ தேவ கிருபை துணை நிற்கிறது. எனவே நான் 100 முறை விழுந்தாலும் மீண்டு வருவேன் , பொல்லாதவரோ காற்று அடித்துக் கொண்டு போகும் பதரை போல் இருப்பார்கள் சங்.1:4.
எனவே பொல்லாதவரோடு என்னை நான் ஒப்பிட்டு பார்ப்பதை கடந்த வியாழக்கிழமை முதல் நிறுத்திவிட்டேன். காரணம் நாம் விசெஷித்தவர்கள். பணம், பதவி, அற்ப உலகப்பொருள், இச்சை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொல்லாதவர்களே, தைரியமாய் வாழும்போது, கர்த்தருடைய கிருபையின் உத்தரவாதம் கிடைத்த நாம் எப்படி வாழ வேண்டும்????
              உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
              உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது,... ஆமென்..
கிறிஸ்துவின் பணியில்
 
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.

ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews