TEXT: சங்கீதம்.27:5
"தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்"
அன்பானவர்களுக்கு இனிய ஸ்தோத்திரங்கள், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் நன்மைகளை பெற்றுக் கொள்ள கடுமையாக உழைக்கிறோம், ஆனால் பல வேளைகளில் நம் உழைப்பில் தடைகளை சந்திக்கிறோம், ஏன் தடைகள் வருகிறது? தடைகள் வரக் காரணமென்ன?
1.பேதுரு.5:8 தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல், எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடி சுற்றி திரிகிறான்.
நம் வாழ்வில் தடைகளை பிசாசானவன் ஏற்படுத்துகிறான். பிசாசு என்றால் ஆவியோ, பேயோ அல்ல, எங்கோ இருக்கிற ஒரு சக்தி என்றும் நினைக்காதீர், நம்மை சுற்றி இருக்கிற மனிதரை கொண்டே அவன் செயலாற்றுகிறான். எனவேதான் பேதுரு எப்போதும் ஆண்டவரை விசுவாசிக்கிற நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவன் நோக்கமே நம்மை விழுங்குவதுதான்.
தாவீதின் வாழ்வில் அவன் சத்துருவாக பெலிஸ்தியர்கள் இருந்தார்கள், ஆனால் பெலிஸ்தியர் மட்டும் அவன் எதிரியல்லவே, அவன் சொந்த இனத்தானாகிய சவுலும் அவனுக்கு எதிரியாய் இருந்தானே!!!.. எப்பக்கமும் சத்துருவினால் சூழப்பட்டவனாய், எப்போது வேண்டுமானாலும் வீழ்ந்துப் போகக்கூடிய ஆபத்தான வாழ்க்கை அவனுக்கு இருந்ததே அதை நாம் மறுக்க முடியுமா? இப்படியே பிசாசானவன் நம்மை நம் வளர்ச்சியை, கெடுக்க நம் வாழ்வை விழுங்கிவிட நம்மை சுற்றியுள்ளோரைக் கொண்டே நம்மை சுற்றி வருகிறான்.
அதற்காக நாம் பயந்துவிட வேண்டியதில்லை, பேதுரு சொல்வது போல விழிப்புள்ளவர்களாய் இருந்தால் போதும். எப்படி விழிப்புள்ளவர்களாய் இருப்பது? அதற்கும் தாவீதே தன் அனுபவத்தில் நமக்கு கற்றுத் தருகிறார்.
சங்கீதம்.27:4 ல் நான் ஒன்றை கர்த்தரிடம் கேட்டேன் அதையே நாடுவேன்.. என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் என்று கூறுகிறார். அதாவது அவர் கொடிய பிரச்சினைகளில் சிக்கி தவித்தாலும், கர்த்தரை நோக்கி பார்ப்பதும், அவர் சமூகத்தில் விசுவாசத்தோடு காத்திருப்பதுமே தனக்கு முக்கியம் என்கிறார். அது மட்டும்தான் என் தேடல் என்கிறார். அதன் பலன்தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி. தீங்கு நாள் வரும்போதெல்லாம் அவர் தமது கூடாரத்தில் மறைத்து பாதுகாத்தார்.
அன்பானவர்களே, இவ்வுலகம் நமக்கு தீமை செய்யும், நாம் பயப்பட வேண்டியதில்லை, விழிப்பாய் இருந்தால் போதும். அவரை பற்றுகிற உறுதியான விசுவாசத்தில் நிலைத்திருப்பதே, அவரை ஆவலாய் நாடித் தேடுவதே நாம் விழிப்பாயிருப்பதாகும். அவர் நம்மை அவருடைய கூடாரத்தில் மறைத்து பாதுகாப்பார். எந்த துன்பமும் நம்மை தீண்டாதபடி நம்மை ஒளித்து பாதுகாப்பார். அதுமட்டுமல்ல அன்பானவர்களே........
நம்மை கன்மலையின் மேல் உயர்த்துவார். நம்மை துன்பத்தில் எப்படி ஒளித்து வைக்கிறாரோ அதே போல சரியான தருணத்தில் நம்மை எல்லா கண்களுக்கும் முன்பாக உயர்த்திக் காட்டுவார். நம் சத்துருக்களுக்கு முன் நம்மை உயர்த்திக் காட்டுவார். தாவீதை வெறுமனே ஒளித்து வைத்தவரல்ல, அவன் சத்துருக்களுக்கு முன்பாகவே அவனை கன்மலையின் மேல் அரசனாக உயர்த்தி வைத்தவர். சந்தோஷமாய் இம்மாதம் முழுதும் விழிப்போடிருப்போம். கிறிஸ்துவில் உயிரையே கொடுத்து மீட்டவர், நம்மை துன்பத்தில் மறைத்து. சரியான தருணத்தில் உயர்த்திக் காட்டுவார். ஆமேன்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள
No comments:
Post a Comment