WORD OF GOD

WORD OF GOD

Monday, April 18, 2011

*பரிசு ரொம்ப பெரிசு* சிறுகதை

எப்படியும் உன்னை மாற்றிக் காட்டுகிறேன் பார்... நீ எவ்வளவு முயன்றாலும் முடியாது..... நடத்திக் காட்டுகிறேனா.... இல்லையா பார்.... பார்க்கத்தான் போகிறேன்... போடா முட்டாள் இல்லாத ஒன்றை இருக்கிறது என்கிறாய். கேப்பையில் நெய் வடிகிறதென்று நீ சொன்னால் அதை நான் நம்பிவிடுவேனா? தினமும் அவர்கள் இருவருக்கும் உரையாடல்தான் இது. செல்வராஜ் - தேவராஜ் இருவரும் மலரும் மணமும் போல, திருநெல்வேலி அல்வாவும் இனிப்பும் போல பிரிக்க முடியாத நண்பர்கள்.

ஒன்றில் மட்டும் பெருக்கல் குறியாக, எதிரும் புதிருமாக இருந்தார்கள். செல்வராஜ் இல்லை-இல்லை கடவுள் இல்லவே இல்லை என்பதில் உறுதியானவன். தேவராஜோ கடவுள் ஒருவர் உண்டு அவர்தான் இயேசுகிறிஸ்து என்பதை உறுதியாக விசுவாசிப்பவன். இந்த கொள்கையில் மட்டும் கிழக்கு மேற்காக இருந்தாலும் அவர்கள் பிசின் மாதிரி ஒட்டிக் கொண்டிருக்க காரணம் இருந்தது. எப்படியும் மாற்றிவிடலாம் என்று ஒருவருக்கொருவர் எண்ணியதால்தான்.

செல்வராஜ் வீடு அன்று அமர்க்களப்பட்டது. வாசலை பச்சைப்பந்தல் அடைத்திருந்தது. முகப்பில் வாழை மரங்கள். முகப்பிலிருந்து அந்த வீதி முழுக்க மாவிலை தோரணங்கள். அனைத்திலும் சீரியல் பல்புகள் கண்சிமிட்டின.ஒலிநாடா வழியாக திரைப்பட பாடல்கள் அலறியது.

இரண்டு மாலைகளை மாற்றிக்கொண்டும், இரண்டு மோதிரங்களை மாற்றிக்கொண்டும் செல்வராஜ் - செல்வி திருமணம் இனிதே முடிந்தது. தேவராஜும் திருமணத்தில் இருந்தான். வாழ்த்தினான், பரிசளித்தான்-நண்பனல்லவா?

அப்பாடா, என்று மாலையை கழட்டி ஆணியில் அறைந்தான் செல்வா, செல்வியும்தான் இருவர் பார்வையும் அறையில் குவிக்கப்பட்ட பரிசுப் பொருள்கள் மீது பாய்ந்தது. செல்வி எனக்கு வந்த பரிசு பொருட்களை பார்த்தாயா? வா ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கலாம் என்றான். பூம் பூம் மாடுமாதிரி செல்வி தலையாட்டினாள்.

தங்க மோதிரங்கள், சிறிய பெரிய கடிகாரங்கள், பால்குக்கர்கள், சாசருடன்
கப்புகள், பாத்திரங்கள், சில்வரிலும், பித்தளையிலுமான குடங்கள்.
அண்டாக்கள் இருவருக்கும் கையே வலித்தது. அதோ அது என்ன? பெரிய
பார்சலாய் இருக்கே. இருவரும் ஆவலாய் பிரித்தார்கள். பிரிக்க பிரிக்க வளர்ந்துக் கொண்டே போனது. ஒரு வழியாக பிரித்து முடித்தார்கள். உள்ளே...... பரிசுத்த வேதாகமம் என்று கொட்டை எழுத்துக்கள். அன்பளிப்பு தேவராஜ். கோபமானான் செல்வா.

புத்தகத்தை தூக்கி எறிந்தான். பத்தடி தொலைவில் விழுந்த வேதம், வேகமான மின்விசிறியின் சுழற்சியால் பக்கங்களை சிதறவிட்டது. பின் ஒரு பக்கத்தில் நின்று அடங்கியது, அதன் பிறகு அதன் பக்கங்கள் மாறவே இல்லை, மின் விசிறியின் காற்று அதை கொஞ்சமும் அசைக்க வில்லை.

அதை கண்ட மணமக்கள் அதிசயித்து, பின் அதிர்ந்தனர். செல்வா ஓடிப்போய் எடுத்தான். அந்த பக்கத்தில் சில வாசகங்கள் அடிக்கோடு இடப்பட்டிருந்தன, அவைகளை அவள் காதில் படும்படி வாசித்தான்.

" மனைவிகளே கர்த்தருக்குள் கீழ்படிகிறது போல உங்கள் சொந்த புருஷருக்கும் கீழ்படிந்திருங்கள். அப்படியே புருஷர்களும் தங்கள் மனிவிகளை தங்கள் சொந்த சரீரங்களாக பாவித்து அவர்களில் அன்புக்கூற வேண்டும். எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூறுவது போல தன் மனைவியிடத்தில் அன்பு கூறக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாய் இருக்கக்கடவள்".

"கடைசியாக சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்".

அவன் படிப்பதையே கவனித்த செல்வி, அவன் முகத்தை அழுத்தமாய்  ஆராய்ந்தாள்.  அந்த முகம் சாந்தம், சந்தோஷம்  ஆகியவைக்கு மாறிக்கொண்டே இருந்தது. வேதத்தின் வெளிச்சம் அதில் விளங்கியது.

எவ்வளவு நேரம் வேதத்தை படித்தான் என்பது அவனுக்கே தெரியாது. பிறகு புது மனிவியின் கரத்தை அழுத்தமாய் பற்றினான். இழுத்துக்கொண்டு வெளியே ஓடினான். வண்டியை கிளப்பினான். பாஸ்டர் சாலமன் வீட்டை அடைந்தான். இருவரும் உள்ளே ஓடினர்.

பாஸ்டரின் முன் நான்கு கால்கள் இப்போது மண்டியிட்டன. செல்வராஜ் அழுதுக்கொண்டே தனது கடந்த கால தவறுகளை பட்டியலிட்டான். பாவ மன்னிப்பு வேண்டினான். போதகரும் புன்முறுவல் பூத்திட தம்பதிகளுக்காக ஜெபித்து, தந்தை, மைந்தர், தூய ஆவியின் திருப்பெயரால் அவன் பாவங்களை மன்னித்து வாழ்த்தினார்.

பிறகு நடந்தது என்ன? ஆலய வாசம்தான். திருமுழுக்குதான், திடப்படுத்தல் தான், திருவிருந்துதான். அவன் வீடே ஜெப வீடுதான். செல்வராஜ், திரவியராஜ் ஆனதற்கும், செல்வி ஞானசெல்வியாக மாறியதற்கும் காரணம் தேவராஜ் கொடுத்த அந்தப் பரிசுதானே. ஆம் உண்மையாகவே அந்தப்பரிசு ரொம்ப பெரிசுதான்.

திரவியராஜ், தேவராஜை நன்றி பெருக்குடன் நினைத்தான். இருவர் நட்பிலும் மேலும் இறுக்கம் ஏற்பட்டதில் வியப்பென்ன இருக்க முடியும்?...

சிறுகதை செல்வர்.
ஆ. ஏசையன்
 
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1 comment:

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews