Text. நாகூம். 1:7
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, நம்பிக்கை என்பதுதான் மனித வாழ்வின் மையமாக இருக்கிறது. ஆனால் நாம் யாரை நம்புகிறோம் என்பது மிகவும் முக்கியம். மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கவும் பெருக்கவும் சில தனியார் நிறுவனங்களின் வார்க்குறுதிகளை நம்பி அதில் முதலீடு செய்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட அனேக நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டிவிட்டன.
நல்லாட்சி தருவார்கள் என்று மக்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அவர்களில் அநேகர், கொள்ளையர்களாகி மக்களின் வரிப்பணத்தை சூறையாடுகின்றனர்.
இறையருள் நிறைந்தவர்கள் என்று தங்கள் வாழ்வின் பிரச்சினைகள் தீர மக்கள் ஆன்மீக தலைவர்களை தேடி போகின்றனர். அவர்களிலும் அநேகர் பணத்தை சுருட்டுவதிலும், அவர்களை சீரழிப்பதிலுமே குறியாக உள்ளனர். இது எல்லா மதத்திலும் இருக்கிறது.
இதையெல்லாம் காணும்போது யாரை நம்புவது என்றே நமக்கு தெரியாமல் போகிறது, எப்போது யார் ஏமாற்றுவார்களோ என்ற ஒருவித அச்சத்தோடே இவ்வுலகில் நாம் வாழ வேண்டியிருக்கிறது. இந்த அச்சத்திலிருந்து நம்மை விடுவிக்கும் கர்த்தருடைய வார்த்தைதான் இன்றைக்கு நாம் தியானிக்கிற வசனம்.
நாகூம் தீர்க்கர் கடவுளை பற்றி தெளிவான 3 கருத்துக்களை நமக்கு தெறிவிக்கின்றார்.
1. கர்த்தர் நல்லவர்.
2. இக்கட்டு நாளில் அவர் அரணான கோட்டை.
3. தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
இதில் மூன்றாவதாக நாகூம் தீர்க்கர் சொல்லுகிற கருத்து, தம்மை நம்புகிற ஒவ்வொருவரையும் அவர் அறிந்திருக்கிறாராம். இது நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது. காரணம் அவரை நாம் முழுதாய் நம்புகிறோமா? இல்லையா? என்பது அவருக்கு தெரியும். இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்களை விசுவாசிகள் என்று சொல்லிக் கொள்ளுகிறார்களே தவிர வாழ்வில் உண்மையான விசுவாசம் இல்லை.
உதாரணமாக அநேக விஷயங்களை சொல்ல முடியும் ஆனால் ஒரு மேலோட்டமான உதாரணத்தை மட்டுமே இங்கே சொல்லுகிறேன். இன்றைக்கு அநேகமாக எல்லா திருச்சபைகளிலும் பிரச்சினை இருக்கிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுக்கான அநேகர் நீதிமன்ற வாசலில் நிற்கின்றனர். இதனால் பிரச்சினைகள் வலுக்கிறதே தவிர தீரவில்லை. ஒருவர் ஜெயித்தால் அடுத்தவர் மேல் முறையீடு செல்கிறார். அவர் ஜெயித்தால் இவர் மேல் முறையீடு செய்கிறார். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தவறு செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் யாருமே தவறு செய்தவனை கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார் என்று நம்பவில்லையே ஏன்?..
நியாயம் என் பக்கம் இருக்கிறது என்று நம்புகிறவர்கள், கர்த்தர் என் தலை நிமிர செய்வார் என்று நம்பாமல் வழக்காடு மன்றங்களை ஏன் நாடுகின்றனர்? அப்படியானால் நாம் பெயரளவு விசுவாசிகள்தானே?????????? விசுவாசம் நம்மிடம் இல்லை என்றுதானே அர்த்தம். நீதிமன்றம் போகிறவர்கள் மட்டுமல்ல, எதிரியை பழி வாங்க நினைக்கிற யாருக்குமே விசுவாசம் இல்லை. பழி வாங்குவது என் காரியம் என்று தெளிவாக கூறியுள்ளாரே. இந்த அறை குறை விசுவாசம் நமக்கு இருப்பதால்தான் அநேகர் கடவுள் எனக்கு நியாயம் செய்யவில்லை என்று நீதி மன்ற வாசலிலும் வீதிகளிலும் கூவுகின்றனர். அவர் எப்படி செய்வார்? அவர்தான் அவரை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறாரே.
எனவேதான் நம் விசுவாசத்தில் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். நன்றாக யோசித்து பாருங்கள் ஒரு அற்புதமான உண்மை நமக்கு புரியும். இந்த போலித்தனமான விசுவாசம் கொண்ட யாருமே நிம்மதியாக இருப்பதில்லை. காரணம் விசுவாசிக்கிறவர்களை அவர் அறிந்திருக்கிறார். அவர் பாவிகளுக்கும் நல்லவர் ஆனால் போலித்தனமான விசுவாச போர்வையில் தங்கள் பாவத்தை மறைக்கிறவர்களுக்கல்ல. ஒவ்வொரு மனிதனின் இக்கட்டிலும் ஏன் பாவிகளின் இக்கட்டை நீக்கவும் ஓடி வருகிறவர், தன் சொந்த குமாரனையே சிலுவையில் அதற்காய் ஒப்புக் கொடுத்தவர். ஆனால் போலித்தனமான விசுவாசம் கொண்டு தன்னை பரிசுத்தவான்களாக காண்பிக்கிறவர்களுக்கல்ல.
ஏசாயா.49:16 ல் இதோ உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்று, உன் ஆதி அந்தம் அனைத்தும் நான் அறிவேன் என்று கூறுகிறார்.
அன்பானவர்களே இந்த காலை வேளையில் ஒரு முறை நம் விசுவாசத்தை ஆராய்ந்து பார்ப்போம். நமக்கு முழுமையான விசுவாசம் உள்ளதா என்று.. உண்மையான விசுவாசிகளின் நம்பிக்கைக்கு இவ்வுலகினரை போல நம்பிக்கை துரோகம் செய்கிறவரல்ல நம் கடவுள். இக்கட்டில் அவரே அரணாயிருந்து ஜெயமாய் காத்திடுவார். ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள
No comments:
Post a Comment