கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே, இயேசுவின் இனிதான நாமத்தில் ஸ்தோத்திரங்கள். இன்று நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட கடவுளுடைய வார்த்தை. மத்தேயு.28 :18 .
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது
அன்பானவர்களே, நம் வாழ்வில் நமக்கு பயத்தை கொடுக்ககூடிய, நம்மை மிரட்டக்கூடிய, நம்மை முடக்கக்கூடிய சக்திகள், எவையெல்லாம் என்று யோசித்திருக்கிறீர்களா?
1 .உடல் : இந்த உடல் எப்போதெல்லாம் பலவீனமடைகிறதோ அப்போதெல்லாம் நாம் சொர்ந்துப்போகிறோம். ஏதாவது ஒரு சரீர உபாதை இருந்துக்கொண்டே தான் இருக்கிறது, நம்மை அது அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த சரீர பலவீனத்திலிருந்து விடுதலையே இல்லையா? என்றுகூட அங்கலாய்க்கிறோம்.
2 .வேலை: வேலை இல்லாதவர்களுக்கு வேலையின்மை ஒரு பெரிய பிரச்சனை, அதனால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்திக்கவேண்டியுள்ளது. வேலை இருந்தால் அங்கே நம்மை தேவையில்லாமல் எதிர்ப்பவர்களோடும், நம் முன்னேற்றத்தைக் கண்டு, பயமும் கலக்கமும் கண்டு நம்மை முன்னேற விடாமல் தடுக்க நினைப்பவர்களோடும் போராடவேண்டியுள்ளது.
3 .உலகம்: நம்மை சுற்றியுள்ள உலகம், ஊழலும், வஞ்சகமும், ஆபாசங்களும்,
அசிங்கங்களும் நிறைந்து நம்மை அச்சுறுத்துகிறது. நம் பிள்ளைகளை தைரியமாய் வெளியே அனுப்பமுடியாத நிலைக்கு இன்று பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளோம். கொலை கொள்ளை ஒருபுறம், இயற்கை சேதங்கள் ஒருபுறம், நீதியற்ற தலைவர்கள் ஒருபுறம், நம்மை நிம்மதியில்லாமல் செய்துவருகின்றனர்.
4 .பிசாசு: பிசாசு ஒருபுறம், தேவையற்ற சிந்தைகளையும், சோதனைகளையும் கொண்டுவந்து நம்மை விழுங்கப் பார்க்கிறான். விசுவாச வாழ்வை பிடுங்கப் பார்க்கிறான்.
5 .உறவுகள்: நம்மை சுற்றியுள்ள உறவுகள், நண்பர்கள் யாரையும் நம்ப முடியாத அளவுக்கு வாழ்க்கை சூழல்கள் மாறிவருகிறது. நம்மை பிடுங்குகிறார்களே தவிர, நம்மை ஆதரிப்பவர்கள் இல்லாமல் தவிக்கிறோம். பெற்றோரை கைவிடுகிற மனசாட்சியில்லாத பிள்ளைகள் வாழும் காலத்தில் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.
இவையெல்லாம் அடிப்படையில் நம்மை பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. விடுதலை பெற வழியில்லாமல் சிக்கி தவிக்கிறோம். ஆனால்.........
உயிரோடு எழுந்த ஆண்டவர் பரலோகத்திற்கு போவதற்கு முன், உலகை, பிசாசை, எதிரிகளை கண்டு பயத்தொடிருந்த தன் சீடர்களை அழைத்து அவர்களுக்கு மிக அருகாமையில் சென்று கூறிய வார்த்தை, ''வானத்திலும் பூமியிலும் எனக்கு சகல அதிகாரமும் கொடுக்கப் பட்டிருக்கிறது" என்பதே.
அப்படியானால், நம் உடல் மீது, வேலை மீது, உலகத்தின் மீது, பிசாசின் மீது, நம் உறவுகள் மீது, அவருக்கு சகல அதிகாரம் உள்ளது. இதையெல்லாம் வாழும்போதே நிரூபித்தவர் உயிரோடு எழுந்து அதை உறுதி செய்திருக்கிறார். என்வவே பயத்தோடு வாழாமல் விசுவாசத்தோடு வாழ்வோம், நாம் இயேசுவின் சேனை. நமக்காய் உயிரையும் கொடுத்தவர். நம்மை காப்பார், நம்மை நிலை நிறுத்துவார், நாம் ஜெயிப்போம். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment