WORD OF GOD

WORD OF GOD

Monday, October 31, 2011

உன் துக்க நாட்கள் முடிந்து போம்.

Text : ஏசாயா.60:20b

கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்து போம்.

ஒவ்வொரு காலை கண் விழிக்கும்போதும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது அது யாதெனில், இந்நாளின் நிகழ்வுகள் அனைத்தும் சுகமாய் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. ஆனால் எல்லா நாளும் சுகமாய் அமைந்துவிடுவதில்லை.

அப்படியானால் எல்லா நாளும் சுகமாய் அமையாதா என்றால் அமையும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அது எப்படி முடியும் சந்தோஷமும் துக்கமும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை என்கிறீர்களா. ஆம் அதுவும் உண்மைதான். ஆனால் ஒரு நாள் முழுதும் போராட்டங்களை மட்டுமே சந்தித்தாலும், அந்த நாள் சுகமான நாளாக மாற ஒரு வழி இருக்கிறது.

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்பவர் இரு கரம் நீட்டி நம்மை அழைக்கிறார் நமது சுமைகளை வாங்கிக் கொண்டு சுகத்தை கொடுக்க. ஆம் அவர் எப்போதுமே நாம் பாரத்தோடும் துன்பத்தோடும் இருப்பதை விரும்பாதவர்.

நம்முடைய தியானத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட வசனத்தில் கூட பாபிலோனிய சிறையிருப்பில் இருக்கிறவர்களது துன்பத்தை கண்ட கடவுள் அவர்களது துன்பத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் வழியாக ஒரு செய்தி சொல்கிறார் அது உங்கள் துக்க நாட்கள் முடிந்து போகும் என்ற உத்தரவாதம். நான் உங்களுக்கு நித்திய வெளிச்சமாய் இருப்பேன் என்ற பாதுகாப்பின் வாக்குறுதியையும் கொடுக்கிறார்.

அவர்களது துன்பத்திற்கு யார் காரணம்? அவர்களேதான் காரணம், அவர்கள் பாவம் செய்தார்கள் அதின் பலனாக துக்கத்திலிருக்கிறார்கள். ஆனால் கடவுளோ, அவர்கள் துன்பத்தை காண சகியாதவராய் இருக்கிறார். காரணம் நம் துன்பத்தை அவர் விரும்பாதவர்.

அன்பானவர்களே உங்கள் வாழ்விலும் இந்நாளை துவங்கும்போது அனேக கவலைகள் இருக்கக் கூடும், ஆனால் ஒன்றை மறந்துவிடாதீர்கள்,  நம் கடவுள் நாம் கவலைப்படுவதை விரும்பாதவர் , அது மட்டுமல்ல நித்திய வெளிச்சமாய் நம்மை சந்தோஷத்திற்கு நேராக நடத்துகிறவர் அதையும் தாண்டி நம் துன்பங்களையும் பாரங்களையும், வாங்கிக் கொள்ள நம்மை கரம் நீட்டி அழைக்கிறவர்.

அத்தனை துன்பங்களையும் அவர் கரங்களில் கொடுத்துவிட்டு, உங்கள் துக்கத்தையும் கண்ணீரையும் துடைத்துவிட்டு இந்நாளின் பணிகளை தொடருங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..  இந்நாள்  சுகமான 
நாளாகும்.  ஆமேன். 

ஜெபம்:

அன்புள்ள பரம தகப்பனே இந்த  நாளுக்காய்  நன்றி. இந்த நாள் முழுவதையும் உமது கரத்தில் தருகிறோம், எங்கள் தேவைகளை பொறுப்பெடுத்துக் கொள்ளும். எங்கள் பாரங்களை நீக்கி மகிழ்ச்சியான பாதையில் எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் நல்ல பிதாவே.

Saturday, October 29, 2011

இயேசுவின் குரல்!!!!!!!



அன்பான சகோதர சகோதரிகளே, நண்பர்களே, கர்த்தருடைய பெரிதான கிருபையால் இயேசுவின் குரல் பத்திரிக்கை கடந்த 23 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வெளியிடப்பட்டது, ஆலாங்குப்பம் போதக வட்டத்தில் அறுப்பின் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்பட்டது, அந்த நன்றி செலுத்தும் திரு நாளில், இந்திய சுவிசேஷ லுத்தரன் சபையின் முன்னாள் பெருந்தலைவர் அருள்திரு.ராஜகம்பீரம் அவர்கள் ஜெபித்து வெளியிட்டார், அதன் முதல் பிரதியை அருள்திரு.கிறிஸ்டோபர் நவராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

தற்போது இயேசுவின் குரல் உங்கள் இல்லங்களை தொட ஆயத்தமாயிருக்கிறது. ஆவிக்குரிய பெலன் தரும் கர்த்தருடைய செய்திகளும், வேதவினா போட்டிகளும், சிந்திக்க வைக்கும் சிறுகதைகளும், மேலும் இணையதள ஊழியம், சிறுவர் ஊழியம் போன்றவற்றின் தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன, இப்புத்தகம் பெற்றுக் கொள்ள விரும்புவோர் உடனே உங்கள் முகவரியை எனது மின்னஞ்ச‌லுக்கு அனுப்புங்கள்,

மின்னஞ்சல் முகவரி: jesusblessings65@yahoo.in

கடிதங்கள் வாயிலாக தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி;

அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.
ஆசீர்வாத இல்லம்
ஏ.பி நகர் செட்டியப்பனூர் அஞ்சல்
வாணியம்பாடி.
வேலூர் மாவட்டம்
635751.

Thursday, October 27, 2011

இயேசு அற்புதர்!!!!

Text: சங்கீதம்.37:4.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

சகோ.ரூபன் & நம் குழுவில் இணைந்த புதிய சகோதரன்.

 அன்பான கர்த்தருடைய பிள்ளைகளே  உங்களை வாழ்த்துகிறேன், கடந்த 15 ம் தேதி வேலூரில், வள்ளலார் நகரில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற ஆதரவற்றோர் சிறுவர் விடுதியில் நமது சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. ஏற்கெனவே இதை நீங்கள் அறிவீர்கள். அன்று கர்த்தர் ஒரு பெரிய சங்கட‌த்தில் மிக அற்புதமாக நடத்தினார்.

அதாவது நம் சிறுவர் கொண்டாட்ட குழுவில் சகோதரர்.ரூபன் என்பவர் மிகவும் ஊழிய அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிறார், அவர்தான் அந்த விடுதி அங்கே இருப்பதை கண்டறிந்து சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி பெற்று வ‌ந்தார். எனக்கு தெரிவித்ததும் உடனே அதற்கான ஏற்பாடுகளை இரண்டு நாளில் துரிதமாக செய்தேன்.

குழுவின் அனைத்து சகோதரர்களையும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகும்படி கூறினேன். எல்லாரும் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டார்கள். 15 ம் தேதி காலை மீண்டும் அனைவரையும் தொடர்புக் கொண்டேன், எங்கே ஒன்றுக் கூட வேண்டும் என்பதை அறிவிக்க, ஆனால் யாருமே என் அழைப்பை எடுக்கவில்லை. எனக்கு ஒருவித சங்கடம் ஏற்பட்டது, காரணம் நாங்கள் அந்த விடுதிக்கு 10 மணிக்கு வருவதாக அறிவித்திருந்தோம், 10 மணிக்கு அங்கே போக வேண்டுமென்றால் ஆம்பூரிலிருந்து 8.30 மணிக்கே புறப்பட வேண்டும், ஆனால் 8 மணிவரை யாருமே என் தொலை பேசி அழைப்பை எடுக்கவில்லை. கடைசியாக சகோதரர் ரூபனை தொடர்புக் கொண்ட போது அவர் தெரிவித்த செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

காரணம் நம் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஏதோவொரு முக்கிய வேலை இருப்பதாகவும், யாருமே இப்போது வர ஆயத்தமில்லை என்றும் கூறினார், நீங்கள் ஆயத்தமா? என்றேன் நான்  ஆயத்தமாயிருக்கிறேன் அண்ணா என்றார். உடனே ஆயத்தமாயிரு நாம் போகலாம் என்றேன். உடனே ஆண்டவரை நோக்கி ஒரு சிறிய ஜெபத்தை ஏறெடுத்தேன், ஆண்டவரே இது உமது பணி நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும் என்று சொல்லிவிட்டு விசுவாசத்தோடு ஆயத்தமானேன்.

8.30 க்கு வாணியம்பாடியிலிருந்து புறப்பட்டேன், 9 மணிக்கு ஆம்பூரை அடைந்தேன். அங்கே கண்ட காட்சி எனக்கு ஆச்சரியம் சகோதரர்.ரூபன் 6 சகோதரர்களோடு நின்றார். அதில் புதிதாக சகோதரர்கள் இருந்தனர். அவர்களோடு பேசக்கூட நேரமில்லை. உடனே புறப்பட்டோம். விடுதியை அடைந்தோம்.

பயிற்சியே பெறாத புதிய சகோதரர்களுக்கு எப்படி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று ஒரே முறை கற்றுக் கொடுத்தேன், அற்புதமாய் சகோதரர்கள் வெகு சிறப்பாக நடத்தினர். பிள்ளைகள் மெய்மறந்து ஆண்டவரை மகிமைப்படுத்தினர். நிகழ்ச்சியின் சிறப்பை பாராட்ட ஒரு குழந்தை தானாக முன் வந்து ஜெபித்தது எங்கள் குழுவினரை பெரிய உற்சாகமடைய வைத்தது.
 
நம் குழுவிற்காய் ஜெபித்த குழந்தை

எவ்வளவு அற்புதம், ஆண்டவர் ஊழியம் தடைபடாமல் இருக்க வேறு சகோதரர்களை ஆயத்தம் செய்தார். மேலான அற்புதம் என்னவென்றால், இந்நிகழ்ச்சிகள், நடத்த இரண்டு வாரங்கள் பயிற்சியெடுத்தோம், ஆனால் அன்று ஓரிரு நிமிட பயிற்சியில் புதிய சகோதரர்கள் கலக்கிவிட்டார்கள். இதுதான் கர்த்தரின் வழி  நடத்தல்.

அதைதான் இங்கே சங்கீதக்காரன் மிக தெளிவாக கூறுகிறார் அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார் என்று.. எவ்வளவு பெரிய உண்மை..

இப்போது நானும் குழுவின‌ரும் ஒரு உண்மையை புரிந்துக் கொண்டாட்டம், இந்த ஊழியத்தை நடத்துவது நாங்கள் அல்ல, நமதாண்டவர். நாங்கள் நினைத்தாலும் இவ்வூழியத்தை தடை செய்ய முடியாது. அதே நேரத்தில் மன மகிழ்ச்சியோடு இதை செய்யும்போது, அதின் தேவைகள் அனைத்தையும் அவர் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்.

கதை நேரம்

அன்பானவர்களே உங்கள் வாழ்விலும் சந்திக்கிற தடைகளை கண்டு அஞ்சாதீர், அற்புதமாய் நடத்துகிற கடவுளிடம் ஜெபித்து தேவைகளை அவரிடத்தில் ஒப்படைத்துவிட்டு மனமகிழ்ச்சியாயிருங்கள், கர்த்தர்
பார்த்துக் கொள்வார். ஆமேன்.

ஜெபம்:

தேவைகளில் எங்கள் பட்சம் நிற்கும் எங்கள் அன்பின் பரம தகப்பனே, எங்கள் தேவைகளை நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும், சரியான நேரத்தில் அவைகளை நிறைவேற்றி எங்களை உமது அற்புத பாதுகாப்பினால் வழி நடத்தும். இப்போதும் உம்மண்டை மனமகிழ்ச்சியோடு தங்கள் விண்ணப்பங்களை ஏறெடுக்கிற அனைவரின் தேவைகளையும் நிறைவாக்கும் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம், எங்கள் நல்ல பிதாவே, ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, October 26, 2011

இயேசுவே உலகின் ஒளி

Text: மத்தேயு. 4:15

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது..


அன்பான உடன் விசுவாசிகளே உங்களை இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன். இவ்வுலகின் இரட்சகர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன் ஊழியத்தை எங்கே துவங்கினார் தெரியுமா? கலிலேயா என்கிற பகுதியில். கலிலேயா என்பது ஏழைகளும், எளியவர்களும் வாழ்ந்த பகுதி. அக்கால மக்கள் கலிலேயர்களை மிகவும் தாழ்வாக கருதினர். ஆனால் ஆண்டவரோ அவர்கள் மத்தியில்தான் தன் ஊழியத்தை துவங்கினார்.


இந்த காட்சியைதான் மத்தேயு சுவிசேஷகர் மேற்கண்ட வசனத்தில் அழகாய் விளக்குகிறார், இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று.. காரணம் அவ்ர்கள் வாழ்க்கை தரம் அப்படி.

நம்முடைய வாழ்வும் ஏதோ ஒரு இருளில் தான் சிக்கியிருக்கிறது. பாவம், வறுமை, வியாதி, பிசாசு, போன்ற ஏதோ ஒரு இருள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது. ஆனால் எந்த இருள் நம்மை ஆட்கொண்டிருந்தாலும், கிறிஸ்துவாகிய உலகின் மெய்யான ஒளி நம்மில் வீசும்போது நாம் ஒளியின் சந்ததியாகிறோம். நம்மை ஆட்கொண்டிருக்கிற இருள் விலகியோடுகிறது.

அன்பானவர்களே இந்த‌ காலை வேளையில் கிறிஸ்துவாகிய மெய்யான உலகின் ஒளி நம்மேல் உதிக்கிறார்,  நம்மை சூழ்ந்திருக்கிற எந்த இருளும் இபோதே நம்மை விட்டு அகன்று போகிறது. தைரியமாய்  இந்நாளை துவங்குவோம், கிறிஸ்துவின் வெளிச்சத்தில் துணிவுடன் சந்தோஷமாய் நடப்போம் ஆமென்.

ஜெபம்:

அன்புள்ள கடவுளே, மெய்யான ஒளியாம் இயேசு இந்த காலையில் எங்கள் மேல் உதித்தற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம், அவரது வெளிச்சத்தில், துணிவுடன் இருளான துன்பங்களை மேற்கொண்டு வாழவும், சந்தோஷம் எங்கள் உள்ளத்தை ஆட்கொள்ளவும் எங்களை வழிந‌டத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, October 25, 2011

இயேசுவின் வருகை நெருங்கிவிட்டதோ!!!!


1990 - 2011

Largest EarthquakesDeadliest Earthquakes
YearDateMagnitudeFatalitiesRegionYearDateMagnitudeFatalitiesRegion
201103/119.020896Near the East Coast of Honshu, Japan201103/119.020896Near the East Coast of Honshu, Japan
201002/278.8507Offshore Maule, Chile201001/127.0316000Haiti
200909/298.1192Samoa Islands region200909/307.51117Southern Sumatra, Indonesia
200805/127.987587Eastern Sichuan, China200805/127.987587Eastern Sichuan, China
200709/128.525Southern Sumatera, Indonesia200708/158.0514Near the Coast of Central Peru
200611/158.30Kuril Islands200605/266.35749Java, Indonesia
200503/288.61313Northern Sumatra, Indonesia200510/087.680361Pakistan
200412/269.1227898Off West Coast of Northern Sumatra200412/269.1227898Off West Coast of Northern Sumatra
200309/258.30Hokkaido, Japan Region200312/266.631000Southeastern Iran
200211/037.90Central Alaska200203/256.11000Hindu Kush Region, Afghanistan
200106/238.4138Near Coast of Peru200101/267.720023India
200011/168.02New Ireland Region, P.N.G.200006/047.9103Southern Sumatera, Indonesia
199909/207.72297Taiwan199908/177.617118Turkey
199803/258.10Balleny Islands Region199805/306.64000Afghanistan-Tajikistan Border Region
199710/147.80South of Fiji Islands199705/107.31572Northern Iran
199712/057.80Near East Coast of Kamchatka1997
199602/178.2166Irian Jaya Region Indonesia199602/036.6322Yunnan, China
199507/308.03Near Coast of Northern Chile199501/166.95530Kobe, Japan
199510/098.049Near Coast of Jalisco Mexico1995
199410/048.311Kuril Islands199406/066.8795Colombia
199308/087.80South of Mariana Islands199309/296.29748India
199212/127.82519Flores Region, Indonesia199212/127.82519Flores Region, Indonesia
199104/227.675Costa Rica199110/196.82000Northern India
199112/227.60Kuril Islands1991
199007/167.71621Luzon, Philippine Islands199006/207.450000Iran

அன்பானவர்களே, மேலே இருக்கும் பட்டியல் கடந்த 1990 ம் ஆண்டு முதல், இந்த ஆண்டு வரை நிகழ்ந்த மிக்ப்பெரிய பூகம்பங்களும், மரணங்களும் குறித்த தகவல் அறிக்கையாகும். இதை சற்று கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மையை நாம் புரிந்துக் கொள்ள முடியும், மரணங்களின் எண்ணிக்கை ஏற்ற இரக்கத்தோடு காணப்படும் அதே வேளையில் படிப்படியாக உயர்ந்து வருவதை தெளிவாக காணலாம்.


Turkey earthquake
கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஒரே ஆண்டில், மிக அதிகமான பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதை பற்றிய தகவல்களுக்கு கீழே உள்ள லின்கில் சென்று காணுங்கள். (http://theextinctionprotocol.wordpress.com/2011/07/12/2011-on-target-for-most-earthquakes-recorded-in-12-years/)

இதை முதலில் காணும்போது எனக்குள் ஏற்பட்ட அச்சத்தை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. நேற்று காலை கூட துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இவையெல்லாம் எதை காட்டுகிறது? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? பூகம்பம் வழக்கமானது என்றால் ஏன் அதிகரிக்க வேண்டும்? இதுவரை பூகம்பம் ஏற்படாத இடங்களில் கூட பூகம்பங்கள் நடக்கின்றனவே..

காரணங்கள் சொல்வதற்கு நான் கடவுளல்ல ஆனால், கடவுள் வேதத்தில் சில காரணங்க‌ளை கூறியுள்ளார்.

ம‌த் 24:7" ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும் , கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இட‌ங்க‌ளில் உண்டாகும்.

மாற்கு 13:8 " ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், ...

லூக்கா 21:11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்...

உண்மைதான் இயேசு ஆண்டவர் வருவதற்கு அவரே சொன்ன
அடையாளங்களில் முக்கியமானது பூகம்பம்.

என்ன செய்ய போகிறோம்?????

இயேசு ஆண்டவரை சந்திக்க ஆயத்தமா? இந்த  காலையில் அவருக்கு நம்மை ஒப்புக் கொடுப்போம். அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம்.

ஜெபம் :

அன்புள்ள பரம தகப்பனே, நேற்றுக் காலை துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களை உமது கரத்தில் சமர்ப்பிக்கிறோம்
வீடுகளை, உறவுகளை இழந்து வாடுவோரை கண்ணோக்கும், உமது மேலான பாதுகாப்பில் அவர்களை ஆட்கொள்ளும், தொடர்ச்சியான பின் நில அதிர்வுகளில் எவ்வித ஆபத்தும் நேரா வண்ணம் அவர்களை காத்தருளும். இவ்வடையாளங்கள் எங்களை உம்மை சந்திக்க ஆயத்தப்படுத்துகிறதை நாங்கள் உணருகிறோம், எனவே சக மனிதரை நேசித்து வருங்காலத்தை நாங்கள் ஆதாயப்படுத்திக் கொள்ள எங்களுக்கு இக்காலையில் இயேசுவின் வழியாய் பலன் தாரும் ஆமென்.


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, October 22, 2011

துன்பம் நம்மை அணுகாது

சங்கீதம்.91:7


உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது


அன்பானவர்களே, உங்களை இந்த காலை வேளையில் வாழ்த்துகிறேன்.
91 ம் சங்கீதம் முழுவதும் கர்த்தர் மேல் நம்பிக்கை கோண்டோரை அவர் எப்படி பாதுகாக்கிறார் என்பதை நமக்கு போதிக்கிறது.
இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமும் நம் வாழ்வோடு பேசக்கூடியவை.

இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனத்தையும் உணர்ந்து படித்தோமானால், நம் வாழ்வில் நாம் இப்போது எதை குறித்து கவலையோடு இருக்கிறோமோ அந்தக் கவலை நம்மை விட்டு பறந்தோடும்.

இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமும் நம் வாழ்வின் அத்தனை பயத்தையும் முற்றிலும் நீக்கிவிடும்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அதின்படி, இந்த முழு சங்கீதத்தின் மேன்மைக்கு இந்த ஒரு வசனம் மிகச்சிறந்த உதாரணம்.
சங்கீதக்காரன் கூறுகிறார், உன் பக்கத்தில் ஆயிரம் பேரும் உன் வலது புறத்தில் பதினாயிரம் பேரும் விழ்ந்தாலும் அது உன்னை அணுகாது.

இதன் அர்த்தம் என்ன? எத்தனை பெரிய துன்பங்கள், எத்தனை எதிரிகள்  நம்மை சுற்றி நடந்தாலும், நம் பக்கத்தில் கூட வர முடியாது.

சவுல் அரசனாக இருந்த போது தாவீது, கோலியாத்தை கொன்றதால், மக்கள் மத்தியில் தாவீதின் செல்வாக்கு அதிகரித்தது, எனவே சவுல் தாவீதை கொல்ல நினைத்தான்.

1சாமுவேல்.18:11 அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான்.

1சாமுவேல்.19:9 10  கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான். அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக்குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான்.
இந்த வசனங்கள் சவுல் தாவீதை எவ்வளவு மூர்க்கமாய் கொலை செய்ய எத்தனித்தான் என்பதை மிக தெளிவாக காண்பிக்கிறது. ஆனால் அவனால் தாவீதை தொடக் கூட முடியவில்லை.

1சாமுவேல்.19:1 தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்.

த‌னியாக‌ போராடி தோற்றுப் போன‌வ‌ன் த‌ன் ம‌க‌னையும், த‌ன் ஊழிய‌ர்க‌ள் அத்த‌னை பேரையும் துணைக்கு அழைக்கிறான்.

அர‌ச‌ன் த‌ன் சாம்ராஜ்ய‌த்தையே துணைக்கு அழைக்கிறான். ஆனால் ந‌ட‌ந்த‌து என்ன‌? தாவீதை அணுக‌ கூட‌ முடிய‌வில்லை.

அன்பான‌வ‌ர்க‌ளே, ந‌ம்மை தொடுகிற‌வ‌ன் ச‌ர்வ‌ வ‌ல்ல‌வ‌ரின் க‌ண்ம‌ணிக‌ளை தொடுகிறான். என‌வே அச்ச‌ம் கொள்ளாதீர். நமக்காய் சிலுவையில் வெற்றி சிறந்த கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு இந்நாளை துவங்குவோம், ந‌ம்மை வீழ்த்த‌ நினைப்போர் வீழ்ந்து போவார்க‌ள், அழிக்க‌ நினைப்போர் அழிந்து போவார்க‌ள். துன்பமோ துன்புறுத்தும் மனிதனோ நம்மை அணுக முடியாது.

ஜெபம்:

கிருபை நிறைந்த எங்கள் பிதாவே, இந்நாளையும், இந்நாளின் தேவைகளையும் உமது கரத்தில் சமர்ப்பிக்கிறோம், ஆசீர்வதியும், தேவைகளை நிறைவாக்கும். எங்களை சுற்றியுள்ள எதிர்ப்புகளையும் துன்பங்களையும் நீரே பொறுப்பெடுத்துக் கொள்ளும், தாவீதை, சவுலிடமிருந்தும், அவன் சாம்ராஜ்யத்திடமிருந்தும் காத்தது போல, எங்களையும் எங்கள் எல்லா தீங்கிலிருந்தும் காத்தருளும். உமக்கு சாட்சியாய் நிலைக்க ஆசீர்வதியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமேன்..


கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Thursday, October 20, 2011

அன்பான உடன் விசுவாசிகளுக்கு இனிய ஸ்தோத்திரங்கள். கடந்த சில நாட்களாக இணைப்பில் பிரச்சினைகள் இருந்ததால் பதிவிட இயலவில்லை. ஆனால் தற்போது மிக முக்கிய செய்திகளோடு வந்திருக்கிறேன், கடந்த 15 ம் தேதி வேலூரில், வள்ளலார் நகரில் உள்ள நம்பிக்கை இல்லம் என்ற விடுதியில் கர்த்தருடைய கிருபையால் சிறுவர் கொண்டாட்டம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைப் பெற்றது.

கடவுளுடைய பெரிதான கிருபையால் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடந்தது. மேலும் பள்ளிக்கூடங்களிலும், கிராமங்களிலும் பல்வேறு இடங்களில் நடத்த அழைப்பு பெற்றிருக்கிறோம். தேவைகளையும் கடவுள் சரியாக சந்திக்கிறார். தொடர்ந்து உங்கள் ஜெபங்களில் எங்களை தாங்குங்கள்.

இன்னொரு சந்தோஷமான செய்தி நம்முடைய அடுத்த ஊழிய படைப்பாக இயேசுவின் குரல் பத்திரிக்கை வருகிற 23 ம் தேதி வெளியிட இருக்கிறோம், இதை மாதந்தோறும் தடையின்றி நடத்த ஜெபியுங்கள். தனி பிரதி 10 ரூபாய் ஆண்டு சந்தா 100 ரூபாய். இந்த புத்தகம் நிச்சயம் உங்கள் ஆன்மீக வாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், கர்த்தரின் ஆசீர்வாதங்களை சுமந்து வரும் அவருடைய வார்த்தையாகவும் இருக்கும். வெளி நாட்டில் உள்ளோருக்கு தனி பிரதி 75 ரூபாய். ஆண்டு சந்தா 750 ரூபாய். உங்கள் முகவரியை எனது முகவரிக்கோ அல்லது இமெயில் முகவரிக்கோ அனுப்பினால் உங்களுக்கு மாதந்தோறும் தடையின்றி அனுப்பி வைக்கப்படும்.  தொடர்ந்து இந்த ஊழியங்களுக்காய் ஜெபியுங்கள். நன்றி.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Tuesday, October 11, 2011

விசுவாசத்தின் வல்லமை !!!!

Text: 2 கொரிந்தியர்.5:6

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் அன்பான ஸ்தோத்திரங்கள். ஒரு வீடு கட்ட ஆசைப்பட்டு அதற்காக போராடி வருகிற ஒருவராக நீங்கள் இருந்தால் நான்  உங்களுக்கு சொல்லுகிறேன் நீங்கள் ஒரு பத்து வீடுகளை கட்டி அதை வாடகைக்கு விடுவீர்கள். உங்களால் நம்ப முடியுமா? ஒரு சின்ன வியாபாரம் செய்கிற  நீங்கள் பெரிய   தொழிலதிபர் ஆவீர்கள்   என்றால் நம்புவீர்களா? ஒரு குழைந்தைக்காக ஏங்கி தவிக்கிற தாயாக இருந்தால், உங்கள் சந்ததி வானத்து நட்சத்திரங்களை போல பெருகும் என்றால் நம்புவீர்களா?

நடப்பதற்கே சாத்தியமில்லாதவைகளை பேசுவது போல தோன்றுகிறதா? சரி ஏன் இவையெல்லாம் முடியாது? நமது வருமானம், நமது சூழல், நமது நிலைமை, நமது தகுதி, இவையெல்லாம் கண்டால் சத்தியமாய் அதற்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறதல்லவா? அதேபோல இவ்வுலகத்தின்  போக்கு, விலைவாசி, அரசியல் சூழ்நிலை, பொருளாதார ஏற்ற தாழ்வுகள், நம்மை சுற்றியுள்ளோரின்  பொறாமைகள், இவையெல்லாம் கண்டால் இப்போது நாம் வைத்திருக்கிற சின்ன திட்டத்தையே நிறைவேற்றுவது மிகக் கடினம் என்று தோன்றுகிறதல்லவா?

ஆனால் கிறிஸ்தவர்களாக நம்மை பற்றி பவுல் ஒரு விஷயம் சொல்லுகிறார், அதென்னவெனில் நாம் தரிசித்து நடப்பவர்களல்ல  விசுவாசித்து  நடப்பவர்கள்  என்கிறார் இதன் அர்த்தம் என்ன? நாம் எதையும் பார்த்து வாழ்பவர்களில்லை என்கிறார், நாம் பார்க்காமல் வாழ முடியுமா? உண்மையில் கிறிஸ்தவர்கள் பார்த்தால் வாழவே முடியாது. ஆம் அன்பானவர்களே, நம்முடைய தகுதி என்ன? நாம் கடவுளுக்கு பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ள நமக்கு அருகதை உண்டா? இல்லை... நம்மை கண்டால் நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை அடையவே முடியாது. அதே போல நாம் வாழும் உலகம் அதின் சூழல், அதின் மனிதர்கள், தினந்தோறும் நடந்தேறும் கொடூர பாவங்கள்  இதையெல்லாம்  கண்டால் நமக்கு இவ்வுலகில் மீட்பு கிடைக்கும் என்று தோன்றுகிறதா?

சத்தியமாய் நாம் நம்மை கண்டாலோ நாம் வாழும் உலகை கண்டாலோ நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற தகுதி உடையவர்களல்ல என்பதையும், அவரை நெருங்க கூட முடியாது என்பதையும் நாம் பரிபூரணமாய் உணர முடியும். ஆனால் நாம் கடவுளின் பிள்ளைகள் என்கிற உரிமையை அதுவும் புத்திர சுவிகார உரிமையை பெற்றிருக்கிறோம் எப்படி? ஒரே பதில் தான் விசுவாசத்தால். ஆம் நாம் தரிசித்து அதாவது கண்டு வாழ்பவர்களல்ல விசுவாசித்து வாழ்பவர்கள்.

கடவுளின் பெயரைக் கூட சொல்ல தகுதியில்லாத நாம் விசுவாசத்தால், அவருடைய சொந்த பிள்ளைகளாவோம் என்றால், அதே விசுவாசத்தால் நாம் நினைக்கிற, நாம் திட்டமிடுகிற அனைத்தையும் அடைய முடியுமல்லவா? சொந்த வீடு கட்ட சாத்தியமில்லாத ஒருவர் ஒரு அப்பார்த்மென்ட்டை கட்ட ஆசைப்பட்டால், தன் நிலையையும் இவ்வுலகின் சூழலையும் கண்டால் அது ஒரு முட்டாள்தனமான பேராசையாக தோன்றும், ஆனால் விசுவாசத்தோடு ஆண்டவரை நோக்கி பார்த்தால்? உடனே சாத்தியப்படுமே, இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து  வராது  என்கிறீர்களா?  

ஆபிரகாம் என்ற 99 வயது நிறைந்த ஒரு கிழவன் தனக்கு பிள்ளை பிறக்கும் என்று ஆசைப்பட்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், அதற்காக ஜெபிப்பது, கடவுளிடம் விசுவாசத்தோடு காத்திருந்தது எல்லாமே பைத்தியக்காரத்தனமல்லவா? இல்லை அன்பானவர்களே நாம் தரிசித்து வாழ்பவர்களல்ல விசுவாசித்து வாழ்பவர்கள்.

எபிரேயர் 11:1. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 17: 20).
.
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா யோவான் 11:40

 உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது..மத்தேயு 15:28

விசுவாசத்தின் வல்லமையை உணர்ந்தீர்களா? தைரியமாய் உங்கள் வாழ்விற்காய் கிறிஸ்துவின்  மேன்மைக்காய் எவ்வளவு பெரிய திட்டமும் தீட்டுங்கள் விசுவாசத்தோடு... அவரே காரியத்தை வாய்க்க செய்வார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, October 10, 2011

ஜெப குறிப்புகள்.

இந்த இணையதள ஊழியத்தின், இணையற்ற வாசகர்களே, உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து நீங்கள் பார்ப்பதே இவ்வூழியத்தை நான் இன்னும் விடாமல் செய்ய உதவுகிறது.

நான் பிரபலமான ஊழியனல்ல. ஆனால் நீங்கள் என் ஊழியத்தை அங்கீகரித்திருக்கிறீர்கள். உங்களுடைய ஜெபத்தில்தான் சிறுவர் ஊழியத்தை துவங்கினேன். இம்மாதம் எங்கும் நிகழ்சிகள் நடத்த இயலவில்லை. ஆனால் வருகிற நவம்பர் மாதம் ஆம்பூர் நகரத்துக்கு  அருகே  உள்ள பச்சை குப்பம் பகுதியில்  சிறுவர் ஊழியத்தை நடத்த, பச்சை குப்பம் போதக வட்டத்தின் போதகர் அருள்திரு.மில்டன் அவர்கள்  கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன் படி வருகிற நவம்பர் மாதம் 14 ம் தேதி இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதுவரை ஆதரவற்றோர் விடுதிகளில் நடத்திய நமது குழு முதன் முறையாக ஒரு கிராமத்திற்கு போக போகிறோம். அதற்காக உங்கள் ஜெபங்களிலே தாங்குங்கள்.


ஜெப குறிப்புகள்.

கிராம பிள்ளைகளின் உள்ளத்திலே ஆண்டவரின் சத்திய வார்த்தைகள் சரியாய் சேரவேண்டும்.

நாம் விதைக்கிற விதை பெரிய  விருட்சமாக வேண்டும்.

கால சூழ் நிலைகள் சரியாய் அமைய வேண்டும்.

நம்மை உற்சாகமாய் அழைத்து ஊக்கப்படுத்துகிற அருள்திரு.மில்டன் அவர்களின் ஊழியமும், குடும்பமும்  போதகவட்ட விசுவாசிகளும்  
ஆசீர்வதிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களுக்கான உதவிகள் செய்ய, தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும்.

நம் குழுவினரின் ஆரோக்கியம் மற்றும் தேவைகள் தேவன் சந்திக்க வேண்டும்.

தொடர்ந்து குறைந்தது மாதத்திற்கு 150 பிள்ளைகளையாவது நம் குழு சந்திக்க தேவன் உதவ வேண்டும்.

உங்கள் ஜெபத்திற்கு நன்றிகள். தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Sunday, October 9, 2011

இயேசுவோடு ஆளுகை செய்வோம்(Sunday sermon)

Text: ஆதியாகமம்.50:15-21

அன்பார்ந்த  உடன் விசுவாசிகளே உங்கள் யாவருக்கும் என் இனிய ஸ்தோத்திரங்கள். அவரோடு கூட பாடுகளை சகித்தோமானால், அவரோடு கூட ஆளுகையும் செய்வோம். (2.தீமோத்தேயு. 2:12 ) இது உண்மைதானா? துன்பங்களை சகிப்பது வெற்றியாகுமா? எது வெற்றியுள்ள வாழ்வு சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த வாழ்வுதானே, அப்படியிருக்க துன்பங்களை சகிப்பது எப்படி வெற்றியுள்ள வாழ்வாகும்? இந்த கேள்விக்கான சரியான விடைதான் இன்றைக்குரிய நம்முடைய தியானப் பகுதி.

பொதுவாக மரணம் என்பது ஆழ்ந்த துயரத்தை  கொண்டுவரக் கூடியது. நம்முடைய தியானப் பகுதியும் ஒரு மாமனிதனின் மரணத்திலிருந்து துவங்குகிறது, அது யாக்கோபின் மரணம். அவனுடைய பிள்ளைகள் அனைவரும் சூழ்ந்து நிற்க அவர்கள் ஒவ்வொருவரோடும் மனம் விட்டு பேசி பின் சமாதானமான மரணத்தை அடைகிறார். ஆனால் இந்த மரணம் யோசேப்பின் சகோதரர்களாகிய யாக்கோபின் மற்ற பிள்ளைகளுக்கு துயரத்தை தரவில்லை மாறாக பயத்தையும் நடுக்கத்தையும் தந்தது காரணம், சொல்ல முடியாத படு பாதகத்தை செய்து, தாங்கள் அழிக்க  நினைத்த  தன் சகோதரன் யோசேப்பிடம் வசமாய் சிக்கியுள்ளனர்.

அவர்கள் மனம் முழுக்க குற்ற உணர்வில் நிரம்பியிருக்கிறது. இப்படி ஒரு தருணம் வரும் என்று அவர்களில் ஒருவனும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள், ஏன் யோசேப்பே கூட நினைத்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்ச நஞ்ச பாதகத்தையா யோசேப்புக்கு செய்தார்கள், அடித்து துவைத்து குற்றுயிராய் ஒரு நாயை வீசுவதை போல பாழுங்கிணற்றில்  வீசினார்கள், அப்போதும் அவர்கள் மனம் ஆறாமல், பாதி செத்துக் கிடந்தவனை தூக்கி, விற்று காசாக்கினார்கள், ஏன் இதையெல்லாம் செய்தார்கள். அப்படி என்னதான் யோசேப்பு அவர்களுக்கு விரோதமாய் செய்தான்?  "ஒன்றும் செய்யவில்லை". பொறாமை அவர்களை அப்படி செய்ய வைத்தது. அத்தனை துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு சர்வ வல்ல கடவுளின் மீது அசைக்க முடியா நம்பிக்கைக் கொண்டு வாழ்ந்து வந்தான் யோசேப்பு, பலன்...

இன்று அவன் தயவில் வாழ்கிறார்கள், அவன் சோற்றில் பிழைப்பு நடத்துகிறார்கள். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?????? அவரோடு கூட பாடுகளை சகித்தோமானால் அவரோடு கூட ஆளுகையும் செய்வோம்.

எனவேதான் தகப்பன் செத்ததும் யோசேப்பின் சகோதரர்களை பயமும் குற்ற உணர்வும் பிடித்தாட்டுகிறது, காரணமின்றி துன்பம் செய்வோர் யாரும் குற்ற உணர்விலும், பயத்திலும் சிக்காமல் தப்பித்துவிட முடியாது.  ஏன்? பவுல் ரோமர்.14:9 ல் கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும் பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.  என்று கூறுகிறார். இதன் அர்த்தம் என்ன அவர் ஆளுகைக்கு மறைவான  மனிதனோ நிகழ்வுகளோ இவ்வுலகிலும் இல்லை, அவ்வுலகிலும் இல்லை. எனவே தீமை செய்வோர் யாரும் தப்பித்துவிட முடியாது, எனவே அன்பானவர்களே, காரணமின்றி வரும் துன்பங்களை கண்டோ, காரணமின்றி துன்பம் கொடுப்போரை கண்டோ அஞ்சி விடாதீர். விசுவாசத்தோடு காத்திருப்பீர், காரணமின்றி வந்த துன்பத்தையும், காரணமின்றி துன்பம் செய்தோரையும் நாம் ஆளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இந்த வாய்ப்புதான் யோசேப்புக்கு கிடைத்தது. யோசேப்பின் சகோதரர்கள் இந்த குற்ற உணர்விலிருந்தும், பயத்திலிருந்தும் தப்பிக்க சேதி சொல்லி
ஆளனுப்புகிறார்கள், அவர்கள் சொல்லியனுப்பிய செய்தி "எங்களை நீ மன்னிக்க வேண்டும் என்று  தகப்பன் மரணமடையுமுன் கடைசியாக கூறினார்" என்பதே. இது உண்மையா தெரியவில்லை. ஆனால் மன்னிப்பு பெற இதை கூறுகிறார்கள். அது மட்டுமல்ல அவனை வந்து பணிந்துக் கொள்ளுகிறார்கள். இதைக்கேட்ட யோசேப்பு  ஒரு கேள்வியை  பதிலாக தருகிறார், நான் என்ன கடவுளா? என்பதே பதில் காரணம் என்ன உபாகமம் .32:35 ல் கடவுள் கூறுகிறார், பழிவாங்குவதும், பதிலளிப்பதும் எனக்குரியது என்று.


இந்த மனம் நமக்கு வருமா? நம்மை கெடுத்தவனை நாம் கெடுக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்த பிறகும் நாம் சும்மா இருப்போமா? மன்னிக்கும் உன்னத குணம் நமக்கு வருமா? வரவேண்டும் என்று ஆண்டவர் மத்தேயு. 18:22 ல், கூறுகிறார். அதுவும் ஏழெழுபது தரம் மன்னிக்க வேண்டும் என்கிறார். நம்மையே ஆண்டவர் மன்னித்தார் என்றால் நாம் நம் சக மனிதனை மன்னிப்பது எம்மாத்திரம்? மன்னிப்போம் இயேசுவோடு ஆளுகை செய்வோம், பரிசுத்தாவியானவர் தாமே இத்திரு வார்த்தைகளைக் கொண்டு நம்மை வழி நடத்துவாராக ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Saturday, October 8, 2011

மனம் அமைதி பெற 4


அன்பானவர்களே மனம் அமைதி பெற இப்போது நாம் கற்றுக் கொண்ட முதல் இரு முக்கிய விஷயங்கள். ஒன்று நம் பலம், பலவீனம்  அறிந்துக் ஒப்புக் கொள்ள வேண்டும், நம் சகமனிதனுக்கும், பலம், பலவீனம் உண்டு என்பதை அறிந்து ஒப்புக் கொள்ள வேண்டும்.

 நம் பலமும் நம் பலவீனமும் நம்மோடு இருப்பவை எனவே அதை நாம் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கண்டறிந்து விடலாம், ஆனால் அடுத்தவர்களின் பலம், மற்றும் பலவீனத்தை எப்படி கண்டறிவது? நம் பலத்தையும் பலவீனத்தையும் கண்டறிவதே கடினம் எனும்போது அடுத்தவர்கள் பலம், பலவீனத்தை நாம் கண்டறிய முடியுமா? முடியும், ஆனால் அவ்வளவு எளிதாக கண்டறிந்துவிட முடியாது. எனவே அடுத்தவர்களின் பலம், பலவீனத்தை அறிய ஒரு எளிய வழிமுறையை கற்றுத் தருகிறேன்.


கவனித்தல்

கவனிப்பது என்பது நம் வாழ்வில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக  முக்கியமான குணம்.  கடவுள் நமக்கு இரு கண்களும், இரு காதுகளும் கொடுத்துவிட்டு ஒரே ஒரு வாயை மட்டும் கொடுத்திருப்பது எதற்காக தெரியுமா? குறைவாக பேசி அதிகமாய் கவனிப்பதற்காக.  ஆனால் எப்போதும் நம் கருத்துக்களை பேசுவதிலும், நம் விருப்பங்களை சொல்வதிலேயுமே கவனமாக இருப்போமே தவிர அடுத்தவர்கள் பேசுவதை  கவனிக்க விரும்புவதில்லை.

நாம் கவனிக்க தயாராக இல்லை என்றால் நாம் அடுத்தவர்களை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை என்று அர்த்தம் நாம் அடுத்தவர்களை புரிந்துக் கொள்ள தயாராக இல்லை என்றால், அடுத்தவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் கண்டறிய  முடியாது. அடுத்தவர்கள் பலத்தையும் பலவீனத்தையும் நம்மால் கண்டறிய  முடியாமல் போனால், நாம் அவர்களோடு நல்லுறவுக் கொள்ளவியலாது, அடுத்தவர்களோடு நமக்கு நல்ல உறவு இல்லை என்றால், நம் மனம் அமைதியாய் இராது.

ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; யாக்கோபு.1:19

இந்த வசனம் நமக்கு கற்றுத் தருவது என்ன? கவனியுங்கள் என்பதுதானே, எனவே இன்று நான் உங்களுக்கு ஒரு பயிற்சி தருகிறேன், உங்கள்  நெருங்கிய உறவுகளோடு இன்று  நீங்கள் பேசும்போது, நீங்கள் அதிகமாய் பேசாமல் அவர்கள் பேசுவதை கவனியுங்கள், முழுதாய் கவனியுங்கள். அவர்கள் பேசும்போது குறுக்கிடாமல் கவனியுங்கள். இந்த அனுபவம் எப்படி இருந்தது என கருத்துரையில் சொல்லுங்கள், அதற்கு பிறகு தொடர்ந்து முன்னேறுவோம்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Wednesday, October 5, 2011

தூதர்களை கொண்டு நம்மை காத்திடுவார்.

அன்பான உடன் விசுவாசிகளுக்கு என் இனிய ஸ்தோத்திரங்கள், இந்த காலை வேளையில் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இன்று நாம் தியாநிக்கப்போகிற வசனம். சங்கீதம்.34:7.

கர்த்தருடைய தூதன் அவருக்கு பயந்தவர்களை சூழ
 பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.  

சாது  சுந்தர்சிங் ஐயா அவர்கள், வட மாநிலங்களில் ஊழியம் செய்த காலத்தில் ஒரு மலை கிராமத்தில் கர்த்தருடைய வார்த்தையை அறிவிக்க சென்றாராம், அவருடைய வார்த்தைகளை கேட்க திரளான மக்கள் கூடி விட்டார்களாம், இதைக் கண்ட கிராம தலைவன், கடும் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய ஆட்களை ஏவினான், அதன் படி ஆயுதம் ஏந்திய ரவுடி கும்பல் ஒன்று அவரை துரத்தியது, சாது ஐயா அவர்கள், தன் உயிரை காத்துக் கொள்ள மலை பகுதியில் ஓடி ஒரு குகைக்குள் ஒளிந்துக் கொண்டாராம். அவரை விரட்டிய கும்பல் அந்த குகையை
முற்றுகையிட்டது. அதை அறிந்த ஐயா அவர்கள் செய்வதறியாமல், முழங்கால் படியிட்டு ஜெபிக்க துவங்கிவிட்டார்கள், பல மணி நேரம் ஜெப நிலையில் இருந்துவிட்டு வெளியே எட்டி பார்த்தாராம், அப்போதும் அந்த கும்பல் குகைக்கு வெளியே எதோ குழப்பத்தோடு நின்றுக் கொண்டிருந்ததாம்.

மீண்டும் பயத்தோடு உள்ளே பொய் ஜெபித்துக் கொண்டே இரவு நெருங்கியதால் உறங்கிப்போனாராம். அடுத்த நாள் காலை அவர் வெளியே எட்டிப் பார்த்தால், அதே கும்பல் நின்றுக் கொண்டிருந்தது, ஆனால் கையில் ஆயுதங்கள் இல்லை, திரளான கூட்டம் இருந்ததாம். அவர் வேறு வழி இல்லாமல் அமைதியாக வெளியே வந்தார்களாம். அப்போது அவர்கள் அனைவரும் அவர் பக்கத்தில் ஓடி வந்து அவரை பிரமிப்போடு பார்த்தார்களாம், அவர் ஏன் இப்படி பார்க்கிறார்கள் என்று குழப்பத்தோடு அவர்களை நெருங்க, அவர்கள் கேட்டார்களாம்,

ஐயா நேற்று இரவு, நாங்கள் இந்த குகை வரை உங்களை விரட்டினோம், நீங்கள் உள்ளே போனதையும் கண்டோம், ஆனால் சிறிது நேரத்தில் உங்கள் குகையை சுற்றி, ஆயுதம் ஏந்திய அநேகர்  வெள்ளை ஆடையில் பிரகாசமாய் நின்றார்களே அவர்கள் யார் என்று கேட்டார்களாம். அப்போதுதான் சாது ஐயா அவர்களுக்கு புரிந்தது, அந்த கொஞ்ச நேரம் என்பது தான் ஜெபிக்க துவங்கிய நேரம் என்பதும், ஜெபிக்கும்போதே, கடவுள் தன் தூதர்களை தன்னை காக்க காவலுக்கு அனுப்பியிருக்கிறார் என்பதையும் அவர் புரிந்துக் கொண்டாராம்.

அன்பானவர்களே, நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் மீது விசுவாசமும், பய பக்தியும் கொண்டவர்களை சூழ கடவுள் தன் தூதர்களை பாளையமிறக்குகிறார். பாளையமிறக்குவது என்றால் போருக்கு ஆயத்தாமாக இறங்குவது என்று அர்த்தம், ஆண்டவராம் இயேசுவை நம்புகிற அவருக்கு பயந்து வாழ்கிற நம்மை அவர் தூதர்களை கொண்டு காத்து வருகிறார். பயப்படாதீர்கள். நாம் சந்திக்க போகிற துன்பங்கள் ஆபத்துக்கள் விபத்துக்கள், அனைத்திலிருந்தும் தூதர்களை கொண்டு நம்மை காத்திடுவார்.

இந்த விசுவாசத்தோடு  இந்நாளை துவங்கி இனிமையாய் வாழ, பரிசுத்தாவியானவர் நம்மை காத்தருள்வாராக ஆமேன்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Monday, October 3, 2011

தீங்கை காணமாட்டோம்

செப்பனியா.3:15

கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்

அன்பான சகோதர சகோதரிகளே, எனது நண்பர் ஒருவர், புதிதாக ஆண்டவரை ஏற்றுக் கொண்டவர், அவர் ஒரு அரசு பணியாளர்.  கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு பணி செய்கிற இடத்திலே அவருக்கு அனேக பிரச்சினைகள், ஏற்பட்டது. பல முறை சோர்வடைந்து என்னை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு அதை எனக்கு தெரிவித்தார். அப்போதெல்லாம் நான் அவருக்கு அறிவித்த வசனம் இதுதான்.

இன்னும் அதே போராட்டத்தில்தான் இருக்கிறார், ஆனால் தீங்கு அவரை தொட முடியவில்லை, எத்தனையோபேர் அவருக்கு தீங்கு செய்ய நினைத்தும், அவர் ஜெயமாய் நிற்கிறார். கிறிஸ்துவை நம்புகிறவர்களின் வாழ்வின் சிறப்பு இதுதான்.

இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்று மத்தேயு.18:20 ல் ஆண்டவர் கூறியிருக்கிறாரே, ஆம் அவர் நாம் தனியாய் இருக்கும்போதும் நம்மோடு இருப்பவர்.

உங்கள் வாழ்விலும் தீங்கு செய்வோர் உங்களை தொடரலாம், உங்கள் மனம் புண்படும்படி உங்களை அவமானத்துக்கு உள்ளாக்கலாம், நம் வெற்றியை பறிக்க  அவர்கள் திட்டமிடலாம், எத்தனை நாள்தான் இதை சகிப்பது என்று சோர்ந்துவிடாதீர்கள், மரணத்தையே ஜெயித்து பிசாசையும், பாவத்தையும் தன காலடியில் போட்டு அதன் தலையை நசுக்கிய  ஜெயவீரர் நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து நம் நடுவில் இருக்கிறார். தீங்கு நம்மை தொடராமல் தீமை நம்மேல் பற்றாமல் நம்மை காத்தருள்வார்.

இனி நாம் தீமை செய்வோரையும், அவர்களுக்கு  நேரப்போவதையும் காண்போம், ஆனால் தீங்கை காணமாட்டோம். கடவுள் நம் நடுவில் பரிசுத்த ஆவியாய், அக்கினி மயமாய் நின்று காத்திடுவார். ஆமென்.

கிறிஸ்துவின் பணியில்
அருள்திரு.கில்பர்ட் ஆசீர்வாதம்.


மறக்காமல் கருத்துரை இடுங்கள்.
ஜெப விண்ணப்பங்களை jesusblessings65@yahoo.in என்ற  மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

Popular Posts

உங்கள் இதயம் தொட்டவை

Total Pageviews