WORD OF GOD

WORD OF GOD

Monday, July 31, 2017

நமக்கு விரோதமாய் இருப்பவன் யார்?????


        யோவான் 5ம் அதிகாரம் 1 முதல் 9 வரையுள்ள வசனங்களில், இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு சென்றார். அங்கே ஒரு குளம் இருந்தது, அந்த குளத்திற்கு பெதஸ்தா குளம் என்று பெயர். இந்த குளத்திற்கென்று ஒரு சிறப்பு இருந்தது. அந்த சிறப்பு யாதெனில், திடீரென்று ஒரு தேவதூதன் தோன்றி அந்த குளத்தை கலக்குவார். அப்போது உடல் சுகவீனம் உள்ளவர்கள் அந்த குளத்தில் இறங்கினால் அவர்கள் முற்றிலும் குணமாவார்கள். எனவே அந்த குளத்தை சுற்றி ஆயிரக்கணக்கான நோயாளிகள் கூடியமர்ந்து தேவதூதன் குளத்தை கலக்கும் வேளைக்காக காத்திருப்பார்கள். அந்த குளத்தின் அருகில் ஒருவர் 38 வருடமாய் படுத்த படுக்கையாய் கிடக்கிறார், அந்த குளத்தணடைக்கு இயேசு வருகிறார். இயேசு நேராக அந்த 38 வருட படுத்த படுக்கையாய் இருப்பவரை தேடி போகிறார். குளத்தின் கரையில் இருக்கிற அனைவருமே நோயாளிகள் அப்படியிருக்க இயேசு ஏன் இவரை மட்டும் தேடி வருகிறார்??? இதற்கான விடை இயேசு துவங்கும் உரையாடலில் உள்ளது..

இயேசு அவரிடம் நீ குணமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.. அதற்கு அவர் கூறிய மறுமொழி, ஆண்டவரே தண்ணீர் கலக்கப்படும்போது என்னை குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை.. நான் போகிறதற்கு முன்னமே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கி விடுகிறான் என்றான்.. இங்கே நாம் கவனிக்க வேண்டியது இயேசு கேட்ட கேள்வி என்ன???? உனக்கு குணாமாக விருப்பம் இருக்கிறதா என்பதே.. இதற்கு ஆம் இல்லை என்று பதிலளித்தால் போதுமானது ஆனால் அவன் கூறிய பதில் எனக்கு யாரும் உதவவில்லை என்பதே… அப்படியானால் ஒரு மனிதனுக்கு தான் குணமாகவில்லை என்கிற வலியைவிட தன்னை யாரும் கண்டுக் கொள்ளவில்லை என்ற வலியே அதிகமாக இருக்கிறது..

உண்மை தானே, 38 வருடத்தில் ஏதாவது ஒரு நாள், அங்கே நாள்தோறும் வந்து போகிற ஆயிரக் கணக்கான மக்களில் யாராவது ஒருவர் அவரிடம் போய் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டிருந்தால் அவர் எப்போதோ குணமாகியிருப்பாரே. எனக்காக யாருமே இல்லை என்ற வலி, வேதனையின் உச்சம்.

நாமும் கூட பல நேரங்களில் கலங்கி நிற்பது நம்மை உண்மையாய் நேசிக்கிற ஒருவர் இல்லையே என்றுதானே. ஆனால் நாம் கவலைப்பட தேவையில்லை. யாரெல்லாம் இவ்வாறு சமூகத்தில் புறக்கணிக்கப்படுகிறார்களோ அவர்களையெல்லாம் அரவனைத்து வாழ்விப்பதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தவர் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னவர். நம்மோடு இருக்கிறார். யுக முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடு இருக்கிறார்.

உலகை நம்பியா? சுற்றத்தை நம்பியா? உறவுகளை நம்பியா? சக மனிதர்களை நம்பியா? நம்மை ஆள்பவர்களை நம்பியா? இல்லை, இந்த அண்ட சராசரத்தை படைத்து பாதுகாத்து பராமரித்து வருகிற சர்வவல்லவரை நம்பி வாழ்கிறோம்.. கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால்  நமக்கு இரோதமாய் இருப்பவன் யார்?????


துணிவுடன் துவங்குவோம் இந்த காலை பொழுதை, 38 வருடம் படுத்த படுக்கையாய் இருந்தவனை துள்ளி குதித்து ஓட செய்தவர் நம்மை விட்டுவிடுவாரா என்ன????

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews