WORD OF GOD

WORD OF GOD

Friday, November 25, 2011

Text: பிலிப்பியர்.4:13

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு


அன்பானவர்களே வேலூர் மாவட்டத்தில் வடகரை என்ற ஒரு கிராமம் உள்ளது அது மிகவும் பின் தங்கிய கிராமம் பேருந்து வசதி கூட இல்லாத கிராமமாக இன்றளவும் உள்ளது, நான் அங்கே பயிற்சி போதகராக இருந்த காலத்தில் ஊழியம் செய்து வந்தேன். நான் அங்கே ஊழியத்தை துவங்கிய காலத்தில் ஆலயத்திற்கென்று முறையான கட்டிடம் இல்லை, ஓலை கூரை வேய்ந்த கட்டிடத்தில்தான் ஆராதனை நடத்தி வந்தோம்.

ஒரு நாள் ஒரு தாயார், தனது மகனை ஆலயத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தார், அவன் 15 வயது நிரம்பிய இளம் வாலிபன், ஆனால் பார்க்க மிகவும் பெலவீனமாக இருந்தான், அவன் பெயர் அருண். அவன் தாயார் அவனை எங்களுக்கு அறிமுகம் செய்தார், அவன் பெயர் அருண் என்றும், அவன் வயிற்று வலியால், தினந்தோறும் போராடுவதாகவும், சென்னை சென்று மருத்துவம் செய்துக் கூட பலன் இல்லை என்றும் மிகவும் வேதனையாக கூறினார்.

மேலும் அவனை இயேசு சாமிக்கு ஒப்புக் கொடுக்க போவதாகவும், அவர் அவனை ஏற்றுக் கொண்டாலும் சரி, எடுத்துக் கொண்டாலும் சரி என்றும் வேதனையோடு கூறிவிட்டு, சென்று விட்டார், அவன் ஆலயத்தில் போடப்பட்டிருந்த தரை விரிப்பானில் அப்படியே சுருண்டு படுத்துக் கொண்டான்.

நானும் அனைத்து விசுவாசிகளும் ஆராதனை முடிந்து அவனுக்காக ஜெபித்தோம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஜெபித்தனர். பலன் நடக்க முடியாமல் வந்தவன், எழுந்து நடந்து வீட்டிற்கு போனான். அடுத்தடுத்த வாரங்களில், நல்ல முன்னேற்றத்தை காண முடிந்தது. இப்போதும் அருண் சுகமாய் இருக்கிறான், ஆனால் வெறும் அருணாக அல்ல, அருண் சாமுவேலாக. ஆம் இப்போது அவன் ஞானஸ்னானம் பெற்று உறுதியான விசுவாசியாக அவன் குடும்பத்திற்கும், அவன் சமூகத்திற்கும் சாட்சியாக வாழ்ந்து வருகிறான்.

அன்புக்குரியவர்களே, நாம் பெலவீனர்கள், நோயினாலும், போராட்டங்களாலும் சூழப்பட்டவர்கள், நம்மால் இவ்வுலகில் நிலை நிற்பதும் போராடுவதும் இயலாத ஒன்று, ஆனால் நம்மோடு இருக்கிறவர் வல்லமையானவர். எவ்வளவு கொடிய வியாதியையும், எவ்வளவு பெரிய போராட்டத்தையும் மேற்கொள்ளும் ஆற்றலை நமக்கு அருளுகிறவர். மரணத்தையே ஜெயித்தவரல்லவா?

எனவேதான் பவுல் கூறுகிறார், என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு. நமக்கு பெலனில்லை, எதையும் செய்கிற ஆற்றல் இல்லை, ஆனால் அவரால், பெலன் தருகிறவரால் எல்லாவற்றையும் செய்வோம்.

இந்த காலையில் இந்த விசுவாசத்தோடு நம் நாளை துவங்குவோம், கிறிஸ்துவின் பெலத்தால் துன்பங்களை மேற்கொள்வோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Saturday, November 19, 2011

சிறுவர் கொண்டாட்டம்



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய வாழ்த்துக்கள், கடந்த இரு தினங்களாத இணைப்பு செயல்படாததால் என்னால் பதிவிட இயலவில்லை. கடந்த சனிக் கிழமை, கர்த்தருடைய பெரிதான கிருபையால், அழிஞ்சி குப்பம் திருச்சபையில், சிறுவர் கொண்டாட்டம் நிறைவாய் நடந்தது. அருள்திரு.மில்டன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் நிறைவாய் செய்திருந்தார்.



60க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்துக் கொண்டு ஆவிக்குரிய அனுபவத்தை பெற்றுக் கொண்டனர். பரிசுகளும், மதிய உணவும் பிள்ளைகளுக்கு வழங்கினோம். இந்நிகழ்ச்சிக்கான மொத்த செலவையும் என்னுடைய சகோதரி திருமதி.ஜூலியலட் ஒல்வியா செல்வம் அவர்களும், சென்னையில் வசித்து வருகிற சகோதரர்.பாபு பிரபுதாஸ் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


இந்நிகழ்ச்சிக் குறித்து தலைமை ஆசிரியர்.திரு.ரமேஷ் அவர்கள் பேசும்போது, வாலிபர்கள் இவ்வளவு ஆர்வமாய் இவ்வூழியங்களை செய்வதைக் கண்டு கண் கலங்கினேன் என்று நெகிழ்வாய் பாராட்டினார். இந்த பாராட்டு எங்களை மேலும் ஆண்டவருக்காய் எவ்வளவேனும் உழைக்க தூண்டுகிறது.


காரணம் அற்ப பதர்களான எங்களை கொண்டு கடவுள் எவ்வளவு வல்லமையாய் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பது எங்களுக்கு பிரமிப்பாய் இருக்கிறது. அவர் அற்புதர், சர்வ வல்லவர் அவரது நாம மகிமைக்காய் உழைப்பதே என் மேலான பணி. தொடர்ந்து இந்த மகிமையான ஊழியங்களுக்காய் ஜெபியுங்கள்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Thursday, November 17, 2011

மேன்மை தேடிவரும்!!!!!!!!

Text. Psalm.71:21

என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.


என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு நிறுவனத்திலே பணியாற்றுகிறார், அவர் தன பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளவர், தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை மிக நேர்த்தியாக முடிப்பதில் வல்லவர். அவரது திறைமைக்கு ஏற்ப சவாலான ஒரு பணி அவருக்கு கொடுக்கப்பட்டது, அப்பணியை அவர் மிக கவனமாக மிக திறமையாக குறுகிய காலத்தில் செய்து முடித்தார், அதன் பலன் என்ன தெரியுமா? பொறாமை, அவரோடு பணியாற்றுகிற அனைவருக்கும் அவர் மீது பொறாமை வந்தது, தொடர்ந்து அவருக்கு கிடைக்கவிருந்த பணி உயர்வை தடுக்க அனைத்து வழிகளையும் கையாண்டனர்.

இதுதான் இன்றைய உலகின் நிலை நாம் என்னதான் கஷ்டப்பட்டு இந்த உலகில் நம் திறமையை நிரூபித்தாலும், அதன் பலனான மேன்மையை இந்த உலகம் தருவதில்லை, மாறாக நம் மேன்மையை கெடுக்கப் பார்க்கிறது. இது அனைத்து துறைகளிலும் இருக்கிறது. எப்படிதான் நாம் இந்த பொறாமை நிறைந்த நீதியற்ற சமூகத்தில் மேன்மை பெறுவது??????

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகிற்கு வந்தார்? பாவிகளாகிய நம்மை இரட்சிக்க..

பாவிகளாகிய நாம் இரட்சிப்புக்கு பாத்திரவான்களல்ல, ஆனால் அவரோ, இரட்சிப்புக்கு எந்த தகுதியும் இல்லாத நம்மை இரட்சிப்பின் மேன்மைக்கு தகுதிப்படுத்த இவ்வுலகிற்கு வந்தார். தகுதியே இல்லாத நம்மை தகுதிப்படுத்த அவர் எடுத்த முடிவுதான் கொடூர சிலுவை மரணம், அடுத்தவனை மேன்மைப்படுத்த தன்னை சீரழித்துக் கொண்டார். எவ்வளவு அன்பு... இந்த அன்பின் ஆண்டவர் நமக்கு துணையிருந்தால் அனைத்து மேனமைகளும் நம்மிடம் சராணாகதி அடையுமே!!!!!

எனவேதான் சங்கீதக்காரன் இங்கே என் மேன்மையை பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர் என்று தன் கடவுளில் விசுவாசம் வைக்கிறான்.

காரணம் இந்த சங்கீதத்தின் 10, மற்றும் 11ம்   வசனங்களில் தன்னை சுற்றியிருப்பவர்கள் தனக்கு விரோதமாய் ஆலோசனை செய்வதையும், தன் மேன்மையை கெடுக்க பார்ப்பதையும் தெளிவாய் விளக்குகிறார்.

ஆனாலும் நீர் என்னை மேன்மை படுத்துவீர் என்று ஆண்டவரில் நம்பிக்கை கொள்கிறார். அன்பானவர்களே, நம் மேன்மையை கெடுக்க நினைக்கிற இவ்வுலகில் நாமும் இந்த வழியில்தான் மேன்மை பெற முடியும். அரிய பொக்கிஷமான இரட்சிப்பை பெறுவதற்கே நம்மை தகுதிப்படுத்தினவர், இந்த உலகின் மேன்மைகளை நமக்கு அருளாதிருப்பதெப்படி..

சந்தோஷமாய் இந்நாளின் பணிகளை தொடருங்கள், விசுவாசமாய் பணியாற்றுங்கள், நம்மை சேர வேண்டிய மேன்மை தேடிவரும். ஆம் என் நண்பர் இப்போது அந்நிறுவனத்தின் மேலாளர்.

கர்த்தர்தாமே இத்திரு வசனங்களை கொண்டு நம்மை மேன்மைப்படுத்தி காப்பாராக ஆமேன்.


 
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, November 16, 2011

தியானம் இனிதாயிருக்கும்

Text: Psalm.104:34

நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்

காலை தோறும் கண் விழிப்பது கர்த்தரின் கிருபை, இரவின் அந்தகாரம் நம்மை சேதப்படுத்தாமல், தன சுத்த தயவால் ஆண்டவர் நம்மை காத்து, காலை தோறும் நமக்கு புது உயிர் கொடுக்கிறார்.

அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள். நீதிமொழிகள்.8:17 . என்று கடவுள் சாலமோன் ஞானி மூலம்  நமக்கு அறிவிக்கிறார்.  ஒவ்வொரு காலையும் நமக்கு கடவுளின் மகிமையை அறிவிக்கிறது.

எனவே காலை தோறும் அவரை தேடுவது நமக்கு குறைவற்ற நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். எப்படி இறைவனை நாம் தேடுவது அதைதான் தாவீது இன்றைய நம்முடைய தியான பகுதியில் அறிவிக்கிறார்.


நான் அவரை தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும் என்கிறார். ஆம் அன்பானவர்களே, ஒவ்வொரு காலையும் நமக்கு இனிதாயிருக்கும் அவருடைய வார்த்தைகளை தியானிக்கும்போது. காலையில் எழுந்து இனிய ஒரு பாடலின் சில வரிகளை பாடி, ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்து. ஒரே ஒரு வசனம் வாசித்து, அதை தியானித்து, அல்லது நமது தளத்தின் ஒரு தியானத்தை தியானித்து துவங்கும் காலை  எவ்வளவு இனிமையானது?

நான் கர்த்தருக்குள் மகிழுவேன்  என்கிறார், அன்பானவர்களே, இப்படி துவங்குகிற ஒவ்வொரு காலையும், நம்மை கர்த்தருக்குள் மகிழச்  செய்யும். இனி  ஒவ்வொரு காலையும் தவறாமல் தியானத்தோடு துவங்கி   அவருக்குள்  மகிழ்வோம். ஆமென்.  

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Tuesday, November 15, 2011

HAPPY CHILDREN'S DAY



அன்பான கடவுளுடைய பிள்ளைகளே, நேற்று நமது தேசத்தில் சிறுவர் தினம். இன்றைய சிறுவர்கள்தான் நாளைய தலைவர்கள். எனவே சிறுவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். எதிர்காலம் மிகவும் முக்கியமானதல்லவா, எதிர்காலமே இன்றைய சிறு பிள்ளைகள்தான். அவர்களை இந்த போட்டியுள்ள உலகில் அனைத்து துறைகளிலும் தேர்ந்தவர்களாய் நாம் உருவாக்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்போமே, எனவே சிறுவர்களை சிறு வயதிலேயே நாம் தயார்ப்படுத்த வேண்டும்.

நாம் கண்டுக் கொண்ட உயர்வை போன்று, பல மடங்கு  உயர்வை நம் பிள்ளைகள் பெற வேண்டும். ஆனால் பொதுவாக இந்தியாவில், அதிலும் குறிப்பாய் திராவிடர்களான தென்னிந்திய பிள்ளைகளிடத்தில் அதிகமாக தென்படுகிற ஒரு குணம் தாழ்வு மனப்பான்மை. தமிழர்களிடம் இது பன்மடங்கு அதிகம். "போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து", "இருப்பதைவிட்டு பறப்பதை பிடிக்காதே", என்றெல்லாம் சொல்லப்படும் பழ மொழிகள் தாழ்வு மனப்பான்மையின் ஆணிவேராகவே நான் கருதுகிறேன்.

மாதம் பத்தாயிரம் சம்பளம் வாங்கி, நிறைவாய் ஒரு வீடு கட்டி, சிக்கனமாய் வாழ்க்கை நடத்துவது போதுமானதா? அப்படியானால் உயர்ந்தவன் உயர்ந்தவனாகவே இருக்க வேண்டும், தாழ்ந்தவன் தாழ்ந்தவனாகவே இருக்க வேண்டுமா? ஆளுகை, உலக வர்த்தகம்,
போன்றவையெல்லாம் யாரோ செய்துக் கொண்டிருக்க நாம் இதுவே போதும் என்று உட்கார்ந்திருக்க வேண்டுமா?

கர்த்தர் பட்சபாதம் உள்ளவரல்லவே.(அப்போஸ்தலர்.10:34).
உன்னை கன்மலையின் மேல் உயர்த்துவேன்  என்று சொன்னவரல்லவா.(சங்கீதம்.27:5)????
நீ கையிட்டு செய்கிற காரியத்தை வாய்க்க செய்வேன்.(உபாகமம்.28:8) என்கிறாரே.
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19.
என்று பவுல் தெளிவாய் ஆண்டவர் ஐசுவரியம் தருவார்  என்கிறாரே.


எனவே பிள்ளைகளை வளர்க்கும்போதே, இந்த இறை வார்த்தைகளில் விசுவாசம் கொண்டவர்களாய் வளர்க்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. அவரை நம்புகிற யாவரையும் தேவன் மேலாய் உயர்த்துவார் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். உலகின் அனைத்து உயர்வுகளையும் எட்டிப்பிடிக்கும் ஆற்றல் அவர்களுக்குள் இருப்பதை அவர்களுக்கு காண்பிக்க வேண்டும். தாவீதின் வாழ்வையும், மோசேயின் வாழ்வையும், யோசேப்பின் வாழ்வையும் கற்றுக் கொடுங்கள்.

நமது சிறுவர் கொண்டாட்டம் ஊழியத்தின் நோக்கமும் இதுதான், விசுவாச பொறியை அவர்கள் உள்ளத்தில் விதைத்தால் போதும். என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு (பிலிப்பியர்.4:13)  என்ற வசனம்  அவர்கள் வாழ்வில் எளிதில் சாத்தியமாகும்.

சிறு பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கிற ஆண்டவர்  நம் வீட்டு சிறுவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து இந்த மேலான வாழ்வருளி காப்பாராக ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Friday, November 11, 2011

சோதனை இப்படியும் வந்தது..

அன்பான உடன் விசுவாசிகளே, கடந்த 7 ம் தேதி, என்னுடைய இளைய சகோதரியின் கணவர் திரு செல்வம் மாமா அவர்கள், அவருடைய சொந்த ஊரான வேலூர் மாவட்டம் ஆம்பூருக்கு அருகேயுள்ள பாலூர் கிராமத்தில் இரண்டு ஆவிக்குரிய கூட்டங்களை ஒழுங்கு செய்தார். காலை 10 முதல் மாலை 4 மணிவரை உபவாசக் கூட்டமும், மாலை 6:30௦ மணியிலிருந்து 9 மணிவரை மாபெரும் ஆவிக்குரிய நற்செய்தி கூட்டமும் நடத்தினார். இந்த இரண்டு நிகழ்சிகளும் அவருடைய சொந்த ஊரில் மிகப்பெரிய எழுப்புதலை கொண்டு வந்ததை என் கண்ணாரக் கண்டேன்.

அன்று மிகவும் பிரமிப்போடு அவரை கண்டு அவரை வாழ்த்தினேன், தொடர்ந்து இது போன்ற ஆவிக்குரிய கூட்டங்களை பெருமளவில் நடத்த அவரை ஊக்கப்படுத்தினேன்.

அடுத்த நாள், எங்கள் வீட்டிற்கு அவர் வந்து காலை முதல் மாலை வரை எங்களோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். மாலை ஒரு 6 மணியளவில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர மிகவும் பதட்டத்தோடு காணப்பட்டார். ஏன் என கேட்க நெஞ்சம் பதறியது அவரது தாயார்  விபத்தில் சிக்கியதாகவும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வந்தது. பதறியடித்து நானும் அவரும் ஓடி தாயாரை ஆம்புலன்சில் ஏற்றி அவர் அவர்களோடு மருத்துவமனைக்கு சென்றார். வேலூர் C.M.C கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் தன் மகன் செல்வம்  அவர்களின் மடியிலேயே  பிரிந்தது.

குடும்பம் முழுக்க சோகமாகிப்போனோம். ஏன் இப்படி? நேற்று ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம், ஆவிக்குரிய உபவாசக் கூட்டம் என ஆண்டவருக்காய் தன் உழைப்பையும் செல்வத்தையும் தந்தவருக்கு ஏன் இந்த  நிலை?

நேற்றைய சந்தோஷம் இன்று வேதனையாகிப் போனதே ஏன்? ஆண்டவர் ஏன் இதை அனுமதிக்கிறார்? ஒரே ஒரு வசனம் எனக்கு ஆறுதல் அளிக்கிறது,  கலப்பையில் கை  வைத்தவன் பின்னிட்டு பாராதே என்ற வசனம். ஏனெனில்?,

அன்பானவர்களே, கிறிஸ்தவ வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கை என்பது வெறும் வாழ்க்கை அல்ல, பிசாசு, பாவம், மரணம் இவைகளுக்கு எதிரான போராட்டம். நாம் ஆண்டவருக்காய் உழைப்பதை இம்மூன்றும் பிடுங்க பார்க்கும். பாவம் இச்சையின்   உச்சத்திற்கும், பிசாசு சோதனையின் உச்சத்திற்கும், மரணம் வேதனையின் உச்சத்திற்கும் நம்மை கொண்டு போய் அவருக்காய் வாழ்கிற  வாழ்க்கையை பறிக்க பார்க்கிறான்.
ஆனால் கலப்பையில் கை வைத்தவர்கள் பின்னிட்டு பார்க்க கூடாது. பாவம் மரணம் பிசாசையும் நாம் தொடர்ந்து ஆண்டவருக்காய் உழைத்து வெற்றிக் காண வேண்டும். இந்த உறுதி, விசுவாசம் நம்மை பரலோக வாசலண்டை சேர்க்கும். ஆமேன்
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Tuesday, November 8, 2011

நம்மை முற்றும் அறிந்தவர்!!!!!!!!

Text. நாகூம். 1:7

கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, நம்பிக்கை என்பதுதான் மனித வாழ்வின் மையமாக இருக்கிறது. ஆனால் நாம் யாரை நம்புகிறோம் என்பது மிகவும் முக்கியம். மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கவும் பெருக்கவும் சில தனியார் நிறுவனங்களின் வார்க்குறுதிகளை நம்பி அதில் முதலீடு செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அனேக நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டிவிட்டன.

நல்லாட்சி தருவார்கள் என்று மக்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களில் அநேகர், கொள்ளையர்களாகி மக்களின் வரிப்பணத்தை சூறையாடுகின்றனர்.

இறையருள் நிறைந்தவர்கள் என்று தங்கள் வாழ்வின் பிரச்சினைகள் தீர மக்கள் ஆன்மீக தலைவர்களை தேடி போகின்றனர். அவர்களிலும் அநேகர் பணத்தை சுருட்டுவதிலும், அவர்களை சீரழிப்பதிலுமே குறியாக உள்ளனர். இது எல்லா மதத்திலும் இருக்கிறது.

இதையெல்லாம் காணும்போது யாரை நம்புவது என்றே நமக்கு தெரியாமல் போகிறது, எப்போது யார் ஏமாற்றுவார்களோ என்ற ஒருவித அச்சத்தோடே இவ்வுலகில் நாம் வாழ வேண்டியிருக்கிறது. இந்த அச்சத்திலிருந்து நம்மை விடுவிக்கும் கர்த்தருடைய வார்த்தைதான் இன்றைக்கு நாம் தியானிக்கிற வசனம்.

நாகூம் தீர்க்கர் கடவுளை பற்றி தெளிவான 3 கருத்துக்களை நமக்கு தெறிவிக்கின்றார்.

1. கர்த்தர் நல்லவர்.

2. இக்கட்டு நாளில் அவர் அரணான கோட்டை.

3. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.

இதில் மூன்றாவதாக நாகூம் தீர்க்கர் சொல்லுகிற கருத்து, தம்மை நம்புகிற ஒவ்வொருவரையும் அவர் அறிந்திருக்கிறாராம். இது நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது. காரணம் அவரை நாம் முழுதாய் நம்புகிறோமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும். இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்களை விசுவாசிகள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்களே தவிர வாழ்வில் உண்மையான விசுவாசம் இல்லை. 

உதாரணமாக அநேக விஷயங்களை சொல்ல முடியும் ஆனால் ஒரு மேலோட்டமான உதாரண‌த்தை மட்டுமே இங்கே சொல்லுகிறேன். இன்றைக்கு அநேகமாக எல்லா திருச்சபைகளிலும் பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான அநேகர் நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். இதனால் பிரச்சினைகள் வலுக்கிறதே தவிர தீரவில்லை. ஒருவர் ஜெயித்தால் அடுத்தவர் மேல் முறையீடு செல்கிறார். அவர் ஜெயித்தால் இவர் மேல் முறையீடு செய்கிறார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தவறு செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் யாருமே தவறு செய்தவனை கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார் என்று நம்பவில்லையே ஏன்?..

நியாயம் என் பக்கம் இருக்கிறது என்று நம்புகிறவர்கள், கர்த்தர் என் தலை நிமிர செய்வார் என்று நம்பாமல் வழக்காடு மன்றங்களை ஏன் நாடுகின்றனர்? அப்படியானால் நாம் பெயரளவு விசுவாசிகள்தானே?????????? விசுவாசம் நம்மிடம் இல்லை என்றுதானே அர்த்தம். நீதிமன்றம் போகிறவர்கள் மட்டுமல்ல, எதிரியை பழி வாங்க நினைக்கிற யாருக்குமே விசுவாசம் இல்லை. பழி வாங்குவது என் காரியம் என்று தெளிவாக கூறியுள்ளாரே. இந்த அறை குறை விசுவாசம் நமக்கு இருப்பதால்தான் அநேகர் கடவுள் எனக்கு நியாயம் செய்யவில்லை என்று நீதி மன்ற வாசலிலும் வீதிகளிலும் கூவுகின்றனர். அவர் எப்படி செய்வார்? அவர்தான் அவரை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறாரே.

எனவேதான் நம் விசுவாசத்தில் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். நன்றாக யோசித்து பாருங்கள் ஒரு அற்புதமான உண்மை நமக்கு புரியும். இந்த போலித்தனமான விசுவாசம் கொண்ட யாருமே நிம்மதியாக இருப்பதில்லை. காரணம் விசுவாசிக்கிறவர்களை அவர் அறிந்திருக்கிறார். அவர் பாவிகளுக்கும் நல்லவர் ஆனால் போலித்தனமான விசுவாச போர்வையில் தங்கள் பாவத்தை மறைக்கிறவர்களுக்கல்ல. ஒவ்வொரு மனிதனின் இக்கட்டிலும் ஏன் பாவிகளின் இக்கட்டை நீக்கவும் ஓடி வருகிறவர், தன் சொந்த குமாரனையே சிலுவையில் அதற்காய் ஒப்புக் கொடுத்தவர். ஆனால் போலித்தனமான விசுவாசம் கொண்டு தன்னை பரிசுத்தவான்களாக‌ காண்பிக்கிறவர்களுக்கல்ல.

ஏசாயா.49:16 ல் இதோ உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்று, உன் ஆதி அந்தம் அனைத்தும் நான் அறிவேன் என்று கூறுகிறார்.

அன்பானவர்களே இந்த காலை வேளையில் ஒரு முறை நம் விசுவாசத்தை ஆராய்ந்து பார்ப்போம். நமக்கு முழுமையான விசுவாசம் உள்ளதா என்று.. உண்மையான விசுவாசிகளின் நம்பிக்கைக்கு இவ்வுலகினரை போல நம்பிக்கை துரோகம் செய்கிறவரல்ல நம் கடவுள். இக்கட்டில் அவரே அரணாயிருந்து ஜெயமாய் காத்திடுவார். ஆமேன்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Saturday, November 5, 2011

நம்மை கன்மலையின் மேல் உயர்த்துவார்!

TEXT:  சங்கீதம்.27:5

"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்"

அன்பானவர்களுக்கு இனிய ஸ்தோத்திரங்கள், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நன்மைகளை பெற்றுக் கொள்ள கடுமையாக உழைக்கிறோம், ஆனால் பல வேளைகளில் நம் உழைப்பில் தடைகளை சந்திக்கிறோம், ஏன் தடைகள் வருகிறது? தடைகள் வரக் காரணமென்ன?

1.பேதுரு.5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல், எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடி சுற்றி திரிகிறான்.

நம் வாழ்வில் தடைகளை பிசாசானவன் ஏற்படுத்துகிறான். பிசாசு என்றால் ஆவியோ, பேயோ அல்ல, எங்கோ இருக்கிற ஒரு சக்தி என்றும் நினைக்காதீர், நம்மை சுற்றி இருக்கிற மனிதரை கொண்டே அவன் செயலாற்றுகிறான். எனவேதான் பேதுரு எப்போதும் ஆண்டவரை விசுவாசிக்கிற‌ நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவன் நோக்கமே நம்மை விழுங்குவதுதான்.

தாவீதின் வாழ்வில் அவன் சத்துருவாக பெலிஸ்தியர்கள் இருந்தார்கள், ஆனால் பெலிஸ்தியர் மட்டும் அவன் எதிரியல்லவே, அவன் சொந்த இனத்தானாகிய சவுலும் அவனுக்கு எதிரியாய் இருந்தானே!!!.. எப்பக்கமும் சத்துருவினால் சூழப்பட்டவனாய், எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்துப் போகக்கூடிய ஆபத்தான வாழ்க்கை அவனுக்கு இருந்ததே அதை நாம் மறுக்க முடியுமா? இப்படியே பிசாசானவன் நம்மை நம் வளர்ச்சியை, கெடுக்க நம் வாழ்வை விழுங்கிவிட நம்மை சுற்றியுள்ளோரைக் கொண்டே நம்மை சுற்றி வருகிறான்.

அதற்காக நாம் பயந்துவிட வேண்டியதில்லை, பேதுரு சொல்வது போல விழிப்புள்ளவர்களாய் இருந்தால் போதும். எப்படி விழிப்புள்ளவர்களாய் இருப்பது? அதற்கும் தாவீதே தன் அனுபவத்தில் நமக்கு கற்றுத் தருகிறார்.
சங்கீதம்.27:4 ல் நான் ஒன்றை கர்த்தரிடம் கேட்டேன் அதையே நாடுவேன்.. என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் என்று கூறுகிறார். அதாவது அவர் கொடிய பிரச்சினைகளில் சிக்கி தவித்தாலும், கர்த்தரை நோக்கி பார்ப்பதும், அவர் சமூகத்தில் விசுவாசத்தோடு காத்திருப்பதுமே தனக்கு முக்கியம் என்கிறார். அது மட்டும்தான் என் தேடல் என்கிறார். அதன் பலன்தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி. தீங்கு நாள் வரும்போதெல்லாம் அவர் தமது கூடாரத்தில் மறைத்து பாதுகாத்தார்.

அன்பானவர்களே, இவ்வுலகம் நமக்கு தீமை செய்யும், நாம் பயப்பட வேண்டியதில்லை, விழிப்பாய் இருந்தால் போதும். அவரை பற்றுகிற உறுதியான விசுவாசத்தில் நிலைத்திருப்பதே, அவரை ஆவலாய் நாடித் தேடுவதே நாம் விழிப்பாயிருப்பதாகும். அவர் நம்மை அவருடைய கூடாரத்தில் மறைத்து பாதுகாப்பார். எந்த துன்பமும் நம்மை தீண்டாதபடி நம்மை ஒளித்து பாதுகாப்பார். அதுமட்டுமல்ல அன்பானவர்களே........

நம்மை கன்மலையின் மேல் உயர்த்துவார். நம்மை துன்பத்தில் எப்படி ஒளித்து வைக்கிறாரோ அதே போல சரியான தருணத்தில் நம்மை எல்லா கண்களுக்கும் முன்பாக உயர்த்திக் காட்டுவார். நம் சத்துருக்களுக்கு முன் நம்மை உயர்த்திக் காட்டுவார். தாவீதை வெறுமனே ஒளித்து வைத்தவரல்ல, அவன் சத்துருக்களுக்கு முன்பாகவே அவனை கன்மலையின் மேல் அரசனாக உயர்த்தி வைத்தவர். சந்தோஷமாய் இம்மாதம் முழுதும் விழிப்போடிருப்போம். கிறிஸ்துவில் உயிரையே கொடுத்து மீட்டவர், நம்மை துன்பத்தில் மறைத்து. சரியான தருணத்தில் உயர்த்திக் காட்டுவார். ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Friday, November 4, 2011

சீர்த்திருத்தல் ஓர் இரட்சிப்பின் புதிய வரலாறு



அன்பானவர்களே உங்கள் யாவருக்கும் இனிய ஸ்தோத்திரங்கள், கடந்த 31 ம் தேதி லுத்தரன் திருக்கபைகளிலே சீர்திருத்தல் ஆராதனை கொண்டாடப்பட்டது, ஆனால் இன்று சீர்திருத்தல் பற்றிய ஒரு தெளிவான பார்வை குறைந்து வருகிறது. அனேக திருச்சபைகளில் விசுவாசிகள் ஆர்வமாக பங்கெடுக்கவில்லை என்கிற செய்திதான் பரவலாக இருக்கிறது.

எங்கள் திருச்சபையில் சீர்திருத்தல் ஆராதனையில் பிரசங்கித்த கர்த்தருடைய வார்த்தையை இங்கே பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

மார்டின் லூத்தர் 1483ம் வருடம் நவம்பர் 10ம் தேதி ஹன்ஸ் லூத்தர், மார்கரெட் அம்மையார் என்பவருக்கு மகனாக பிறந்தவர், இவர்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். இவர்கள் மிகவும் ஏழை குடும்பத்தினர், தந்தை ஆரம்பத்தில் கூலி வேலை செய்து பின்னர் படிப்படியாக முன்னேறி நடுத்தர குடும்பமாக தங்களை உயர்த்திக் கொண்டவர். அவரது ஒரே குறிக்கோள் தன் மகனை சிறந்த கல்விமானாக்க வேண்டும் என்பதுதான். எனவே மார்டின் லுத்தரும் சிறப்பாக படித்தார். இலக்கியம், தத்துவம் ஆகிய இரண்டிலும் பட்டம் பெற்றார், அடுத்ததாக அவருடைய தந்தை அவரை சட்டம் படிக்க அனுப்பினார். மார்டின் லுத்தரை ஒரு நீதிபதியாக காணவேண்டும் என்பது ஹன்ஸ் லுத்தரின் கனவு.

ஆனால் மார்டின் லுத்தரின் வாழ்வில் இரண்டு காட்சிகள் அவருக்குள் பெரிய மாறுதலை உண்டாக்கின.

1. ஒருமுறை அவர் வீதியில் நடந்து வரும்போது அன்கால்டு பெர்ன்பர்க் என்ற நாட்டின் இளவரசன் வில்லியமை காண நேர்ந்தது, இளவரசன் எப்படி இருப்பாரோ அப்படி வில்லியம் இல்லை, மாறாக கையில் ஒரு பிச்சை பாத்திரத்தை வைத்துக் கொண்டு வெறும் ஒரு அறைக்கச்சை மட்டும் கட்டிக் கொண்டு, வீடுகள் தோறும் பிச்சை எடுத்து வந்தார். அவர் இரட்சிப்பை பெற துறவியாகிவிட்டதே காரணம் என்பதை மார்டின் லுத்தர் அறிந்தார். ஒரு இளவரசன் ரட்சிப்புக்காய் எவ்வளவு தன்னை அர்பணித்திருக்கிறார் என்பது அவருக்குள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது.

2. தேவாலயத்தில் ஒரு படம் கண்டார், அதில் ஒரு அழகான ஓவியம் கப்பல் ஓவியம் இருந்தது, அந்த கப்பலின் மாலுமியாக பரிசுத்தாவியானவர் இருந்தார், கப்பல் பயணிகளாக போப்பும் அனைத்து குருமார்களும் இருந்தனர். கப்பல் மோட்சத்தை நோக்கி பயணிக்கிறது, மக்களெல்லாம், கடலில் தத்தளிக்கின்றனர் அவர்கள் வசதிக்காக, கப்பலில் இருந்து இரட்சணிய கயிறுகள் தொங்கவிடப்பட்டுள்ளது. அதை யார் பிடித்துக் கொள்ளுகிறார்களோ அவர்களும் மோட்சம் நோக்கி பயணிக்கலாம்.

இந்த இரு காட்சிகளும் மோட்சத்திற்கு போக வேண்டுமானால், துறவியாக, அதாவது, ஒரு கிறிஸ்தவ மத குருவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மார்டின் லுத்தரின் உள்ளத்தில் ஆழமாய் விதைத்தது.

மார்டின் லுத்தர் இளைமையில் சிறந்த அறிவாளியாக இருந்தாலும், சரீரத்தில் மிகவும் பெலவீனமானவர். கல்லூரியில் படிக்கிற காலத்தில் ஒருமுறை படுத்த படுக்கையானார், அவர் இறந்து போவார் என அனைவரும் ஏன் அவரும் நினைத்தார். ஆனால் எப்படியோ குணமானார். ஒரு முறை சாலையில் நடந்து வரும்போது ஜெர்மானிய வழக்கப்படி ஒரு வாளை தன்னோடு வைத்துக் கொண்டிருந்தார். திடீரென தவறி விழுந்து அவருடைய வாளே அவரை வெட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளப்பட்டார். இவ்விரு சம்பவங்களும் அவரது உள்ளத்தில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்த, திடீரென அவரது நண்பன் அலெக்ஸ் என்பவர் கொல்லப்பட்டு மரித்து போனார்.

இதனால், தனக்கும் இது போன்ற அகால மரணம் எப்போது வேண்டுமானால் ஏற்படலாம் எனவே உடனடியாக தான் ரட்சிப்பின் நிச்சயத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.

இரட்சிப்பை உடனடியாக பெற வேண்டுமானால், அன்றைய முறைப்படியும், அவர் கண்ட தேவாலாய ஓவியத்தின்படியும் அவர் ஒரு துறவியாக வேண்டும், (கிறிஸ்தவ மத குருவாக) தகப்பனிடத்தில் தன் விருப்பத்தை கூற அவர் கடுமையாக எதிர்த்தார். ஆனால் தகப்பனிடம் சொல்லாமலே போய் துறவி மடத்தில் சேர்ந்தார். ஒரு மாதகாலம் குடும்பத்தார் யாரையும் சந்திக்க வில்லை. தொடர்ந்து மடத்தின் வாழ்வில் ஒன்றிவிட்டார்,

தினசரி பிச்சையெடுத்து வந்து வாழ வேண்டும். சந்தோஷமாக செய்தார், ஆனால் இர்ட்சிப்பின் உத்தரவாதம் கிடைக்கவில்லை. இரவு பகலாக உபவாசமிருந்து ஜெபித்தார். ஒரு முறை நான்கு நாட்க‌ளுக்கு மேல் உபவாசமிருந்து ஜெபித்து மயங்கி விழுந்தார். அறைக் கதவை உடைத்து அவரை பார்த்தனர். சலனமே இல்லாமல் இருந்தார், உடனே அவரை சுற்றி நின்று பாடல்களை பாட அவர் பிழைத்துக் கொண்டார். கடுமையான உபவாசம் ஜெபம் கூட அவரது வாழ்வில் இரட்சிப்பின் உத்தரவாதத்தை தரவில்லை. இறுதியாக குரு அபிஷேகம் பெற்றால் இரட்சிப்பின் உத்தரவாதம் நிச்சயம் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.

அவர் எதிர்பார்த்த குரு அபிஷேக நாளும் வந்தது, அவரும் இரட்சிப்பின் முழு உத்தரவாதம் பெற காத்திருந்தார், அந்த நாளில் ஒரு சந்தோஷம் நடந்தது, அவரது தந்தையும் அங்கே வந்தார், அனேக பரிசு பொருட்களையும் கொண்டு வந்தார், மடத்திலுள்ள எல்லாரும் ஆச்சரியப்பட்டனர். அன்று இரவு விருந்து ஆயத்தம் செய்து அதில் ஹன்ஸ் லுத்தரும் கலந்துக் கொள்ள செய்தனர். ஹன்ஸ் லுத்தரும் சந்தோஷமாய் கலந்துக் கொண்டார், அந்த நேரத்தில் ஒரு மூத்த குரு, ஹன்ஸ் லுத்தரை பார்த்து, இப்போதாவது புரிந்துக் கொண்டீர்களா? உங்கள் மகன் எவ்வளவு உன்னதமான முடிவெடுத்திருக்கிறார் என்று சொன்னார்.

அதுவரை அமைதியாக இருந்த ஹன்ஸ் லுத்தர், உடனே தன் மகனை நோக்கி திரும்பி, நீயெல்லாம் ஒரு மகனா? உன் தாயையும் தகப்பனையும் கனம் பண்ணு என்ற கர்த்தருடைய வார்த்தை உனக்கு தெரியாதா? உன் தாய் அங்கே நோயினால் அவதியுறுகிறாள், நான் வயதான காலத்தில் வீட்டு பணிகளை கவனிக்கிறேன், இதையெல்லாம் அறியாத, தாய் தகப்பனை மதிக்காத உனக்கு குரு அபிஷேகம் ஒரு கேடா என்று கடுமையாக திட்டிவிட்டு சென்றுவிட்டார்.

குரு அபிஷேகம் பெற்றால் ரட்சிப்பு நிச்சயம் என்று நினைத்தவருக்கு குரு அபிஷேக நாளிலேயே, அது தவறு என்று கடவுள் புரிய வைத்தார். எனவே அவர் மிகவும் சோர்ந்துப் போனார். ஆனாலும் அவருக்கு இன்னொரு நம்பிக்கை இருந்தது, அந்த நம்பிக்கை யாதெனில், அக்காலத்தில் புனித நகரமாக கருதப்பட்ட ரோம் நகருக்கு சென்றால் நம் பாவம் தொலையும் ரட்சிப்பை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். அடுத்தது ரோமாபுரிக்கும் பயணம் செய்தார். ரோமாபுரி மோட்சத்தின் வாசல் என்று போப்பு மக்கள் மத்தியில் பிரகடன படுத்தி வைத்திருந்தார்.

ரோமாபுரிக்கு சந்தோஷமாய் சென்ற லுத்தர், அங்கே நடக்கும் காட்சிகளை கண்டு, ஒன்றும் விளங்காமல் தவித்தார், காரணம், அங்கே புனித பொருள் வியாபாரம் நடந்தது, அதாவது, சீடர்கள், புனிதர்கள் பயன்படுத்திய, ஆடைகளின் துண்டுகள், சிலுவை மரத்துண்டுகள், அவர்களுடைய தலை முடிகள், என்று எதை எதையோ விற்றனர், அதையெல்லாம் வாங்கி வீட்டில் வைத்தால், பாவம் தீரும் வியாதி தீரும் என்று கூறினர், இதையெல்லாம், லுத்தரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரட்சிப்பை பெற இன்னும் எத்தனையோ கிரியைகள் அங்கே இருந்தது அனைத்திலும் பங்கு கொண்டார் ஆனால் எதிலும் அவருக்கு இரட்சிப்பின் நிச்சயம் கிடைக்கவில்லை.

நொந்து போனவராய் ரோமை விட்டு வெளியேறினார், அக்காலத்தில் இன்னொரு அக்கிரமும் நடந்தது, அது லுத்தரை மேலும் மனதளவில் கடுமையாய் பாதித்தது அதுதான் பாவ மன்னிப்பு சீட்டு வியாபாரம். ஒருவன் பாவம் செய்தால் அதிலிருந்து மன்னிப்பு பெற காசு கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும், அதில் உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று எழுதப்பட்டிருக்கும், பாவத்துக்கு தக்கப்படி விலை நிர்ணயிக்கப்படும், இது முன் பதிவின் பேரில் பாவங்கள் நடக்கும் கேவலத்திற்கு விசுவாசிகளை தள்ளியது.

இதையெல்லாம் கண்ட லுத்தர் வேதாகமத்தில் விடை தேடினார், அக்காலத்தில் வேதாகமம் என்பது, காணக்கிடைக்காத பொக்கிஷமாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் அது லத்தீன் மொழியில்தான் இருக்கும், எனவே வேதாகமம் என்ன சொல்லுகிறது என்று யாருக்குமே தெரியாது. போப்பு என்ன சொல்லுகிறாரோ அதுதான் வேதமாக இருந்தது. ஆனால் லுத்தரோ லத்தீன் மொழி பயின்று வேதத்தை படிக்கலானார். வேதத்தின் வெளிச்சத்தில் கடவுள் அவருக்கு இரட்சிப்பின் உண்மையை வெளிப்படுத்தினார். அதுதான், ரோமர்.1:17 விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். தொடர்ந்து வேதாகமத்தை ஆராய்ந்து அவர் கண்டறிந்த இரட்சிப்பின் இறையியல்தான் கிருபையினால் மட்டும், விசுவாசத்தினால் மட்டும், திருமறையினால் மட்டும், கிறிஸ்துவினால் மட்டும்.

ரட்சிப்பு என்பது இந்த நான்கு வழிமுறைகளில் மட்டும்தான் கிடைக்கும். தன் சுய கிரியைகளில் ரட்சிப்பு கிடைக்குமானால் இவை நான்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே, சுயமாய் இரட்சித்துக் கொள்ளும் திறமை மனிதனுக்கில்லை.

இந்த உண்மைகளை உலகிற்கு அறிவிக்க, இரவு பகலாக வேதாகமத்தை மொழி பெயர்த்தார். அது மட்டுமல்லாமல், எல்லாரும் தாய் மொழியில்தான் படிக்க வேண்டும் என்று கூறினார். அதன் பலன் தான் இன்று நம் கரங்களில் வேதாகமமும், இரட்சிப்பும் இருக்கிறது. அவரில்லையேல், இரட்சிப்பை பெரும் விலை கொடுத்தே வாங்க வேண்டியதாயிருந்திருக்கும். வேதாகமத்தை நாம் கண்டிருக்கவே முடியாது. எனவேதான் மார்டின் லுத்தர் நம் கிறிஸ்தவ வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இரட்சிப்பையே அடிமைப்படுத்த நினைத்த கூட்டத்திடமிருந்து மீட்கும் பணியை கடவுள் மார்டின் லுத்தரை கொண்டு நிறைவேற்றினார், எனவெ தான் சீர்திருத்தல் இரட்சிப்பின் புதியவரலாறு.

ஆனால் இன்று இதை நினைவுகூற லுத்தரன் சபைகளிலேயே ஆட்கள் இல்லை என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆடல் பாடல் கொண்டாட்டம் என்றால் குவியும் கூட்டமாக நாமும் மாறிவிட்டோம். இரட்சிப்பை கொண்டாட ஆட்கள் இல்லாமல் போய்விட்டது.  உண்மையை உணருவோம் இரட்சிப்பை கொண்டாடுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews