WORD OF GOD

WORD OF GOD

Tuesday, September 6, 2011

அவரை சொல்லுங்கள்

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு " 2 தீமோத்தேயு 4:2

கிறிஸ்துவுக்குள் அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பிற்கினிய ஸ்தோத்திரங்கள். கடந்த  ஞாயிற்றுக் கிழமை மாலை ஆராதனை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் ஒரு இடத்தில்  ஏராளமான வாலிபர்களும்,  காவல் துறை அதிகாரிகளும் கூடியிருந்தனர். ஒருவித படபடப்பு அங்கே காணப்பட்டது. என்ன என்று விசாரித்த பொது, சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில், ஏற்பட்ட தகராறு என்றும், திரைப்படத்தின் கதாநாயகனை யாரோ ஒருவர்  தவறாக விமர்சிக்க மற்றவர்கள் அவரை அடித்திருக்கிறார்கள்.

 தமிழ்நாட்டில் இது மிகவும் சாதாரணமாக நடக்கிற சம்பவம்,  ஏன் திரைப்படத்திற்கும் அதன் கதா நாயகனுக்கும், இவ்வளவு ஆர்பாட்டம்? ஒரே ஒரு காரணம் தான், திரைப்படம்  மூன்று மணி நேரம் என்றால், அந்த மூன்று மணி நேரம், திரைப்படமும், அதில் தோன்றும் கதா நாயகனும், நம்மை, நம் சூழ்நிலையை, நம் கவலைகளை மறக்க செய்து, அந்த திரைப்படத்தில் இலயிக்க செய்துவிடுகிறார்கள்.  துன்பங்களை நீக்குவதில்லை, அதை ஒரு மூன்று மணி நேரம் மட்டும் மறக்க செய்கிறார்கள், திரைப்படம் முடிந்ததும், நம் வாழ்வுக்கு வேகமாக ஓட வேண்டும். மூன்று மணி நேரம் தன் கவலைகளை மறக்க செய்கிற ஒரு நடிகனை தலைவன் என்று கொண்டாடுகிறோம், பணத்தை வாரி இறைத்து திரைப்படத்தை பல முறை பார்க்கிறோம், சிலர் பாலாபிஷேகம் செய்கின்றனர்.

இணைய தளங்களிலும், facebook லும், twitter லும், படத்தை போய் பாருங்கள் என்று சிலாகித்து எழுதுகிறார்கள். இதையெல்லாம், சரி என்றோ தவறு என்றோ நான் விமர்சிக்கவில்லை. எனக்கு இவை ஆச்சரியத்தையும் தரவில்லை.

ஆனால் ஒரேயொரு விஷயம் மட்டும் எனக்கு ஆச்சரியத்தை  தருகிறது, அதென்னவென்றால், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று, கூவி அழைத்து நம் பாரங்களைஎல்லாம், சுமந்து நம்மை சமாதானமாய் நடத்தி வரும் மெய்யான ஆண்டவராம் இயேசுவை அறிவிப்பதிலும் அவர் ஊழியத்தை செய்வதிலும் ஏன் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. அதுதான் எனக்கு ஆச்சரியம். அவரை அறிவிப்பதில் இருக்கிற மகிழ்ச்சி, அவர் நாமத்திர்காய் கொடுப்பதில் இருக்கிற மகிழ்ச்சி இவ்வுலகில் எதிலும் இல்லை, இதை நான் வார்த்தையில் சொல்லவில்லை   ஒவ்வொரு நாளும் அனுபவித்து சொல்லுகிறேன்,

எனக்கும் கவலைகள் இல்லாமல் இல்லை, போராட்டங்கள் இல்லாமல் இல்லை, சவால்கள் இல்லாமல் இல்லை, ஆனால் ஆண்டவரை அறிவிக்கும் ஊழியமும், அவர் நாமத்திற்காய் நான் செலவிடுவதும், மன நிறைவை தருகிறது, அதுமட்டுமல்ல, என் வாழ்வின் தேவைகளை அவர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இதையெல்லாம் தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து உணர்ந்தவர் பவுல் எனவே தான் தீமோத்தேயுவுக்கு அவர் சொல்லுகிற அறிவுரை சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை பிரசங்கி என்பதே.


நான் இந்த தளத்திற்கு பதிலாக ஒரு திரைப்படம் சார்ந்த தளம் உருவாக்கியிருந்தால் இந்நேரம் இது உலகம் முழுக்க பிரசித்தியாகியிருக்கும், காரணம் நமக்கு அதில் இருக்கிற ஆர்வம் ஊழியத்தில் இல்லை. எத்தனை பேர் இதை உங்கள் நண்பர்களுக்கு அறிவித்தீர்கள், பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினீர்கள்? இலவசமாய் கிடைக்கிற இறைவனின் வார்த்தையை பகிர்ந்துக் கொள்ளக்கூட நாம் ஆர்வம் காட்டாமல் இருக்கிறோமே?

அவரை சொல்லுங்கள், அவரை சொல்லுகிற ஊழியங்களை பெருக்குங்கள், ஊழியங்களை மேன்மை படுத்துங்கள், தாங்குங்கள், ஊழியத்தை பிரபலப்படுத்துங்கள் அதுதான் நமக்கு மேன்மை தரும். 

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews