இயேசுவின் இனிய சகோதர சகோதரிகளே, சமீப காலமாக சில பிரசங்கியார்கள் செய்யும் பிரசங்கங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை அவைகள் கர்த்தருடைய வார்த்தையா? என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது. சாத்தான் கிறிஸ்துவின் சீடர்களாகிய நம்மை திசை திருப்பும் சதியாகவே அந்த பிரசங்கங்கள் எனக்கு தோன்றுகின்றது. நான் கேட்ட அந்த பிரசங்கங்களில் இரண்டு.
இடம்:சென்னை பிரசங்கியார்: தொலக்காட்சிகளில் வருகிறவர்.
பிரசங்கத்தின் சுருக்கம்;
கடவுள் ஏழையல்ல, அவர் பணக்காரர், பரலோகத்தில் பொன் வீதி போட்டு நம்மை தங்கத்தின் மீது நடக்க அழைக்கிறார். அவரிடத்தில் பொன்னை கேளுங்கள். அவர் ஆபிரகாமை சீமானாய் வாழவைத்தவர், உங்களையும் சீமானாக்குவார், இயேசு ஏழை அல்ல, அவர் அங்கி விசேஷமானது, ஏழை லாசரு கதையை வாசிக்காதீர்கள், அது வேதாகமத்தில் வீணானது.
இது சரியா?
கடவுள் ஏழை அல்ல சரிதான், அவர் பணக்காரர் சரிதான், பொன் வீதி பரலோகத்தில் உள்ளது சரிதான், அவரிடத்தில் பொன்னை கேளுங்கள் என்பது சரியா? இல்லை.. மாறாக பொன்னையும் வெள்ளியையும் அவர் படைக்கும்போதே நமக்கு கொடுத்துவிட்டாரே??????? கொஞ்சம் உழைத்தால் நாம் விரும்பும் தங்கத்தை நாம் வாங்கிவிடலாமே, நாம் தங்கத்துக்கு அலைய வேண்டுமா? சரி அடுத்தது, ஆபிரகாமை சீமானாய் வாழவைத்தார் சரிதான், ஆனால் ஆபிரகாம் என்றைக்காவது எனக்கு பொன்னும் பொருளும் கொடு என்று கடவுளிடத்தில் கேட்டானா? ஆதாரமிருந்தால் காட்டுங்கள். முதலாவது கடவுளுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்றுதானே கூறியிருக்கிறார் (மத்.6;33) அடுத்த வசனத்தில் நாளைய தினத்திற்காக கவலை படாதீர்கள், நாளைய தினம் தனக்காக கவலைப்படும் என்று கூறியிருக்கிறாரே, அப்படியானால் செல்வம் கடவுளை கேட்டு பெற வேண்டியதல்ல, தானாக நம்மை தேடி வரக்கூடியது, உண்மை உழைப்பு உயர்வு என்று சாதாரண மக்கள் சொல்லுகிறார்களே.. அப்படியிருக்க அதை கர்த்தரிடம் கேட்டு நம் நேரத்தை நாம் வீணடிக்கலாமா?????? அடுத்தது ஏழை லாசருவின் வரலாறு, இது தேவையா என்று கேட்டவுடனே நான் அந்த இடம் எனக்கு தேவையில்லை என்று கிளம்பிவிட்டேன். கர்த்தருடைய வார்த்தையை தேவையில்லை என்று சொல்லுகிற கயவர்கள் நமக்கு தேவையா? ஏழையாய் இருப்பது பாவம் என்று சொல்லுகிற வாதம் எவ்வளவு முட்டாள்தனமானதோ அதே அளவுக்கு முட்டாள்தனமானது கடவுளிடத்தில் பணத்தை கேட்பது. உழைப்பதற்கு நல்ல உடல், ஆரோக்கியம், சிந்திக்க தெளிவான நுண்ணறிவு, என நம்மை பிரமாதமாக படைத்திருக்கிறார் எனவே நாம் முயன்றால், நம் முயற்சியை அவர் ஆசீர்வதிப்பார்.
2. இடம்; ஆம்பூர், பிரசங்கியார்: வெளி நாட்டில் ஊழியம் செய்கிற இந்தியர்.
பிரசங்கம்:
உங்களில் எத்தனை பேர் 200 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறீர்கள், எனக்கு இருக்கிறது. கடவுள் என்னை ஆசீர்வதித்திருக்கிறார், நீங்களும் கேளுங்கள், அவர் தருவார். ஆம்பூரில் உங்களுக்கென சொந்தமாக கம்பெனிகளை கேளுங்கள் கடவுள் தருவார், நான் காரில் வந்திருக்கிறேன், நீங்கள் கார் வைத்திருக்கிறீர்களா ( இல்லை என்பதே அனேகர் பதில்) ஏன் நீங்கள் இன்னும் கேட்கவில்லை???? கேளுங்கள் அவர் தருவார். நான் ஜெபித்து அனேகர் எம்.பி ஆகியிருக்கிறார்கள், நீங்களும் அரசியலுக்கு வாருங்கள், உங்களையும் கடவுள் தலைவர்களாக்குவார்.
நான் இந்த பிரசங்கத்தில் தெரிந்துக் கொண்டது அவருக்கு 200 ஏக்கர் நிலம் இருக்கிறது, அவருக்கு விலையுயர்ந்த கார் இருக்கிறது, அவருக்கு எம்.பி க்களை கூட தெரியும், இதெல்லாம் தவறா என நீங்கள் என்னை கேட்கலாம்.. கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் திறக்கப்படும் (மத்.7:7) என்று ஆண்டவரே கூறியிருக்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான் கேட்டால் தருவார், ஆனால், பரலோக ராஜ்ஜியம் இவைகளை காட்டிலும் மேலானதல்லவா? அதை ஏன் அவர்கள் போதிக்கவில்லை?????? இயேசு ஆண்டவர் தன்னைத்தானே வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானதின் நோக்கம் என்ன? நமக்காய் சிலுவை தூக்கி சுமந்த தியாகத்தின் நோக்கம் என்ன???? அற்ப பாவிகளாம் நமக்காக தன் ஜீவனை சிலுவையில் கொடுத்த கற்பனைக்கெட்டாத அந்த தெய்வீக கிருபைக்கான காரணமென்ன? நமக்கு பணத்தை கொடுக்கவா? பரலோகத்தை கொடுக்கவா? ஒருவரிலொருவர் அன்பாய் இருங்கள், உன்னிடத்தில் இரு அங்கி இருந்தால் அதை இல்லாத ஒருவனுக்கு கொடு, பரலோக ராஜ்ஜியம் விலையேரப்பெற்ற முத்துக்கு ஒப்பானது, எல்லாவற்றையும் விட்டேனும் அதை சொந்தமாக்கிகொள்ள வேண்டும் என்று ஆண்டவர் கூறினாரே அதன் பொருளென்ன? ஏன் அதை சொல்ல மறுக்கிறார்கள் என்பதே என் ஆதங்கம். நீங்களும் நானும் கேட்டா இந்த மண்ணில் பிறந்தோம்? கேட்டா இந்த ஜீவனை பெற்றோம்? அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார்களே, அவரிடம் கேட்டா மானுட பிறப்பெடுத்தோம்? விலங்குகளாய் பிறக்காமல் குறைவுகளின்றி பிறந்தோமே நாம் கேட்டா நடந்தது? அவர் நாம் கேட்டா இம்மண்ணில் நமக்கு தேவையான பொன் வெள்ளி, போன்ற விலையேரப்பெற்ற செல்வங்களையும், உயிர் வாழ ஆதாரமான இயற்கை, செடி கொடிகள், மழை, ஆறு ஏரி, காற்று போன்றவற்றை கொடுத்தார்? நாம் கேட்டால்தான் கொடுக்கிற கொடூர கடவுளல்ல அவர், எனவே உலகபொருள் இங்கேயே கிடைக்கிறது. அவைகளை நாடி வாழ கடவுள் நம்மை பிரித்தெடுக்கவில்லை, பரலோகத்தின் முன் மாதிரிகளாய் வாழ, மற்றவர்களுக்கு பாவ மண்ணிப்பை கூறி அறிவிக்க நம்மை அழைத்திருக்கிறார், எனவே பிசாசின் தந்திரத்தை புரிந்துணர்வோம், நம்மை காத்துக் கொள்வோம், பணம் கேட்காதீர்கள் என்று நான் கூறவில்லை, செல்வத்தை தேடாதீர்கள், என்று நான் கூறவில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக பரலோக ராஜ்ஜியத்தை தேடுவதே உத்தமம் என்று கூறுகிறேன்.
இது போன்ற பிரசங்கங்கள் தொடருமானால், கிறிஸ்தவர்கள் பணத்தையும் பொருளையும் நாடுகிற சராசரி மனிதர்களாய் மாறிபோவோம், என்னிடத்தில் வெள்ளியுமில்லை, பொன்னுமில்லை, விலையேரப்பெற்ற இயேசுவின் நாமத்தில் எழுந்து நட என்று சொன்னானே பேதுரு, அது சாட்சியா? நான் செல்வந்தனாய் வாழ்வது சாட்சியா? நான் செல்வத்திற்கு எதிரானவனல்ல அது கடவுள் கொடுப்பதே, ஆனால் அதை காட்டிலும் பரலோகமே எனக்கு மேலானது, காரண்ம், ஆபிரகாம் கேட்டு செல்வத்தை பெறவில்லை, தாவீது கேட்டு அரசனாகவில்லை, எரேமியா ஏழையாகவே செத்தார், எனவே நான் கேட்காமலே அவர் தருவார், எரேமியாவுக்கு செய்ததை போல தராமலே விட்டாலும் பரவாயில்லை, நாம் அவருடைய ராஜ்ஜியத்திற்கு ஆயத்தமாவதும், அவருடைய ராஜ்ஜியத்தை அறிவிப்பதுமே நமக்கு மேலான பணி.. திருச்சபை கிறிஸ்துவின் ரத்தத்திலும், பரிசுத்தவாங்களின் ரத்தத்திலும், ஆதி திருச்சபை விசுவாசிகளின் ரத்தத்திலும் கட்டப்பட்டது, அவர்கள் செல்வத்திலல்ல, நாம் செல்வத்துக்கு சாட்சிகளல்ல, இயேசு ஆண்டவரின் ரத்தத்துக்கு சாட்சிகள் ஆமென்.
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment