அன்பானவர்களே நம் வாழ்வில் இப்படி பலரையும் நம்புகிறோம், குடும்பத்தினரை, உறவுகளை, மருத்துவர்களை, காவல் துறையினரை, இராணுவத்தினரை, அரசாங்க அதிகாரிகளை, கல்வி துறையினரை. ஆனால் இவர்கள் எல்லாரும், எல்லா நேரங்களிலும் நம் நம்பிக்கைக்கு பாத்திரவான்களாக நடந்துக் கொள்வதில்லை.
யோவான் சுவிசேஷம்.14 ம் அதிகாரம் முதல் வசனத்தில், உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக, கடவுளில் விசுவாசமாயிருக்கிறீர்களே, என்னிலும் விசுவாசமாயிருங்கள் என்று அவர் மீது நம்பிக்கை கொள்ள நம்மை அழைக்கிறார்.
நாம் ஏன் அவர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்?
நம் வாழ்வு நம் கட்டுப்பாட்டில் இல்லை, நம் வாழ்வில் நடக்கிற நிகழ்வுகளை நாம் புரிந்துக் கொள்ளவும் முடிவதில்லை, நம் ஜீவன், நாம் பெற்றுக் கொள்ளும் நன்மைகள், வெற்றி தோல்வி, நம் பிறப்பு, இறப்பு எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் இவை யாவும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆம் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று அதே யோவான் 14 ம் அதிகாரம்.6 வது வசனத்தில் கூறுகிறார். அப்படியானால், அவரை மிஞ்சி நம் வாழ்வில் எதுவும் நடந்துவிடாது. எனவே நம் வாழ்வில் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்பவர் அவர் ஒருவர்தான்.
9 ம் சங்கீதம் 10 ௦ ம் வசனத்தில் தாவீது, கர்த்தாவே உம்மை தேடி வந்தவர்களை நீர் கை விட்டதில்லை: ஆதலால் உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மில் நம்பிக்கை வைப்பார்கள் என்று கூறுகிறார்.
ஆம் அவர் தேடி வந்தவர்களை கை விடாதவர். அவர்கள் வாழ்வில் எவ்வளவு பெரிய துன்பம் இருந்தாலும் அதை முற்றிலும் நீக்கி அவர்கள் விசுவாசத்திற்கு முழு பலன் கொடுப்பவர். மீன் வயிற்றில் யோனா சிக்கிக்கொண்ட போது, மூன்று நாட்களும் ஆண்டவரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார், பலன்... முழுதுமாக கடவுள் யோனாவை இரட்சித்தார். விழுங்கிய மீன் யோனாவை கரையில் கக்கியது. நம்பிக்கையோடு நாடி வருவோரை தள்ளாத நேசரவர்.
இப்போது அதே கடவுள் இயேசுகிறிஸ்துவாய் நம்மை தேடி வருகிறார், நம்மை அழைக்கிறார். என்னில் விசுவாசமாயிருங்கள் என்று கூப்பிடுகிறார். தேடி போனாலே நன்மை தருகிறவர், இப்போது நன்மை செய்ய நம்மை தேடி வருகிறார், அவரை விசுவாசித்தால் நம் வாழ்வின் அத்துணை பிரச்சினைகளும் பறந்தோடுமே.... இயேசுவை நம்புங்கள்.. அவரையன்றி நம் வாழ வழியில்லை.. நம் எண்ணங்கள் நம் திட்டங்கள், அனைத்தும் நடந்தேற, வெற்றியும் வளமும் வந்துசேர அவர் ஒருவரே வழி... ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்
No comments:
Post a Comment