WORD OF GOD

WORD OF GOD

Tuesday, July 9, 2013

சந்தேகங்களுடன்..கில்பர்ட் ஆசீர்வாதம்....

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள், வெகு நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை சந்திப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். கர்த்தருடைய பெரிதான கிருபையால் எனது கணிப்பொறியை சரி செய்துவிட்டேன், இனி தொடர்ந்து பதிவுகளையும் துவக்க உள்ளேன். எனக்காகவும் இந்த ஊழியத்திற்காகவும் ஜெபிக்கிற சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இன்று நான் உங்களோடு பகிர்வதற்காக தெரிந்துக் கொண்ட கடவுளின் வார்த்தை, நியாயாதிபதிகள்.10:30-31.

யெப்தா என்றொரு மனிதரை நீங்கள் கேள்விப்ட்டிருக்கிறீர்களா? இவர் இஸ்ரவேலின் தலைவர்களில் ஒருவர், அவரது பின்னணியும் வரலாறும் சுவாரஸ்யமானது நியாயாதிபதிகள், 10ம் அதிகாரத்திலிருந்து
வாசிக்கும்போது அவரை குறித்த தகவல்களை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம், நான் அவர் செய்த ஒரு பொருத்தனையை குறித்தும் அதை அவர் நிறைவேற்றிய விதம் குறித்தும் உங்களோடு பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்து வந்த அம்மோன் புத்திரரை எதிர்த்து போரிட யெப்தா புறப்படும் முன் கடவுளிடம் ஒரு பொருத்தணை பண்ணினார் அதைதான் 30 மற்றும் 31ம் வசனத்தில் வாசிக்கிறோம், அவரது பொருத்தணை என்னாவென்றால், கடவுளே நான் அம்மோன் புத்திரரை வென்று சமாதானமாய் வீடு திரும்ப நீர் கிருபை செய்தால், என் வீட்டிற்கு நான் வரும்போது எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அதை நான் கர்த்தருக்கென்று சர்வாங்க தகன பலியாக செலுத்துவேன் என்றான். இங்கே சர்வாங்க தகன பலி என்றால் என்னவென்று நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

லேவியராகமம்.1:1-9 வரை இருக்கக்கூடிய வசனங்களை வாசித்தால் சர்வாங்க தகனபலி என்றால் என்ன என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.
1கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி:

2நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்தவேண்டும்.

3அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக்கூடார வாசலில் கொண்டுவந்து,

4அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,

5கர்த்தருடைய சந்நிதியில் அந்தக்காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

6பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன்.

7அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி,

8அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள்.

9அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

அவன் பொருத்தணை முடித்து போருக்கு புறப்பட்டான், போரில் கர்த்தர் அவனோடிருந்து அம்மோன் புத்திரரை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார், இஸ்ரவேலர் நடுவே ஜெயத்தோடு யெப்தா கம்பீரமாய் தன் ஊருக்கு திரும்பினான், மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டை அவன் நெருங்குகையில் அவன் மகள் தம்புரு வாசித்துக் கொண்டு ஆனந்தமாய் தன் தந்தையை வரவேற்க ஓடி வந்தாள், ஆனால் யெப்தாவோ அதிர்க்கியில் உறைந்தான், காரணம் அவன் செய்த பொருத்தணை. இஸ்ரவேலர்கள் ஒரு பொருத்தணை செய்தால் அதை எக்காலத்திலும் மாற்றிகொள்ளமாட்டார்கள், காரணம் பொருத்தணை செய்தது மனிதனோடு அல்ல கடவுளின் சன்னிதியில், அவரது மேலான நாமத்தில், எப்படி அதை மீற முடியும்??????

அன்பானவர்களே, யெப்தா தன் இருதயத்தை கல்லாக்கி கொண்டான், காரணம் அவனுக்கிருந்தது ஒரே ஒரு மகள், தன் ஒற்றை மகளை, தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மீறாமல், அவளை சர்வாங்க தகனபலியாக செலுத்தினான் என்பதை 39 ம் வசனத்தில் நாம் காணலாம்.

எவ்வளவு உணர்வு பூர்வமான மனிதன், கடவுளிடத்தில் தான் செய்த உடன்படிக்கையை மீறாமல் இருக்க அவன் செய்த தியாகம் வர்த்தையில் விளக்ககூடியதல்ல..

ஆனால் நாம் நம் ஞானஸ்னானத்தில் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மீறாமல் இருக்கிறோமா? பிசாசையும் அதின் எல்லா செயல்களையும் விட்டுவிட்டோமா?

நம் திடப்படுத்தலில் செய்த உடன்படிக்கையின்படி திருவிருந்து ஆராதனையை பாவமண்ணிப்பின் நிச்சயமாக விசுவாசித்து அதை அசட்டை செய்யாமல் ஒவ்வோரு திருவிருந்து ஆராதனையிலும் பங்கெடுக்கிறோமா?

நம் திருமணத்தில் நம் கடவுளின் சன்னிதியில், இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும், ஒருவரில் ஒருவர் அன்பு கூர்ந்து, ஆறுதல்படுத்தி, கண்ணியமாய் எண்ணி ஆதரித்துவரவும், ஜீவனோடிருக்குமளவும் இவரிடம் மாத்திரமே பற்றுதலாய் இருப்பேன் என்றும், மரணம் நம்மை பிரிக்குமளவும், உன்னைவிட்டு விலகாமல் என் கடமைகளில் எல்லாம் உனக்கு உண்மையுள்ள கணவனாக (மனைவியாக) நடந்துக் கொள்வேன் என்று உறுதியளித்துவிட்டு, அந்த உடன்படிக்கையை மீறாமல் இருக்கிறோமா?

நாம் செய்கிற எப்பணியிலும், குறிப்பாய் ஊழியத்திலும் நாம் செய்த உடன்படிக்கையை மீறாமல் இருக்கிறோமா?

ஆனால் நம் கடவுள் மட்டும் அவர் உடன்படிக்கையை காத்து நம்மை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து மேன்மைபடுத்த வேண்டும் அப்படித்தானே.... சந்தேகங்களுடன்...

கிறிஸ்துவின் பணியில்..
கில்பர்ட் ஆசீர்வாதம்...

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews