WORD OF GOD

WORD OF GOD

Monday, September 12, 2011

மனம் அமைதி பெற - 3



அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள். கடந்த பதிவில், நம் மனம் அமைதி பெற நமது பலத்தையும், நமது பலவீனத்தையும் நாம் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று கண்டோம், நமது பலம், நமக்கு தாழ்வு மனப்பான்மை வராமல் பார்த்துக் கொள்ளும், நமது பலவீனம், நமக்கு அகந்தை வராமல் பார்த்துக் கொள்ளும். தாழ்வு மனப்பான்மையும், அகந்தையும் தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்.

எனவே நமது பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து  அதை முதலில் நாம் ஒப்புக் கொள்வது நம் மனதை பலப்படுத்திக் கொள்ள முதல் வழி.

பொதுவாக மனிதர்களாகிய நாம் சமூக விலங்குகள், நாம் தனியாக இவ்வுலகில் வாழ வழியில்லை, அடுத்தவர்களோடு தான் நம் வாழ்க்கை இருக்கிறது. குடும்பத்தினரோடு, உறவுகளோடு, நண்பர்களோடு, சக பணியாளர்களோடு நாம் வாழ்ந்து வருகிறோம். பல நேரங்களில் இந்த சமூக வாழ்வே நம் மனதின் அமைதியை கெடுத்துவிடுகிறது. எனவே நம்மை சுற்றி இருக்கிறவர்களோடு நாம் எப்படி அணுகுவது என்பதை இந்த வாரம் பார்க்க போகிறோம்.

நமக்கு எப்படி பலமும் பலவீனமும் இருக்கிறதோ, அதே போல நம்முடைய சக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பலமும் பலவீனமும் இருக்கிறது. நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோமோ அவர்களுடைய பலத்தை மட்டுமே நாம் அறிந்திருப்போம், நாம் யாரை வெறுக்கிறோமோ அவர்களுடைய பலவீனத்தை மட்டுமே அறிந்திருப்போம். இதில் எப்போது பிரச்சினை வரும் என்றால், நாம் யாரை நல்லவர்கள் என்று நினைத்து பழகுகிறோமோ அவர்களுடைய பலவீனத்தை அறிய நேர்ந்தால் நம் உறவே கேட்டுப் போகும், அதே போல நாம் ஒருவனுடைய பலவீனத்தை கண்டு அவரை வெறுத்து தள்ளிவிட்டு, திடீரென அவரது ஒரு சிறந்த குணத்தை காண நேர்ந்தால் இவனுக்குள் இப்படியா என்று நம் கண்களை நம்ப முடியாமல், ஒன்றும் புரியாமல் திகைத்து போவோம், அவர்களை இழந்து விட்டோமே என்ற வருத்தம் உண்டாகும்.

இது யாரையும் நம்ப முடியாத சூழ்நிலையை உருவாக்கும். எனவே நாம் நேசிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது, நாம் வெறுக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பலம் இருக்கிறது. இதை முதலில் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இராண்டாவது. நீங்கள் நேசிக்கிற ஒருவரிடம், மிக மோசமான, உங்களுக்கு பிடிக்காத  ஒருகுணம்  இருக்குமானால், அது உங்களுக்கு தெரிய வரும்போது என்ன செய்வீர்கள்? அவரோடு பழகினதையே கேவலமாய் உணர்ந்து, அந்த உறவை உடனே முறித்துக் கொள்ள முயல்வீர்களல்லவா? இதனால் உங்கள் அமைதி கேட்டுப்போகுமல்லவா?

தவறு அவர்களிடத்தில் இல்லை நம்மிடத்தில் உள்ளது, காரணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஒரு பலவீனம் இருக்கிறது என்பதை நாம் உணராமல் பழகுவதால் வருகிற விளைவு இது. அப்படியொரு அனுபவம் உங்கள் வாழ்வில் வருமானால் அப்படிப்பட்டவர்களை உடனே வெறுத்து தள்ளாதீர்கள், அவருக்கு இருக்கிற பலவீனத்தை ஒப்புக்கொள்ளுங்கள். அந்த பலவீனத்தில் அவர்களுக்கு ஆதரவாய் இருந்து அதிலிருந்து வெளிவர உதவுங்கள். அதே நேரத்தில் மிக மோசமான அருவருக்கத்தக்க விஷயங்கள் காணப்படுமானால் நம் நெருங்கிய உறவுகளாக இருந்தால் பயந்துவிடாமல், வெறுக்காமல், அமைதியாக அதற்கான மாற்று வழிகளை யோசியுங்கள். நண்பர்களிடத்திலோ மற்றவர்களிடத்திலோ  காணப்படுமானால் அவர்களைவிட்டு விலகிவிடுவது நல்லது.

அதே போல யாரையும் மேலோட்டமாக கண்டு அவர்கள் செய்யும் சிறிய தவறுகளில் உடனே அவர்கள் மிக மோசமானவர்கள் என்று முடுவுக்கட்டிவிடாதீர்கள். நம் உறவினர்களில் நமது குடும்ப பிள்ளைகளில் இப்படி சிறிய தவறு செய்பவர்களை மிக மோசமானவர்கள் என்று முடிவுக் கட்டி அவர்களை ஒதுக்கிவிடுவோம். அவர்களை கெட்டவர்கள்  என்கிற கண்ணோட்டத்திலேயே காண்போம், இதனால் அவர்களுக்குள் இருக்கிற பலம் வெளிவராமலேயே போய்விடும்.

எனவே நாம் யாரோடெல்லாம் பழகுகிறோமோ, அவர்கள் அனைவருக்குள்ளும், பலமும் இருக்கிறது பலவீனமும் இருக்கிறது. இந்த அடிப்படை உண்மை உணர்ந்து அடுத்தவர்களோடு பழகுவது  நம் உறவு கெடாமல் பார்த்துக்கொள்ளும், நம் மனமும் அமைதி பெரும். இப்பகுதி புரிந்துக் கொள்ள கொஞ்சம் சிக்கலானது, எனவே சந்தேகங்கள் இருப்பின்    கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

No comments:

Post a Comment

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews