WORD OF GOD

WORD OF GOD

Thursday, September 29, 2011

உயர்வு தரும் ஆண்டவர்

I சாமுவேல் 2 :8

"அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார்."

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பிற்கினிய ஸ்தோத்திரங்கள். 
அன்னாள் பிள்ளையில்லாமல் அவமானங்களையும் வேதனைகளையும் சந்தித்து வாழ்ந்தவள். ஆனால் தன வேதனையிலும், அவமானத்திலும்  ஆண்டவர் ஒரு குழந்தையை கொடுப்பார் என்ற விசுவாசத்தை மட்டும் விடாமல் பற்றிக் கொண்டிருந்தாள். ஆபிரகாமுக்கு 100 வயதில் பிள்ளை வரம் கொடுத்தவரல்லவா அவர். எனவே தேவாலயம் வந்து இறைவனை மன்றாடி விசுவாசத்தோடு வேண்டினாள். ஆண்டவரின் அவளுக்கு பிள்ளை கொடுத்தார். அன்பானவர்களே பிள்ளை வரம் வேண்டி நிற்போரே விரக்தியடையாதீர், ஆண்டவரிடம்  மன்றாடுங்கள், அவரில் விசுவாசமாய் இருங்கள் அவரே காரியத்தை வாய்க்க செய்வார்.

அன்னாள் தனக்கு பிள்ளை பிறந்த பிறகு, தனது வேண்டுதலை நிறைவேற்ற, தன மகனை ஊழியத்திற்கு அர்ப்பணிக்க, தேவாலயத்திற்கு அவனை கொண்டு வந்து, ஆண்டவரின் வசம் அவனை ஒப்புக் கொடுத்துவிட்டு, ஆண்டவருக்கு நன்றி செலுத்தி அவள் எறேடுக்கிற ஜெபம்தான் இன்றைய நம்முடைய தியானப்பகுதி.

இந்த ஜெபத்தில் குறிப்பாக நாம் தியானிக்கிற வசனத்தில் அவள் சாட்சியாக சொல்லுகிற விஷயம், எளியவனை கடவுள் உயர்த்தி, பிரபுக்களோடும் அதிபதிகளோடும் உட்கார வைப்பார் என்பதே. அதற்கு காரணம் பூமியனைத்தும் அவருடையதே.

அப்படியானால் என்ன அர்த்தம் இந்த பூமியனைத்தும் அவருடையது, இங்கே அவர் எதை செய்ய விரும்புகிறாரோ அதை அவர் நிறைவேற்றுகிறார். எனவே நாம் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறோம், நம் தேவைகளும் அவர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது, அவரை மிஞ்சி இவ்வுலகில் எதையும் நாம் பெற்றுவிட முடியாது.

எனவே, நம்  வாழ்வில் நம்மை உயர்த்த வேண்டும் என்பது அவருடைய 
சித்தமாய் இருப்பின் யார் அதை தடுக்க முடியும்? அன்னாள் பிள்ளை இல்லாமல் மலடி என்று அனைவராலும், அற்பமாய் எண்ணப்பட்டபோது, அவள் விசுவாசத்தை விடாமல், அனைத்தையும் அருளும் ஆண்டவரை பற்றி  பிடித்து அவள் தேவையை பெற்றுக் கொண்டாள்.

துன்பங்கள் சிறுமை படுத்துகிறதா? அனேக வலியவர்களுக்கு முன்னாள், எளியவர்களாய் கூனி குறுகி நிற்கிற நிலை இருக்கிறதா? சோர்ந்து போகாதீர்கள், சிறுமையும் எளிமையுமானவனை உயர்த்துகிற ஆண்டவர் நம் பட்சத்திலிருக்கிறார். பூமியின் அஸ்திபாரங்கள் அவருடையது. அவர் நம்மை உயார்த்தி  நம்மை மேற்கொண்ட வலியவனுக்கு நிகராய், அவர்களோடு உட்கார வைப்பார். அதற்காகவே மேலான பரலோக வாழ்வை விட்டு, தாழ்வான மனித சரீரத்தில் வெளிப்பட்டு, கொடூரமான சிலுவை தூக்கி, மரணம் வரை தன்னை தாழ்த்தினார், நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்து, நம்மை உயர்த்த இன்றும்  நம்மோடு வாழ்பவர் அவர். இந்த விசுவாசத்தில் தரிந்திருந்து மேன்மைகளை அடைய பரிசுத்த ஆவியானவர் நமக்கு துணை புரிவாராக ஆமென். 

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, September 26, 2011

அன்பாலயம் (சிறுகதை)


ஒரு காலத்தில் சோலையூர் மிகவும் பின்தங்கிய, கிராமமாக இருந்தது. இன்று அப்படியல்ல. ஓலைவீடு மாடி வீடாக மாறியிருக்கிறது. கால் வயிறு கஞ்சிக்கும் ஆலாய் பறக்கும் காலம் மலையேறிவிட்டது. கைநாட்டு போட கட்டை விரலை காட்டியது அந்த காலம்.
அழகான ஆங்கிலத்தில் வெளுத்து  வாங்குவது இந்தக்காலம்.

திருஷ்டி பூசணிக்காய்  மாதிரி ஒரே  ஒரு வீடு தெரியுது பாருங்கள். ஓலை வீடு, அதிலும் ஏழெட்டு கீற்றுகளை காணோம். வாசல் உண்டு. கதவு இல்லை, சணல் பை தொங்கல், சாணம் மெழுகிய தரை, குண்டும் குழியுமாய், மண் சுவர், விரைவில் விழுந்து விடலாம்.

ஒரே ஒரு கயிற்றுக்  கட்டில். அதில்தான் ஒரு உருவம் ஒல்லிக் குச்சியாய் படுத்திருந்தது. உடம்பு கேள்விக்குறிக்கு மாறியிருந்தது. கண்களில் சாம்பல் பூத்திருந்தது. காதுகளுக்கு வேலையில்லை. முப்பத்திரண்டு பற்களும் விடைபெற்றுக் கொண்டன.

இந்த பழம் சாரி கிழம் இருந்தால் என்ன? இறந்தால் என்ன? என்று விட்டுவிட முடியாது. காரணம்? பேரன், பேரனின் பெற்றோர் அவனை தாத்தாவின் கையில் ஒப்படைத்துவிட்டு தாத்தாவை முந்திக்கொண்டார்கள். கேன்சராம். இல்லாதவர்கள் என்று தெரிகிறதா இந்த நோய்க்கு? வாரி வழித்துக் கொண்டு போய்விட்டது. மாடு வாங்க தரகர், வீடு வாங்க தரகர், நிலம்  வாங்க தரகர், மனம் முடிக்க தரகர், தரகில் தான் காலம் சுழன்றுக் கொண்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் சிறுவர் சிறுமியரை வாங்கவும் தரகர்கள் தயாராகி  விட்டனர்.

அவன் பெயர் "குருசாமி" குரு, குரு என்று கூப்பிடுவார்கள்.
 பிள்ளை பிடிப்பவன் என்று விவரம் தெரிந்தவர் செல்லமாய் அழைப்பார்கள். அவன் அந்த ஓலை குடிசையில் நுழைந்தான்.
வணக்கம் பெரியவரே சௌக்கியமா? கிழவனுக்கு  குருசாமி
இரண்டாய் தெரிந்தான்.

ஐயோ ஏன் இப்படி கிழிந்த நாராய் போனிங்கோ இந்த 85 வயசுல எப்படி காலந்தள்ளப் போறீங்க ? நல்ல வேளை  பகவான் தான் என்னை இங்கு அனுப்பிச்சிருக்கிறார்.

தம்பி யார் நீங்க இந்த நாதியில்லாத கிழவன்கிட்ட இவ்வளவு
அக்கறையாய் பேசுறீங்களே ! என்ன விஷயம்? அதற்குள் மேல்
மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. குரல் கிணற்றின் ஆழத்திலிருந்து
வந்தது.

உங்கள் பேரன் எங்கே? கிழவன் கஷ்ட்டப்பட்டு கைகாட்டிய திசையை நோக்கினான் குருசாமி. ஒட்டிய வயிறுடன் சுருண்டு படுத்திருந்தான் பேரன். சாப்பிட்டு மூணு நாளாச்சி தம்பி. என்ன விடுங்க, சாகப் போகிறவன், இந்த இளம் தளிர் அன்ன ஆகாரமில்லாமல் வாடி வதங்கி கெடக்குதே. பெரிசு கண்களில் பொலபொலவென்று கண்ணீர் மடைத் திறந்த வெள்ளமாய்.

அய்யா, பெரியவரே! கவலையை விடுங்க. கண்ணீரை துடைங்க. உங்கப் பேரனை வாழவைப்பது என் பொறுப்பு. சாத்தான் வேதம் ஓதுகிறது. இந்தாங்க, இதில் ஆயிரம் ரூபா இருக்கு. பாலும் பழமும் வாங்கி சாப்பிடுங்க. நாளைக்கே இந்த குடிசையை ரிப்பேர் செய்து தரேன் கருணை வடிகிறது.


பையனை எழுப்பினான், கையில் இருந்த பிஸ்கட் பழத்தை தந்தான். புதுச்சட்டை, புதுகால்சட்டை மாட்டினான். முகம் கழுவி தலை வாரினான். ஆடு வெட்டப்படுவதற்கு தயாரானது. நான் வரட்டுமா பெரிசு? பையனை உடனே ஒரு நல்ல இடத்தில் சேர்க்கணும். நாளைக்கு வந்து பார்க்கிறேன். பையனோடு மாயமானான் குருசாமி. ஆயிரம் ருபாய் பெரியவரின் வாயை அடைத்தது.

"அன்பாலயம்" அந்த விடுதயின் பெயர். அதன் படைப்பாளர் அருள்திரு.ஏசுதாசன் 49 மாணவர்கள் இருந்தனர். அதை 50  ஆக்க அவர் முனைப்பு காட்டினார் "அனாதை இல்லம் ஆதரவற்ரறோர் பள்ளி என்றெல்லாம் பெயர் சூட்ட‌ நினைத்து அது தவறு என்று எண்ணீயதால் பெயரை அன்பாலயமாக மாற்றியவர் அவர்.

ஆதரவற்ற  பிள்ளைகளுக்காக பள்ளியுடன் கூடிய விடுதி ஒன்று நடத்திட வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு. பணம் படைத்தோரிடம் அதை தெரிவித்ததும், ஒருவர் நிலம் தர, ஒருவர் கட்டிடம் கட்டிக் கொடுக்க, மூலை முடுக்கெல்லாம் தேடி, தகுதியான பிள்ளைகளைக் கண்டறிந்து அன்பாலயத்தில் சேர்த்தார்.

அரசின் அனுமதி உடனே கிடைத்தது. தினமும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தில் ஒரு மூட்டை அரிசி கிடைத்தது. உழவர் சந்தையில் காய்கறி கிடைத்தது. "கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்" என்ற இயேசுவின் வாக்குத்தத்த வார்த்தைகளை விசுவாசித்த மக்கள் அன்பாலய வளர்ச்சிக்காக ஆயிரமாயிரமாய் தந்து உதவினர்.

அருள்திரு.ஏசுதாசன் அவர்கள் அன்று மாணவர் வருகை பதிவேட்டை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று மூளையில் எதோ உதித்தது. சட்டென்று அழைப்பு மணியை அழுத்தினார். நாற்பது வயதில் ஒருவர் ஓடி வந்தார். என் மகன் லுத்தரை கூப்பிடு, ஐந்து நிமிட இடைவெளியில் 25 வயதில் லூத்தர் வந்தான்.

ஊர் உள்ளே போ, கோடியில் ஒரு ஓலைவீடு, அதில் பேரனுடன் முதியவர் ஒருவர் இருப்பார். அவரிடம் சொல்லி, அவர் பேரனை அழைத்து வா, லூத்தர் அகன்றான். 15 நிமிட இடைவெளியில் திரும்பினான்.

அப்பா! அந்த பெரியவரால் பேச முடியவில்லை. இந்த பத்திரத்தைக் கொடுத்தார். அதில் என்ன இருக்கிறது? இதில் குருசாமி என்பவன் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் பையனை பத்தாயிரம் ரூபாய்க்கு அடிமையாய் விற்றிருக்கிறான். அதுவும் மூன்று வருடத்திற்கு அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது அப்பா.

அப்படியா? இந்தா, அன்பாலய வளர்ச்சிக்காக மிஸ்டர் குணசீலன் கொடுத்த பத்தாயிரம் உன் நண்பன் மனோவை கூட்டிக் கொள். ஓடு, ஒரு வினாடியும் தாமதிக்காதே. இன்றே அந்தப் பையன் இந்த விடுதி மாணவன். "கமான் குய்க், ஐ சே" லூத்தர் வேகமாக செயல்பட்டான். இனி அந்த பையன் அன்பாலயத்தில் சுதந்திரமாய் சுற்றி திரிவான் சுகமாய் வாழ்வான்.

மனதுக்குள் எண்ணி மகிழ்ந்த அருள்திரு. ஏசுதான அவர்கள், நன்மை செய்யும்படி உனக்கு திராணியிருக்கும்போது அதை செய்யத்தக்கவர்களுக்கு செயாமல் இராதே என்ற வேத வசனத்தை அசைபோட்டார்.

சிறுகதை செல்வர்.
திரு. ஆ. ஏசையன்

    
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்

Friday, September 23, 2011

இயேசுவின் கிருபை!!!!!!!!

 2 சாமுவேல்.9 : 6

சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்துவணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான்".

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். இக்காலத்தில், தேர்தலில் ஜெயித்து வருகிற கட்சிகள், செய்கிற முதல் காரியம், எதிர் கட்சியினரை கைது செய்வதுதான். இது எல்லா மாநிலத்திலும் நடக்கிறது. அதற்கான காரணம், அவர்கள் பலத்தை முடக்குவதற்காகவும், அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இவர்களை கைது செய்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் கூட இது மேற்கொள்ளப்படுகிறது. இது இப்போது தோன்றிய  பழக்கமல்ல அரசர்கள் காலத்திலிருந்தே இப்பழக்கம் உள்ளது.

அதாவது ஒரு தேசத்திற்கு ஒருவன் அரசனாக விரும்பினால், அத்தேசத்து அரசனை போரில் முறியடிக்க வேண்டும், அப்படி முறியடித்ததும், அரசனாகிவிடலாம், இப்படி புதிதாக பதிவி ஏற்கிற அரசனின் முதல் வேலை என்ன தெரியுமா? பழைய அரசனின் குடும்பத்தினர், உறவுகள் அத்தனை பேரையும் கொல்வதுதான். காரணம், அவர்கள் ஒருவேளை பழி வாங்கக்கூடும் என்ற அச்சமும், எதிரிகளே  இருக்கக் கூடாது என்கிற எண்ணமும் தான்.

நம்முடைய தியானப்பகுதி தாவீது அரசனான புதிதில் நடந்ததுதான்.   தாவீது அரசனாவதற்கு முன் நடந்த யுத்தத்தில், சவுல், அவன் குமாரன்  யோனத்தான், அவன் உறவுகளில், கிட்டத்தட்ட அனைவரும் இறந்தனர். தாவீதோ அதோடு நில்லாமல் சவுலின் குடும்பத்தில் யாராவது மீந்திருக்கிரார்களா? என்று கேட்கிறார். அப்போது சவுலின் வீட்டு வேலைக்காரன் சீபா என்பவன் சவுலின் மகனாகிய யோனத்தானுக்கு இரண்டு கால்களும் செயல்படாத ஒரு மகன் இருக்கிறான் என்றான். அவன் பெயர் மேவிபோசேத். உடனே தாவீது அவனை அழைத்து வர கட்டளை பிறப்பித்தான்.

மேவிபோசெத் தாவீதை காண வந்தபோது நடந்த சம்பவத்தைத்தான் நம்முடைய தியான பகுதியில் காண்கிறோம்.அவன் வந்து தாவீதின் கால்களில் முகம் குப்புற விழுகிறான். காரணம், சவுலும், தன் தகப்பனாகிய யோனத்தானும் மரித்துப்போனார்கள் என்ற செய்தி கேட்ட போதே பாதி மரித்துப்போயிருப்பான், இப்போது தன்னையும் தாவீது அழைத்து வந்திருப்பது அவனுக்குள் எவ்வளவு பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்? நிச்சயம் தனக்கு எதோ ஒரு பெரிய தண்டனை காத்திருக்கிறது என்பதை அவன் அறியாதவனல்ல.

ஆனால் தாவீதின் செயல்பாடுகளோ முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது, அவனை பெயர் சொல்லி அழைத்து, நீ பயப்படாதே, உன் தகப்பன் சொத்துக்கள் அனைத்தையும் உனக்கு தருவேன் என்று கூறுகிறார் ( 2 சாமுவேல் 9:7  )

இதைக்கேட்டு அதிர்ந்துப்போன மேவிபோசேத், செத்த நாயை போலிருக்கிற என்னை நோக்கி பார்க்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்று உணர்ச்சிப் பூர்வமாக தாவீதிற்கு  நன்றி கூறுகிறான். (2  சாமுவேல் 9:8)

அனபானவர்களே எவ்வளவு பெரிய ஆச்சரியம், தன் எதிரியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவனை தனக்கு இணையாக உயர்த்தும் மனம் யாருக்கு வரும்? அதை இமியளவும் மேவிபோசேத் எதிர்பார்க்க  வாய்ப்பே இல்லை எனவேதான் தன்னை செத்த நாயோடு ஒப்பிடுகிறார்.  ஆனால்  தாவிதிடம் இது மிகவும் சாத்தியமே.  காரணம் சவுலும் அவன் குமாரன் யோனத்தானும் மரித்த போது அதற்காக பெரிதும் வருந்தியவன்,  அவர்களை  கொல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினையாதவன். இதற்கு பெயர்தான் கிருபை.

இதே தாவீதின் வம்சத்தில்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தோன்றினார். ஆனால் தாவீதை விட கோடானு கோடி  மடங்கு கிருபையுள்ளவராய் திகழ்ந்தார், ஆம் பிரியமானவர்களே, நாம் அனைவரும், பாவத்தினிமித்தம் கடவுளிடம் சேர முடியாமல், அவருடைய நன்மைகளை பெற முடியாமல் அவருக்கு எதிரிகளாய் இருந்தோம், அவர் நம்மை பார்க்க கூட நமக்கு தகுதியில்லை.( சங்கீதம் .8:4) . ஆனால் இயேசு கிறிஸ்துவோ, நம் அனைவருக்காகவும், நம்முடைய பாவங்களுக்காகவும், தன் ஜீவனை சிலுவையில் ஒப்புக்கொடுத்து, நம்மை கடவுளின் பக்கத்தில் அல்ல, கடவுளின் பிள்ளைகளாய் சேர்த்துக்கொண்டார். இப்போது நாம் அனைவரும் கடவுளின் சொந்த பிள்ளைகள், அவரது முழு ஆசீர்வாதத்திற்கும் நாம்தான் வாரிசுகள்.

எனவே தைரியமாய், உரிமையாய் நம் தேவைகளை அவரிடம் சொல்லி பெற்றுக் கொள்வோம், தயங்குவதற்கு நாம் அவருக்கு அந்நியர்கள் அல்ல, சொந்த பிள்ளைகள். கிருபையுள்ள அவரது நன்மைகளில் களி கூறுவோம்.  ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, September 21, 2011

நீதியின் சூரியனாம் நமதாண்டவர்

மல்கியா.4 :2  (மலாக்கி.4 :2 )

என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்: நீங்கள் வெளியே புறப்பட்டு போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள்.


மல்கியா அல்லது மலாக்கி என்று அழைக்கப்படுகிற தீர்க்கதரிசி, இஸ்ரவேலின் ஆசாரியர்களும், மக்களும் ஆண்டவருடைய வார்த்தையை புரட்டி, தங்கள் சுய விருப்பப்படி வாழ்ந்த காலத்தில் தோன்றியவர் அவர்கள் செய்யும் பாவங்களை கடுமையாக எதிர்த்தவர்.

மல்கியா.3 :5  ல் இஸ்ரவேலர் கடவுளுக்கு விரோதமாக செய்த அத்தனை பாவங்களையும், அதற்கு வரப்போகிற தீர்ப்பையும் அறிவிக்கிறார்.

*நான் நியாய தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும், விபசாரருக்கும், பொய்யானை இடுகிறவர்களுக்கும், எனக்கு பயப்படாமல் விதவைகளும், திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும் விரோதமாய் தீவிரமான சாட்சியாய் இருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.* மல்கியா.3 :5 

அதே நேரத்தில் கடவுளுக்கு பயந்து வாழ்கிறவர்களுக்கு வரப்போகிற நன்மைகளையும் அவர் அறிவிக்கிறார். அதைதான் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கிறோம்.

கடவுளுக்கு பயந்து வாழ்கிறவர்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும் என்கிறார். நீதியின் சூரியன் என்பது என்ன?

மத்தேயு.4 :15  *இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்: மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது* என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மக்களை சந்தித்த காட்சியை மத்தேயு விளக்குகிறார். அப்படியானால் நீதியின் சூரியன் நம்முடைய ஆண்டவர்.


அவர் நம்மீது உதிப்பார், அவருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், அவர் வாழ்ந்த காலத்தில் அத்தனை  வியாதியஸ்தர்களையும் குணமாக்கினாரே, ஆம் அவர் நம்மீது உதிக்கும்போது நாம் ஆரோக்கியம் அடைகிறோம், நம் பலவீனங்கள்  எல்லாம்  பறந்துப் போகிறது. அது மட்டுமல்ல நாம் இவ்வுலகின் எத்திசையில் சென்றாலும் கொழுத்த கன்றுகளை போல வளருவோம். நம் வளர்ச்சி, நம் மேன்மை கொழுத்ததாக இருக்கும்.
காலை சூரியன் நம் மீது உதிக்கும் போது உடலுக்கு ஆரோக்கியம் தரும், இந்த நீதியின் சூரியனாம் நமதாண்டவர் நம் மீது உதிக்கும் போது உடல், பொருள், ஆவி, வாழ்வு அனைத்தும்  மேன்மை பெறும்.

இன்று இத்திரு வசனங்களின் வாயிலாக நீதியின் சூரியனாம், நமதாண்டவர் அவருக்கு பயந்திருக்கும்  நம்மீது உதித்திருக்கிறார், நிம்மதியாய் இந்நாளை துவங்குவாம், கொழுத்த கன்றாய் ஆரோக்கியத்திலும், வாழ்விலும், உலகின் எத்திசையிலும் வளருவோம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, September 19, 2011

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு ஸ்தோத்திரங்கள். நேற்று நமது இந்திய நாட்டின் வடப்பகுதியில் பூகம்பம் தாக்கியுள்ளது, சிக்கிமை மையமாக கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. சிக்கிமில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்குவங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை ஆராதனை முடித்துவிட்டு தொலைக்காட்சியை பார்த்தபோது இதுதான் முக்கிய செய்தியாக இருந்தது.

நம் வாழ்க்கை எவ்வளவு நிரந்தரமில்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு காலையும்  தைரியமாக விழிக்கிறோம், நமக்கு ஒன்றும் நேராது என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம். இப்படித்தான் பூகம்பம் நடந்த பகுதியில் வாழ்ந்த மக்களும் இருந்திருப்பார்கள். ஆனால் அழிவுகள் ஹைட்டி தீவுக்கோ, ஜப்பானுக்கோ மட்டுமல்ல யாருக்கும் நேரலாம் என்பதை இயற்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது. இப்படி இயற்கை ஒரு பக்கம்  மனித உயிர்களை வாரிக் கொண்டு போகிறது, இது போதாதென்று மனிதனே குண்டுகளை வைத்து உயிர்களை கொத்து கொத்தாக பறிக்கிறார்கள்.


ஆக்ராவில் ஒரு தனியார் மருத்துவ மனையில் குண்டு வைத்திருக்கிறார்கள். வைத்தது தீவிரவாதிகள் இல்லையாம் தொழில் போட்டியாக இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மனசாட்சியில்லாத மிருகங்களாய் மனிதர்களில் சிலர் மாறிவருகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மருத்துவம் கூட தொழிலாகிவிட்ட பிறகு இதெல்லாம் நடப்பதில் ஆச்சரியமில்லைதான்.

இதையெல்லாம் காணும்போது ஒரு சராசரி மனிதனாக எனக்குள் ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்த உலகத்தில் ஏன்  இப்படியெல்லாம் நடக்கிறது? இயற்கையும், மிருகங்களாய்  மாறிப்போன சில மனிதர்களும் உயிர்களை இப்படியே வாரிக்கொண்டு போனால் கடைசியில் என்ன நடக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் இன்று காலை நான் வேதாகமத்தை வாசிக்கும்போது ஒரு வசனம் என்னோடு பேசியது. அது

சங்கீதம் 31 : 24  கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் உங்கள் இருதயத்தில்
பலங்கொண்டு தைரியமாயிருங்கள்.  

நாம் இந்த நிரந்தரமற்ற உலகில், மனசாட்சியில்லா மிருகங்களாய் வாழும் சில மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறோம் ஆனால் சங்கீதக்காரன், கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள், பலங்கொண்டு தைரியமாய் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். காரணம் அவர் எப்போதுமே, பலவீனத்தோடு இருக்கிறவர்கள் பக்கத்தில் நிற்கிறவர். அவர்கள் துன்பங்களிலிருந்து விடுவிக்கிறவர். இஸ்ரவேல்  மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது கடவுள் இஸ்ரவேலர்கள் பக்கம்தான் நின்றார்.

கடவுள் எல்லாருக்கும் சொந்தமானவர், இவ்வுலகில் வாழும் அனைவரும் அவர் பிள்ளைகள், எகிப்தியர்களும்  அவரால் படைக்கப்பட்டவர்களே, அவருடைய பிள்ளைகளே, அவர் பட்சபாதம் உள்ளவரல்ல. ஆனால் கடவுளோ எகிப்தியர்கள் பக்கம் நிற்காமல் இஸ்ரவேலர்கள்  பக்கம் நின்றதற்கு காரணமென்ன, அவர்கள் துன்பத்தை அனுபவித்தார்கள். நம் கடவுள் எப்போதுமே துன்புருகிறவர்கள் பக்கம் நிற்கிறவர்.

இப்போதும்ஆண்டவர் மனசாட்சியோடும், அடுத்தவர்களுக்கு  தீங்கிழைக்காத
உள்ளத்தோடும் வாழ்ந்து துன்பங்களை அனுபவிக்கிரவர்களோடே இருக்கிறார். எனவே பயத்தை  தூக்கி எறிந்து பலங்கொண்டு தைரியமாயிருப்போம். இந்த நேரம் சில நிமிடம் நம் கண்களை மூடி பூகம்பத்திலும், குண்டு வெடிப்பிலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளோருக்காக ஜெபிப்போம். ஆண்டவர் நம்மை காத்தருள்வாரக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Friday, September 16, 2011

இயேசுவை நம்புங்கள்


அன்பான உடன் விசுவாசிகளுக்கு அன்பிற்கினிய ஸ்தோத்திரங்கள். சாலையில் பயணிக்கும் போது அனேக காட்சிகளை காண்கிறோம், அதில் சில சுவாரஸ்யமாக இருக்கும். அதே போல நேற்று நான் ஒரு சுவாரஸ்யமான காட்சியை காண நேர்ந்தது. ஒரு பெரிய கட்டிடத்திற்கு, வண்ணம் பூசும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. கட்டிடத்தின் மேலே இருவர் இரு கயிறுகளை  பிடித்திருந்தனர், அந்த கயிறுகள் கீழே ஒரு பலகையில் இணைக்கப்பட்டிருந்தது, அந்த பலகையில் ஒருவர் அந்தரத்தில் அமர்ந்து, சுவற்றில் வண்ணம் பூசிக் கொண்டிருந்தார். அந்த பலகையில் அமர்ந்திருப்பவர் மேலே பிடித்திருக்கிற இருவரை நம்பி தன் உயிரை பணையம் வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

அன்பானவர்களே நம் வாழ்வில் இப்படி பலரையும் நம்புகிறோம், குடும்பத்தினரை, உறவுகளை, மருத்துவர்களை,  காவல் துறையினரை, இராணுவத்தினரை, அரசாங்க அதிகாரிகளை, கல்வி துறையினரை. ஆனால் இவர்கள் எல்லாரும், எல்லா நேரங்களிலும் நம் நம்பிக்கைக்கு பாத்திரவான்களாக நடந்துக் கொள்வதில்லை.

யோவான் சுவிசேஷம்.14 ம் அதிகாரம் முதல் வசனத்தில், உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, கடவுளில் விசுவாசமாயிருக்கிறீர்களே, என்னிலும் விசுவாசமாயிருங்கள் என்று அவர் மீது நம்பிக்கை கொள்ள நம்மை அழைக்கிறார்.

நாம் ஏன் அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்?

நம் வாழ்வு நம் கட்டுப்பாட்டில் இல்லை, நம் வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளை நாம் புரிந்துக்  கொள்ளவும் முடிவதில்லை, நம் ஜீவன், நாம் பெற்றுக் கொள்ளும் நன்மைகள், வெற்றி தோல்வி, நம் பிறப்பு, இறப்பு எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இவை யாவும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆம் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று அதே யோவான் 14    ம் அதிகாரம்.6  வது வசனத்தில் கூறுகிறார். அப்படியானால், அவரை மிஞ்சி நம் வாழ்வில் எதுவும் நடந்துவிடாது. எனவே நம் வாழ்வில் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்பவர் அவர் ஒருவர்தான்.

9  ம்  சங்கீதம் 10 ௦ ம் வசனத்தில் தாவீது, கர்த்தாவே உம்மை தேடி வந்தவர்களை நீர் கை விட்டதில்லை: ஆதலால் உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறுகிறார்.

ஆம் அவர் தேடி வந்தவர்களை கை விடாதவர். அவர்கள் வாழ்வில்  எவ்வளவு பெரிய துன்பம் இருந்தாலும் அதை முற்றிலும் நீக்கி அவர்கள் விசுவாசத்திற்கு  முழு பலன் கொடுப்பவர். மீன் வயிற்றில் யோனா சிக்கிக்கொண்ட போது, மூன்று நாட்களும் ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார், பலன்... முழுதுமாக கடவுள் யோனாவை இரட்சித்தார். விழுங்கிய மீன் யோனாவை கரையில் கக்கியது. நம்பிக்கையோடு நாடி வருவோரை தள்ளாத நேசரவர்.

இப்போது அதே கடவுள் இயேசுகிறிஸ்துவாய்   நம்மை தேடி வருகிறார், நம்மை அழைக்கிறார். என்னில் விசுவாசமாயிருங்கள் என்று கூப்பிடுகிறார். தேடி போனாலே நன்மை தருகிறவர், இப்போது நன்மை செய்ய நம்மை தேடி வருகிறார், அவரை விசுவாசித்தால் நம் வாழ்வின் அத்துணை பிரச்சினைகளும் பறந்தோடுமே.... இயேசுவை நம்புங்கள்.. அவரையன்றி நம் வாழ வழியில்லை.. நம் எண்ணங்கள் நம் திட்டங்கள், அனைத்தும் நடந்தேற, வெற்றியும்  வளமும் வந்துசேர அவர் ஒருவரே வழி... ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, September 12, 2011

மனம் அமைதி பெற - 3



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். கடந்த பதிவில், நம் மனம் அமைதி பெற நமது பலத்தையும், நமது பலவீனத்தையும் நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று கண்டோம், நமது பலம், நமக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொள்ளும், நமது பலவீனம், நமக்கு அகந்தை வராமல் பார்த்துக் கொள்ளும். தாழ்வு மனப்பான்மையும், அகந்தையும் தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்.

எனவே நமது பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து  அதை முதலில் நாம் ஒப்புக் கொள்வது நம் மனதை பலப்படுத்திக் கொள்ள முதல் வழி.

பொதுவாக மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள், நாம் தனியாக இவ்வுலகில் வாழ வழியில்லை, அடுத்தவர்களோடு தான் நம் வாழ்க்கை இருக்கிறது. குடும்பத்தினரோடு, உறவுகளோடு, நண்பர்களோடு, சக பணியாளர்களோடு நாம் வாழ்ந்து வருகிறோம். பல நேரங்களில் இந்த சமூக வாழ்வே நம் மனதின் அமைதியை கெடுத்துவிடுகிறது. எனவே நம்மை சுற்றி இருக்கிறவர்களோடு நாம் எப்படி அணுகுவது என்பதை இந்த வாரம் பார்க்க போகிறோம்.

நமக்கு எப்படி பலமும் பலவீனமும் இருக்கிறதோ, அதே போல நம்முடைய சக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பலமும் பலவீனமும் இருக்கிறது. நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோமோ அவர்களுடைய பலத்தை மட்டுமே நாம் அறிந்திருப்போம், நாம் யாரை வெறுக்கிறோமோ அவர்களுடைய பலவீனத்தை மட்டுமே அறிந்திருப்போம். இதில் எப்போது பிரச்சினை வரும் என்றால், நாம் யாரை நல்லவர்கள் என்று நினைத்து பழகுகிறோமோ அவர்களுடைய பலவீனத்தை அறிய நேர்ந்தால் நம் உறவே கேட்டுப் போகும், அதே போல நாம் ஒருவனுடைய பலவீனத்தை கண்டு அவரை வெறுத்து தள்ளிவிட்டு, திடீரென அவரது ஒரு சிறந்த குணத்தை காண நேர்ந்தால் இவனுக்குள் இப்படியா என்று நம் கண்களை நம்ப முடியாமல், ஒன்றும் புரியாமல் திகைத்து போவோம், அவர்களை இழந்து விட்டோமே என்ற வருத்தம் உண்டாகும்.

இது யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையை உருவாக்கும். எனவே நாம் நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது, நாம் வெறுக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பலம் இருக்கிறது. இதை முதலில் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இராண்டாவது. நீங்கள் நேசிக்கிற ஒருவரிடம், மிக மோசமான, உங்களுக்கு பிடிக்காத  ஒருகுணம்  இருக்குமானால், அது உங்களுக்கு தெரிய வரும்போது என்ன செய்வீர்கள்? அவரோடு பழகினதையே கேவலமாய் உணர்ந்து, அந்த உறவை உடனே முறித்துக் கொள்ள முயல்வீர்களல்லவா? இதனால் உங்கள் அமைதி கேட்டுப்போகுமல்லவா?

தவறு அவர்களிடத்தில் இல்லை நம்மிடத்தில் உள்ளது, காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒரு பலவீனம் இருக்கிறது என்பதை நாம் உணராமல் பழகுவதால் வருகிற விளைவு இது. அப்படியொரு அனுபவம் உங்கள் வாழ்வில் வருமானால் அப்படிப்பட்டவர்களை உடனே வெறுத்து தள்ளாதீர்கள், அவருக்கு இருக்கிற பலவீனத்தை ஒப்புக்கொள்ளுங்கள். அந்த பலவீனத்தில் அவர்களுக்கு ஆதரவாய் இருந்து அதிலிருந்து வெளிவர உதவுங்கள். அதே நேரத்தில் மிக மோசமான அருவருக்கத்தக்க விஷயங்கள் காணப்படுமானால் நம் நெருங்கிய உறவுகளாக இருந்தால் பயந்துவிடாமல், வெறுக்காமல், அமைதியாக அதற்கான மாற்று வழிகளை யோசியுங்கள். நண்பர்களிடத்திலோ மற்றவர்களிடத்திலோ  காணப்படுமானால் அவர்களைவிட்டு விலகிவிடுவது நல்லது.

அதே போல யாரையும் மேலோட்டமாக கண்டு அவர்கள் செய்யும் சிறிய தவறுகளில் உடனே அவர்கள் மிக மோசமானவர்கள் என்று முடுவுக்கட்டிவிடாதீர்கள். நம் உறவினர்களில் நமது குடும்ப பிள்ளைகளில் இப்படி சிறிய தவறு செய்பவர்களை மிக மோசமானவர்கள் என்று முடிவுக் கட்டி அவர்களை ஒதுக்கிவிடுவோம். அவர்களை கெட்டவர்கள்  என்கிற கண்ணோட்டத்திலேயே காண்போம், இதனால் அவர்களுக்குள் இருக்கிற பலம் வெளிவராமலேயே போய்விடும்.

எனவே நாம் யாரோடெல்லாம் பழகுகிறோமோ, அவர்கள் அனைவருக்குள்ளும், பலமும் இருக்கிறது பலவீனமும் இருக்கிறது. இந்த அடிப்படை உண்மை உணர்ந்து அடுத்தவர்களோடு பழகுவது  நம் உறவு கெடாமல் பார்த்துக்கொள்ளும், நம் மனமும் அமைதி பெரும். இப்பகுதி புரிந்துக் கொள்ள கொஞ்சம் சிக்கலானது, எனவே சந்தேகங்கள் இருப்பின்    கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, September 10, 2011

முடியாது என்று சொன்னால் விட்டுவிடுவாரா

கிறிஸ்துவுக்குள் அன்பான எனதருமை உடன் விசுவாசிகளே, உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். கடந்த சில தினங்களாக என்னால் பதிவிடவோ வாக்குத்தத்த வசன குறுஞ்செய்தி அனுப்பவோ இயலவில்லை. காரணம் எனது இணையதள இணைப்பு செயல்படவில்லை. இப்போதுதான், அது இயங்குகிறது. அதற்காக வருந்துகிறேன். இப்போது நாம் ஞாயிற்றுக் கிழமைக்குறிய திரு வசனங்களை தியானிப்போம்.

ஞாயிறு திரு வசனங்கள்.( பிரசங்க வாக்கியம் ஏசாயா )

 ஏசாயா.56 :1 , 6 -8 .
ரோமர்.11 :13 -15 , 29 -32 
மத்தேயு.15 :21 -28 

அன்பானவர்களே, நாம் பேசும்போது நம்முடைய வார்த்தைகளில் கவனம் இருக்க வேண்டும், எனவேதான் திருவள்ளுவர் யாகாவாராயினும் நாகாக்க என்கிறார். அதுவும் பெண்களோடு பேசும்போது நம் வார்த்தைகளில் கண்ணியம் இருக்க வேண்டும். இன்றைக்குரிய நம்முடைய சுவிசேஷ பகுதியில் (மத்தேயு.15 :21 -28 ) ஆண்டவர் ஒரு கானானிய பெண்ணிடம் பேசுகிற வார்த்தைகளை காண்கிறோம், அவள் தன மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுவதாகவும், அவளை விடுவிக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறாள். ஆண்டவரோ அவளுக்கு பிரதியுத்தரமாக ஒன்றும் பேசவில்லை. தொடர்ந்து அவள் நச்சரிப்பதை விரும்பாத சீடர்கள் அவளை அனுப்பிவிடும்படி ஆண்டவருக்கு ஆலோசனை சொல்லுகின்றனர். உடனே ஆண்டவர் நான் இஸ்ரவேலருக்காக வந்தேன் என்றும் உங்களுக்கல்ல என்றும் சொல்லி உதவ மறுக்கிறார்.

ஆனால் அவளோ விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அப்போது ஆண்டவர் அவளை நோக்கி ஒரு கண்ணியமற்ற வார்த்தையை உதிர்க்கிறார். பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய் குட்டிகளுக்கு போடுவது நல்லதல்ல என்கிறார். இவ்வளவு கண்ணியமற்ற வார்த்தையை ஆண்டவர் சொன்ன பிறகும் அவள் மிகவும் பணிவாக மேசையிலிருந்து விழும் துணிக்கைகளை நாய்கள் தின்னுமே என்கிறாள். ஏன் ஆண்டவர்  இவ்வளவு கண்ணியமற்ற வார்த்தையை உதிர்த்த பிறகும் அவள் அவரை பணிவோடு வேண்டுகிறாள்? கோபத்தோடு போயிருக்க வேண்டாமா? இவ்வளவு மோசமாக பேசுகிற ஒருவரிடம் தொடர்ந்து பேச வேண்டிய அவசியம் என்ன?

இது ஒன்றும் அக்கால மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வார்த்தை அல்ல ஒவ்வொரு யூதனும், புறவின மக்களை நாய்கள் என்றுதான் கூறுவார்கள். அவர்கள் மிக சாதாரணமாக பயன்படுத்துகிற வார்த்தை அது. எனவேதான் அவளுக்கு அது ஆச்சரியத்தை தரவில்லை. அதுசரி அவளுக்கு வேண்டுமானால் அது ஆச்சரியமல்ல. ஆனால் நமக்கு இது வியப்பை தருகிறதல்லவா? யூதர்கள் பேசலாம்.. முழு உலகையும் நேசிக்கும் ஆண்டவர், பட்சபாதமில்லா கடவுள், அவர் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தை வரலாமா? உண்மைதான் ஆனால் அவர் அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் அவளின் விசுவாசம் அவளை விரட்டிவிடுவதில்  குறியாக  இருந்த சீடர்களுக்கும், புறவினத்தாரை நாய்கள் என்று நாகூசாமல் சொல்லும் யூதர்களுக்கும் தெரியாமல் போயிருக்கும்.

எனவேதான் அவள் தன் விசுவாசத்தை ஆண்டவரிடம் வெளிப்படுத்திய உடனே, கூடியிருந்த சீடர்களுக்கும், யூதர்களுக்கும்  முன்பாக அம்மா உன் விசுவாசம் பெரிது என்று அவள் விசுவாசத்து ஆண்டவர் சாட்சியாக அறிவித்தார். மாத்திரமல்ல அந்நேரமே அவள் மகளை சுகமாக்கினார். இதுதான் நம் கடவுளின் குணம் அவருக்கு மக்களில் எந்த வேறுபாடும் இல்லை, எல்லாரும் அவர் ஜனம், அவரை விசுவாக்கிற அனைவருக்கும் அவர் நன்மை செய்கிறவர். இதுதான்  என் குணம் என்று கடவுள் இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே அறிவித்த பகுதிதான் இன்றைக்குரிய நம்முடைய தியானப்பகுதியாகிய பழைய ஏற்பாட்டு பகுதி. (ஏசாயா.56 :1 , 6 -8 .)

சிறையிருப்பில் இருக்கிற இஸ்ரவேலர்களுக்கு கடவுள் உங்களனைவரையும் வரவழைப்பேன் என்று ஆறுதல் கூறுகிறார், அதே நேரத்தில் அவர் கூறுவது, உங்களை மட்டுமல்ல கர்த்தரை அதாவது தன்னை நேசிக்கிற, ஊழியத்தை செய்ய விரும்புகிற அந்நிய புத்திரர் அனைவரையும் வரவழைப்பேன் என்கிறார். காரணம் அவர் யூதர்களுக்கான கடவுளல்ல, முழு உலகின் கடவுள் அதை கடவுள் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார், ஆனால் யூதர்கள் அதை ஒப்புக்கொள்ளவில்லை. யார் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும், தன் சித்தத்தை நிறைவேற்றுகிற கடவுள், கிறிஸ்துவில் தன் சித்தத்தை நிறைவேற்றினதைதான் முன்னதாக சுவிசேஷ வாக்கியத்தில் நாம் கண்டோம், அதுமட்டுமல்ல முழு உலகிற்காய் தன் ஜீவனையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். 

இதைதான் பவுல் ரோமர்.11 :13 -15 , 29 -32  இந்த வசனங்களில் விளக்குகிறார்.

ஆனால் இன்றும் நாம் பிரிவினைகள் பேசிக்கொண்டிருக்கிறோம். எல்லாரையும் நேசிக்கும் உண்மையான கிறிஸ்தவ அன்பு மிகவும் அதல பாதாளத்திற்கு போயிருக்கிறது. ஒரு முறை நான் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்த பொது இருவர் பேசுவதை கேட்க நேரிட்டது, அவர்களில் ஒருவர் சொன்னது கிறிஸ்தவனுங்க கல்யாணத்திற்கே போகக்கூடாதுப்பா அவனுங்க ஆள் பார்த்து சாப்பாடு போடறானுங்க என்றார். இந்த லட்சனத்திலிருக்கிறது நமது அன்பு. அதுமட்டுமா, இன்னும் எவ்வளவு கிறிஸ்தவ அன்பில் விலகியிருக்கிறோம் என்பதற்கு அனேக உதாரணங்கள் இருக்கிறது, அதில் ஒன்று, தற்போதைய சூழலில் சபைகளில் குழுக்கள் பெருகிவிட்டது, அரசியலுக்காக பதவிக்காக, தாங்கள் சம்பாதிப்பதற்காக, விசுவாசிகளின் பணத்தை உறிஞ்சுவதற்காக.

அதைவிட கொடுமை, தனக்கு யார் ஆதரவாய் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் அன்பு செலுத்துவது. நடு நிலையாளர்களுக்கோ, எதிர் குழுவில் இருக்கிறவர்களுக்கோ துளியும் அன்பு செலுத்துவதில்லை, விரோதியை போல பாவிக்கிற மனோபாவம் வளர்ந்து செழிக்க துவங்கியிருக்கிறது. ஊழியர்களை தெரிந்தெடுப்பதில்  கூட நன்றாக ஊழியம் செய்கிறாரா என்று பார்ப்பதில்லை, நல்ல ஒழுக்கம் உள்ளவரா என்று பார்ப்பதில்லை நமக்கு ஆதரவாய் இருக்கிறாரா என்று மட்டுமே பார்க்கிற கடின மனம் வளர்ந்திருக்கிறது.  இதனால்தான் ஊழியங்கள் எல்லாம், பணம் பறிக்கும் நிறுவனங்களாய்  மாறிப் போயிருக்கிறது. இதற்கு மேல் என்ன சொல்வது? ஆனால் இதெல்லாம் அவர் சித்தமல்ல, அவர் சித்தம் என்னவோ அதுதான் நிறைவேறும்.

அப்படியானால் என்ன அர்த்தம், இந்த எண்ணங்கள் கொண்டோரின் திட்டங்கள் நிறைவேறாது என்று அர்த்தம். கிறிஸ்து வேண்டும், அவர் ஆசீர்வாதங்கள் வேண்டும், அவர் விருப்பத்தை மட்டும் எங்களால் நிறைவேற்ற முடியாது என்கிறோம். முடியாது என்று நாம் சொன்னால் அவர் விட்டுவிடுவாரா என்ன? நம் எண்ணங்களை தலைக் கீழாக்கி அவர் சித்தத்தை நிறைவேற்றுவார். அதற்குள் நம்மை நாம் சோதித்தறிந்து அவர் சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுப்பது நல்லது. பரிசுத்தாவியானவர் தாமே நமக்கு துணை புரிவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, September 7, 2011

இயேசுவின் குரல்

அன்பின் உடன் விசுவாசிகளுக்கு என் அன்பிற்கினிய ஸ்தோத்திரங்கள். நம்மை படைத்து, நமக்காய் மனுவாகி, நம் பாவம் போக்க பலியாகி, நம் இரட்சிப்புக்காய் உயிர்த்தெழுந்து,  நம்மோடு என்றென்றும் ஜீவித்து வரும் நமதாண்டவர் இயேசுவின் நாமத்தை கூறி அறிவிப்பது, என் வாழ்வில் நான் பெற்றுக் கொண்ட என் பாக்கியம். நான் பகிர்ந்துக் கொள்ளும் வார்த்தைகள் என் வார்த்தைகளல்ல, வாழ்வருளும் ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.

அவர் வார்த்தைகளை அறிவிக்க அனைத்து ஊடக வழிகளையும்    பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்பது எனது ஆவல். அதற்கான எனது முயற்சிதான் இந்த இணையதளம். வணிகம் திரைப்படம் என்ற வியாபாரம் சார்ந்த தளங்களுக்கு மத்தியில் மெய் வாழ்வருளும் இயேசுவின் வார்த்தைகளை தாங்கி நிற்கும் தளமாக, நம் தளம் நிற்பதில் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி. நான் எதிர்பார்த்ததை விட  இதன் வாசகர்கள் குறைவுதான். ஆனால் விதைக்கிறது மட்டுமே என் வேலை அவர் விளைய செய்வார். இந்த தளம் உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாயுள்ளது என்று நீங்கள் என்னோடு தாராளமாய் பகிரலாம். கருத்துரையிலோ இமெயில் வழியாகவோ நீங்கள் தெறிவிக்கலாம்.

தற்போது,  இயேசுவின் குரல் என்ற பத்திரிகை ஊழியத்தை துவங்கவிருக்கிறேன். ஆனால் இம்முறை நான் மட்டும் தனியாக அல்ல, நான் ஏற்கெனவே அறிவித்த படி எனது நண்பரும், சகோதரருமான திரு.பாரத் அவர்களோடிணைந்து இதை துவக்குகிறேன். நிச்சயமாக அடுத்த மாதத்திற்குள் இயேசுவின் குரல் உங்கள் கரங்களில் கிடைக்கும்.  உங்கள் நண்பர்களுக்கு உறவினர்களுக்கு முக்கியமாக  கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்யுங்கள். இந்த பத்திரிகை ஊழியத்தை அறிமுகம் செய்யுங்கள். உங்கள் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாருடைய முகவரியை அனுப்புங்கள் அவர்களுக்கு உங்கள் இனிய பரிசாக இயேசுவின் குரல் பத்திரிக்கையை  அனுப்பி வைக்கிறோம்.

ஊக்கமாய் ஜெபியுங்கள். அவர் மட்டுமே காரியத்தை வாய்க்க செய்கிறவர். அவர் நாமம் மகிமையுற இனைந்து செயலாற்றுவோம்.  நம்மை கொடிய பாவத் தழலிலிருந்து  மீட்டு  இரட்சித்த, நம் இரட்சகர் இயேசுவின் நாமத்தை கூறி அறிவிப்போம். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, September 6, 2011

அவரை சொல்லுங்கள்

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு " 2 தீமோத்தேயு 4:2

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பிற்கினிய ஸ்தோத்திரங்கள். கடந்த  ஞாயிற்றுக் கிழமை மாலை ஆராதனை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் ஒரு இடத்தில்  ஏராளமான வாலிபர்களும்,  காவல் துறை அதிகாரிகளும் கூடியிருந்தனர். ஒருவித படபடப்பு அங்கே காணப்பட்டது. என்ன என்று விசாரித்த பொது, சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில், ஏற்பட்ட தகராறு என்றும், திரைப்படத்தின் கதாநாயகனை யாரோ ஒருவர்  தவறாக விமர்சிக்க மற்றவர்கள் அவரை அடித்திருக்கிறார்கள்.

 தமிழ்நாட்டில் இது மிகவும் சாதாரணமாக நடக்கிற சம்பவம்,  ஏன் திரைப்படத்திற்கும் அதன் கதா நாயகனுக்கும், இவ்வளவு ஆர்பாட்டம்? ஒரே ஒரு காரணம் தான், திரைப்படம்  மூன்று மணி நேரம் என்றால், அந்த மூன்று மணி நேரம், திரைப்படமும், அதில் தோன்றும் கதா நாயகனும், நம்மை, நம் சூழ்நிலையை, நம் கவலைகளை மறக்க செய்து, அந்த திரைப்படத்தில் இலயிக்க செய்துவிடுகிறார்கள்.  துன்பங்களை நீக்குவதில்லை, அதை ஒரு மூன்று மணி நேரம் மட்டும் மறக்க செய்கிறார்கள், திரைப்படம் முடிந்ததும், நம் வாழ்வுக்கு வேகமாக ஓட வேண்டும். மூன்று மணி நேரம் தன் கவலைகளை மறக்க செய்கிற ஒரு நடிகனை தலைவன் என்று கொண்டாடுகிறோம், பணத்தை வாரி இறைத்து திரைப்படத்தை பல முறை பார்க்கிறோம், சிலர் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

இணைய தளங்களிலும், facebook லும், twitter லும், படத்தை போய் பாருங்கள் என்று சிலாகித்து எழுதுகிறார்கள். இதையெல்லாம், சரி என்றோ தவறு என்றோ நான் விமர்சிக்கவில்லை. எனக்கு இவை ஆச்சரியத்தையும் தரவில்லை.

ஆனால் ஒரேயொரு விஷயம் மட்டும் எனக்கு ஆச்சரியத்தை  தருகிறது, அதென்னவென்றால், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று, கூவி அழைத்து நம் பாரங்களைஎல்லாம், சுமந்து நம்மை சமாதானமாய் நடத்தி வரும் மெய்யான ஆண்டவராம் இயேசுவை அறிவிப்பதிலும் அவர் ஊழியத்தை செய்வதிலும் ஏன் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதுதான் எனக்கு ஆச்சரியம். அவரை அறிவிப்பதில் இருக்கிற மகிழ்ச்சி, அவர் நாமத்திர்காய் கொடுப்பதில் இருக்கிற மகிழ்ச்சி இவ்வுலகில் எதிலும் இல்லை, இதை நான் வார்த்தையில் சொல்லவில்லை   ஒவ்வொரு நாளும் அனுபவித்து சொல்லுகிறேன்,

எனக்கும் கவலைகள் இல்லாமல் இல்லை, போராட்டங்கள் இல்லாமல் இல்லை, சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் ஆண்டவரை அறிவிக்கும் ஊழியமும், அவர் நாமத்திற்காய் நான் செலவிடுவதும், மன நிறைவை தருகிறது, அதுமட்டுமல்ல, என் வாழ்வின் தேவைகளை அவர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இதையெல்லாம் தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து உணர்ந்தவர் பவுல் எனவே தான் தீமோத்தேயுவுக்கு அவர் சொல்லுகிற அறிவுரை சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை பிரசங்கி என்பதே.


நான் இந்த தளத்திற்கு பதிலாக ஒரு திரைப்படம் சார்ந்த தளம் உருவாக்கியிருந்தால் இந்நேரம் இது உலகம் முழுக்க பிரசித்தியாகியிருக்கும், காரணம் நமக்கு அதில் இருக்கிற ஆர்வம் ஊழியத்தில் இல்லை. எத்தனை பேர் இதை உங்கள் நண்பர்களுக்கு அறிவித்தீர்கள், பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினீர்கள்? இலவசமாய் கிடைக்கிற இறைவனின் வார்த்தையை பகிர்ந்துக் கொள்ளக்கூட நாம் ஆர்வம் காட்டாமல் இருக்கிறோமே?

அவரை சொல்லுங்கள், அவரை சொல்லுகிற ஊழியங்களை பெருக்குங்கள், ஊழியங்களை மேன்மை படுத்துங்கள், தாங்குங்கள், ஊழியத்தை பிரபலப்படுத்துங்கள் அதுதான் நமக்கு மேன்மை தரும். 

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews