மல்கியா.4 :2 (மலாக்கி.4 :2 )
என் நாமத்துக்கு பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்: அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்: நீங்கள் வெளியே புறப்பட்டு போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள்.
மல்கியா அல்லது மலாக்கி என்று அழைக்கப்படுகிற தீர்க்கதரிசி, இஸ்ரவேலின் ஆசாரியர்களும், மக்களும் ஆண்டவருடைய வார்த்தையை புரட்டி, தங்கள் சுய விருப்பப்படி வாழ்ந்த காலத்தில் தோன்றியவர் அவர்கள் செய்யும் பாவங்களை கடுமையாக எதிர்த்தவர்.
மல்கியா.3 :5 ல் இஸ்ரவேலர் கடவுளுக்கு விரோதமாக செய்த அத்தனை பாவங்களையும், அதற்கு வரப்போகிற தீர்ப்பையும் அறிவிக்கிறார்.
*நான் நியாய தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும், விபசாரருக்கும், பொய்யானை இடுகிறவர்களுக்கும், எனக்கு பயப்படாமல் விதவைகளும், திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக் கொள்ளுகிறவர்களுக்கும் விரோதமாய் தீவிரமான சாட்சியாய் இருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.* மல்கியா.3 :5
அதே நேரத்தில் கடவுளுக்கு பயந்து வாழ்கிறவர்களுக்கு வரப்போகிற நன்மைகளையும் அவர் அறிவிக்கிறார். அதைதான் இன்றைய தியான வசனத்தில் நாம் வாசிக்கிறோம்.
கடவுளுக்கு பயந்து வாழ்கிறவர்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும் என்கிறார். நீதியின் சூரியன் என்பது என்ன?
மத்தேயு.4 :15 *இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்: மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது* என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மக்களை சந்தித்த காட்சியை மத்தேயு விளக்குகிறார். அப்படியானால் நீதியின் சூரியன் நம்முடைய ஆண்டவர்.
அவர் நம்மீது உதிப்பார், அவருடைய செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும், அவர் வாழ்ந்த காலத்தில் அத்தனை வியாதியஸ்தர்களையும் குணமாக்கினாரே, ஆம் அவர் நம்மீது உதிக்கும்போது நாம் ஆரோக்கியம் அடைகிறோம், நம் பலவீனங்கள் எல்லாம் பறந்துப் போகிறது. அது மட்டுமல்ல நாம் இவ்வுலகின் எத்திசையில் சென்றாலும் கொழுத்த கன்றுகளை போல வளருவோம். நம் வளர்ச்சி, நம் மேன்மை கொழுத்ததாக இருக்கும்.
காலை சூரியன் நம் மீது உதிக்கும் போது உடலுக்கு ஆரோக்கியம் தரும், இந்த நீதியின் சூரியனாம் நமதாண்டவர் நம் மீது உதிக்கும் போது உடல், பொருள், ஆவி, வாழ்வு அனைத்தும் மேன்மை பெறும்.
இன்று இத்திரு வசனங்களின் வாயிலாக நீதியின் சூரியனாம், நமதாண்டவர் அவருக்கு பயந்திருக்கும் நம்மீது உதித்திருக்கிறார், நிம்மதியாய் இந்நாளை துவங்குவாம், கொழுத்த கன்றாய் ஆரோக்கியத்திலும், வாழ்விலும், உலகின் எத்திசையிலும் வளருவோம். ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment