அன்புள்ள உடன் விசுவாசிகளே உங்கள் யாவர்க்கும் அன்பின் ஸ்தோத்திரங்கள்.இன்று நாம் தியானிக்கபோகிற வசனம்
ஏசாயா.54;17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.
1சாமுவேல் 17ஆம் அதிகாரத்தில், தாவீது போர்களத்தில் இருக்கிற தன் சகோதரர்களுக்கு உணவு கொண்டு வருகிறான்,அங்கே அவன் காண்கிற காட்சி அவனுக்குள் பெரிய வேதனையை உன்டாக்குகிறது.
காரணம், போர்க்களத்தில், இஸ்ரவேல் படை வீரர்கள் நடுங்கிக் கொண்டிருக்க, பெலிஸ்தியர் படைத்தலைவன் கோலியாத், இஸ்ரவேலர்களையும், இஸ்ரவேலின் கடவுளாகிய சர்வ வல்லவரையும் மிக கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறான். வாலிபனான தாவீதால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. எனவே போர்க்களத்திலேயே வீரர்கள் மத்தியில், பெலிஸ்தியனை கொலை செய்வதை பற்றி ஆலோசிக்கிறான். அவன் சகோதரர்களோ, அவன் மீது கோபம் கொள்ளுகிறார்கள், ஆனால் தாவீதோ, அவர்களிடம் பேசாமல் மற்றவர்களிடம் பேசுகிறான்.
அவர்கள் அவனை அரசனாகிய சவுலிடம் அழைத்து போகிறார்கள். அங்கே அரசனுக்கு முன்பாக நான் பெலிஸ்தியனோடு யுத்தம் பண்ணுவேன் என்கிறான். சவுலோ உன்னால் முடியாது என்று சொன்ன பிறகும், தாவீது தன் முடிவில் உறுதியாக இருந்தான். உடனே, போர்க்கள ஆடைகளும், ஆயுதங்களும் அவனுக்கு கொடுக்கப்பட்டது, ஆனால் அவைகளை சுமக்கக் கூட அவனால் முடியவில்லை. எல்லாவற்றையும் களைந்துவிட்டு கற்களையும், ஆடுமேய்க்கும் போது பயன்படுத்தும் தடியையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். அவன் தடியோடு வருகிறதை கண்ட கோலியாத், நான் என்ன நாயா? என்று அவனை பரிகசித்தான். அதற்கு தாவீது சொன்ன பதில்..
1சாமுவேல்.17:45. அதற்கு தாவீது பெலிஸ்தியனை நோக்கி; நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன் என்றான்.
ஆம் பிரியமானவர்களே, பெலிஸ்தியன், யுத்த ஆயுதங்களோடு, புறப்பட்டு வந்தான், தாவீதோ வெறும் கற்களை ஆயுதங்களாக கொண்டு போனான். ஆனால் கோலியாத்தின் ஆயுதங்கள் வாய்க்காதே போனாது, அவன் தன் ஆயுதங்களை எடுக்கக் கூட நேரம் தராமல் அவனை வீழ்த்தினான் தாவீது. காரணம் கடவுள் அவனோடு இருந்தார்..... அதுமட்டுமல்ல....
இஸ்ரவேலர்கள் மோசேவின் தலைமையில், எகிப்திலிருந்து புறப்பட்டு மிக வேகமாக கானானை நோக்கி பயணித்தார்கள், ஆனால் அவர்கள் பயணத்தில் கொஞ்ச தூரத்திலேயே ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை சந்தித்தார்கள், செங்கடல் குறுக்கே வந்ததால் எப்படி போவதென தெரியாமல், உயிர் பயத்தில் செய்வதறியாமல், மோசேவை நோக்கி புலம்பினார்கள், இந்த செய்தி, எகிப்தின் அரசனுக்கு தெரிந்தது, அவன் உடனே என்ன செய்தான் தெரியுமா?
யாத்திராகமம்.14:6,7 அவன் (அரசன்) தன் ரதத்தை பூட்டி, தன் ஜனங்களை கூட்டிக்கொண்டு, பிரதானமான அறுனூறு ரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல ரதங்களையும், அவைகள் எல்லாவற்றின் அதிபதிகளான யுத்த வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.
ஆம் அன்பானவர்களே, யுத்த ரதம் என்பது அனைத்து யுத்த ஆயுதங்களோடு புறப்படும் வாகனம், இப்படி ஆயுதக் குவியலோடு, இஸ்ரவேலர்களை செங்கடலின் கரையில் பிடிக்க போனான்.. ஆனால் நடந்தது என்ன கடவுள் செங்கடலை இரண்டாக பிளக்க செய்து அதன் நடுவில் இஸ்ரவேலரை நடக்க வைத்தார். ஆனால் ஆயுதங்களோடு வந்த யுத்த வீரர்களும், இரதங்களோடே, கடலில் மூழ்கி அழிந்து போனார்கள். அவர்கள் ஆயுதம் வாய்க்காதே போனது காரணம், கடவுள் இஸ்ரவேலரோடே இருந்தார்.
அன்பானவர்களே இதே சேனையின் கடவுள் ஆண்டவராகிய இயேசுவாய் நம்மோடு வாழ்ந்தார், தூய ஆவியானவராய் நம்மோடிருக்கிறார். எனவே உங்கள் வாழ்வுக்கு எதிராக செயல்படுவோரும் அவர்கள் பயன்படுத்தும் ஆயுதமும் வாய்க்காதே போம். உங்களை அழிக்க நாவை ஆயுதாமாக பயன் படுத்துகிறார்களா? பணத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறார்களா? பதவியை ஆயுதமாய் பயன்படுத்துகிறார்களா? வேறே ஆயுதங்கள் வைத்திருக்கிறார்களா? அச்சம் வேண்டாம் காரணம் நாம் கையிட்டு செய்கிற காரியத்தை கடவுள் வாய்க்க செய்வார்.
உங்களுக்கு எதிராக செய்யப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். ஆமேன்..
கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்