அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு ஸ்தோத்திரங்கள். நேற்று நமது இந்திய நாட்டின் வடப்பகுதியில் பூகம்பம் தாக்கியுள்ளது, சிக்கிமை மையமாக கொண்டு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. சிக்கிமில் ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்குவங்கம், டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாலை ஆராதனை முடித்துவிட்டு தொலைக்காட்சியை பார்த்தபோது இதுதான் முக்கிய செய்தியாக இருந்தது.
ஆக்ராவில் ஒரு தனியார் மருத்துவ மனையில் குண்டு வைத்திருக்கிறார்கள். வைத்தது தீவிரவாதிகள் இல்லையாம் தொழில் போட்டியாக இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மனசாட்சியில்லாத மிருகங்களாய் மனிதர்களில் சிலர் மாறிவருகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மருத்துவம் கூட தொழிலாகிவிட்ட பிறகு இதெல்லாம் நடப்பதில் ஆச்சரியமில்லைதான்.
இதையெல்லாம் காணும்போது ஒரு சராசரி மனிதனாக எனக்குள் ஒருவித அச்சம் ஏற்படுகிறது. இந்த உலகத்தில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இயற்கையும், மிருகங்களாய் மாறிப்போன சில மனிதர்களும் உயிர்களை இப்படியே வாரிக்கொண்டு போனால் கடைசியில் என்ன நடக்கும் என்று யோசிக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் இன்று காலை நான் வேதாகமத்தை வாசிக்கும்போது ஒரு வசனம் என்னோடு பேசியது. அது
சங்கீதம் 31 : 24 கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் உங்கள் இருதயத்தில்
பலங்கொண்டு தைரியமாயிருங்கள்.
நாம் இந்த நிரந்தரமற்ற உலகில், மனசாட்சியில்லா மிருகங்களாய் வாழும் சில மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறோம் ஆனால் சங்கீதக்காரன், கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள், பலங்கொண்டு தைரியமாய் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். காரணம் அவர் எப்போதுமே, பலவீனத்தோடு இருக்கிறவர்கள் பக்கத்தில் நிற்கிறவர். அவர்கள் துன்பங்களிலிருந்து விடுவிக்கிறவர். இஸ்ரவேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த போது கடவுள் இஸ்ரவேலர்கள் பக்கம்தான் நின்றார்.
கடவுள் எல்லாருக்கும் சொந்தமானவர், இவ்வுலகில் வாழும் அனைவரும் அவர் பிள்ளைகள், எகிப்தியர்களும் அவரால் படைக்கப்பட்டவர்களே, அவருடைய பிள்ளைகளே, அவர் பட்சபாதம் உள்ளவரல்ல. ஆனால் கடவுளோ எகிப்தியர்கள் பக்கம் நிற்காமல் இஸ்ரவேலர்கள் பக்கம் நின்றதற்கு காரணமென்ன, அவர்கள் துன்பத்தை அனுபவித்தார்கள். நம் கடவுள் எப்போதுமே துன்புருகிறவர்கள் பக்கம் நிற்கிறவர்.
இப்போதும்ஆண்டவர் மனசாட்சியோடும், அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்காத
உள்ளத்தோடும் வாழ்ந்து துன்பங்களை அனுபவிக்கிரவர்களோடே இருக்கிறார். எனவே பயத்தை தூக்கி எறிந்து பலங்கொண்டு தைரியமாயிருப்போம். இந்த நேரம் சில நிமிடம் நம் கண்களை மூடி பூகம்பத்திலும், குண்டு வெடிப்பிலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்காக, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்காக ஜெபிப்போம். ஆண்டவர் நம்மை காத்தருள்வாரக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment